Published:Updated:

லட்சம் விவசாயிகளுக்கு வாழ்வளித்த `NaPanta’ ஆப்... இளைஞரின் `வாவ்’ முயற்சி!

 ``புதிதாக அப்ளிகேஷனை விவசாயிகளுக்குக் கொடுக்கும்போது, அது சாத்தியமாகுமா என்று தோன்றியது. ஆனால், மூன்று மாதங்களில் 5,000 விவசாயிகள் தினசரி உபயோகிக்கத் தொடங்கினர். அதுதான் இதன் வெற்றி.

லட்சம் விவசாயிகளுக்கு வாழ்வளித்த `NaPanta’ ஆப்...  இளைஞரின் `வாவ்’ முயற்சி!
லட்சம் விவசாயிகளுக்கு வாழ்வளித்த `NaPanta’ ஆப்... இளைஞரின் `வாவ்’ முயற்சி!

``நான் ஊருக்கு வரும்போது நடந்த அந்தச் சம்பவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் செல்லும் வழியில் ஒரு விவசாயி இறந்து கிடந்தார். பருத்தியில் அதிகமான மகசூல் கிடைக்கும், நன்றாக விவசாயம் செய்யலாம் என நம்பி ஏமாற்றப்பட்டதால், பூச்சி மருந்து உட்கொண்டு அவர் இறந்தார். டீலரிடம் இருந்து வாங்கியது முழுக்க கலப்பட விதைகள். டீலர் வெறும் 300 ரூபாய் லாபத்துக்காகக் கலப்பட பருத்தி விதைகளை விவசாயியிடம் விற்பனை செய்திருக்கிறார். அந்த 300 ரூபாய்தான் அன்று ஒரு விவசாயியின் உயிரைப் பறித்தது. அவருடைய பயிர் செழுமையாக வளர்ந்திருந்தது, ஆனால், பருத்திகள்தான் வரவில்லை. இதனால் நஷ்டத்தை மீட்டெடுக்கவோ, பயிர் செலவுகளைத் திருப்பித் தரவோ வழியில்லாத விவசாயி தற்கொலைக்குத் தூண்டப்பட்டு இறந்தார். 

எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி என்னை உலுக்கியது. அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றியது’’ என முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹனம்கொண்டா பகுதியைச் சேர்ந்த நவீன்.

டிசம்பர் 2016-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள நவீன் குமார் தனது சொந்த ஊரான ஹனம்கொண்டாவுக்குப் பயணம் செய்தபோது கண்ட காட்சியைத்தான் மேலே விவரிக்கிறார். அந்தப் பயணம்தான் அவரை அப்னா லோன் பஜார் (ApnaLoanBazar) என்ற ஆன்லைன் சில்லறை கடன் ஒருங்கிணைப்பு தளத்தை நிறுவும் அளவுக்கு உருவாக்கும் என அவர் அப்போது நினைத்திருக்கவில்லை. 

ஊருக்கு வந்த பின்னர் அவரால் பல இரவுகள் உறங்க முடியவில்லை. எனவே, கிராமங்களில் உள்ள விவசாய அதிகாரிகளிடமும் விவசாய வல்லுநர்களிடமும் கலந்து பேசி தனியாக ஆய்வு நடத்தினார். அரசின் இணைய வேளாண்மைத் தகவல்களை எடுத்துச் சொல்லும்போது விவசாயிகளால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்பதை நவீன் உணர்ந்தார். இது தவிர, அரசு அதிகாரிகளால் பயிற்சிகள் கொடுக்கப்பட்டால் விவசாயிகளால் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் என்பதையும் உணர்ந்திருந்தார் நவீன்.

