Published:Updated:

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!
பிரீமியம் ஸ்டோரி
News
பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

இயற்கை

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறியவர்களும், இயற்கை விவசாயத்தில் இறங்கிய இளைஞர்களும் ஏராளமானோர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசுந்தர் கார்த்திக். 

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் தற்போது இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார், தனசுந்தர் கார்த்திக். நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக அவரைச் சந்திக்கச் சென்றோம். நாம் வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், ஊர் எல்லையில் காத்திருந்த தனசுந்தர் கார்த்திக், நம்மை வரவேற்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

“எங்க தாத்தா முழுநேர விவசாயி. மிளகாய், கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, தினைனு மானாவாரியா சாகுபடி செஞ்சுக்கிட்டுருந்தார். இறவை பாசனத்துல மிளகாய், தக்காளி, வெண்டை, பருத்தினு சாகுபடி செஞ்சார். அப்பா, பொறியாளர் வேலை பார்த்துட்டு இப்போ ரிட்டையர்டு ஆயிட்டாங்க. அம்மா டீச்சரா இருக்காங்க. நானும் பி.டெக் முடிச்சதும் வேலைக்காகச் சென்னை போயிட்டேன். தாத்தாவுக்கப்புறம் எங்க குடும்பத்துல முழுநேரமா விவசாயம் செய்ய ஆளில்லை. எப்போவாவது, மானாவாரியா ஏதாவது பயிர் வைப்போம். 

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

இந்த மாதிரி போய்ட்டுருந்தப்போ, அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்புல பிரச்னை. மெடிக்கல் செக்அப்புக்குப் போனப்போ, கர்ப்பபையில புற்று நோய் அறிகுறி இருக்குறதா டாக்டர்கள் சொன்னாங்க. அப்போ நண்பர்கள் சிலர், ரசாயன உரம் போட்டு விளைஞ்ச காய்கறிகளால்தான் இந்த மாதிரி நோய்கள் அதிகமா வருதுனு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நான் இயற்கை விவசாயம் பத்தி இன்டர்நெட்ல தேட ஆரம்பிச்சேன். அந்தத் தேடுதல்ல நம்மாழ்வார் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் பேசின வீடியோக்கள் நிறைய இருந்துச்சு. அப்படித் தேடுனப்போதான் ‘பசுமை விகடன்’ பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். எப்படியாவது நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்துக்கணும்னு நினைச்சுட்டுருந்த நேரத்துல அவர் இயற்கையில் ஐக்கியமாயிட்டார்.

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ‘வானகம்’ பண்ணையில இயற்கை விவசாயம் பத்தி முழுமையாகப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அங்கதான் ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் முழுசாகத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் பயிற்சிக்கப்புறம், நாமளும் நஞ்சில்லா விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்துட்டேன். ஊருக்கு வந்துட்டா அப்பா, அம்மாவையும் கவனிச்சுக்க முடியும்னு நினைச்சு சென்னையில இருந்து இங்க வந்துட்டேன். இங்க, ‘தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ நடத்தின மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சியிலேயும் கலந்துக் கிட்டேன்.

அதுக்கப்புறம் எங்க நிலத்தைச் சுத்தப்படுத்திச் செம்மறி ஆட்டுக்கிடை அடைச்சு ஒரு ஏக்கர் பரப்புல சின்ன வெங்காயம், நிலக் கடலைச் சாகுபடியை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன தனசுந்தர் கார்த்திக் தொடர்ந்தார்.

“அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருனு கிராமங்கள்ல சொல்வாங்க. மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்ற மானாவாரி விவசாயிகளுக்குக் கோடைமழைதான் உயிர்நாடி. மழை நீரை நிலத்தைவிட்டு வெளியே போகாம உள்ளுக்குள்ளேயே சேமிச்சு வைக்கக் கோடை உழவு முக்கியம். கோடை உழவு செய்யும்போது, இறுகலான மண் கட்டிகள் உடைஞ்சு பொல பொலப்பாகிவிடும். அதோட மண்ல இருக்குற கூட்டுப்புழுக்கள், முட்டைகள் மேல வந்து வெயில்ல காய்ஞ்சு அழிஞ்சுடும். களைகளும் கட்டுப்படும். நான், தவறாம கோடை உழவு ஓட்டிடுவேன். அதேபோல, வருஷத்துக்கு ஒருமுறை உளிக்கலப்பை மூலம் ஆழமா உழவு ஓட்டிடுவேன். அதனால, மழை நீர் முழுசும் சேகரமாகிடும்.

