Published:Updated:

``டெல்டா பகுதியில் தென்னையை நட்டதுதான் தவறு" - நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கு ஷேரிங்ஸ்!

"காடு மலை இருக்கும் வளம் கொண்ட பிரதேசங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் இன்று இருக்கிறது. அப்போதுதான் போதுமான மழை பெய்யும். விவசாயப் பகுதிகள் செழிக்கும்."

``டெல்டா பகுதியில் தென்னையை நட்டதுதான் தவறு" - நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கு ஷேரிங்ஸ்!
``டெல்டா பகுதியில் தென்னையை நட்டதுதான் தவறு" - நம்மாழ்வார் நினைவு தின கருத்தரங்கு ஷேரிங்ஸ்!

``நாம் செய்த தவறுகளின் காரணத்தால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனி அடிக்கடி புயல்கள் ஏற்படும்" என்று முப்பது வருடங்களுக்கு முன்பே சொன்னவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவர் சொன்னது போலவே தமிழகம் சமீபத்தில் `கஜா' எனும் பெரும் புயலைச் சந்தித்திருக்கிறது. இந்நிலையில், அதையொட்டி பல தலைப்புகளில் தனித்தனியாகக் குழு விவாதங்கள் நடத்தி, அதற்கான தீர்வுகளை முன்மொழிந்திருக்கிறார்கள், இளைஞர்கள். `அந்தத் தீர்வை நோக்கிச் செல்வது' என்ற உறுதியையும் ஏற்றிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள வானகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஐந்தாம் வருட நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில்தான் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் கஜா புயல் மற்றும் பாரம்பர்ய விதை சேகரிப்பில் முன்னோடியாக இருந்த நெல் ஜெயராமன் மறைவு உள்ளிட்ட விஷயங்களால், நம்மாழ்வாரின் ஐந்தாவது நினைவு நாள் எளிமையாக நடத்தப்பட்டது. 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். காலைப் பத்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பல குழுவாகப் பிரிந்து தனித்தனியாக குழுமி அந்தந்த தலைப்புகளில் இரண்டு மணி நேரம் விவாதம் நடத்தினார்கள்.

விவாதத்தின் இறுதியில், அந்தந்த தலைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட விவாதக் குழு தலைவர்கள் விவாதித்து அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசினார்கள்.

பேரழிவுத் திட்டம் சம்பந்தமாக அந்தக் குழுவின் தலைவர் லெனின்,``இன்றைக்குத் தமிழகத்தைக் கூறுபோடும் திட்டங்களாக ஹைட்ரோகார்பன் திட்டம், ஷேல் கேஸ், ஸ்டெர்லைட் ஆலை, அணு உலைகள், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்புத் திட்டம், விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைத்தல், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உள்ளிட்ட எண்ணற்ற பேரழிவுத் திட்டங்கள் தமிழகத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றன. அவற்றைத் தடுத்து தமிழக நிலத்தை, மக்களை காப்பாற்ற அந்தந்த பகுதி பிரச்னைகளுக்கு அந்தந்த பகுதி மக்களையே போராட வைக்க வேண்டும். அவர்களுக்கு நாம் பின்னால் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என்றார்.

