Published:Updated:

டூவிலரில் காய்கறி விற்பனை... வருடம் 1.5 லட்சம் வருமானம்... அசத்தும் தேனி விவசாயி!

டூவிலரில் காய்கறி விற்பனை... வருடம் 1.5 லட்சம் வருமானம்... அசத்தும் தேனி விவசாயி!
டூவிலரில் காய்கறி விற்பனை... வருடம் 1.5 லட்சம் வருமானம்... அசத்தும் தேனி விவசாயி!

``எங்க பக்கம் இருக்குற விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா, அவ்ளோ சீக்கிரமா மாற மறுக்கிறாங்க. இப்போதான் கொஞ்சம் பேர் இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கிட்டிருக்காங்க."

'பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே, மீன்பிடிக்கக் கற்றுக் கொடு' என்பது பழமொழி. இந்தப் பழமொழியின்படி ரசாயன உரத்தால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடு என்பதை நோக்கமாக எடுத்துக்கொண்டு, பல அமைப்புகளும் தன்னார்வலர்களும் இயற்கை விவசாயத்தின் பக்கம் விவசாயிகளை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், இயற்கை விவசாயி அபுஷேக்.

``பரபரப்பான தொழில்நுட்ப காலகட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். தபால்கள் மின்னஞ்சல்கள் ஆகிவிட்டன. உறவுகள் வாட்ஸ்அப் குரூப்களோடு நின்று கொள்கின்றன. நவீன காலகட்டம் விவசாயிகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன? நொடி ஒன்றுக்கு 15 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், விவசாயிகள் விவசாயத்தை விட்டே வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனால் விவசாயம் காக்க விவசாயி மட்டும் முன்வந்தால் போதாது, அனைவரும் முன்வர வேண்டும்" என்று நீண்ட முன்னுரையுடன் ஆரம்பித்தார், அபுஷேக்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை அடுத்த மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கிறது, அபுஷேக்கின் தோட்டம். தோட்டத்தில் வேலையில் இருந்த அபுஷேக்கை சந்தித்துப் பேசினோம்.

``கடந்த 16 வருடமாக விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு மகள்கள். முழுக்க இயற்கை விவசாயம்தான். விவசாயத்துக்கு வர்றதுக்கு முன்னால வெளிநாட்டுல வேலை கிடைச்சது. ஆனால், எனக்குத்தான் போகவே மனசு வரல. இங்கயே விவசாயம் பார்க்கலாம்னு தோணிச்சு. அதனால விவசாயத்துல இறங்கிட்டேன். இப்போ முழுசா 16 வருஷம் முடிஞ்சு போச்சு" என்று தொடரும் இவர் ஐ.டி பட்டப்படிப்பு முடித்தவர்.

``பாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளைக் காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளைக் காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கிறோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துகிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை கம்மினு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோண ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.

தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், பப்பாளி, அகத்தி, அவரை, மொச்சை, பப்பாளி, கேசவர்த்தினினு பல பயிர்களை வளர்த்துக்கிட்டு வர்றேன். பஞ்சகவ்யா, மீன் அமிலம், அக்னி அஸ்திரம், அமிர்தக் கரைசல் ஆகியவற்றை நானே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்கிறேன். இதனால எனக்கு ரசாயன உரங்கள் வாங்குற செலவு குறையுது. இயற்கையில விளையுற பொருளுக்கு சந்தையில நல்ல விலை இருக்குறதால, நல்ல லாபமும் கிடைக்குது. என் தோட்டத்து மண் ரொம்ப மென்மையா இருக்கும். கையை வச்சு அள்ளுனாலே மண்புழுவைப் பார்க்க முடியும். இதனாலதான் எந்தப் பயிர்களை போட்டாலும் நல்லா விளையுது. 

பாசனத்துக்காக ஒரு கிணற்றைத் தோண்டி, அந்தத் தண்ணியில எல்லா உரங்களையும், கலக்கி வயலுக்குப் பாய்ச்சுறேன். பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர், பாசனக் குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானா பயிருக்குப் போயிடும். எங்க சுத்துப்பட்டு ஏரியாவுல இருக்குறவங்களோட காய்கறிகளோட, என் காய்கறிகளையும் வச்சு பார்த்தா, என்னோட காய்கறிகள் செழுமையா இருக்கும். என் தோட்ட காய்கறிகளோட சுவையும் நல்லா இருக்கு. ஆர்கானிக் சர்டிபிகேட் வாங்கி என்னோட பொருள்களை வெளிநாட்டுக்கு அனுப்புற எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. அது சரியானதாவும் தோணலை. இங்கயே தேவை அதிகமா இருக்கு. அதனால நம்ம மக்களுக்குத்தான் முதல்ல நாம கொடுக்கணும்ங்குறதுல உறுதியா இருக்கேன். அதிகமான லாபம் சம்பாதிக்கணும்ங்குற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. என்னோட பொருள்களை நானே என் டூவீலர்ல வீடு வீடா போய் விற்பனை செய்யுறேன். இதுமூலமா என்னோட பொருள் எல்லா மக்களுக்கும் கிடைக்குது. எனக்கு பொருள்கள் வேகமா விற்பனையாகுது. மக்களும் அதிகமா வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. 

எங்க பக்கம் இருக்குற விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா, அவ்ளோ சீக்கிரமா மாற மறுக்கிறாங்க. இப்போதான் கொஞ்சம் பேர் இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கிட்டிருக்காங்க. வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் லாபம் கிடைக்குது. மொத்தமா பார்த்தா பெரிய பணமாத்தான் தெரியும். மாசத்துக்கு 13,000-தான். ஆனா, என் குடும்பச் செலவுகளுக்கும், விவசாய செலவுகளுக்கும் போக கிடைக்குற இது போதும்னு நினைக்குறேன். எனக்கு இந்த விவசாய முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால, குழுக்கள் ஆரம்பிச்சு எல்லோரும் இயற்கை விவசாயம் பத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை" என்றபடி விடைகொடுத்தார் அபுஷேக்.

அடுத்த கட்டுரைக்கு