Published:Updated:

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

ஏற்றுமதி

விளைபொருள் ஏற்றுமதியில் இனிக்கும் வாழை... மானியம் கிடைக்கும் மஞ்சள்!

தமிழ்நாட்டின் முக்கிய விளைபொருள்களில் ஒன்று, மஞ்சள். தமிழ்நாடு முழுக்கவே பரவலாக மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும்... ஈரோடு, சேலம், விழுப்புரம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. உலகளவில் 82 சதவிகித அளவு மஞ்சள் இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மஞ்சளில் விரலி மஞ்சள், உருண்டை மஞ்சள் (கிழங்கு மஞ்சள்), கஸ்தூரி மஞ்சள் என்று மூன்று வகைகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் சமையல், அழகுப் பொருள்கள் உற்பத்தி, மருந்து தயாரிப்பு எனப் பலவகைகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகள் உணவுத் தேவைக்காக மஞ்சளை வாங்குகின்றன. ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் மருந்துப் பொருள்கள் உற்பத்தி மற்றும் அழகுப்பொருள் தயாரிப்பு ஆகியவற்றுக்காக மஞ்சளை வாங்குகின்றன. பாலில் மஞ்சள் தூளைப் போட்டுக் குடித்தால் தொண்டைப்புண், இருமல், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும். காயம்பட்ட புண்களின்மீது மஞ்சள்தூளைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து வைத்தால் புண்கள் ஆறிவிடும். அதோடு மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது, மஞ்சள்.

மஞ்சளை நம்மிடமிருந்து இறக்குமதி செய்து அதைப் பொடித்துக் குழலில் அடைத்து குழல் (டியூப்) மாத்திரையாக நமக்கே ஏற்றுமதி செய்கின்றன, சில நாடுகள். 0.5 மில்லி கிராம் எடையுள்ள ஒரு மாத்திரை 4 ரூபாய்க்கு இங்கு விற்கப்படுகிறது. 100 மில்லி கிராம் மாத்திரை 400 ரூபாய். இதன்படி பார்த்தால், ஒரு கிலோ மஞ்சள் மூலம் 4,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ மஞ்சள் 95 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை விற்பனையாகிறது. மஞ்சளை மாத்திரைகளாக மாற்றும் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டு மதிப்புக் கூட்டினால் நல்ல வருமானம் பார்க்க முடியும். 

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

மருத்துவத்தேவைக்கு இந்திய மஞ்சளைத்தான் வெளிநாட்டினர் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் விளையும் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி உண்டு. சீனா, மியன்மார், நைஜீரியா ஆகிய நாடுகளில் மஞ்சள் விளைந்தாலும்... அவற்றுக்குப் பெரிய வரவேற்பில்லை. மஞ்சளில் அனைத்து வகைகளும் ஈரோடு மஞ்சள் சந்தையில் கிடைக்கிறது. இருந்தாலும், சேலத்து மஞ்சள்தான் தரமாக இருக்கிறது. சேலத்து மஞ்சளைத்தான் வெளிநாடுகளில் அதிகளவு கேட்கிறார்கள். நாங்கள் அதைத்தான் வாங்கி ஏற்றுமதி செய்கிறோம். காய்ந்த மஞ்சளை எடுத்து உடைத்துப் பார்த்தால் அது இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் இருந்தால் அது தரமானது என்று தெரிந்துகொள்ளலாம். சூம்பி, சுருங்கி இருந்தால் அது பூஞ்சணம் தாக்கப்பட்ட மஞ்சள். அதைப் பொடித்து ஏற்றுமதிக்கு அனுப்பக் கூடாது. தரப் பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அடுத்த ‘ஆர்டர்’கள் கிடைக்காது. காய்ந்த மஞ்சளை ஏற்றுமதி செய்வதற்கு ‘எம்.இ.ஐ.எஸ்’ (Merchandise Exports from India Scheme-MEIS) மூலமாக மானியமும் உண்டு. பத்து லட்சம் ரூபாய் அளவுக்குக் காய்ந்த மஞ்சளை ஏற்றுமதி செய்தால் 50,000 ரூபாய் மானியம் கிடைக்கும். காய்ந்த மஞ்சளை ஏற்றுமதி செய்ய, நறுமணப் பொருள்கள் வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். 

