Published:Updated:

ஊரெல்லாம் பூ வாசம் !

கன்னியாகுமரியைக் கலக்கும் மலர் சந்தை...என்.சுவாமிநாதன்படங்கள்: ரா. ராம்குமார்

பொங்கல் சிறப்பிதழ்

சந்தை

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விவேகானந்தர் பாறை, அய்யன் திருவள்ளுவர் சிலை போன்ற அடையாளங்களோடு, கன்னியாகுமரியின் மற்றொரு அடையாளம்... 'தோவாளை’ மலர் சந்தை!

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தோவாளை கிராமம். இங்குதான் இயங்கி வருகிறது, தென்னிந்தியாவின் மிகப்பெரிய 'தோவாளை’ மலர் சந்தை. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இச்சந்தை, தமிழகத்தில் மலர்களின் விலையை நிர்ணயிக்கும் முக்கியமான சந்தைகளிலும் ஒன்று.

விவசாயிகள், வியாபாரிகள், பூ கட்டுபவர்கள், பூ அலங்காரம் செய்பவர்கள்... என நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது, இச்சந்தை. இப்பகுதியில், மலர் சாகுபடி அதிகளவில் நடந்து வருவதால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், மலரியல் ஆராய்ச்சி நிலையம் தோவாளையில்தான் இயங்கி வருகிறது.

காலை வேளையில் மலர் சந்தையை வலம் வந்தோம். குவியல் குவியலாகப் பூக்கள்... பூக்களை வாங்கவும், விற்கவும் வரிசை கட்டி நிற்கும் ஆண்கள், பெண்கள் கூட்டம்... பூக்களின் பெயர்களும், விலையும் கலந்து கட்டி வரும் இடைவிடாத சப்தம்..! சில்லரை விலையில் பூக்களை வாங்கியவர்கள் மாலைகளாகவும், சரமாகவும் கட்டிக் கொண்டிருக்க... வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக ஓலைக்கொட்டானில் கட்டி வைக்கப்பட்ட பூக்கள் குவிக்கப்பட்டிருக்க... பரபரத்துக் கொண்டிருந்தது, சந்தை.

ஊரெல்லாம் பூ வாசம் !

வாழ வைக்கும் பூ !

தோவாளை மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகன், ''குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தப்ப, அரண்மனைத் தேவைக்காகவும், கோவில்கள்ல பூஜை செய்யறதுக்காகவும் பூ சாகுபடி பண்ண இடம் தேடியிருக்கார், மகாராஜா. அப்போ, தோவாளை கிராமம்தான் பூ சாகுபடிக்கு உகந்ததுனு கண்டுபிடிச்சு, விவசாயத்தை ஆரம்பிச்சுருக்காங்க.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மருங்கூர், ஆவரைக்குளம்னு பக்கத்துல இருக்கற கிராமங்கள்லயும் பூ சாகுபடி பரவிடுச்சு. இன்னிக்கு இந்த ஊர்ல இருக்குற அத்தனை பேரையும் 'பூ’தான் வாழ வெச்சிட்டுருக்கு.

செவ்வந்தி, மரிக்கொழுந்து, ரோஜா, வாடாமல்லி, கேந்தி , அரளி, பிச்சிப் பூ... இப்படி ஏகப்பட்ட பூக்களுக்கு இந்த மண்ணும் பருவநிலையும் சரியா அமைஞ்சுருக்கு. எல்லா கிராமங்கள்ல இருந்தும் தோவாளை சந்தைக்குத்தான் பூவை விற்பனைக்குக் கொண்டு வருவாங்க. சுத்துப்பட்டு கிராமம்னு இல்லாம, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, சேலம், மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் கூட வரத்து இருக்கும். ஓசூர்ல இருந்தும் அதிகமா பூ வருது.

ஊரெல்லாம் பூ வாசம் !

இந்தச் சந்தைக்கு வார விடுமுறையே கிடையாது. அதனாலதான் இந்தச் சந்தை விலையை வெச்சுதான் தமிழ்நாட்டுல பூ விலையை நிர்ணயிப்பாங்க'' என்றார், பெருமையாக.

கேரளாவில் அதிகத் தேவை !

பூ வியாபாரிகளில் ஒருவரான, தோவாளை லெட்சுமணன், ''இங்க விவசாயிகளுக்கு உடனடியா பணத்தைப் பட்டுவாடா செஞ்சுருவாங்க. அதனால நிறைய பேர் இங்கதான் கொண்டு வருவாங்க.

