Published:Updated:

50 சென்ட் நிலம்; தினம் ரூ. 3,000 வருமானம்... ஊடுபயிரில் லாபம்!

50 சென்ட் நிலம்; தினம் ரூ. 3,000 வருமானம்... ஊடுபயிரில் லாபம்!

ஊடுபயிரில் ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்... 50 சென்டில் அசத்தும் வருமானம்!

50 சென்ட் நிலம்; தினம் ரூ. 3,000 வருமானம்... ஊடுபயிரில் லாபம்!

ஊடுபயிரில் ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்... 50 சென்டில் அசத்தும் வருமானம்!

Published:Updated:
50 சென்ட் நிலம்; தினம் ரூ. 3,000 வருமானம்... ஊடுபயிரில் லாபம்!

``தென்னைக்கு இடையில் ஊடுபயிர் செய்ய முடியும். அதுவும் தெளிவான முறையில் திட்டமிட்டுச் செய்தால் ஆயுசுக்கும் ஊடுபயிர் செய்யலாம். நல்ல வருமானம் பார்க்கலாம்’’ என்கின்றனர் இயற்கை விவசாயிகள். இதை அதிகமான இடங்களில் செய்து காட்டியும் வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சூரக்குப்பம் எனும் கிராமத்தில் இருக்கிறது, சீனிவாசன் என்பவரின் தோட்டம். அங்கு அமைக்கப்பட்டுள்ள தென்னையில் ஊடுபயிர் விவசாயம் கொஞ்சம் புதிதாக இருக்கவே அந்தப் பண்ணையின் ஆலோசகர் ஏகாம்பரத்தை சந்தித்துப் பேசினோம். 

``இது மொத்தம் 20 ஏக்கர் நிலம். முழுக்க இயற்கை விவசாயம்தான். இங்கு பத்து ஏக்கரில் மா மரங்களும் 10 ஏக்கரில் தென்னை மரங்களும் இருக்கின்றன. முதலில் இந்த நிலத்தை வாங்கியபோது புதர்கள் மண்டியிருந்தன. அதையெல்லாம் அகற்றிவிட்டு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி நான்கு பண்ணைக்குட்டைகளை வெட்டியிருக்கிறோம். அதில் ஒரு பண்ணைக்குட்டையில் இறால் மீன்களை வளர்க்கிறோம். இது போக கோழி, ஆடு, மாடு, வாத்து ஆகியவற்றுக்குத் தனியாகக் கொட்டகைகள் அமைத்திருக்கிறோம்.

இயற்கை உரங்களுக்குத் தனியாகத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மூன்று கிணறுகள் இருக்கின்றன. அதில் இரண்டு கிணறுகளில் உள்ள நீரைத்தான் பயன்படுத்துகிறோம். நாங்கள் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பின்பற்றுவதால் அந்தத் தண்ணீரே எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது. இது முழுமையான ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றும் செயலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்றவர் தொடர்ந்தார். 

``தென்னைக்குள்ளே ஊடுபயிராக 12 வகையான மா, பலா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, நீர் ஆப்பிள், சீத்தா, நார்த்தங்காய், பப்ளிமாஸ் போன்ற பழப்பயிர்கள் ஊடுபயிர்களாக நடவு செய்யப்பட்டிருக்கின்றன. இதை 50 சென்ட் நிலங்களில் பிரித்து நடவு செய்துள்ளோம். 12 வகையான பழ மரங்கள் தவிர்த்து, மேட்டுப் பாத்தி அமைத்து வாழை, பப்பாளி, தக்காளி, பீன்ஸ், அவரை, முள்ளங்கி, பீட்ரூட், காளிபிளவர், கேரட், அகத்தி, துவரை, கத்திரி எனக் காய்கறி பயிர்களை நடவு செய்திருக்கிறோம். 20 ஏக்கர் மொத்தமும், மேட்டுப் பாத்தி, வட்டப் பாத்தி முறையில்தான் நடவு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு 50 சென்ட் நிலமும் ஒரு மாதிரி பண்ணைபோல மாற்றியிருக்கிறோம். இவை தவிர, 30 சென்டில் சொட்டுநீர் பாசனம் மூலம் மணிப்பூர், அத்தூர் கிச்சலி சம்பா நெல் ரகங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன.

பண்ணை முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே தேக்கு, குமிழ்த் தேக்கு, சில்வர் ஓக், சந்தனம், ரோஸ் உட் உள்ளிட்ட மரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வரப்பு ஓரங்களில் முள் இல்லா மூங்கில், 1,200 பனங் கொட்டைகள் எனப் பலவற்றையும் நடவு செய்திருக்கிறோம். நாங்கள் அமைத்துள்ள 50 சென்ட் மாதிரி பண்ணையில் சரியாக இன்னும் ஆறு மாதம் கழித்து தினமும் 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் வகையில் மாதிரிப் பண்ணையாக அமைத்திருக்கிறோம். இங்கு பயிரிடப்பட்டிருக்கும் பயிர்கள் சிறிய கால அளவில் இருந்து நீண்ட காலங்களுக்கு நிலைத்து நின்று பலன் கொடுக்கக்கூடியவை.

50 சென்டில் மொத்தமாகப் 15 பயிர்கள் ஊடுபயிராக நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரகங்களில் கத்திரி, தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் குறுகியகால பயனைக் கொடுக்கும். இதுபோக கீரை வகைகளையும் மேட்டுப் பாத்தியில் நடவு செய்ய இருக்கிறோம். தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்கள் முதல் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு பறிப்பு கொடுக்கும் தேங்காய் வரை 50 சென்ட் நிலத்தில் சாத்தியமாக்கி இருக்கிறோம். 

முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களும் மாட்டுக் கோமியம், மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெல்லம், மாட்டு எரு ஆகியவை கலந்தும் சொட்டுநீர் பாசனம் மூலம் கொடுத்து வருகிறோம். பயிர்கள் நோய்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல. நோய்கள் பயிர்களைத் தாக்காமல் தடுக்கவும், பயிர்களுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கும் வகையிலும் இயற்கை உரங்கள் கொடுக்கப்படுகின்றன. தனியாக இருக்கும் 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து அதிலும் விவசாயம் செய்து வருகிறோம். அங்கே 13 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களும் மிளகாய், கத்திரி போன்ற ரகங்களையும் பயிரிட்டு வருகிறோம். இதை முழுமையான பண்ணையாக மாற்ற பொருள்கள் செலவுகள் கொஞ்சம் அதிகமானது. ஆனால், ஒருமுறை அமைத்துவிட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். இன்று ஒரு பயிர் விதைத்துவிட்டு நஷ்டத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, ஊடுபயிர் விவசாயத்தைக் கையில் எடுத்து 50 சென்டில் தினமும் 3,000 முதல் 5,000 வரை சம்பாதிக்கவும் வழி இருக்கிறது’’ என்கிறார் ஏகாம்பரம்.

ஒரு பயிரால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்த்து, ஊடுபயிரால் கிடைக்கும் நன்மைகளைப் பெறலாமே!