Published:Updated:

“ஊர்கூடி காடு வளர்ப்போம்” - பூநெய்தாங்கல் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!

“ஊர்கூடி காடு வளர்ப்போம்” - பூநெய்தாங்கல் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!
“ஊர்கூடி காடு வளர்ப்போம்” - பூநெய்தாங்கல் கிராம மக்களின் அசத்தல் முயற்சி!

ர் கூடித் தேர் இழுப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஊர் கூடிக் காடுவளர்ப்பதைப் பார்த்திருக்கிறோமா? ஆம், அப்படி ஓர் அதிசய கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ளது பூநெய்தாங்கல் கிராமம். ஊரைச் சுற்றிலும் பசுமையான வயல்வெளிகள், ஆங்காங்கே கிராம மக்களே ஒன்றிணைந்து உருவாக்கிய சிறு அளவிலான காடுகளே அந்தக் கிராமத்தின் முகவரியாக இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட புளி, சீயக்காய் உள்ளிட்ட மரங்கள் தற்போது கிராம மக்களுக்குப் பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ‘ஊர்கூடி காடு வளர்ப்போம்’ எனக் காடு வளர்க்கும் திட்டத்திற்கு பெயர் சூட்டி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக ‘ஊர்கூடி காடு வளர்ப்போம்’ என்ற குறும்பட வெளியீட்டு விழாவைக் டிசம்பர் 30-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். விவசாயப் பணிகள், வீட்டு வேலை என அனைத்து வேலைகளையும் முடித்த கிராமத்தினர், மாலைப் பொழுதில் மாரியம்மன் கோயில் அருகே ஒன்று கூடினார்கள். 'சில்லென்று' இதமாய் வீசும் மார்கழி மாதக் குளிர்காற்றுடன், அந்த மாலைப் பொழுதில் குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு விழா இனிதே தொடங்கியது. சிறுமிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி காண்போர் கண்களுக்கு விருந்து படைத்தது.

தலைமை உரையாற்றிய உத்தரமேரூரைச் சேர்ந்த ஞானசேகரன், “வனங்களில் வாழ்ந்த மனிதன், இயற்கையோடு இணைந்த கிராமங்களிலே வாழத் தொடங்கினான். மனிதர்களின் சுயலாபத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்டிச்சாய்த்ததால் உலக அளவில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மரங்களை அதிக அளவில் வளர்த்தால் மட்டுமே மனிதன் வாழத் தகுந்த இடமாகப் பூமி இருக்கும்” என்றார்.

அடுத்துப் பேசிய முன்னாள் தலைமை ஆசிரியர் ஞானசேகரன், “நமது கிராமத்தில் உள்ள கருவேல மரத்தில் தூக்கனாங் குருவிகள் கூடு கட்டி வாழும். சென்னையில் இருந்து வரும் இளைஞர்கள் அதைப் படம் பிடித்துக் கொண்டு செல்வார்கள். சென்னையில் உள்ளவர்கள் இதுபோன்ற கிராமங்களில்தான் தூக்கனாங் குருவியைப் பார்க்க முடியும். அதற்கு மரங்கள் இங்கே அதிகம் இருக்க வேண்டும்” என்றார்.

தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் சுந்தர் கணேஷ் குறும்படத்தின் குறுந்தகட்டினை வெளியிட, கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் பேசிய கணேஷ், ”பெரிய பெரிய நிறுவனங்களில் சென்று வேலை செய்வதை நம்ம ஊர் இளைஞர்கள் பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். யாரும் விவசாயம் செய்வதைப் பெருமையாக நினைக்கவில்லை. விவசாயிதான் நாட்டிற்கு முதுகெலும்பு என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு வேண்டுமென்றால் விவசாயம் நலிவடைந்திருக்கலாம். இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் விவசாயம்தான் தலைசிறந்த தொழிலாக இருக்கும். யாரும் உங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டாம். இந்த மரங்களை யாரும் வெட்டி எடுத்துச் சென்று விடலாம் என நினைக்க வேண்டாம். நீங்கள் உருவாக்கிய வனத்திற்கு அரணாக இருந்து மரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

பூநெய்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணனிடம் இதுபற்றிப் பேசினோம். “என்னோட குடும்பம் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம். அப்பா ஆசிரியராக இருந்தாலும் விவசாயத்தையும் சேர்த்து கவனித்துக் கொள்வார். இதனால் நானும் முழுநேர விவசாயியாக மாறிவிட்டேன்.

