Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

மகசூல்

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், தன்னை அழைக்கும் விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று பார்வையிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அப்படிப் பார்வையிடச் செல்லும்போது பெயரளவுக்கு இல்லாமல்... தோட்டம் முழுவதும் சுற்றி வந்து பண்ணையில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்பங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். தனது பார்வையில் படும் விஷயங்களைச் சுட்டிக்காட்டி ஆலோசனைகளைச் சொல்வதோடு, புதிய தொழில்நுட்பங்களை வயலில் சோதனை செய்ய வலியுறுத்துவார். அவரின் ஆலோசனைகளைக் கடைப்பிடித்து மலர்ந்த இயற்கை விவசாயப் பண்ணைகள் ஏராளம் உண்டு. அப்படி அவரது ஆலோசனைகளால் செதுக்கப்பட்ட பண்ணைகளில் ஒன்றுதான், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள அத்திமாஞ்சேரி கிராமத்தில் உள்ள சித்தம்மா என்பவருக்குச் சொந்தமான பண்ணை. 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

‘பசுமை விகடன்’ இதழின் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் சித்தம்மா. இவரது பண்ணையில் கடந்த 2008-ம் ஆண்டு, பசுமை விகடன் இதழ் மூலம் நடத்தப்பட்ட ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற பயிற்சியில் நம்மாழ்வார் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இந்தப் பண்ணையில் மேற்கொண்டு வரும் நீர் மேலாண்மை குறித்த செய்தி பசுமை விகடன் இதழில் வெளிவந்திருக்கிறது. அண்மையில், ‘அவள் விகடன்’ இதழ், விவசாயத்தில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இவருக்கு ‘பசுமைப் பெண் விருது’ வழங்கிக் கௌரவித்திருக்கிறது. அது குறித்தும் கடந்த பசுமை விகடன் இதழில் எழுதியிருந்தோம். விருதுபெற்ற மகிழ்ச்சியில் இருந்த சித்தம்மாவைச் ‘நம்மாழ்வார் சிறப்பித’ழுக்காகச் சந்தித்தோம்.

“என்னோட பூர்வீகம் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்துல இருக்கிற சிவகங்கா. சின்ன வயசுல என்னைக் கரடி தாக்கிடுச்சு. அதுல ரொம்பக் காயம் ஏற்பட்டுடுச்சு. அந்தச் சமயத்துல மெடிக்கல் செக்அப்புக்காக அடிக்கடி தமிழ்நாடு வருவேன். அப்படி வந்த சமயங்கள்ல இங்க இருக்குற மக்களோடு பழக்கம் ஏற்பட்டது. அதுக்கடுத்து, இருளர் இன மக்களுக்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இங்க ஆரம்பிச்சேன். அந்த நிறுவனம் மூலமா, கல்குவாரி, ரைஸ்மில், செங்கல் சூளைகள்ல கொத்தடிமைகளா இருந்த இருளர் இன மக்களை மீட்டுருக்கோம். அந்தப் பணிகள்ல தீவிரமா இருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் ஐயா பத்தித் தெரிய வந்துச்சு. அவர் தீவிரமா இயற்கை விவசாயப் பிரசாரம் செஞ்சுக்கிட்டு இருந்த காலம் அது. எனக்கும் இயற்கை விவசாயம் மேல கொஞ்சம் ஈடுபாடு வந்து, அவரோட கூட்டங்களுக்குப் போய்ப் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

என்னோட அப்பா ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சார். அவர் கடனாளியாகி, தற்கொலை வரைக்கும் போயிட்டார். அதனால, விவசாயமே வேண்டாம்கிற முடிவுல இருந்தோம். ஆனா, நம்மாழ்வார் பேச்சு எனக்கு இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை கொடுத்தது. நானும் போற இடங்கள்ல இயற்கை விவசாயம் செய்யச்சொல்லி வலியுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா, யாருமே கேட்கலை. அப்போ ஒரு சமயம் நம்மாழ்வாரைச் சந்திச்சு, ‘ரசாயன உரத்தைப் போடாதீங்கனு சொன்னா, விவசாயிகள் யாருமே கேட்க மாட்டேங்குறாங்க’னு சொன்னேன். அவர், ‘30 வருஷமா ரசாயன உரங்களுக்கு விவசாயிகள் பழகிப் போயிட்டாங்க. அவங்களால அவ்ளோ சீக்கிரமா மாற முடியாது. நீ நடத்திக்காட்டு நம்புவாங்க’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் நான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்” என்று தான், இயற்கை விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்ன சித்தம்மா, தொடர்ந்தார். 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

