Published:Updated:

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...

ஆர்ப்பரிக்க வைக்கும் ஆற்காடு கிச்சிலி !காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம்

பொங்கல் சிறப்பிதழ்

##~##
ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தாலும், நம் முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியின் மண், தட்பவெப்ப நிலை... ஆகியவற்றுக்கேற்ப பகுதி வாரியாகப் பல ரகங்களை சாகுபடி செய்து வந்தனர். அப்படி ஒரு ரகம்தான் 'ஆற்காடு கிச்சிலி’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தின்போது... காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கென்றே பிரத்யேக நெல் ரகமாக இருந்த இந்த 'ஆற்காடு கிச்சிலி’, இப்போது அபூர்வ ரகமாக மாறிவிட்டது. இதைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்திருக்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன் ('அகப்படாத அமெரிக்கா... அபயம் தந்த விவசாயம்...’ என்ற தலைப்பில், 25.7.2011-ம் தேதியிட்ட இதழில் இடம்பெற்ற கட்டுரை மூலமாக, ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவர்தான் இந்த அச்சுதன்).

நான்கு வருடத் தேடல்!

''ஆற்காடு கிச்சிலி நெல் ரகத்தை எங்கப்பா தொடர்ந்து சாகுபடி பண்ணினதை என் சின்ன வயசுல பார்த்திருக்கேன். அப்பறம், அப்பாவும் ஒட்டு ரகங்களுக்கு மாறிட்டார். நான், விவசாயத்தைக் கையில எடுத்த பிறகு, பாரம்பரிய ரகங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். எங்க பகுதியில பிரபலமா இருந்த ஆற்காடு கிச்சிலி ரகத்தையும் ரொம்ப ஆர்வமா தேடினேன். நாலு வருஷத் தேடலுக்குப் பிறகு 'கலவை’ங்கற ஊர்ல இதைக் கண்டுபிடிச்சு... 20 கிலோ விதைநெல்லை வாங்கிட்டு வந்தேன். இந்த ரகத்தைக் காப்பாத்தணும்கறதுக்காக, 15 கிலோ நெல்லை ரெண்டரை ஏக்கர்ல விதைச்சுட்டு, மீதியை நண்பர்கள்கிட்ட கொடுத்து, விதைக்காகப் பெருக்கச் சொல்லியிருக்கேன். இதோ பாருங்களேன்... பெரியளவுல கவனிப்பு இல்லாமலே நல்லா வளந்து நிக்கறத...'' என்று தானும் ஆச்சரியப்பட்ட அச்சுதன், தொடர்ந்தார்.

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...

பால் சுரப்பை அதிகப்படுத்தும்!

''பொதுவா, சன்ன ரகம், மோட்டா ரகம், ரெண்டுக்கும் இடைப்பட்ட ரகம்னு நெல்லை மூணு ரகமா பிரிப்பாங்க. அதுல ஆற்காடு கிச்சிலி, இடைப்பட்ட ரகத்தைச் சேர்ந்தது. முன்னயெல்லாம், பிரசவத்துக்குப் பிறகு இந்த அரிசியிலதான் பொண்ணுங்களுக்கு சோறு சமைச்சுக் கொடுப்பாங்க. உடம்பு நல்லபடியா தேறுறதோட, பால் சுரப்பும் அதிகரிக்குமாம். அதுக்காக வீட்டுல பொண்ணுங்க கர்ப்பமா இருக்குறப்பயே, இதை சாகுபடி பண்ணி அரிசியாக்கி வெச்சுக்குவாங்க.

இந்த ரக வைக்கோலை சாப்பிடுகிற மாடுகள், அதிகப்பால் கறக்குறதோட, அதிக நோய் எதிர்ப்புச் சக்தியோடயும் இருக்கும். அரைக்கறப்போ, இந்த ரக அரிசி குறைவாத்தான் உடையும். பச்சை அரிசியா பயன்படுத்தலாம். சீக்கிரம் ஜீரணம் ஆயிடும்'' என்று கிச்சிலி பெருமை பாடியவர், சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.

எல்லா மண்ணிலும் வரும்!

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...

'ஆற்காடு கிச்சிலி ரகத்தின் வயது 145 நாட்கள். எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது. ஆடிப் பட்டம் (சம்பா) மற்றும் கார்த்திகைப் பட்டம் (நவரை) ஆகியவை ஏற்றவை. ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய, ஏக்கருக்கு ஐந்து கிலோ விதை தேவைப்படும். 15 லிட்டர் தண்ணீரில், 150 மில்லி பஞ்சகவ்யா, 25 கிராம் சூடோமோனஸ், 50 கிராம் அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து, விதைநெல்லை 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து, சணல் சாக்கில் இட்டு, 36 மணி நேரம் இருட்டில் வைத்து எடுக்கவேண்டும்.

3 சென்ட் நாற்றாங்கால்!

