Published:Updated:

கன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் !

கோவணாண்டி

முறையீடு

##~##

ஒரு கன்னத்தில் அறை வாங்கினது போதாதுனு, மறுகன்னத்தை எப்பவும் தயாரா வெச்சுக்கிட்டே திரியற... மராட்டிய சிங்கம், மத்திய விவசாயத் துறையோட பங்கம்... அடச்சே, ஒரு எதுகை-மோனையில அப்படியே வந்துடுச்சுங்கோ... மன்னிச்சுக்கோங்க. மத்திய விவசாய மந்திரி  சரத் பவார் அய்யாவுக்கு, வணக்கம் சொல்லிக்கறான் கோவணாண்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்க ஊருல பொங்கல்னாலே, 'உழவர் திருநாள்'னு சொல்லி, என்னைய மாதிரி கோவணாண்டிகளைக் கொண்டாடுவாங்க. அப்படிப்பட்ட நல்ல நாள் சமயத்துல, விவசாயத் துறைக்கு மந்திரியா இருக்கற உங்களை வாழ்த்தி, வணங்கலாம்னுதான் கடுதாசி எழுத நினைச்சேன். ஆனா, பிரதமருக்கு காரசாரமா நீங்க ஒரு கடுதாசியை எழுதி, என்னோட நோக்கத்தையே திசை திருப்பிட்டீங்க!

வழக்கமா எங்க ஊரு தலீவருதான், 'இலங்கைத் தமிழர், தமிழக மீனவர், முல்லை-பெரியாறு'னு பிரதமருக்கு கடுதாசி எழுதியே பூச்சாண்டி காட்டிக்கிட்டிருப்பாரு. இப்ப நீங்களும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்க போல! 'எனக்கு இன்னும் அதிக அதிகாரம் வேணும்'னு கேட்டு, காரசாரமா பிரதமருக்கு கடுதாசி எழுதியிருக்கீங்களாமே?!

குறிப்பா, இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அதாங்க... விவசாயிங்களோட நிலத்தை இஷ்டத்துக்கும் புடுங்கிக்கிட்டு, அவனைக் கோவணத்தோட திரிய விடறதுக்காக வெள்ளைக்காரன் போட்டு வெச்சானே ஒரு சட்டம். இந்தச் சட்டத்தை திருத்துற விஷயத்துல, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்கிட்ட இருக்கற அதிகாரத்தைப் புடுங்கி, என்கிட்ட கொடுக்கணும்னு கேட்டுப்புட்டீங்களாமே!

'நான்தான் விவசாய மந்திரி. விவசாயம்னா... பூமி, நீர், வானம், ஏரி, குளம், குட்டை, ஆறு, காடு எல்லாம் அதுலதான் அடங்கும். அப்படி இருக்கறப்ப... நிலம் கையகப்படுத்துற அதிகாரத்தை கிராமப்புற மேம்பாட்டு மந்திரிகிட்டயும், நீர் ஆதாரங்கள் தொடர்பான அதிகாரத்தை தேசியத் திட்டக் குழுகிட்டயும் எதுக்காக கொடுக்கறீங்க? அது ரெண்டையும் புடுங்கி, மொதல்ல என்கிட்ட கொடுங்க. இல்லைனா, 2020|ம் வருஷத்துக்குத் தேவையான 280 மில்லியன் டன் உணவு தானியம் கிடைக்காது’னு  சாட்டையைச் சொழட்டியிருக்கீங்களாமே!

கன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் !

'யாரு இந்த ஜெய்ராம் ரமேஷ்..? சுத்த கிறுக்கா இருக்கார். பன்னாட்டு, இந்நாட்டு பண முதலைங்க தொழில் தொடங்க நிலம் வேணும்னு கேட்டா... விவசாயிகளுக்கு நாலு காசத் தூக்கி எறிஞ்சுட்டு, நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டியதுதானே. அத விட்டுட்டு... நிலங்கொடுத்த விவசாயிகளுக்கு மறுவாழ்வு... மறு குடியிருப்புனு விவரம் கெட்டத்தனமா பேசிட்டு திரியறார். நம்மை வாழவெக்குற பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க எல்லாம் இப்பவே முணுமுணுக்கறாங்க... அவங்களோட கோபத்துக்கு ஆளாகக்கூடாது. அதனால நிலம் கையகப்படுத்துற சட்டத்தை உடனே பிடுங்கி, என் கையில கொடுங்க’னு காரசாரமா விளாசிட்டீங்களாமே!

நீங்க போட்ட போடுல, பிசாசு பிடிச்சது கணக்கா ஆகிப்போயிட்டாராமே நம்ம 'மௌன குரு' மன்மோகன் சிங்!

எல்லா விஷயத்தையும் இங்கிலீஸ் பேப்பர்ல பாத்துட்டு, வழக்கம்போல எங்க ஊரு கோணவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு பெருசா கச்சேரி வெச்சுப்புட்டாருங்க.

