Published:Updated:

விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் !

தாண்டவமாடிய தானே புயல்...தேவை... நீண்ட காலத் திட்டங்கள்! கரு.முத்து

பொங்கல் சிறப்பிதழ்

 பிரச்னை

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீண்டுமொரு சுனாமியில் சிக்கியது கணக்காக... திகில் விலகாமல் கிடக்கிறார்கள் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்கள். அந்த அளவுக்கு இப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது, சமீபத்தில் கோர தாண்டவாமடிய 'தானே' புயல்!

குறிப்பாக, கடலூர் மாவட்டம் இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்தித்திருக்கிறது. 'இவ்வளவுதான் பாதிப்பு’ என சேத மதிப்பை இன்னமும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியவில்லை, .

புதுச்சேரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் காலி. ஏறத்தாழ, 'ஆயிரம் கோடி ரூபாய் சேதம்’ என்று கணக்கீடு சொல்கிறது. புதுச்சேரிக்கு அழகு கூட்டிக் கொண்டிருந்த மரங்களெல்லாம் வேரோடு சாய்க்கப்பட்டு விட்டன.

கடலூர் மாவட்டத்தில், 96 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அறுவடைக்காகக் காத்திருந்த நெல்மணிகள் மூழ்கி அழிந்து விட்டன. அதோடு, 30 ஆயிரம் ஹெக்டேர்  கரும்பு, 22 ஆயிரம் ஹெக்டேர் சிறுதானியங்கள், 8 ஆயிரம் ஹெக்டேர் வாழை, 2 ஆயிரத்து 100 ஹெக்டேர் தென்னை, 4 ஆயிரம் ஹெக்டேர் மரவள்ளி, 5 ஆயிரம் ஹெக்டேர் எள், 8 ஆயிரம் ஹெக்டேர் மணிலா, 550 ஹெக்டேர் மஞ்சள், 350 ஹெக்டேர் மா, 8 ஆயிரம் ஹெக்டேர் சவுக்கு... என பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து, இன்னமும் முடிவான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் !

பரிதாப பலா, முந்திரி !

நெல்லுக்கு ஹெக்டேருக்கு பத்தாயிரம் ரூபாய், மற்ற நீர்ப்பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்... எனப் பயிர் வாரியாக நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார், முதல்வர். முந்திரி சுமார் ஒரு லட்சத்து

20 ஆயிரம் ஏக்கரிலும், பலா 3 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 80% மரங்கள் விழுந்துவிட்டன. நிவாரணப் பட்டியலில் பலா மற்றும் முந்திரி போன்றவற்றுக்கு ஹெக்டேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல் போன்ற குறுகியகாலப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள்... இந்த போகத்தில் இழந்ததை, அடுத்த போகத்தில் ஈடு கட்டிவிட முடியும். ஆனால், முந்திரி, பலா போன்ற மரங்கள் மூலமாக, காலங்காலமாக பலன் அனுபவித்து, வந்த விவசாயிகளின் நிலைமை. பரிதாபத்திலும் பரிதாபம்! ஒரே இரவில், வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிராதரவாக நிற்கிறார்கள், இவர்கள்.

எல்லாமே தாத்தா காலத்து மரங்கள் !

விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் !

''எங்கத் தோட்டத்துல இருந்த முந்திரி மரம் எல்லாமே எங்க தாத்தாவும் அப்பாவும் வெச்சதுதான். வயசாகி மரம் விழுந்து போன இடத்துல ஒண்ணு ரெண்டு கன்னுகளை நாங்க வெச்சிருப்போம். இதுவரை அடிச்ச புயல், மழை எல்லாத்தையும் தாங்கி நின்னு சீசனுக்கு சீசன் மகசூல் கொடுத்திட்டிருந்தது. ஆனா, இந்தப் புயல்ல மொத்த மரமும் போயிடுச்சு. ஒரு மரங்கூட நிக்கலைன்றதுதான் எங்களுக்கு பெரிய வேதனையா இருக்கு'' தாள முடியாத சோகத்துடன் சொல்கிறார், நெய்வேலியை ஒட்டியுள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருநிலக்கிழாரான சபா. பாலமுருகன்.

கடலூரின் கேப்பர்குவாரி மலையிலிருந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான உளுந்தூர்பேட்டை வரை நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் இதே மாதிரியான புலம்பல்தான் ஒலிக்கிறது.

பலன் எடுக்க பத்து வருஷம் ஆகுமே !

விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் !

தோப்புக்கொல்லை என்ற ஊரில் வீழ்ந்து போன முந்திரி மரங்களோடு கவலையோடு அமர்ந்திருந்தனர், ரோஜாவனம்-ராமர் தம்பதி. ''இதெல்லாம் வெட்டிட்டுப் புதுசா கன்னு (முந்திரிக்கன்று) வைக்கணும்னா மூணு மாசம் ஆகும். அதுக்கு, ஒரு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபா செலவாகும். ஆனா, அரசாங்கம் ஒரு கொடுக்கற சொற்ப நிவாரணத்தை வெச்சுக்கிட்டு என்ன செய்றது? அது கிடக்கட்டும். அங்க, இங்க கடன் வாங்கியாவது நட்டுடுவோம். ஆனா, பலன் எடுக்க பத்து வருஷம் ஆகுமே. அதுவரைக்கும் எப்படிப் பிழைக்கப் போறோம்கிறதுதான் தெரியல'' என்கிறார்கள், கவலையுடன்.  

