Published:Updated:

காணுமிடமெல்லாம் கானகம் வாழுமிடமெல்லாம் வனம்

இரா.ராஜசேகரன்படம்: வீ. சிவக்குமார்

வாழ்க மரம்... வளர்க பணம்!
லாபம் கூட்டும் கைகாட்டி தொடர்

பொங்கல் சிறப்பிதழ்

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வணக்கம் நண்பர்களே... சூன்யமாகி வரும் சூழலைக் காக்கவும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும் வகையில் வணிகரீதியாக மரம் வளர்க்கும் முறைகளையும், ஒவ்வொரு மரத்தின் சாகுபடி முறைகள், சந்தைத் தேவைகள் ஆகியவற்றையும் இதுவரை சொல்லி வந்தேன். இந்தச் சூழலில், தற்போதைக்கு இத்தொடருக்கு ஓர் இடைவெளி விடலாம் என்று நினைக்கிறேன்.

இதுநாள் வரை, குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் மரங்களைப் பற்றித்தான் இதுவரை பேசியிருக்கிறோம். இன்னும் எத்தனை எத்தனையோ மரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் சமயம் வாய்க்கும்போது பேசுவோம். இப்போது, உங்களிடமிருந்து விடைபெறும்முன் சில செய்திகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அதை உங்கள் எண்ணத்தில் பதித்துக் கொண்டால் மகிழ்வேன்.

இந்த உலகில் ஈடு, இணையில்லாத சக்தி இயற்கை மட்டுமே. பூவாக, காயாக, கனியாக, கிழங்காக, கூரையாக தன்னையே அழித்து ஆற்றல் கொடுக்கும் விறகாக பலவகையிலும் அள்ளிக் கொடுக்கிறது. ஆனால், அதன் அருமை தெரியாமல் இயற்கைக்கு எதிராக செயல்படும்போது ஆழிப்பேரலைகள், நிலநடுக்கம், எரிமலை, பூகம்பம்... என அழிவை ஏற்படுத்துகிறது.

காணுமிடமெல்லாம் கானகம் வாழுமிடமெல்லாம் வனம்

இயற்கை பற்றிய நுட்பமானப் பதிவுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட இலக்கியங்களில் நிறைந்திருப்பது... நம் தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு. உயிர்ச்சூழலுக்கு ஏற்ப நிலங்களை வகைப்படுத்தும் அறிவியலுக்கு முன்னோடியாக திகழ்கிறது, தொல்காப்பியம் வகுத்த தினைக்கோட்பாடு. ஓரறிவு மரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரை வகைப்படுத்திய தொல்காப்பியத்தை நவீன அறிவியல் வியந்து நோக்குகிறது. உலகம் முழுவதும் கடவுள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் 'ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்...’ என இயற்கை வாழ்த்துச் சொன்னது, தமிழனின் சிலப்பதிகாரம்.

நூறு பூக்களை வகைப்படுத்தும் 'குறிஞ்சிப்பாட்டு’, தலைச்சிறந்த தாவரவியல் பதிவாகும். நம் முன்னோர்கள் இயற்கையைப் போற்றினர், பாதுகாத்தனர், அதைச் சார்ந்தே வாழ்ந்தனர். இயற்கையை இம்சிக்காமல் அதோடு இயைந்து வாழ்ந்தபோது... தமிழகம் செழித்திருந்தது. நமது இலக்கியங்களில் விவரிக்கப்படும் இயற்கை பற்றிய பதிவுகளுக்கு அத்தகையச் செழுமையான வளங்களே காரணம். அப்படிப்பட்ட வளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் இயற்கை வளங்களைக் காப்பது நமது முக்கியக் கடமையாகும். அதற்காக நாம் உடனடியாக செய்ய வேண்டியது மரம் வளர்ப்பு. அதிகரித்து வரும் புவி வெப்பம், அருகி வரும் வான்மழை ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து ஓரளவுக்காவது நம்மைக் காத்துக் கொள்ள உதவுவது மரங்கள்தான்.

பூமித்தாயின் மார்பகங்களில் முகம் புதைத்துப் புனித நீரைச் சுவைக்கும் வாயாக வேர்கள்; வான்மழையின் கருணைக்காக கையேந்தி நிற்கும் கைகளாக அழகியக் கிளைகள்; சூழ்கொண்ட மேகங்கள், கால் கொண்டு பூமிக்கு நடந்து வரும் படிகளாக விளங்கும் பச்சை மரங்கள்; விண்ணையும், மண்ணையும் இணைக்கின்ற இணைப்புப் பாலமாக, சத்தமில்லாத சமூக சேவர்களாக... இப்படி பல ரூபங்களில் பூமியைத் தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.

காணுமிடமெல்லாம் கானகம் வாழுமிடமெல்லாம் வனம்

வெட்டி அழிக்க வருபவர்களையும் அரவணைத்து நிழல் தந்து, கனி தந்து காப்பாற்றும் அற்புதமான உயிரினம் மரம். மனிதனுக்கு உணவு, பல்வேறு உயிரினங்களுக்கு உறைவிடமாகத் திகழும் தாவரங்கள், மனித இனத்துக்கு இயற்கை அளித்த அருட்கொடை. பிள்ளைகள், பெரியவர்களானதும் பெற்றோர்களைத் தவிக்க விட்டுச் செல்லும் சூழலில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டில் அதிகமாகி வரும் முதியோர் இல்லங்களே அதற்கு சாட்சி. ஆனால், நீங்கள் நட்டு வைக்கும் மரங்கள்... உங்களை என்றைக்கும் கைவிடாது காப்பாற்றும்.

மரங்களைப் பற்றிய அறிவை, அதன் அருமையை, தேவையை முதலில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு குழந்தையையும் ஒரு மரக்கன்றை நடவு செய்ய வைத்து, அந்தக் குழந்தையின் கையால் நீரூற்றி வளர்க்கச் செய்யுங்கள்.

நகரங்களில் குடியிருப்பவர்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் இடம் இல்லையே என கவலைப்படாமல் பொது இடங்களில், அருகிலுள்ள பள்ளிகளில், சாலையோரங்களில் நடவு செய்து பராமரியுங்கள். இப்படிச் செய்தால் அடுத்த தலைமுறையாவது இயற்கையைப் போற்றக் கற்றுக் கொள்ளும்.  

இதுகாலம் வரை இத்தொடரில் நான் வரிசைப்படுத்திய மரங்களை, வாய்ப்பிருக்கும் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் வளருங்கள். உணவு உற்பத்தி செய்பவர்கள் வரப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் நடவு செய்யுங்கள். அதற்கும் வாய்ப்பில்லாதவர்கள், வீடுகளில் வளருங்கள்.

மரக்கன்றுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு வன விரிவாக்கத்துறை அலுவலகங்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றன. இதுதான் சரியான நேரம்... வீடுகள், வீதிகள், சாலைகள், வெற்றிடங்கள் எல்லாம் மரக்கன்றுகளால் நிறையட்டும்... பாரெல்லாம் பசுமை படரட்டும்.

-மீண்டும் சந்திப்போம்
தொகுப்பு: ஆர். குமரேசன்

தொடர்புக்கு : இரா. ராஜசேகரன்,
செல்போன்: 94424-05981.