Published:Updated:

"செம மகசூல் தந்த நெல்... கைகொடுத்த சொட்டுநீர் பாசனம்!" - சாதனைப் படைத்த விவசாயி

அறுவடை செய்த பிறகு தனது சொந்த உணவிற்கு எடுத்து வைத்த பின், மீதி இருப்பதை ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி, மதுரை போன்ற இடங்களுக்கும் அனுப்ப இருக்கிறார்.

"செம மகசூல் தந்த நெல்... கைகொடுத்த சொட்டுநீர் பாசனம்!" - சாதனைப் படைத்த விவசாயி
"செம மகசூல் தந்த நெல்... கைகொடுத்த சொட்டுநீர் பாசனம்!" - சாதனைப் படைத்த விவசாயி

குளிர்ந்த தென்றல் காற்றும், ஆங்காங்கே கூவும் குயிலின் ஓசையும் வட்டமிடும் பட்டாம் பூச்சியும், என்றும் வற்றாத வளங்களையும், வந்தாரை வாழவைக்கும் மக்களையும் கொண்ட அழகிய எழில் சூழ்ந்த மாவட்டம்தான் தேனி. இங்கு நெல், தென்னை, மா ,கம்பு, சோளம், திராட்சை, மா, காய்கறிகள் நடவு செய்வது வழக்கம். இங்கு விவசாயிகள் விளைச்சலில் சாதனை படைப்பதும் அடிக்கடி நிகழும். அந்த வரிசையில் கதிர்வேல் எனும் விவசாயி, நெற்பயிரில் சாதனை படைத்துள்ளார். 

தேனி மாவட்டம், தெப்பம்பட்டி கிராமத்தில் இருக்கிறது, கதிர்வேலின் தோட்டம். 25 வருடங்களாக விவசாயம் செய்து வரும் இவர், அதிகமான அளவில் நெல் மகசூல் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதிர்வேலைச் சந்தித்துப் பேசினோம். 

"நெல், மிளகாய் ,கடலை, வெங்காயம், தக்காளி, கரும்பு போன்ற பயிர்களை நடவு செய்து வருகிறேன். எனக்கு மொத்தமா மூணு ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. பயிர்கள் மட்டும் இல்லாம, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்புனு செஞ்சுக்கிட்டிருக்கேன். விவசாயத்துல ஒரே பயிரை மட்டும் நம்பி இருக்கக் கூடாதுங்குறதுதான் என்னோட கொள்கை. எப்பவுமே இரண்டு பயிருக்கு மேலயும், கால்நடைகளும் இருந்தாத்தான் சமாளிக்க முடியும். என்கிட்ட இரண்டு ஆடு, மூணு மாடுங்க இருக்கு. மாடுகளுக்கு வயல்ல இருக்குற புல்லைத்தான் உணவா கொடுக்குறேன். நிலம் கம்மியா இருக்குறதாலதான், இதோட நிப்பாட்டிட்டேன். இதை விரிவுபடுத்துற திட்டமும் இருக்கு. 
மூணு ஏக்கர்ல ஒரு ஏக்கர்ல நெல், ஒரு ஏக்கர்ல வங்காயம், ஒரு ஏக்கர்ல மிளகாய்னு பயிர் செஞ்சிருக்கேன். விவசாயம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல தண்ணி கிடைக்காம போச்சு. இதுக்கு எனக்கு வேற வழி தெரியலை. அதனால ஆண்டிபட்டியில இருக்குற வேளாண் அதிகாரி ராஜசேகர், ராதாகிருஷ்ணன் அவங்ககிட்ட ஆலோசனை கேட்டேன். அவங்க சொட்டு நீர் பாசனம் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சொட்டு நீர் பாசனத்துல எப்படி நெல் விளைவிக்க முடியும்னு கேட்டேன். ஆலோசனையோட நிற்காம அவங்க நேரடியா வயலுக்கு வந்தே ஆலோசனை கொடுத்துட்டாங்க. அவங்க சொன்னப்படித்தான் சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். 

இதுபோக அதிகாரிகள் அட்சயா என நெல் ரகத்தைச் சிபாரிசு செஞ்சாங்க. அந்த அட்சயா நெல்லைத்தான் வாங்கி ஒரு ஏக்கர்ல பயிர் செஞ்சிருக்கேன். இந்த ரகம் 105 நாளில் நல்ல மகசூலை தரும். சொட்டு நீர் பாசனத்துல செலவும் குறைவாத்தான் பிடிக்குது. அரசின் மானியம் மூலமாத்தான் சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். 

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனா, சொட்டு நீர்ப் பாசனம் மூலமா 14 லட்சம் லிட்டர் மட்டுமே போதும். முன்னால 6 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சிட்டிருந்தேன். இப்போ ஒரு மணி நேரம் மட்டும்தான் தண்ணீர் பாய்ச்சிக்கிட்டிருக்கேன். அதனால தண்ணீர் செலவும் இப்போ குறைஞ்சிருக்கு. ஆரம்பத்துல சொட்டுநீருக்கு நன் பயந்துக்கிட்டிருந்தேன். ஆனா, இனி வர்ற காலத்துக்கு தண்ணீர் பற்றாக்குறைக்கு வாய்ப்பிருக்கு. அதனால சொட்டு நீர் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும். வெளிநாட்ல எல்லாம் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறிக்கிட்டிருக்காங்க. நாமும் மாற வேண்டிய கட்டாயத்துல இருக்குறோம். 

விவசாய வேலைகளுக்கும் போதுமான ஆட்கள் இல்லை. சொட்டுநீர் பாசனம் அமைக்குறப்போ உற்பத்தி அதிகமாகுறதோட களையெடுக்க, தண்ணீர் பாய்ச்சனு ஆட்கள் செலவும் குறையுது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் ஒரு தூருக்கு 20 முதல் 24 நெற்கதிர்கள் வளர்ந்துக்கு. ஆனா வழக்கமான விவசாயத்துல ஒரு தூருக்கு  10 முதல் 14 நெல் கதிர்கள் வரைக்கும் வளரும். சொட்டு நீர் பாசனத்துல விளைஞ்சதுல ஒரு ஏக்கருக்கு 5 டன் முதல் 6 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஆனா சாதாரண நீர்ப்பாசனத்துல ஏக்கருக்கு 3 முதல் 4 டன் வரை மட்டும்தான் மகசூல் கிடைக்கும். சாதாரணமா செய்யுற விவசாயத்தை சொட்டு நீர் பாசனத்துல நெற்கதிர்களை வளர்க்குறப்போ களைகளும் குறைவா இருக்குறதால, அந்த செலவுக் குறைவா இருக்கு. என் நிலத்து ஓரத்துல மண்புழு வளர்ப்பு செய்துக்கிட்டிருக்கேன்" என்று சொல்லும் கதிர்வேல்,

அறுவடை செய்த பிறகு தனது சொந்த உணவிற்கு எடுத்து வைத்த பின், மீதி இருப்பதை ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி, மதுரை போன்ற இடங்களுக்கும் அனுப்ப இருக்கிறார். மேலும் இவரது நிலத்தை வேளாண் அதிகாரிகள் வந்து நேரில் பார்த்து, இவரது சாதனையையும் வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். நெல்லில் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தி விவசாயம் செய்த ஒரு விவசாயி சாதனை படைத்துள்ளதை அதிகாரிகள் பாராட்டியதை எண்ணி நெகிழ்ந்தபடி விடைகொடுத்தார்.