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

பொங்கல் போன்ற விழாக்காலங்களில் மஞ்சள் கொத்துகள் ஏற்றுமதி அதிகளவில் இருக்கும். இதை அனுப்ப, ‘அபீடா’வில் உறுப்பினராக இருக்க வேண்டும். இது, ‘ஃபிரஷ் மஞ்சள்’ என்ற பிரிவில் வரும். விரலி மஞ்சள் மூன்று விதமான அளவுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அளவுக்குத் தகுந்தாற்போல் விலை மாறுபடும்.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8மஞ்சளுக்கு இணையாக ஏற்றுமதியாகும் இன்னொரு விளைபொருள் வாழை. உலகளவிலான வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலக விளைச்சல் அளவில் 30 சதவிகித அளவு இந்தியாவில்தான் விளைகிறது. சீனா, ஃபிலிப்பைன்ஸ், பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கின்றன. இந்தியாவில், தமிழ்நாடு்தான் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. நான் வாழை ஏற்றுமதி செய்வதில்லை என்பதால்... வாழை ஏற்றுமதியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவரும், பியோ(FIEO)வில் ஏற்றுமதி பயிற்சி பெற்றவருமான நாகராஜ் வீரய்யா சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன. நாகராஜ் வீரய்யா, சென்னையைச் சேர்ந்தவர்.

“தமிழ்நாட்டில் பல ரக வாழைகள் விளைவிக்கப்பட்டாலும்... ‘கேவண்டீஷ்’ என்றழைக்கப்படும் ‘மோரிஸ்’ ரக வாழைப்பழங்கள்தான், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரகம், நீண்ட நாள்கள் தாங்கும் திறன் கொண்டது. அதனால்தான் இது அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. பழத்தின் நீளம் 10-20 சென்டி மீட்டர் அளவு இருக்க வேண்டும். வாழைக்காய்களைப் பேக்கிங் செய்வதற்கு முன் அவற்றை நன்கு கழுவி, 4 ஹேண்டு, 5 ஹேண்டு, 6 ஹேண்டு என்று பிரித்துப் பேக்கிங் செய்ய வேண்டும். பாக்ஸின் அடிப்பகுதியில் மிருதுவான ‘தெர்மோகோல் ஷீட்’டை வைத்து, ‘பிளாஸ்டிக்’ சீலிட்ட வாழைப்பழ சீப்புகளை வைக்க வேண்டும். சீப்புகளுக்கிடையிலும் ‘ஃபோம்’ (மெலிதான தெர்மோகோல் பேப்பர்) வைக்க வேண்டும்.

‘பேக்கிங் ஹவுஸ்’ என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் உள்ளன. பேக்கிங் செய்ய வசதியில்லாதவர்கள், இவர்களிடம் ஆர்டர் கொடுத்தால்... அவர்களே அறுவடை செய்து, பேக் செய்து கன்டெய்னரில் ஏற்றி விடுவார்கள்.

நான், தேனி மாவட்ட விவசாயிகளிடம்தான் வாழைக்காய்களை வாங்கி, கன்டெய்னரில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்புகிறேன். இப்போது சவுதி அரேபியாவுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18-24 நாள்களுக்குள் போய்ச் சேர்ந்துவிடும். கன்டெய்னரில் அனுப்பும்போது... ‘எத்திலீன் ஃபில்டர்’, வெப்பநிலையை அளவிடும் ‘டேட்டா கார்டு’ ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். வாழைக்காய்கள், எத்திலீன் வாயுவை வெளிவிடும். அந்த வாயுதான் காய்களைப் பழுக்க வைக்கிறது. இந்த வாயுவை, எத்திலீன் ஃபில்டர் கிரகித்துக் கொண்டு காய்களைப் பழுக்கவிடாமல், நீண்ட நாள்கள் தாங்க வைக்கும்.

கன்டெய்னருக்குள் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் அளவு இருக்க வேண்டும். வெப்பநிலை சீராக இருக்கிறதா என்பதை டேட்டா கார்டு உதவியுடன், இணையம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். இவை இரண்டும் முக்கியமானவை. இவற்றைக் கடைப்பிடிக்காமல் ஏற்றுமதி செய்து வாழைப் பழங்கள் அழுகி நஷ்டமடைந்தவர்களும் இருக்கிறார்கள். வாழைப்பழத்தை அனுப்புவதற்கு... மத்திய வேளாண் அமைச்சகத்திடம் ‘பி.கியூ’ (Plant Quarantine) சான்றிதழ், ‘சர்ட்டிபிகேஷன் ஆஃப் ஆர்ஜின்’ இரண்டையும் வாங்க வேண்டும். சரக்கை இன்ஸ்யூரன்ஸ் செய்து கொள்வது நல்லது.