“அதுக்கப்புறம்தான், 2005-ம் வருஷம், இங்க (அத்திமாஞ்சேரி கிராமத்தில்) ஏக்கர் ஒண்ணேகால் லட்ச ரூபாய்னு 13 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். மலைகளுக்கு இடையே இருக்குறதால, வாங்கும்போது 10 ஏக்கர் அளவுக்கு ரொம்பக்கரடு முரடாதான் இருந்துச்சு இந்த நிலம். தொடர்ந்து, நம்மாழ்வார் யோசனைப்படி, நவதானியத்த விதைச்சு, வரப்புகள்ல மரங்களை நட்டு வெச்சேன். அதுக்கப்புறம் நேரம் கிடைக்கிறபோதெல்லாம், அவர் பண்ணைக்கு வர ஆரம்பிச்சார். அவரே பண்ணையில எத எங்கெங்க சாகுபடி செய்யணும்னு வடிவமைச்சுக் கொடுத்தார். அவர் சொன்னபடி, மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, சிறுதானியச் சாகுபடி, பயறுவகைச் சாகுபடினு செய்ய ஆரம்பிச்சேன். தொடர்ந்து உழவு ஓட்டுனதுல வயல்ல கோரைப்புல்கள் முளைக்கிறது குறைஞ்சுடுச்சு.

அதுக்கப்புறம்தான் ஒரு நாள் நம்மாழ்வார் வந்து, ‘சித்தம்மா... ஒத்த நாத்து நடவு முறையில நெல் நடவு செய். அதுக்குத் தேவையான கயிறுகள்லாம் அக்ரி ஆபீஸ்ல கொடுப்பாங்க’னு சொல்லி அவரே சீரகச்சம்பா விதைநெல்லையும் கொடுத்தார். அதை நாற்றுவிட்டு, ஒற்றை நாற்று முறையில நடவு செஞ்சேன். 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

ஒரு ஏக்கருக்கே இரண்டரை கிலோ நெல் போதுமானதா இருந்துச்சு. வழக்கமான நடவுனா 25 கிலோ விதைநெல் தேவைப்படும். அதுல இருந்து ஒற்றை நாற்று முறையிலதான் நெல் சாகுபடி செய்றேன்” என்ற சித்தம்மா, வயலைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“இப்போ 5 ஏக்கர் நிலத்துல வெள்ளைப் பொன்னி இருக்கு. 5 ஏக்கர் நிலத்துல துவரை, காராமணி, கொள்ளு இருக்கு. இரண்டரை ஏக்கர் நிலத்துல மா, கொய்யா, எலுமிச்சை, பலா, சப்போட்டானு பழ மரங்கள் இருக்கு. அரை ஏக்கர் நிலத்துல வீட்டுத் தேவைக்கான காய்கறிப் பயிர்களும் கொஞ்சம் தென்னை மரங்களும் இருக்கு. மரங்கள்ல இருந்து கிடைக்கிற இலைதழைகளை வயல்ல மூடாக்காகப் போட்டுடுவோம்.

இங்க 10 நாட்டு மாடுகளை வளர்க்குறோம். நாட்டு மாடுகள்ல இருந்து கிடைக்கிற பால், சாணம், மூத்திரம் மூணையும் பயன்படுத்தி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யானு இடுபொருள்களைத் தயாரிச்சுக்குறோம். இடுபொருள் தயாரிப்பு போக மீதமிருக்கும் சாணத்தை மட்க வெச்சு வயல்ல பயன்படுத்துறோம். நெல்லுக்காக ஒதுக்குன வயல்ல முன்னாடி வேப்ப மரங்கள் இருந்துச்சு. அதை அப்படியே விட்டுட்டுதான் நெல் பயிர் பண்றோம். அதோட, நம்மாழ்வார் யோசனைப்படி, வரப்புகள்ல கிளைரிசீடியா, சூபாபுல் மரங்களை நட்டு வெச்சுருக்கோம். அது மூலமா நிறைய இலைதழைகள் கிடைக்குது. அதையெல்லாம் கால்நடைகளுக்குத் தீவனமாவும், வயல்ல தழைச்சத்துத்துக்கான உரமாகவும் பயன்படுத்துறோம். 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

இப்படி இயற்கை இடுபொருள்கள், தொழுவுரம், இலைதழைகள்னு நிறைவா பயன்படுத்துறதால மண் நல்லா வளமாகிடுச்சு. ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை (75 கிலோ) நெல்லுக்குக் குறையாம மகசூல் கிடைக்குது. அதிகபட்சமா ஏக்கருக்கு 40 மூட்டை அளவுக்கு மகசூல் எடுத்துருக்கேன்” என்ற சித்தம்மா, விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

