Published:Updated:

``இதுவரைக்கும் 2 லட்சம் விதைகளை விதைச்சிருக்கோம்!" - பனை மரங்களுக்காகப் போராடும் சதீஷ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல்வேறு இளைஞர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் `பனை' சதீஷும் ஒருவர்.

``இதுவரைக்கும் 2 லட்சம் விதைகளை விதைச்சிருக்கோம்!" - பனை மரங்களுக்காகப் போராடும் சதீஷ்
``இதுவரைக்கும் 2 லட்சம் விதைகளை விதைச்சிருக்கோம்!" - பனை மரங்களுக்காகப் போராடும் சதீஷ்

மது பாரம்பர்ய மரங்களில் முதன்மையான மரம் பனை. கருப்பட்டி, நுங்கு, பனங்கற்கண்டு, கள், பனங்கிழங்கு என்று இந்த மரம் தரும் உணவுப் பொருள்கள் ஏராளம். ஆனால், இத்தகைய சீர்மிக்க மரத்தை நாம் அழித்துவிட்டோம். இயற்கை சமநிலைக்கு உறுதுணை செய்த இந்த மரவகையை தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டோம். இந்நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஊட்டிய விழிப்புஉணர்வால், இன்றைய இளைஞர்கள் பலர் இயற்கையைக் காக்கப் புறப்பட்டிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. சென்னையில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வரும் சதீஷூம் அத்தகைய நம்பிக்கை இளைஞர்களில் ஒருவர்தான். பனை குறித்து உரையாடுவது, விதைகளைத் தூவுவது, பள்ளி, கல்லூரிதோறும் சென்றும் பனையின் மேன்மைகளை விளக்குவது என்று மனிதர் 365 நாள்களும் பனை குறித்தே சிந்திப்பவராக இருக்கிறார். சமீபத்தில், கரூர் மாவட்டம், வானகத்தில் நிரந்தரத் துயில் கொள்ளும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்காக சக இளைஞர்களோடு சென்னை டு வானகம் வரை 9 நாள்கள் சைக்கிளில் பனைக் குறித்துப் பிரசாரப் பயணம் செய்தபடி வந்துசேர்ந்தார். 

அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``பனை நமது மரம். அதன் அத்தனை அங்கங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. உலகத்தில் தொன்மையான சமூகமா தமிழ்ச் சமூகத்தைச் சொல்றாங்க. இலக்கியங்களும், கட்டடக்கலைகளும் இங்குள்ளதுபோல் எங்கும் இல்லை. நமது அத்தனை தொன்மங்களையும், பழைமையான விசயங்களையும், பாரம்பர்யங்களையும், பழங்கால இலக்கியச் செறிவுகளையும் நமக்குப் பாதுகாத்து வைத்துத் தந்தவை அதன் ஓலைகள்தாம். ஆனால், பனை நமக்குச் செய்த உதவிகளையும் வசதியாக மறந்துவிட்டு, அவற்றை அழித்து, இன்றைக்கு அழிவின் விளிம்புக்குக் கொண்டு வந்துவிட்டோம். `கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் முன்புபோல் இருந்திருந்தால், கஜா புயலால் டெல்டாவில் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டிருக்காது'னு சொல்றாங்க. ஆனா, அதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. நானும் கடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு முன்புவரை உணராமல்தான் இருந்தேன். நான் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலையில் இருக்கேன். 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு உரிமைக்காகத் தமிழகமே திரண்டு போராட்டம் நடத்தியது. அதில் சென்னை மெரினாவில் நானும் ஆர்வமா கலந்துகிட்டேன். அதன்பிறகுதான், `நாம் இப்போது வாழ்வது நமது பாரம்பர்ய வாழ்வியல் இல்லை. மேலைநாட்டின் வாழ்க்கை'ன்னு புரிஞ்சுச்சு. நமது பாரம்பர்ய விசயங்களை தெரிஞ்சுக்குற ஆர்வம் வந்துச்சு. நம்மாழ்வாரோடு பயணித்த பாரதிகண்ணன் மற்றும் பிரசாந்தோட அறிமுகம் கிடைச்சுச்சு. அதன்மூலமா, பனைமரங்கள் குறித்த செய்திகள் அதிகம் கிடைச்சுச்சு. அதன்மீது ஆர்வம் ஏற்பட்டுச்சு.

முன்னாள் தாவரவியல் தலைவர் தயாளன் சாரின் அறிமுகத்திற்குப் பிறகு, `இனி பனை குறித்து இயங்குவதே உத்தமம்'னு எனக்குத் தோன்றியது. உடனே, தன்னார்வலர்களோடு சேர்ந்து தாம்பரத்தைச் சுற்றியுள்ள 25 நீர்நிலைகளின் கரைகளில் பனைவிதைகளை விதைத்தோம். அதேபோல், பெரும்பாக்கம், பெருங்களத்தூர், ஒரகடம், மண்ணிவாக்கம்ன்னு பல இடங்களில் விதைகளை விதைத்தோம். அதேபோல், லைட்ஹவுஸிலிருந்து பட்டினப்பாக்கம் வரை கடற்கரை ஓரங்களில் பனைவிதைகளைத் தூவினோம். இப்படி இதுவரை 2 லட்சம் விதைகளை விதைத்துள்ளோம். சும்மா விதைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சி பற்றி தொடர்கண்காணிப்பும் செய்துவருகிறோம்.

சென்னையிலிருந்து கரூர் வரும் வரை எண்ணற்ற மக்களைச் சந்தித்து பனைகுறித்து உரையாடினோம். பனையேறி குடும்பங்கள் பலதை சந்தித்தோம். `இன்னைக்கு எங்க மகன்கள் டாக்டராகவும், பொறியாளராகவும் பெரிய ஆளாக இருப்பதற்குக் காரணம் இந்தப் பனைதொழில் தந்த வருமானம்தான்'ன்னு பலபேர் மகிழ்ச்சியா சொன்னாங்க. ஆனா, `அரசு கள்ளை தடை செய்திருப்பதால், எங்க தொழில் அழிவதோடு, பனைமரங்களும் அழிவைச் சந்திக்கின்றன' என்று பலர் கண்ணீரோடு சொன்னாங்க. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூர் பகுதியில் வசித்துவந்த பனையேறி குடும்பங்களைச் சந்தித்துப் பேசினோம். 

இந்த 9 நாள் பயணத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை வீடியோக்களாக்கி ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதேபோல், தமிழக அரசு ரேஷன் கடைகளில் கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பனைசார்ந்த பொருள்களை விற்க வைக்கணும். பனைபொருள்களை தமிழகம் முழுக்கப் பரவலாக்கி, அதன் உன்னதத்தைக் கடைசி தமிழன் வரை உணர வைப்பதே எங்க உச்சபட்ச இலக்கு" என்றார் மகிழ்ச்சியாக!