அதேபோல நம்மாழ்வார் சொல்லிவந்த பலபயிர்ச் சாகுபடி முறையையும் கடைப்பிடிக்கிறேன். 55 நாள்ல விளையக்கூடிய காடைக்கண்ணி, பாசிபயறு; 70 நாள்ல விளையக்கூடிய தினை, பனிவரகு; 80 நாள்ல விளையக்கூடிய உளுந்து, குதிரைவாலி, வெள்ளைச்சோளம்; 90 நாள்ல விளையக்கூடிய மல்லி, நிலக்கடலை, எள், சின்னவெங்காயம், கம்பு, மாப்பிள்ளை மினுக்கி, கொள்ளு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, சூரியகாந்தி; 120 நாள்ல விளையக்கூடிய வரகு, இருங்குச்சோளம்; 140 நாள்ல விளையக்கூடிய துவரைனு பயிர்களை எடுத்துக்கிட்டு நம்ம விரும்புற பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும்போது அறுவடை வேலை சுலபமா இருக்கும். பல பயிர்கள் இருக்குறப்போ ஏதாவது ஒரு பொருளுக்கு விலை குறைஞ்சாலும் கவலைப்படத்தேவையில்லை. நாட்டு ரகப்பயிர்களை மட்டுமே சாகுபடி செஞ்சா விதைக்காகவும் அலைய வேண்டியதில்லை” என்ற தனசுந்தர் கார்த்திக் தான் பயன்படுத்தும் சிறிய எந்திரங்களைக் காட்டியபடி பேச ஆரம்பித்தார். 

பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

“விவசாயிகளே கண்டுபிடிப்பாளரா மாறணும்னு ஐயா சொல்வாங்க. அதையும் நான் கடைப்பிடிக்கிறேன். பசுமை விகடன்ல (25.03.2018-ம் தேதியிட்ட இதழ்) ‘சைக்கிள் உழவுக்கருவி’ பத்தி எழுதியிருந்தாங்க. அந்தக்கருவியை வடிவமைச்சவர், சிவகாசிக்குப் பக்கத்துல இருக்குற மத்தியசேனைப் பகுதியைச் சேர்ந்த நாராயணன்ங்கிற விவசாயி. அவர்கிட்ட இருந்து சைக்கிள் உழவுக்கருவியை வாங்கிட்டு வந்து அதுல உழவுக்கொக்கிகள்ல மட்டும் சின்ன மாற்றம் செஞ்சு பயன்படுத்திட்டு இருக்கேன். இதை விதைக்கிறதுக்கும் களை எடுக்கறதுக்கும் பயன்படுத்தலாம்.

அதேபோலப் ‘பெர்மாகல்ச்சர்’ விவசாயத்துல மண் இளக்கிக் கருவியைப் பயன்படுத்துறதா இன்டர்நெட் மூலமாகத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் கருவியோட படத்தை வரைஞ்சு, பட்டறைல கொடுத்து அதே மாதிரி ஒரு கருவியைச் செஞ்சுக்கிட்டேன். இது 5 அடி உயரம், 2 அடி அகலத்துல பெரிய முள் கரண்டிபோல இருக்கும். இதுல 1 அடி நீள ஊசிக் கம்பிகள் வரிசையா இருக்கும். கடப்பாரை போடுறது மாதிரி இந்தக்கருவியை மண்ணுல இறக்கி நெம்புனா, மண் இளக்கமாகிடும். இது மேட்டுப்பாத்தியிலயும் வீட்டுத் தோட்டங்கள்லயும் பயன்படும்” என்றார், தனசுந்தர் கார்த்திக்.

நிறைவாகப் பேசிய தனசுந்தர் கார்த்திக், “நம்மாழ்வார் அடிக்கடி சொல்ற மதிப்புக்கூட்டல், உள்ளூர் விற்பனை ரெண்டையும் இங்க செயல்படுத்துறேன். நிலக்கடலைச் சாகுபடி செஞ்சு அதை ஆட்டி எண்ணெய் எடுத்துதான் விற்பனை செஞ்சேன். கடலை எண்ணெய், சின்னவெங்காயம் ரெண்டையுமே மார்க்கெட் கொண்டு போகாம, நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே விற்பனை செஞ்சுட்டேன்.

இப்போ மானாவாரியா 2 ஏக்கர் நிலத்துல சூரியகாந்தி, 2 ஏக்கர் நிலத்துல நாட்டுக்கம்பு, அரை ஏக்கர் நிலத்துல வெள்ளைச்சோளம்னு போட்டுருக்கேன். அரை ஏக்கர் நிலத்துல நாட்டு உளுந்து போட்டு ஊடுபயிரா துவரை போட்டிருக்கேன். ஒவ்வொன்னா அறுவடைக்கு வரும். இயற்கையில விளைஞ்ச பொருள்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஐயாவோட ஆசைப்படி என்னை மாதிரி நிறைய இளைஞர்கள் இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்கணும்” என்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு தனசுந்தர் கார்த்திக், செல்போன்: 99523 18580

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்