Published:Updated:

ஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்!

அதிர வைக்கும் கு.ராமகிருஷ்ணன்படங்கள்: எஸ். சிவபாலன்

பொங்கல் சிறப்பிதழ்

 பிரச்னை

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலம், வீடு, நகைனுதான் பேங்க்குல அடமானம் வைப்பாங்க. ஆனால், விவசாயிகளையே அடமானம் வெச்சு கோடிக் கணக்குல கடன் வாங்க பாக்குது, திருஆரூரான் சர்க்கரை ஆலை. இதை எங்க போய் சொல்றது?'' என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் அடங்கியிருக்கும் ஆதனூர், திருமண்டங்குடி, நரசிம்மபுரம், கூனஞ்சேரி, புள்ளபூதங்குடி, திருவைக்காவூர், மருத்துவக்குடி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள்.

''இதென்ன காலக் கொடுமை?'' என்றபடியே விவசாயிகளைத் தேடிச் சென்றோம்!

நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரபோஜி, ''எங்க பகுதியில இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, கூட்டுறவு பேங்க்னு நிறைய பேங்க் இருக்கு. வழக்கமா, அவங்கவங்களுக்குப் பக்கத்துல இருக்குற பேங்குகள்ல கரும்பு விவசாயிகளெல்லாம் பயிர்க் கடன் வாங்குவோம். அதேமாதிரி, இந்த வருஷத்துக்கும் வாங்கியாச்சு.

ஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்!

இந்த நிலையில, கொஞ்ச நாளைக்கு முன்ன திருஆரூரான் சர்க்கரை ஆலையில இருந்து எங்ககிட்ட சில ஃபார்ம்களைக் கொடுத்து கையெழுத்து போடச் சொல்லிக் கேட்டாங்க. அதெல்லாம் இங்கிலீஷ்ல இருந்ததால என்ன, ஏதுனு தெரியாமலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டாங்க விவசாயிங்க பலரும். விவரம் தெரிஞ்ச சிலர் கேட்டதுக்கு, 'மில்லுல பதிவு பண்ணியிருக்குற ஏரியாவை கணக்குப் பண்ணி, கும்பகோணம் ஐ.டி.பி.ஐ. பேங்க்ல ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய்னு கடன் வாங்கப் போறோம். கரும்புக்கான கொள்முதல் பணத்தை உடனடியா பட்டுவாடா பண்ணுறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. அதை நாங்களே அடைச்சுடுவோம்'னு சொன்னாங்க.

அந்த ஃபாரத்தை, வக்கீல்கிட்ட கொடுத்து விவரம் கேட்டோம். 'இந்த ஃபார்ம்ல, கடன் தொகையைப் பத்தின விவரம், எத்தனை ஏக்கர், எவ்வளவு காலக் கடன்... இந்த மாதிரியான எந்தத் தகவலும் இல்லை. கரும்பு மில்லுல விவசாயிகள் வாங்கினக் கடனைத் திருப்பி அடைக்கறதுக்காக பேங்க்குல கடன் வாங்கறதாவும், அந்தக் கடன் தொகையை ஆலைகிட்டயே கொடுக்கறதுக்கு விவசாயிகள் ஒப்புதல் அளிக்கறதாவும் வாசகங்கள் அச்சடிச்சுருக்காங்க. கடனைத் திரும்ப செலுத்தலேனா... எங்க சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம்னு விவசாயிகளே ஒப்புதல் அளிக்கிறதாவும் எழுதியிருக்காங்க'னு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டோம்.

இது எவ்வளவு பெரிய மோசடி. ஏறத்தாழ ஆறாயிரம் விவசாயிகளையும், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வங்கியில அடமானமா வெச்சு... 90 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. இந்த மோசடிக்கு ஐ.டி.பி.ஐ. பேங்க்கும் உடந்தை'' என்றார், கொதிப்புடன்.  

ஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்!

இதுபற்றி, கும்பகோணம் ஐ.டி.பி.ஐ. வங்கி கிளை மேலாளர் குருவிடம் கேட்டபோது, ''இதுல எந்த முறைகேடும் நடக்கல. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டும் நெறிமுறைகளின்படிதான் எல்லாம் நடந்திருக்கு. 6 ஆயிரத்து 500 விவசாயிகளையும் நாங்க நேரடியா சந்திக்க முடியாது. அதனாலதான், தேவையான ஆவணங்களை மில் நிர்வாகமே வாங்கிக் கொடுத்தது. இது விவசாயிகளுக்கான பயிர் கடன்தான்'' என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.

அடுத்து, திருஆரூரான் சர்க்கரை ஆலையின் பொதுமேலாளர் திருநாவுக்கரசிடமும் பேசினோம். அவர், ''இது விவசாயிகளுக்கானப் பயிர்க்கடன் அல்ல. ஆலையின் தேவைக்காக நாங்க கடன் வாங்குறோம். ஆலையே கடனைத் திருப்பி அடைச்சுடும். உற்பத்தி ஆகுற சர்க்கரையை முன்கூட்டியே அடமானம் வெச்சு, வாங்குற கடன் இது. ஆலைக்கு இப்ப நிதி நெருக்கடியா இருக்கு. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு உடனடியா பணம் பட்டுவாடா பண்ணத்தான் இப்படி ஒரு ஏற்பாடு'' என்றார்.

'இது பயிர் கடன்தான்’ என்று வங்கி நிர்வாகமும், 'இல்லையில்லை ஆலைக்கான கடன்தான்’ என ஆலை தரப்பும் சொல்லும் பதிலிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன. ஆகக்கூடி, விவசாயிகளின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆலையின் தேவைக்காகக் கடன் வாங்குபவர்கள், ஆலையை அடமானம் வைத்து வாங்குவதுதானே முறை. அதை விடுத்து விவசாயிகளின் சொத்துக்களை அடமானம் வைப்பது எந்த வகையில் நியாயம்? விவசாயிகளின் பெயரிலேயே கடனை வாங்கி, அவர்களிடம் வாங்கும் கரும்புக்குப் பணத்தைத் தருவது என்பது... 'நான் உமி கொண்டு வர்றேன், நீ நெல் கொண்டு வா ஊதி ஊதித் தின்னலாம்’ என்ற கதைதான்.

விவசாயிகளை வீதிக்குக் கொண்டு வர்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...  

''முதல்வர் தலையிட வேண்டும்!''

'இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, விவசாயிகளை பேராபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்.

ஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்!

''இது ஒரு நூதன மோசடி. நில அபகரிப்புக்கு இணையானது. எந்த ஒரு பொது அறிவிப்பும் இல்லாமலே விவசாயிகள் பெயரில் கடன் வாங்க முயல்வது சட்டவிரோதம். விவசாயிகளிடம் கையெழுத்து பெற்ற ஆவணங்களை உடனடியாக விவசாயிகளிடம் திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால், இதற்கு நீதி மன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப் போகிறோம்'' என்றார், சுந்தர விமலநாதன்.