Published:Updated:

`படைப்புழுக்களை எளிதாக அழிக்கலாம்!' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்பட்டுள்ள அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் வருடாந்திர விளைச்சலில் 50 சதவீதத்திற்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`படைப்புழுக்களை எளிதாக அழிக்கலாம்!' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல்
`படைப்புழுக்களை எளிதாக அழிக்கலாம்!' மக்காச்சோள விவசாயிகளுக்கு வழிகாட்டல்

க்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவால் கலக்கத்தில் இருக்கின்றனர் விவசாயிகள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், மிக எளிதாக இதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என நம்பிக்கையளிக்கின்றனர் வேளாண் அறிஞர்கள்.

இதுகுறித்து பழனி வட்டாரத்தின் கோம்பைப்பட்டி விவசாயி நாகராஜன் கூறியதாவது, ``எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 2,000 ஏக்கர் அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நான் ஆறு ஏக்கர் பயிர் செய்துள்ளேன். சென்ற வருடம் இதே அளவு நிலப்பரப்பில் 200 மூட்டை மக்காச்சோளம் மகசூல் கிடைத்தது. ஆனால், இவ்வருடம் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கம் பெருமளவு உள்ளது. இதனால் பயிர் வளர்ச்சிக்காக முதலீடு செய்த 1 லட்சம் ரூபாயைக் கூட  வருவாயாக ஈட்ட  இயலாது. எப்போதும் பயன்படுத்துவதை விட இம்முறை உரம் மற்றும் மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதாயிற்று. அதிக வீரியமுள்ள மருந்துகளை உபயோகித்தும் பயனில்லை. பயிரின் மேல் பரப்பில் இருந்த தாய் அந்துப்பூச்சி இறந்தபோதிலும், புழுக்களும் முட்டைகளும் சாகவில்லை. இந்நிலையில் கஜா புயல் மற்றும் பிற தாக்குதல் குறித்து பார்வையிட வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் ``பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை, எனவே இவர்களுக்கு நிவாரணம் தேவைப்படாது "என்று கூறிச் சென்றது அதிருப்தியையும் வருத்தமும் அளிப்பதாக உள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகையும் எங்களுக்குச் சரிவர கிடைப்பதில்லை. விவசாயிகளாகிய நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் தவிக்கிறோம் என்கிறார்.

தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாக கொண்ட இப்புழுவின் தாக்குதல் 2015-ம் ஆண்டு வரை வடதுருவ நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வந்தது. பின் ஆப்பிரிக்க நாடுகளின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் கர்நாடகத்தில் இவ்வாண்டு மே மாதம் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் பெரம்பலூர் பகுதியில் இதன் தாக்கம் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தஞ்சை திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவி உள்ளது. இதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் திண்டுக்கல் வேளாண்துறை இணை இயக்குநர் திரு.வீ.மனோகரன்.

``தமிழகத்தில் உள்ள மற்ற புழுக்களைக் காட்டிலும் இப்புழு வேறுபட்டது. இது வருங்காலத்தில் பெரிய அளவில் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என இந்திய வேளாண்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மக்காச்சோளம் மட்டுமன்றி 80 வகையான பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இது பெரும்பாலும் புல் வகையை விரும்புகிறது. பல்கலைக்கழகங்களில் இப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இப்புழுக்கள் அந்துப் பூச்சிகளால் உருவாகின்றன. ஒரு தாய் அந்துப்பூச்சி சுமார் ஆயிரம் முட்டைகளை இடக்கூடிய திறன் உடையது. இவை 400 கிலோ மீட்டர் வரை இடம்பெயர வல்லன. ஒரு முறைக்கு 100 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து இரண்டு மூன்று நாள்களில் பிறக்கும் புழுக்கள், வளர்ந்து சில நாள்களில் கூட்டுப்புழுவாக மாறும். மண்ணை இடமாகக் கொள்ளக் கூடியவை இக்கூட்டுப் புழுக்கள். பின் இவை அந்துப்பூச்சியாக மாறும்.

மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் திண்டுக்கல் குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இப்புழுவின் தாக்கம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலும் தாக்கம் அதிகரித்துள்ளது. புழுவின் பெருக்கத்திற்கு முக்கியக் காரணமாக பருவநிலை மாற்றம் அமைந்துள்ளது. இப்பாதிப்பை கட்டுப்படுத்த இயற்கை முறையே சிறந்த தீர்வு. இரசாயன மருந்திற்கான எதிர்ப்புசக்தி இப்புழுவில் கண்டறியப்படவில்லை. மேலும் இவ்வகை புழுக்கள் நம் நாட்டுக்குப் புதுமையானவை என்பதால் அதிக வீரியமுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும் போது மருந்தின் வீரியத்தை ஏற்று வாழும் தன்மையைப் புழுக்கள் பெற வாய்ப்பு உள்ளது. வீரியம் மிக்க மருந்து தெளித்த பயிர்களை கால்நடைகளுக்குத் தீவனமாக்கும் பொழுது அவை கால்நடைகளின் உடல் நலத்தைப் பாதிக்கும். எனவே பயிர்களில் பாதிப்பு ஏற்பட்ட உடன் வேளாண் துறையினரிடம் ஆலோசனைகளைப் பெற்று செயல்படல் நன்று.

 கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

1. முதலில் விளக்குப்பொறி வைத்து இப்பூச்சியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும்.

2. பூச்சிகள் இருப்பின் இனக்கவர்ச்சி பொறியை, விளக்குப்பொறி இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்க வேண்டும். இதிலிருக்கும் வாசனைப்பொருள் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் திறன் உடையவை. அது தாய் அந்துப்பூச்சிகளைக் கொல்வதற்கு உதவும்.

3. இதைத்தொடர்ந்து வேம்பு சார் மருந்துகளான `ஆசாடிரக்டின்' முதலிய இயற்கைசார் மருந்துகளைத் தெளிக்கலாம்.

4.நொச்சி, தும்பை, வேம்பு முதலிய இயற்கை பூச்சி விரட்டிகளின் சாறுகளைத் தெளிக்கலாம் .

5. மீண்டும் மீண்டும் ஒரே இரசாயன மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. மருந்தை செடியின் குருத்துப் பகுதியில் தெளிக்கவேண்டும்.

6.பயிர்சுழற்சி முறையைப் பின்பற்றுவது அவசியம். 

7.அடுத்தமுறை விதை விதைக்கும்போது, உழவில் வேப்பம் பிண்ணாக்கு சேர்ப்பதன் மூலம் மண்ணில் தங்கிய கூட்டுப் புழுக்களை அழிக்க முடியும். விதையிலேயே புழு உற்பத்தி ஆகும் வாய்ப்புள்ளது என்ற தவறான கருத்து விவசாயிகள்பால் உள்ளது. அது முற்றிலும் தவறானது.

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுநர், மன்னாஏகாம்பரம் கூறும் இயற்கை தீர்வுகள்

1. மாலைப்பொழுதில் 6.30 to 9.30 வரை விளக்குப்பொறி வைக்கவும். ஏக்கருக்கு சுமார் 4 இடங்களில், அகலமான பாத்திரத்தில் தண்ணீரும் மண்ணெண்ணெய்யும் கலந்து வைத்தால் தாய் அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்.

2. படைப்புழு தாக்குதலைக் குறைக்க கலவைப் பொடி தூவுதல் நல்ல பலனைத் தருகிறது.

ஒரு ஏக்கருக்கான அளவுகள் -  25 கிலோ அடுப்புச் சாம்பல், 25 கிலோ ஆட்டுச் சாணம் (நிழலில் உலர்த்தி பின் பொடியாக உடைத்தது), மிளகாய்ப் பொடி 2கிலோ, மஞ்சள் பொடி 2 கிலோ, வசம்புப்பொடி 100கிராம், பெருங்காயம் பொடி 100 கிராம், வேப்பங்கொட்டைப்பொடி 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மறுநாள் காலை பனி இருக்கும் நேரத்தில் தெளிக்க வேண்டும்.

3. மூன்றாவது தொழில்நுட்பம் 

 பசு கோமியம் 15 லிட்டர், அடுப்புச் சாம்பல் 3 கிலோ, வேப்பங்கொட்டை பொடி 3 கிலோ, வீட்டில் அறைக்கு மிளகாய்ப் பொடி 1/2கிலோ, வசம்புப்பொடி 25 கிராம், பெருங்காயம் பொடி 25 கிராம், இஞ்சி  250கிராம், பூண்டு  250 கிராம், வெங்காயம் 1/2 கிலோ, சோற்றுக்கற்றாழை 5 முதல் 7 மடல் (இடித்தது) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

மறுநாள் மாலை நேரம் 1 லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் தாய் அந்துப்பூச்சி, படைப்புழு இறப்பெய்தும். பிற பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கும் இது மருந்தாகும். இதற்குக் கலவை கரைசல் என்று பெயர்.

மேலும் விவரங்களுக்கு இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுநர். திரு.ஏகாம்பரம் அவர்களை 9095974287,7200773224 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.