வேளாண் விற்பனைத் துறை நிர்ணயம் செய்கிற விலையில்தான் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறோம். இதன்படி ஒரு கிலோ வாழைப்பழத்தை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலைகொடுத்துக் கொள்முதல் செய்து, 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலை வைத்து ஏற்றுமதி செய்கிறோம். அந்த நாட்டில் ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழ சிப்ஸ்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவற்றை ஏற்றுமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். நாங்கள் தொடர்பாளர்கள்தான். வாழை விவசாயம் செய்பவர்கள் நேரடியாக இறங்கினால் கூடுதல் லாபம் பார்க்க முடியும். ஏற்றுமதியைப் பொறுத்தவரை தரம்தான் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொண்டு இறங்கினால், எந்தப்பொருளை ஏற்றுமதி செய்தாலும் நல்ல லாபம் பார்க்க முடியும்” என்றார், நாகராஜ் வீரய்யா.

- ஏற்றுமதி பெருகும்

தொடர்புக்கு நாகராஜ், செல்போன்: 98840 81742


கே.எஸ்.கமாலுதீன் - தொகுப்பு. த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன்

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

ஏற்றுமதிக்கு ஏற்ற சேலம் மஞ்சள்

சே
லத்து மஞ்சள் குறித்து, ‘சேலம் லீ பஜா’ரில் மஞ்சள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜெயக்குமாரிடம் பேசினோம். “எண்பது வருஷமா மஞ்சள் விற்பனை செய்றோம். விரலி மஞ்சள், பனங்காலி மஞ்சள், உருண்டை மஞ்சள்னு மூணு வகை இருக்கு. இந்த விரலி மஞ்சள்ல தனியா மூணு வகை இருக்கு. கஸ்தூரி மஞ்சள், ஆந்திராவுல இருந்து வருது. கஸ்தூரி மஞ்சளைத்தான் பொதுவா முகத்துக்குப் பயன்படுத்துவாங்க. ஆனா, சேலத்துல விளையுற உருண்டை மஞ்சளையும் முகத்துக்குப் பயன்படுத்துறாங்க.

கல்வராயன், சேர்வராயன் மலைப்பகுதிகளை ஒட்டிய அரூர், ஊத்தங்கரை, ஆத்தூர், சின்னச் சேலம், கள்ளக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகள்ல இருந்து மஞ்சள் இங்க விற்பனைக்கு வருது. பிப்ரவரி மாசத்துல இருந்து ஜூலை மாசம் வரை வரத்து இருக்கும். விவசாயிகள்ட்ட இருந்து வாங்கிப் பவுடராக்கி விற்பனை செய்றோம். மலைப்பகுதிகள ஒட்டி இருக்குறதால நிலவுற சீதோஷ்ண நிலையும் செம்மண் வாகும் மஞ்சளுக்கு ஏத்த மாதிரி இருக்குறதால, சேலத்து மஞ்சள் தரமா இருக்கு. அதனாலதான் ஏற்றுமதி செய்றவங்க சேலத்து மஞ்சளை அதிகமாகக் கொள்முதல் செய்றாங்க” என்றார், ஜெயக்குமார்.

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

“பூந்திக்கொட்டை கொண்டு துணிவைக்கும் இயற்கை சோப் ஆயில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இதை ஏற்றுமதி செய்ய முடியுமா?” கேத்ரீன்மேரி, பல்லடம், திருப்பூர் மாவட்டம்.

“இயற்கை முறையில் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதை முதலில் ஒரு ஆய்வகத்தில் (லேப்) கொடுத்துப் பரிசோதனை செய்யுங்கள். அதாவது துணி துவைப்பதற்கு உகந்ததுதானா, வேறு என்ன பொருள்களைச் சேர்த்து ‘முழுப் பயன்பாட்டு’ப் பொருளாக மாற்ற வேண்டும் என்பனவற்றை உறுதி செய்யுங்கள். உங்களது சோப் ஆயிலின் நிறத்தையும், மணத்தையும் பார்த்தவுடன் வாங்கத்தூண்டும் வகையில் மாற்றி, கவர்ச்சியான முறையில் பேக் செய்து, பிராண்டு பெயரில் உள்ளூர் சந்தையில் விற்பனையை ஆரம்பியுங்கள். தொடர்ந்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்.”

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 8

கேள்விகள் கேட்கலாம்!

ற்றுமதி வியாபாரம் குறித்த உங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவுள்ளார், கே.எஸ்.கமாலுதீன். கேள்விகளை ஏற்றுமதி, கேள்வி-பதில் பகுதி, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும், pasumai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.