 அடுத்து, `மனித உரிமையும், உணவுப் பாதுகாப்பும்' என்ற தலைப்பின் குழுத் தலைவர் வழக்கறிஞர்கள் சிவா, ``இன்றைக்குத் தனி மனித உணவுப் பிரச்னைகள் பெருகிக்கொண்டு வருகின்றன. இயற்கை உணவு உற்பத்திக்குக் கெடுபிடிகளும் அதிகமாகி விட்டன. அதே நேரத்தில், விலை உயர்வு, போலியான இயற்கை உணவு என்கிற பெயரில் நடக்கும் தவறுகள் எனப் பல பிரச்னைகள் உள்ளன. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்தனியாகப் பலர் போராடி வருகிறார்கள். அதனால், அவர்கள் தாக்கப்படுகிறார்கள். நாம் மக்களின் உரிமைகளை மீட்கக் குழுவாக இணைந்து போராடுவது, அதைப் பரப்புவது, உச்சகட்டமாக நீதிமன்றங்களை நாடுவது என்று செயல்படவேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து, `அனைத்து உயிர்களுக்குமான நலவாழ்வு' என்ற தலைப்பிலான குழு விவாதத்தைத் தொகுத்து வழங்கிய இயற்கை மருத்துவர் பிரேமா, ``இன்று மனிதக் குலத்திற்கு எதிராகத் தடுப்பூசிகள் போடப்படுவது மாறி இருக்கிறது. 13 வகையான தடுப்பூசிகளை போடச் சொல்லி அரசு நிர்பந்திக்கிறது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒரு சிறுமி இறந்தாள். பிரச்னை பெரிதானதும் விதிகளைத் தளர்த்தி இருக்கிறார்கள். பெற்றோர்களின் அனுமதி முக்கியம் என்ற மாற்றம்தான் அது. ஆனால் அதிலும்,  `கண்டிப்பாகப் பெற்றோர்களின் அனுமதி வேண்டும்' என்று ஆணையிடுவது போல் தளர்த்தி இருக்கிறார்கள். இருந்தாலும் நம்முடைய தொடர் முயற்சிகள், முன்னெடுப்புகள் அனைத்து உயிர்களுக்குமான நலவாழ்வை உறுதி செய்யும்" என்றார்.

இயற்கை பேரிடர் குறித்துப் பேசிய `அரச்சலூர்' செல்வம், ``தமிழகத்தை வறட்சி, புயல், வெள்ளம் என மூன்று பிரச்னைகள் சீர்குலைக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்குக் காரணம், பருவநிலை மாற்றம்தான். ஆனால், இதை இன்னும் சிலர் உணராத நிலையில்தான் இருக்கிறோம். டெல்டாவை கஜா புரட்டிப் போட்டபோது, தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் கடும் வறட்சி. அதனால், இனி புயல்கள் அடிக்கடி ஏற்படும். வறட்சி கடுமையாக தாக்கும். கடும் மழை பெய்யும். பனி கொட்டும். வங்காள விரிகுடாவில் இப்போது 30 சதவிகிதம் புயல் சின்னங்கள் உருவாவது அதிகரித்துள்ளது அதுவும் அந்தப் புயல் சின்னங்கள் 10 கி.மீ முதல் 20 கி.மீ வரை வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்ய வேண்டிய முக்கியக் கட்டம் இது. இதைத் தவறவிட்டால், பூமியில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். பூமி அழியாது. இதுபோல இக்கட்டான ஆறு பேரழிவைச் சந்தித்திருக்கிறது பூமி. அது தன்னைத்தானே குலுக்கிக்கொண்டு தகவமைத்துக்கொள்ளும். ஆனால், பூமியில் மனிதர்கள்தான் இருக்கமாட்டார்கள்" என்று எச்சரித்தார்.

இறுதியாக,டெல்டா பகுதியைப் புரட்டிப் போட்ட கஜா புயல் பாதிப்பும், மீட்சியும் என்ற தலைப்பிலான விவாதக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஏங்கல்ஸ் ராஜா, ``காடு மலை இருக்கும் வளம் கொண்ட பிரதேசங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் இன்று இருக்கிறது. அப்போதுதான் போதுமான மழை பெய்யும். விவசாயப் பகுதிகள் செழிக்கும். டெல்டா பகுதியில் தென்னையை நட்டதுதான் தவறு. அதனால், டெல்டாவில் இனியும் தென்னை மட்டுமே பயிர் செய்வது கேட்டையே தரும். 'தென்னைக்கு மாற்றுப் பயிர் என்ன?' என்பது குறித்த கருத்தரங்குகளை வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டையில் நடத்துவதாக விவாதத்தில் பேசி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு உடனடி வருமானம் தரக்கூடிய கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.