கேரளாவுல எப்பவும் பூவுக்குத் தேவை இருந்துக்கிட்டே இருக்கறதால, இந்தச் சந்தையில இருந்து, அதிகமா அங்கதான் பூ போகுது'' என்றார்.

உள்ளூரிலேயே உற்சாகமான வருமானம் !

பூ கட்டும் தொழிலாளியான சிவராமன், ''இருபது வருஷமா பூ கட்டிக்கிட்டுருக்கேன். ஏறத்தாழ ஐநூறு குடும்பத்துக்கு மேல முழு நேரமாவும், பகுதி நேரமாவும் பூ கட்டுற வேலையில ஈடுபட்டிருக்காங்க.

ஊரெல்லாம் பூ வாசம் !

கோவில் திருவிழா சமயத்துலயும், முகூர்த்த நாள்கள்லயும் அதிகளவு மாலைக்கும் சரத்துக்கும் தேவை இருக்கும். அந்த மாதிரி சமயத்திலெல்லாம் ராத்திரி பகலா ஓய்வே இல்லாம பூ கட்டுவோம். காலேஜ்லயெல்லாம் படிச்சுப் பட்டணத்துக்குப் போய் சம்பாதிக்குறதைவிட அதிக பணத்தை உக்காந்த இடத்துல பூ கட்டியே சம்பாதிச்சுடுவோம்'' என்கிறார், சந்தோஷமாக.

பூ அலங்காரத்துக்கு தேசிய விருது !

தோவாளை கிராமத்தில் வீட்டுக்கு வீடு பூ வாசம்தான். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் வீட்டு வேலை செய்தது போக, மீதி நேரங்களில் பூ கட்டுவது மூலம் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்து விடுகிறார்கள்.

வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையையும், பூ கட்டும் நேரத்தையும் பொருத்து, இவர்களுக்கான சம்பளமும் கூடும்.

ஊரெல்லாம் பூ வாசம் !
ஊரெல்லாம் பூ வாசம் !

வீட்டு முற்றத்தில் தன் கணவர் முத்தம்பெருமாள் மற்றும் ஒன்பது வயது பேத்தி தாரணியுடன் குடும்ப சகிதமாகப் பூ கட்டிக் கொண்டிருந்த தமிழரசியிடம் பேசினோம், ''பூ கட்டுறதுதான் பரம்பரைத் தொழில்.

என் மாமனார், நொச்சி இலை, வெள்ளை அரளி, சம்பா நாரு, சிவப்பு அரளி எல்லாத்தையும் கலந்து கட்டுற 'மாணிக்க மாலை'யை பிரமாதமா கட்டுவார். அதுக்காக அவருக்குச் 'சிறந்த கைவினை கலைஞர்’னு ஜனாதிபதி விருது கிடைச்சிருக்கு.

ஜவஹர்லால் நேருவோட அஸ்தியை கடல்ல கரைக்குறதுக்காக கன்னியாகுமரிக்கு ஜீப்புல கொண்டு வந்தாங்க. அந்த ஜீப்புக்கு மாமனார்தான் பூ அலங்காரம் செஞ்சார். அவர் இப்போ இறந்துட்டார். ஆனாலும் நாங்கதான் இன்னிக்கும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு 'மாணிக்க மாலை' கட்டி அனுப்பிட்டிருக்கோம்.

ஊரெல்லாம் பூ வாசம் !

கஷ்டம்னு இந்த ஊர்ல யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா... எல்லாரையுமே இந்த பூ பிழைக்க வெச்சுடும். ஒரு நாலு நாள் பக்கத்துல இருந்து பாத்தாலே பூ கட்டுறதைக் கத்துக்கலாம்.

200 கிராம் பிச்சிப்பூவைக் கட்டறதுக்கு 12 ரூபாய்ல இருந்து 15 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு கிலோ பூ கட்டினாலே 60 ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்க முடியும்'' என்று நம்மிடம் பேசிய இரண்டு நிமிட நேரத்துக்குள், ஒரு சரத்தைக் கட்டி முடித்து விட்டார், தமிழரசி.

மொத்தத்தில், தோவாளை மலர் சந்தை... நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மலர வைத்துக் கொண்டிருக்கிறது!

தொடர்புக்கு
முருகன், செல்போன்: 89036-67170.