Published:Updated:

வறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்!

பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு. ஆனா, எனது அஞ்சு ஏக்கர் வாழைத்தோட்டத்திலிருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே தள்ள முடியலை. கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான்.

வறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்!
வறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்!

யற்கையாக அமைந்து, நமக்கெல்லாம் மழை, பல்லுயிர்ப் பெருக்கம், ஆறுகள் மூலம் தண்ணீர் என்று பல்வேறு வகையில் இயற்கை சமநிலையைப் பாதுகாத்துப் பலன் தந்தவை காடுகள். ஆனால், நமது பொல்லாத சுயநலம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகளை அழிக்க வைத்து, இயற்கைப் பேரிடருக்குக் காரணமாகி இருக்கிறது. கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணோ, வறட்சி மிகுந்த தனது ஊரில் இருக்கும் தனது தோட்டத்தில், 1 ஏக்கர் நிலத்தில், பல்வேறு மரங்களை வளர்த்து, `நந்தவனம் காடு' என்ற பெயரில் காட்டை உருவாக்கி அசத்தியிருக்கிறார். சமீபத்தில் டெல்டாவை பலிகடாவாக்கிய கஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து இவரது வெள்ளாமையை இந்தக் காடு காத்ததாகப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்தான் இந்த சரோஜா. கணவர் தொழிலை கவனிக்க, மகன்கள் இருவரும் வேலையில் இருக்க, சரோஜாவோ தங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதோடு, 1 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே வளர்த்து, செயற்கை காட்டை உருவாக்கியிருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெண் சிஷ்யைகளில் ஒருவர் இவர். அவரிடம் கற்ற இயற்கை குறித்தான விழிப்புஉணர்வைக் கொண்டு தனது நிலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர். தான் உருவாக்கிய காட்டில் ஆசைதீர உலாவிக் கொண்டிருந்த சரோஜாவைச் சந்தித்துச் பேசினோம். 

``ஆரம்பத்தில், `நான் இயற்கை விவசாயம் செய்யப் போறேன்'ன்னு சொன்னதும் வீட்டுல எதிர்ப்பு. `முதலுக்கே மோசமாயிரும்'னு பயந்தாங்க. ஆனா, நான் விடாப்பிடியாதான் செஞ்சேன். முருங்கை, கிழங்கு, வாழைன்னு போட்டேன். இந்தப் பகுதியே வறட்சி மிகுந்த பகுதி. எது போட்டாலும் விளையாத சுண்ணாம்பு மண் நிறைந்த பூமி. கருவேலம் மரங்கள் மட்டுமே வளரும். இன்னொருபக்கம், நிலத்தடி நீர்மட்டமும் 900 அடிக்குக் கீழே போயிட்டு. எங்களுக்கு மூன்று கிணறுகள் இருந்தது. அந்தத் தண்ணீரைக் கொண்டு, மிகவும் சிக்கனப்படுத்தி விவசாயம் பார்த்தேன். மாட்டுச் சாணம், கிடைத்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்குன்னு போட்டு மெள்ள  மெள்ள இந்தப் பூமியை பொன் விளையிற நிலமா மாத்தினேன். அப்புறம், வாழை, முருங்கை, கிழங்குன்னு இந்த மண்ணுக்கு ஏற்ற பயிர்களைப் பயிரிட்டேன். இயற்கை முறையில்தான் வெள்ளாமை பண்ணினேன். பெரிய அளவில் முதலில் லாபம் இல்லை. அப்புறம், எனது தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையம் பண்ணுற இடமா மாத்தினேன். மெள்ள மெள்ள இயற்கை விவசாயம் எனக்குக் கைகொடுக்கத் தொடங்கிச்சு. என் கணவரும் என்னைப் புரிஞ்சுகிட்டு, உற்சாகப்படுத்தத் தொடங்கினார். 

அதன்பிறகுதான் எனக்குக் காடு வளர்க்கும் எண்ணம் தோன்றியது. 1 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். மா, பலா, நுணா, முள் சீத்தா, சப்போட்டா, கொய்யா, அத்தி, நாவல், கொடுக்காப்புளி, மலைவேம்பு, இலுப்பைன்னு ஏகப்பட்ட மரங்களை வளர்த்தேன். அவை வளர சிரமப்பட்டன. நம்மாழ்வார் கற்றுக் கொடுத்த வித்தைகளை களமிறக்கினேன். அதன்பிறகு, அனைத்து மரங்களும் செழித்து வளர்ந்தன. மரங்களைச் சுற்றிப் பல்வேறு செடிகொடிகளும் வளர்த்தொடங்கின. அவற்றை  அப்புறப்படுத்தாமல் காடு போல் மாற்றினேன். `நந்தவனம் காடு'ன்னு இதற்குப் பெயரும் வைத்தேன்.

இயற்கையான காடு போல் இந்த ஓர் ஏக்கர் நிலமும் மாறியதால், இங்கே பல்வேறு சிறுசிறு உயிர்களும் வாழ ஆரம்பித்திருக்கின்றன. கரூர் மாவட்டத்திலேயே அரிதாகிப்போன வகைவகையான பட்டாம்பூச்சிகளும் இந்தக் காட்டைச் சுற்ற ஆரம்பித்திருக்கின்றன. இங்கே நான் வளர்த்திருக்கிற மரங்களில் பழங்களைப் பறிப்பதில்லை. அதனால், நிறைய பறவைகளும் இங்கே தங்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக வந்தால், நிஜமாக எனக்குக் காட்டுக்குள் போய்ட்டு வந்த உணர்வு ஏற்படுது. மனசு சரியில்லன்னா, இந்தக் காட்டுக்குள் காலாற நடந்து வந்தா, உடனே மனசு லேசாயிடும்

இயற்கையா உருவாகி நமக்குப் பலன் தந்த காடுகளை அழித்துவிட்டோம். அதனால், மழை குறைஞ்சுப் போய்ட்டு. வறட்சி ஏற்படுது. புயல், பெருவெள்ளம்ன்னு ஏற்படுது. அதனால், நாம் அனைவரும் நமக்கிருக்கும் மொத்த இடத்தில் சிறிய இடத்தில் இதுபோல மரங்களை வளர்க்க வேண்டும். இல்லைன்னா, நாம் இயற்கைக்குச் செய்த பாவத்தைச் சரி பண்ண முடியாது. நான் வளர்த்த இந்தக் காடு எனது 5 ஏக்கர் வாழைத் தோட்டத்தை கஜா புயல் தாக்குதலிலிருந்து காப்பாத்திட்டு. பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு. ஆனா, எனது 5 ஏக்கர் வாழைத்தோட்டத்திலிருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே தள்ள முடியலை.

கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான். அதேபோல், இந்த மாவட்டத்திலேயே 100 வயசைத் தாண்டிய வேப்பமரம் ஒன்று எங்க தோட்டத்தில் இருக்கு. எங்க வீட்டைச் சமீபத்தில் சரிபண்ணினோம். அதற்கு, `பலகை செய்ய இந்த மரத்தை வெட்டலாம்'ன்னு பலரும் யோசனை சொன்னாங்க. `வேண்டவே வேண்டாம்'ன்னு ஒத்தக்கால்ல நின்னு அதைத் தடுத்துட்டேன். ஏன்னா, இந்த மரத்தைச் சில மணிநேரத்துல அழிச்சுரலாம். ஆனா, என்ன பண்ணுனாலும், நம்ம வாழ்நாளுக்குள்ள இதுபோல் ஒரு மரத்தை உருவாக்கிவிட முடியாது" என்றார்.

உண்மைதான்!