“நெல்லை அரிசியா அரைச்சுதான் விற்பனை பண்றேன். சென்னையில இருக்குற ரீஸ்டோர், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் மாதிரியான இயற்கை அங்காடிகளுக்குத்தான் அரிசியை அனுப்புறேன். இயற்கையில விளையுற நெல் நல்ல கெட்டியா இருக்குறதால, ஒரு மூட்டை நெல்லை அரைச்சா 55 கிலோ அரிசி கிடைக்குது. நான், ஒரு கிலோ வெள்ளைப் பொன்னி அரிசியை 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து சராசரியா 30 மூட்டை நெல் கிடைக்குது. அதை அரைச்சா, 1,650 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சா... 99,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு உழவுல இருந்து அரிசியா அரைக்கிற வரை எல்லாம் சேர்த்து 24,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக, ஏக்கருக்கு 75,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. ஒரு போகத்துக்கு 5 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி மூலமா, 3,75,000 ரூபாய் லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய சித்தம்மா, “இப்போ நிறைய பேருக்கு ஒற்றை நாற்று நடவு பத்தின பயிற்சியும் இயற்கை விவசாயப் பயிற்சியும் கொடுத்துட்டுருக்கேன். விவசாயத்து மேல ஆசை இருக்கிற நபர்கள்; பள்ளி, கல்லூரிகள்ல படிக்குற மாணவர்கள்னு பல தரப்பினரும் எங்க பண்ணைக்குப் பார்வையாளர்களா வந்துக்கிட்டுருக்காங்க. 

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

இந்தப்பண்ணை இன்னிக்கு முன்னோடி இயற்கை விவசாயப்பண்ணையா மாறுனதுக்கு முக்கியக் காரணம், நம்மாழ்வார்தான். அவருக்கு நன்றி செலுத்துற விதமாத்தான் நான் பயிற்சிகள் கொடுத்துட்டுருக்கேன்” என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு சித்தம்மா, செல்போன்: 98840 80048

த.ஜெயகுமார் - படங்கள்: தி.ஹரிஹரன்

ஒற்றை நாற்று நடவு முறை

ற்றை நாற்று நடவு குறித்துச் சித்தம்மா, சொல்லியவை... “நான் மூன்றுவரிசை கயிற்றில் ஒற்றை நாற்று முறையில் நெல் பயிர்களை நடவு செய்து வருகிறேன். வயலின் நீளத்துக்கு இணையான கயிற்றை எடுத்து அதில் 24 சென்டிமீட்டர் இடைவெளியில் வரிசையாகக் குறிகள் இட வேண்டும். இதுபோல மூன்று கயிறுகளை எடுத்துக்கொண்டு நிலத்தின் இருபுறமும் கம்பிகளை ஊன்றி, குறிகள் இட்ட கயிறுகளைக் கம்பியில் கட்டி இணைக்க வேண்டும். இப்போது குறிகள் உள்ள இடத்துக்கு நேராக வரிசையாக ஒரு குத்துக்கு ஒரு நாற்று என நடவு செய்ய வேண்டும்.

இப்படிக் கயிறு கட்டி நடவு செய்யும்போது சரியான இடைவெளியில் நடவு செய்வதோடு, விரைவாகவும் நடவு செய்ய முடியும். மூன்று வரிசை நடவு செய்தவுடன் கம்பிகளை இடம் மாற்றி ஊன்றி மீண்டும் நடவு செய்ய வேண்டும். 24 சென்டி மீட்டர் இடைவெளி கொடுத்தால், கோனோவீடரையும் சுலபமாகச் செடிகளுக்கிடையில் ஓட்ட முடியும். ஒற்றை நாற்று நடவு முறைக்குக் குறைவான வேலையாள்கள்தான் தேவைப்படுவர். ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்வதால், பயிருக்கு நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். அதனால், அதிகத்தூர்கள் விட்டு, மகசூலும் அதிகரிக்கும்.”

ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!

வியக்க வைக்கும் நீர் மேலாண்மை

னது பண்ணையில் கடைப்பிடிக்கப்படும் நீர் மேலாண்மை குறித்துப் பேசிய சித்தம்மா, “நிலத்தை வாங்கினதும்... மலையிலிருந்து வர்ற தண்ணியைச் சேமிக்கறதுக்காக நெலத்த சுத்தி 5 அடி ஆழத்துல பள்ளம் எடுத்தேன். பள்ளத்துக்காக எடுத்த மண்ணை வரப்புல போட்டு அதுல, தேக்கு, நாவல் மரங்களை வரிசையா நட்டுட்டேன். அதில்லாம மலையோட மறுபக்கம் இருக்குற ஓடையில 4 தடுப்பணைகளைக் கட்டியிருக்கேன். அதனால எங்க நிலத்துல நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துடுச்சு. தண்ணீர் பிரச்னையே இங்க கிடையாது” என்றார்.