Published:Updated:

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

காசி.வேம்பையன்படங்கள்: பா. கந்தகுமார்

பொங்கல் சிறப்பிதழ்

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
விதைப்பும், அறுவடையும் மட்டும்தான்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பண்டையத் தமிழர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கிடந்தவை, சிறுதானியங்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும், பெயரே தெரியாத புல்லினங்களுக்கும் உணவாகத் திகழ்ந்தவை. வறட்சி, அடைமழை, கடுங்குளிர்... எனப் படுத்தி எடுக்கும் பருவநிலைக்கும் சவால் விட்டு, எதற்கும் அசையாமல் நின்று மகசூல் கொடுக்கக் கூடியவை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானிய சாகுபடியின் மீது, அரசின் கவனம் குறைவாகவேதான் இருக்கிறது. இதன் காரணமாக, விவசாயிகளும்... அவற்றின் மீது பெரிதாக அக்கறை காட்டாதவர்களாகவே இருக்கிறார்கள். இன்றையச் சூழலில்... தினை, சாமை, கம்பு, வரகு என்று சிறுதானியங்களின் பெயர்களைச் சொன்னால், 'இது என்ன புதுசா இருக்கு. எந்த நாட்டுல விளையுது?' என்று கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்!

அப்படிப்பட்டவர்கள் எல்லோருக்கும், 'சிறுதானியங்கள் எல்லாம் நம் மண்ணின் சொத்துக்கள்' என்று நிரூபிப்பதற்காகவே... திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர். மணி, தொடர்ந்து வரகு சாகுபடி செய்து வருகிறார்!

இயந்திரம் மூலம் வரகு அறுவடை நடந்து கொண்டிருக்க... வரப்பில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த மணியைச் சந்தித்தோம். ''சொந்த ஊரே இதுதான். பி.ஹெச்.டி முடிச்சுட்டு, காந்திகிராமப் பல்கலைக்கழகம், தேவர் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்னு 30 வருஷம் பேராசிரியரா வேலை பார்த்தேன்.

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

98-ம் ஆண்டு வெளிநாடுகள்ல பிரபலமா இருக்குற 'செல் தெரபி’ பத்தித் தெரிஞ்சுகிட்டு, அதைக் கத்துக்கிட்டேன். இப்போ, ஓய்வுக்குப் பிறகு... மதுரை, சென்னை, பெரிய கொழப்பளூர்னு மூணு இடத்துல கிளினிக் ஆரம்பிச்சு செல் தெரபி மருத்துவம் பார்த்துக்கிட்டிருக்கேன்.

ஊர்ல எனக்கு 18 ஏக்கர் நிலம் இருந்துச்சு. நான் வேலைக்குப் போய்ட்டதால... விவசாயம் பாக்காம எல்லாம் புதர் மண்டிக் கிடந்துச்சு. அதை சரி பண்ணிட்டுப் பக்கத்துல இருந்த நிலத்தையும் சேர்த்து வாங்கினேன். இப்போ மொத்தம் 35 ஏக்கர் இருக்கு. அதுல விவசாயத்தை ஆரம்பிச்சேன்.

எல்லா மனிதர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் ஆசைப்படுறோம். அது கிடைக்காம போனதுக்கு முக்கியக் காரணம், உணவுப் பழக்க, வழக்கம்தான். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தி விளைவிக்குற உணவுப் பொருட்களை சாப்பிடறப்போ, உடம்புல இருக்குற செல்கள் பாதிக்கப்பட்டு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு, ரத்தக்கொதிப்புனு ஏகப்பட்ட நோய்கள் வருது. அதனால, என்னோட நிலம் முழுக்க இயற்கை முறையில விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

இதுக்காக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் நடத்தின பல பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். ஆரம்பத்துல இருந்தே தொடர்ந்து 'பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சு அதிலிருக்கற விஷயங்களை வேலையாள்கிட்ட சொல்லிச் செய்றேன். என்னோட 35 ஏக்கர் நிலத்துல, 15 ஏக்கர்ல பாரம்பரிய நெல் ரகங்கள்; 2 ஏக்கர்ல வடு மாங்காய்; 3 ஏக்கர்ல தென்னை; 1 ஏக்கர்ல வெட்டிவேர்; 2 ஏக்கர்ல மரப்பயிர்கள்; 12 ஏக்கர்ல வரகுனு சாகுபடி செய்றேன்.

கைமாறாக கிடைத்த வரகு !

மதுரையில என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்ட ஒருத்தர், என்னைத் தேடி போன வருஷம் இங்க வந்தார். அப்ப என்னோட நிலம் சும்மா கிடந்தத பார்த்துட்டு, 'இதுல என்ன செய்ய போறீங்க?'னு கேட்டார்’. 'தெரியல’னு சொன்னேன். உடனே, 'என்னைக் காப்பாத்தினதுக்கு கைமாறா, எங்க ஏரியாவுல மானாவாரியா விளையற வரகு கொண்டு வந்து நானே விதைச்சு விடுறேன். நீங்க உழவு மட்டும் போட்டுக் கொடுங்க’னு கேட்டார். உழவு செய்து கொடுத்ததும்... ஒரு மூட்டை வரகோட, மூணு ஆட்களையும் அழைச்சுட்டு வந்து, மூணு ஏக்கர்ல விதைச்சுட்டு போனார்.