இதைக் கேட்டதுமே... 'ஏற்கெனவே இந்த ஆளுகிட்ட கொடுத்த அதிகாரத்தையெல்லாம்... மக்கள் சேவைக்காக இவரு பயன்படுத்தின அழகு தெரியாதா? எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்னு திரியறது தெரியாதா? இதையெல்லாம் பாத்து பூரிச்சுப் போய்த்தான், இவரோட கன்னத்துல ஒரு சீக்கிய இளைஞன் சூப்பரா ஒரு அறை கொடுத்தான். அதைப் பார்த்து உலகமே சிரிச்சுட்டு இருக்கு. இந்த லட்சணத்துல, இன்னும் அதிக அதிகாரம் வேணும்னு எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு கேட்கறாரு இந்த ஆளு. இன்னொரு கன்னத்துலயும் பரிசு கொடுத்தாத்தான் சரிப்பட்டு வருவாரு போல'னு எங்க ஊரு இளந்தாரிக பொங்க ஆரம்பிச்சுட்டாங்க.

அதுசரி, 'என்னால விவசாயம், பொது வினியோகம்னு பல துறைகள கவனிக்க முடியாது. இதனால கிரிக்கெட் விளையாட்டுல என்னால ஒழுங்கா கல்லா கட்ட முடியல. என்கிட்ட இருக்கற கூடுதல் பொறுப்பைத் திரும்ப வாங்கிக்கோங்க'னு கொஞ்ச நாளைக்கு முன்ன, மத்திய அரசுகிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தீங்க. இப்ப என்னடானா, கூடுதல் அதிகாரம் வேணும்னு கேக்கறீங்களே... எந்த ஊரு நியாயம்?

பாவம், நீங்களும் என்னதான் பண்ணுவீங்க? உங்களைவிட வயசுல கொறைஞ்ச மந்திரிகளெல்லாம், ஆயிரம் கோடி, லட்சம் கோடினு சம்பாதிக்கறப்ப... உங்களுக்கும் அந்த ஆசை வராம இருக்குமா? இன்னிக்கு நல்லா ஓடுற குதிரை... நிலச் சந்தைதான். அதனால, சரியா அதுமேல கண்ணைப் போட்டிருக்கீங்க... சபாஷ்!

'வளர்ச்சித் திட்டம்', 'தொழில் வளர்ச்சி' னு அரிதாரத்தைப் பூசிக்கிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, முடிஞ்ச வரைக்கும் லாபம் பார்க்கலாம்னு இலாகாவைத் தட்டிப் பறிக்கத் தயாராயிட்டீங்க போல!

அய்யா, தெரியாமத்தான் கேட்கிறேன்... நிலம் கையகப்படுத்துறதுங்கறதே விவசாயிகளையும், விவசாயத்தையும் ஒழிக்கிற முயற்சி. ஆனா, நொடிக்கு நூறு தரம், விவசாய மந்திரினு சொல்லிக்கிட்டு, விவசாயிகளை ஒழிச்சுக் கட்டுற 'நிலம் அபகரிப்பு’ துறை வேணும்னு 'நில வெறி' பிடிச்சு அலையறீங்களே... இது நியாயங்களா?

உங்க சொந்த மாநிலத்துல விவசாயிக கொத்துக் கொத்தா செத்துகிட்டே இருக்காங்களே... அந்த விவசாயிகளை எல்லாம் காப்பாத்தறதுக்கு எனக்கு வானளாவிய அதிகாரம் வேணும்னு கேட்டிருந்தா சந்தோஷப்படலாம். ஆனா, நினைச்ச மாதிரி நிலத்தைக் கையகப்படுத்த முடியலனு பண முதலைங்க கவலைப் பட ஆரம்பிச்சதும், அவங்களுக்காக 'தையதக்கா’னு குதிக்கறீங்களே?

இப்ப இருக்கற மந்திரிகள்ல... ஜெய்ராம் ரமேஷ் ஒருத்தருதான்... ஏதோ விவசாயிகளையும் மனுஷனா மதிச்சி, ஒக்கார வெச்சு பேசறாரு. முடிஞ்சவரை கோவணாண்டிகளுக்கு ஆதரவா இருக்காரு.

ஆனா, 'இந்த ஆளு இப்படி இருந்தா, எங்கள மாதிரி அரசியல் யாவாரிகள் எப்படி பொழைக்கறது?'னு நீங்க பொங்க ஆரம்பிச்சுட்டீங்க.

வேண்டாங்கய்யா... எங்களுக்கு மிஞ்சினது இந்த நிலம், நீச்சுதான். அதையும் தட்டிப் பறிச்சு, பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க கையில கொடுக்க துடிக்காதீங்க. அப்படி நீங்க துடிச்சா... கடைசியில, எங்ககிட்ட மிஞ்சுறது கோவணமாத்தான் இருக்கும்!

அப்படி ஒரு நிலைமை உருவான பிறகு, 'இது மட்டும் நம்மள காப்பாத்த போகுதாக்கும்?'னு நாங்க கோவப்பட ஆரம்பிச்சா... அது நல்லாயிருக்காதுங்க. பசிச்ச வயிறுகள பகைச்சுக்கிட்ட நாடு, உருப்பட்டதா வரலாறே இல்லீங்க!

'வேணும்னா ரெண்டாவது கன்னத்துல அறைஞ்சுக்கோ, பரவாயில்ல. அதுக்குப் பிறகு வேற கன்னம் இல்லியே'னு மட்டும் நினைச்சுட்டு இருந்துடாதீங்க... ஜாக்கிரதை!

இப்படிக்கு,
கோவணாண்டி