Published:Updated:

குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...

குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...

இயற்கை

இயற்கை விவசாயம் மட்டுமன்றி இயற்கை வாழ்வியல் முறைகளையும் போதித்து வந்தவர், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அவர் சொல்லிக் கொடுத்த வாழ்வியல் முறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்க.சண்முகசுந்தரம். இவர் எளிய முறையில் மழைநீரைச் சேமித்துக் குடிநீராகப் பயன்படுத்தி வருகிறார். 

குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...

நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சண்முகசுந்தரத்தைச் சந்தித்தோம். “இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கணுங்கிற சிந்தனை எப்பவும் நம்மகிட்ட இருக்கணுங்கறதுக்காகத்தான், பச்சை நிறத்துல ஆடை உடுத்துறேன்” என்று, தான் அணிந்திருந்த பச்சை நிற ஆடைக்கு விளக்கம் கொடுத்த சண்முகசுந்தரம், ஒரு குவளையில் தண்ணீர் கொடுத்தார். “இது மழை தண்ணீர். குடிச்சுப்பாருங்க, நல்ல சுவையா இருக்கும்” என்றார். அவர் சொன்னதுபோலவே சுவையாக இருந்தது, அந்தத் தண்ணீர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து பேசிய சண்முகசுந்தரம், “நான் விவசாயக் குடும்பத்துல பிறந்தவன். அதனால, விவசாயத்துல ஆர்வம் அதிகம். பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்மாழ்வாரோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டுச்சு. அவரோட வாழ்வியல் கோட்பாடுகள் மேல எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால, பாரம்பர்ய விவசாயம், மரபு மருத்துவம்னு என் கவனம் திரும்பிடுச்சு. எனக்கு அரை ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாம விவசாயம் செய்றேன். ஆனா, சுற்று வட்டாரத்துல ரசாயன விவசாயம் செய்றதால, பள்ளமான பகுதியில இருக்குற என்னோட நிலத்துலயும் மழைநீர் மூலமா அந்த ரசாயனங்கள் கலந்துடுது. அதனால, வேற ஓர் இடத்துல நண்பர்களோடு சேர்ந்து முழுமையான இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம்” என்றவர் மழைநீர் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். 

குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...

“மழை நீரில் உயிராற்றல் அதிகம். அதைக் குடித்தால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடுகள் வராதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதனால, எங்க வீட்ல நான், என் மனைவி, இரண்டு குழந்தைகள் எல்லாருமே மழை நீரைத்தான் குடிச்சிக்கிட்டு இருக்கோம். மழை நீரைக் குடிச்சா சளி பிடிக்கும்னு சொல்வாங்க. அது தவறான கருத்து. எங்க அனுபவத்துல அப்படி யாருக்கும் சளி பிடிச்சதில்லை. பொதுவா தண்ணீரைச் சுட வெச்சா அதோட சுவை மாறும். ஆனா, மழைநீரைக் கொதிக்க வெச்சுக் குடிச்சாலும் சுவை மாறாது. அதில்லாம மழை நீரைக் கொதிக்க வெச்சுதான் குடிக்கணும்கிற அவசியமே இல்லை. ஒரு நாளைக்கு 300 மில்லி மழைநீரே ஒருத்தருக்குப் போதுமானதா இருக்கும். இதைக் குடிக்கிறப்போ தாகம் எடுக்காது. உடல்ல சோர்வு ஏற்படாது. அந்தளவுக்கு அதுல தேவையான உயிர்ச்சத்துகள் இருக்கு.

மழை பெய்ற சமயங்கள்ல எல்லாம் வீட்டுல இருக்குற பாத்திரங்கள்லயே பிடிச்சுச் சேமிச்சு வெச்சுடுவோம். மழை பெய்ய ஆரம்பிச்சதும் மொட்டை மாடியில் உள்ள கழிவுகள்லாம் அடிச்சுட்டு குழாய் வழியா கீழே வரும். அதெல்லாம் போய்த் தண்ணீர் சுத்தமா வரத் தொடங்குன பிறகு, குழாய்ல வர்ற தண்ணீரைப் பருத்தித் துணி மூலமா வடிகட்டிப் பிடிச்சு வெச்சுக்குவோம். வெயில் படாம வெச்சுருந்தா, ஒரு வருஷம் ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது. துர்நாற்றம் வராது. இயல்புத் தன்மை மாறாம அப்படியே இருக்கும். நான்லாம் மழைநீரை மட்டுமே குடிச்சுட்டு எந்த உணவும் சாப்பிடாமப் பல நாள்கள் இருந்துருக்கேன்” என்றார், சண்முகசுந்தரம்.

நிறைவாகப் பேசிய சண்முகசுந்தரம், “பெரிய கூட்டம் கூடிதான் போராட்டம் நடத்தணும்னு அவசியமில்லை. தனிநபரா நின்னுகூட மக்கள்கிட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்னு நம்மாழ்வார் ஐயா சொல்லுவார். அதைக் கடைப்பிடிச்சு மரபணு மாற்றுப் பயிர்கள், மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் மாதிரியான விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு நான் தனி ஆளா நிறைய போராட்டங்கள் நடத்திருக்கேன். அதேபோல ஐயா சொல்ற மாதிரி குழந்தைகளுக்குத்தான் நல்ல விஷயங்களை முதல்ல கொண்டு போகணுங்கிறதுக்காக... நிறைய பள்ளிக்கூடங்களுக்குப் போய், மாணவர்கள்கிட்ட ரசாயன உரங்களோட பாதிப்பையும் இயற்கை விவசாயத்தோட நன்மைகளையும் எடுத்துச் சொல்லிக்கிட்டுருக்கேன்” என்றார் உற்சாகத்துடன்.
 
அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு சண்முகசுந்தரம், செல்போன்: 94865 76780.

கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்