விளைஞ்ச நேரத்துல, அவரே வந்து... நெல் கதிர் அறுக்குற மெஷினைக் கொண்டு வரச்சொல்லி, அதோட பிளேடுகள்ல சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்து, அறுவடையும் செஞ்சு கொடுத்தார். மூணு ஏக்கர்ல, 56 மூட்டை மகசூல் கிடைச்சுது. அதைச் சுத்தப்படுத்தினப்ப 48 மூட்டை (60 கிலோ மூட்டை) வரகு கிடைச்சுது.

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

அதுக்குப் பிறகுதான் வரகு பத்தின தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். அதுல, பலவிதமான ஆச்சரியத் தகவல்கள் கிடைச்சுது'' என்று அதிசயப்பட்டவர், அடுத்து சாகுபடி பாடம் நடத்த ஆரம்பித்தார்.

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை !

'ஆடிப்பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது. இதன் வயது 5 மாதங்கள். அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது. மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும். ஈரப்பதம் இருப்பதைப் பொருத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.

விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை... மழை பெய்தவுடன் முளைத்து விடும். இதற்கு களை எடுக்கத் தேவையில்லை; பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை; உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை; இளம் பயிராக இருக்கும்போது, மாடுகள் மேய்ந்தாலும், பயிர் மீண்டும் அதிகமான கிளைப்புடன் வளர்ந்து விடும்.

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

ஏக்கருக்கு

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

15 ஆயிரம் !

4-ம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, 5-ம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும். ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும். அறுவடை செய்ய, ஆட்கள் தேட வேண்டிய அவசியமில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்களை வைத்தே அறுவடை செய்யலாம். பிறகு, சுத்தப்படுத்தி கட்டி வைக்கலாம்'

நிறைவாக வருமானம் பற்றி பேசினார் மணி... ''ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும். விருத்தாசலம் சந்தையில், 80 கிலோ வரகு கொண்ட ஒரு மூட்டை, ஆயிரத்து எண்ணூறு ரூபாய்க்கு விலை போகுது. ஒரு ஏக்கர்ல, 11 மூட்டை கிடைக்கும். இதன் மூலமா, 19 ஆயிரத்து 800 ரூபாய் கிடைக்கும். அதுல, செலவுபோக 14 ஆயிரம் ரூபாய்க்கு மேல நிகர லாபமா கிடைக்கும்'' என்றவர்,

''மத்த மத்த சாகுபடி மாதிரி வரகு சாகுபடியில் பெரிசா மெனக்கெடுறதுக்கு எதுவும் இல்ல. விதைப்பும்... அறுவடையும் மட்டும்தான் வேலை'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்!

தொடர்புக்கு

மணி, செல்போன்: 96294-66328.
சிவகுமார், செல்போன்: 80157-34003.

தோல் நீக்க, கிலோவுக்கு 3 ரூபாய் !

சிறுதானியங்களைப் பதப்படுத்துவதில் அனுபவம் வாய்ந்த நாமக்கல்லைச் சேர்ந்த சிவகுமார், வரகு, பற்றிப் பேசிய போது... ''சாமை, தினை, வரகு போன்ற தானியங்களை, திருகையில் சாணி மெழுகி, சாம்பல்தூள் இட்டு, தோல் நீக்கம் செய்வார்கள். தற்போது, இதற்கும் இயந்திரம் உள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் எல்லா சிறுதானியங்களையும் தோல் நீக்கம் செய்யலாம். வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால்... தொண்டையில் அடைத்துக் கொண்டு, ஒருவிதமான அலர்ஜி உண்டாகும். இதைத் தோல் நீக்கம் செய்ய கிலோவுக்கு 3 ரூபாய் செலவாகிறது. 100 கிலோ வரகை தோல் நீக்கம் செய்தால்... 50 கிலோ கிடைக்கும். கிலோ

55 ரூபாய் வீதம் விற்பனை செய்யலாம்'' என்றார்.    

1,000 வருடமானாலும் முளைக்கும் !

வறட்சியிலும் வாடாத வரகு...பாடில்லாமல் தருமே வரவு !

வரகு பற்றி மணி சொல்லும் ஆச்சரியத் தகவல்கள் இவைதான்- ''வரகுக்கு 7 அடுக்குத் தோல் இருக்கறதால, பறவைகளால சாப்பிட முடியாது; ஆடு, மாடுகள் சாப்பிடாது; வறட்சி, தண்ணீர் நிறைந்த நிலம்னு எப்படிப்பட்ட நிலத்துலயும் வளரும். இதோட விதை ஆயிரம் வருஷம் வரைக்கும் முளைப்புத் திறனோட இருக்கும். இப்படி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒரு முக்கியமான விஷயம்... இது 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இடிதாங்கியாகவும் செயல்படுமாம். அதனாலதான் இதைக் கோபுர கலசத்துல போட்டு வெக்கறாங்க. அதில்லாம, கடுமையான வறட்சி வந்து அவ்வளவு தானியங்களும் அழிஞ்சாலும்... கலசத்தில் இருக்கும் வரகை எடுத்து விதைச்சி, மனித இனம் உயிர் வாழ்ந்துடலாம்கிறதும் ஒரு காரணம்.''