வால்பாறைக்கு அடிக்கடி சென்று வருவேன். வால்பாறையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தால் ஒரே வெக்கையாக இருக்கும். அனல் காத்து அதிகமா இருக்கறதால திரும்பவும் வால்பாறைக்கே போகலாம்னு தோணும். அப்பதான் மரங்கள் அதிகமா இருந்தால் வெப்பக் காற்று குறையும்னு தோணுச்சு. எங்க ஊர்ல மூணு கோயில்கள் இருக்கின்றன. கோயில் பணத்தைக் கிராமத்தில் வட்டிக்கு விட்டு திருவிழாவிற்குச் செலவு செய்வோம். அந்தப் பணத்தைக் கொண்டு கிராமத்தில் மரம் நடலாம்னு கிராமக் கூட்டத்தில் சொன்னேன். அப்போது இதனால் கிராமத்தினரிடையே கருத்து முரண் ஏற்பட்டது. பிறகு நான் சொன்னதைக் கேட்ட ஊர் பெரியவர்கள், ‘கண்ணன் சொல்வது போலச் செய்தால்தான் என்ன?’ என மற்றவர்களைச் சமாதானப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து எல்லோரும் ஒருமித்த கருத்தோடு எனது யோசனைக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். மூன்று கோயில்களிலும் தலா ஐம்பதாயிரம் இருப்பு இருந்தது. அதில் தலா முப்பதாயிரம் என தொன்னூறாயிரம் பணம் எடுத்து அதனுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணத்தைப் போட்டோம்.

சுமார் பத்து ஏக்கர் கொண்ட தரிசு நிலத்தை ஜே.சி.பி. வைத்து கரைகளை உயர்த்தி, புதர்களை, முட்களை அகற்றி வேலி போட்டோம். வனத்துறையில் இருந்து என் சொந்த நிலங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் வாங்கி வைத்திருந்தேன். திடீரென ஒருநாள் மழை பெய்ததால் அதில் ஒரு பகுதி மரக்கன்றுகளைக் கொண்டு வந்து, அந்த இடத்தில் நட்டோம்.  கிராம மக்கள் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டு செடிகளை நட்டார்கள். இதெல்லாம் 2007-ம் ஆண்டில் நடந்தது.

வேங்கை, தீக்குச்சி, தேக்கு, குமிழ், மலைவேம்பு, மகோகனி, உள்ளிட்ட மரங்களை நடவு செய்தோம். பிறகு ஈஷா யோகா மையம், ராமகிருஷ்ணா மடம் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டோம். வறட்சியால் சில மரக்கன்றுகள் காய்ந்து போனாலும் பெரும்பாலான மரக்கன்றுகள் வளரத் தொடங்கிவிட்டன. தற்போது சிறிய மரங்களாக அவை வளர்ந்து இருக்கிறன. நீர்த்தேக்க குட்டை ஏற்படுத்தினோம். ஊர் மையத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து குழாய் பதித்து தண்ணீர் வசதி செய்தோம். அடுத்தடுத்து ஊரில் உள்ள தரிசு நிலங்களில் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறோம். எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்வடிவம் கொடுத்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பூ.க.சந்திரசேகரன். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இவர் கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர். அவரின் ஊக்கம்தான் இந்த வெற்றிக்குக் காரணம்” என்கிறார்.

பூநெய்தாங்கல் மக்களின் நல்லுள்ளங்களுக்கு மரங்கள் தலையசைத்து நன்றி தெரிவிக்கின்றன!