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் புலவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், ''கல்யாணத்துக்கு ஐம்பது, நூறு பவுன் நகை போடுறது, கிலோ கணக்கில் வெள்ளி சீர்வரிசையா கொடுக்கிறது, டூ வீலர் வாங்கிக் கொடுக்குறதுனு எங்க ஏரியாவுல தடபுடலாத்தான் கல்யாணம் நடக்கும். அந்தளவுக்கு செல்வம் கொழிச்சதுக்குக் காரணமா இருந்தது, முந்திரிதான்.

வழிச்சுப் போட்ட மாதிரி மொத்த முந்திரியும் போயிடுச்சு. எப்பவுமே, பணப்புழக்கத்தோடயே இருந்த மக்கள், இனி எப்படி வாழப் போறாங்கங்கிறதுதான் மிகப்பெரிய கேள்வி'' என்று கலவரமாக நிலவரத்தைச் சொன்னார்.

பத்து வருஷத்துக்கு எங்களுக்கு வேலை..?

''முந்திரிக் கொட்டை பொறுக்க, மருந்தடிக்கனு வருஷம் முழுசும் எங்களுக்கு வேலை இருக்கும். நாங்க இல்லாம, வீட்டுல பொண்டு பிள்ளைகளுக்கும் முந்திரித் தோட்டத்துல வேலை கிடைக்கும். இப்போ, மொத்தத்துக்கும் மோசம் வந்துடுச்சு. இன்னும் பத்து வருசத்துக்கு என்ன வேலைக்குப் போறது?'' என்று புலம்புகின்றனர், செடுத்தங்குடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ராமர், லெட்சுமணன் உள்ளிட்டோர்.

பண்ருட்டி பலா, இனி அபூர்வமே !

''இனிமே பண்ருட்டி பலாவே அபூர்வமாத்தான் கிடைக்கும். வீணை, யாழ், தவில்னு இசைக்கருவி செய்யறதுக்கெல்லாம் பலா மரத்தைத்தான் பயன்படுத்துவாங்க. எல்லாம் போச்சு'' என்று சோகம் பொங்குகிறார் கீழக்குப்பத்தைச் சேர்ந்த வேணுகோபால்.

மணல்திட்டுக்களை உருவாக்குங்கள் !

கடலூரைச் சேர்ந்த விவசாயப் போராளி அருள்செல்வன், ''விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு அறிவித்திருக்கிற எந்த நிவாரணமும் போதாது.

முந்திரி, பலா விவசாயிகளுக்கு மறுபடியும் கன்றுகள் நடுவதற்கான முழுத் தொகையையும் மானியமாகக் கொடுக்க வேண்டும். அது வளர்ந்து பலன் தரும் வரை பராமரிப்புச் செலவைக் கடனாகத் தர வேண்டும். அப்போதுதான் 'விதர்பா’ சம்பவங்கள் போல, தமிழ்நாட்டில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முடியும்'' என்று நியாயமான பயத்தை முன் வைத்தவர்,

''கடற்கரையோரத்தில் காற்றைத் தடுக்கும் பாதுகாப்பு அரண்களாக இருந்த கடற்கரையோர மணல்திட்டுக்களையெல்லாம், தனியார் தொழிற்சாலைகளுக்காக அகற்றிவிட்டனர். இப்போதைய பெரும் சேதத்துக்கு இதுவும் ஒரு காரணம். மீண்டும் சிறப்புத்திட்டங்கள் மூலம் மணல் திட்டுக்களை உருவாக்க வேண்டும்'' என்கிறார் நிஜமான அக்கறையுடன்.

நிவாரணத்தைக் கொடுத்து, கொதிப்பை அடக்கினால் போதுமென்று கையைக் கட்டிக் கொண்டுவிடாமல், எதிர்கால வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கும் மக்களுக்கு உதவும் வகையிலும் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதுதான் இப்போதைய தேவை. இல்லையென்றால், அந்த பாவப்பட்ட மக்களின் வாழ்க்கை திசை மாறிச் செல்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாமல் போய்விடும்!

சுட்டிக்காட்டிய பசுமை... சுதாரித்த அமைச்சர் !

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி போன்ற பகுதிகளிலும் பெரியளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீர்காழி தாலூகாவில் மட்டுமே சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் வயலில் நெல் அழிந்திருக்கிறது. மாவட்டத்தின் ஒரு மூலையிலிருக்கும் இப்பகுதிகள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதால், அதிகாரிகளால் அலட்சியமாகத்தான் பார்க்கப்படுகிறது. இங்கு, பாதிப்பு பற்றிய கணக்கெடுப்பே நடத்தவில்லை.

இதையெல்லாம் விவசாயிகள் நம்மிடம் சொல்லிக் குமுற, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மாவட்ட ஆட்சியர் முனுசாமி ஆகியோரிடம் எடுத்துச் சொல்லி, விஷயத்தின் தீவிரத்தை உணர்த்தினோம். உடனே, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், பாதிப்புகளைக் கணக்கெடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட, கணக்கெடுப்பு நடக்கிறது.

ஏன் விழுந்தன, இத்தனை மரங்கள்?

பொதுவாக தொடர் மழைக்குப் பிறகு புயல் வந்தால், மரங்கள் பெருமளவில் விழுந்து சேதம் ஏற்படும். ஆனால், இம்முறை புயலுக்கு முந்தின நாள்தான் மழையே வந்தது. அதுவும்கூட பெருமழை என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. அது எப்படி?

முதலில் வடக்கிலிருந்து 120 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியது புயல். அப்போதே மரங்கள் எல்லாம் ஆட்டம் கண்டன. சற்று நேர ஓய்வுக்குப் பிறகு, தெற்கிலிருந்தும் அதே வேகத்தில் காற்று வீச, ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த மரங்கள், பட்பட்டென்று விழுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டன.