இதேநேரத்தில் உயிர் உரக்கலவையையும் தயாரித்துக் கொள்ளவேண்டும். அதாவது... பத்து கிலோ தொழுவுரத்துடன், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், கால் கிலோ சூடோமோனஸ், கால் கிலோ டிரைக்கோ டெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்தால்... உயிர் உரக்கலவை தயார்.

விதை தயாரான பிறகு, ஒரு ஏக்கர் வயலுக்கு, மூன்று சென்ட் அளவு நிலத்தில் நாற்றங்கால்... என்ற கணக்கில் இடம் தேர்வு செய்து, களைகள் நீங்குமாறு உழவு செய்து, சேறாக மாற்றி சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, உயிர் உரக்கலவையை, நாற்றங்காலில் பரப்பி இரண்டு அங்குல உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி, விதையைத் தூவவேண்டும். 12 மணி நேரம் கழித்துத் தண்ணீரை வடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் வரை, மாலை நேரத்தில் மட்டும் தண்ணீர் கட்டி ஒரு மணி நேரம் வைத்திருந்து, வடித்துவிட வேண்டும். 3-ம் நாளுக்குப் பிறகு முளைத்து வரும். அதன் பிறகு தொடர்ந்து தண்ணீர் கட்டலாம், வடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 15-ம் நாளில், நாற்று தயாராகி விடும்.

அடியுரமாக இலை, தழைகள்!

நாற்று தயாராகிக் கொண்டிருக்கும்போதே நடவு வயலையும் தயார் செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். கிடைக்கும் தாவர இலை, தழைகளை எல்லாம் எடுத்து வந்து வயலில் இட்டு, தண்ணீர் கட்டி, பத்து நாட்கள் வைத்திருந்தால்... அவை அழுகத் தொடங்கும். அதன்பிறகு, நிலத்தை நான்கு சால் 'கேஜ் வீல்’ உழவு செய்து, சேறாக மாற்றி, ஓரடி இடைவெளியில் கயிறு பிடித்து, ஒவ்வொரு நாற்றாக நடவேண்டும்.

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...

நடவு செய்த, 15-ம் நாளில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். பிறகு, 50 கிலோ தொழுவுரத்துடன், மூன்று கிலோ அசோஸ்பைரில்லம், மூன்று கிலோ பாஸ்போ-பாக்டீரியா, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, வயலில் தூவ வேண்டும். 30 மற்றும் 60-ம் நாட்களில் 300 லிட்டர் தண்ணீரில் நான்கரை லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி, 70 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இடவேண்டும். 45-ம் நாளுக்குப் பிறகு தூர் பிடித்து வளரும்.

தண்டுத் துளைப்பானுக்கு ஒட்டுண்ணி!

90-ம் நாளுக்கு மேல் கதிர் பிடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் 300 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் தேமோர் கரைசலைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்கவேண்டும். இந்த சமயத்தில் தண்டுத் துளைப்பான் தாக்குதல் இருக்கலாம். அதைக் கட்டுப்படுத்த... 'டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்’ என்கிற முட்டை ஒட்டுண்ணி அட்டையை ஒரு ஏக்கர் வயலுக்கு இரண்டு இடங்களில் கட்டி விட வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு கன சென்டி மீட்டர் அளவு கொண்ட ஒட்டுண்ணி அட்டையைக் கட்ட வேண்டும்.

125-ம் நாளில் கதிர் முற்றத் தொடங்கிவிடும். 135-ம் நாளில் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 145-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.'

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...

சோதனை முறை சாகுபடி!

சாகுபடிப் பாடத்தை நிறைவு செய்த அச்சுதன், ''அறுவடை செஞ்சப்பறம் எப்படியும் ஏக்கருக்கு 25 மூட்டை (75 கிலோ) வரை நெல் கிடைக்கும். எப்பவும் பாரம்பரிய விதைகளை வாங்கிட்டு வர்றப்போ... அதோட குணங்கள் சரியா இருக்கா?னு பாக்கறதுக்காக முதல்தடவை சாகுபடி பண்றப்ப... பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் மாதிரியானத் தெளிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன். அப்படிப் பண்ணும்போது விளைச்சல் குறைச்சலாத்தான் இருக்கும். அதனால, இந்த முறை எனக்கு விளைச்சல் கம்மிதான். அடுத்தடுத்த சாகுபடிக்கு இடுபொருட்களைத் தெளிக்கறப்போ, ஏக்கருக்கு அஞ்சு மூட்டை அளவுக்கு மகசூல் கூடிடும்.

மதிப்புக்கூட்டி விற்பனை!

எப்பவுமே நெல்லா விற்பனை செய்றது கிடையாது. அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்வேன். 75 கிலோ நெல்லை அவிச்சுக் காய வைச்சு அரைக்கிறப்போ, 50 கிலோ அரிசி கிடைக்கும். 25 மூட்டைலிருந்து 1,250 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 48 ரூபாய்னு வித்தா, 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.  அதுல, செலவு போக எப்படியும், 46 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு
அச்சுதன், செல்போன்: 99445-76343.