விவசாயிகள், தகவல் குறைபாடு, மோசமான விதைகள், போலி உரங்கள், இடைத்தரகர்களின் பண வெறி ஆகியவற்றால்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவது விவசாயத்தில் முக்கியமான ஒன்று என அதற்கான முயற்சியில் இறங்கினார், நவீன். விவசாயிகள் அதிகமாக ஏமாற்றப்படும் காலங்களில் அரசாங்கத்தின் ஆதரவு போதுமானதாக இல்லை. அதனால் ஆலோசனைகளை மொபைல் அப்ளிகேஷன் மூலமாகக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தின்படி ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். இந்த மொபைல் அப்ளிகேஷன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சேவை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதன் பெயர், நபந்தா அப்ளிகேஷன் (NaPanta app). இதன் மூலமாக விவசாயிகள் தங்கள் பயிர் மகசூலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் தற்கொலைகளை தடுப்பதற்கும் நவீனின் இந்தச் செயல்பாடு ஒரு தீர்வாக அமைந்தது. நபந்தா அப்ளிகேஷனை விவசாயிகள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் முழுமையான விவசாய பயிர் மேலாண்மையை நிர்வகிக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் 1,10,000 பயனர்கள் (விவசாயிகள்) பயன்படுத்தி வருகின்றனர். 

மொத்தமாக 3,500-க்கும் மேற்பட்ட சந்தைகளின் 300 வகையான மூன்று வருட விலைப் பட்டியலை தயாரித்து அப்ளிகேஷனில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஓர் இணைய இணைப்பு கட்டாயம் தேவை. இது தவிர, தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரவிறக்கம் செய்து ஆப்லைனில் படித்தும் தெரிந்துகொள்ளலாம். மேலும் நபந்தா, விவசாயிகள் தங்கள் செலவினங்களை முறையான வழியில் கண்காணிக்க உதவுகிறது. பூச்சிக் கொல்லி தயாரிப்பில் கலவையின் அளவு மற்றும் தொழில்நுட்பங்களையும், ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பு, பயிர் காப்பீடு, மண் ஆய்வுக்கூடங்கள், குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரிகளின் தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை நபந்தா அப்ளிகேஷன் தருகிறது. 

இந்த அப்ளிகேஷன் தற்போது தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தகவல்களை தருகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு உபயோகப்படும் வகையில் இடைத்தரகர்கள் இல்லாமல், தங்கள் விவசாயப் பொருள்களையும் கருவிகளையும் வாங்கவோ, விற்கவோ மற்றும் வாடகைக்கு எடுக்கவோ முடியும். 

``புதிதாக அப்ளிகேஷனை விவசாயிகளுக்குக் கொடுக்கும்போது, அது சாத்தியமாகுமா என்று தோன்றியது. ஆனால், மூன்று மாதங்களில் 5,000 விவசாயிகள் தினசரி உபயோகிக்கத் தொடங்கினர். அதுதான் இதன் வெற்றி.

ஒரு சிறிய நிலப்பகுதியைக் கொண்ட விவசாயி ஒருவரை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒவ்வொரு முறையும் விதைகள், பூச்சிக்கொல்லி, பயிர் பாதுகாப்புத் தீர்வுகள் பற்றிய தகவல்களைப் பெற ஒவ்வொரு முறையும் அவர் பயணம் செய்கிறார். அப்போது அவர் குறைவான தகவல்களைத்தான் பெற்று ஞாபகத்தில் வைத்திருப்பார். தனது பண்ணைக்குள் பூச்சிகள் தாக்கினால் அதற்கான தகவல்களை தேடிக் கண்டு பூச்சிக்கொல்லி அடிப்பதற்குள் நான்கு நாள்களில் பூச்சிகள் பயிரைக் காலி செய்துவிடும். இந்த நேரத்தில் நபந்தா அப்ளிகேஷன் பயிர் சாகுபடி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட படங்களுடன் முழு விபரங்களையும் வழங்குகிறது. அதன் துல்லியமான தகவல் மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட தீர்வு, விவசாயிக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது. சி.ஐ.பி.ஆர்.சி (மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழு) வழிகாட்டுதல்களின்படி பயன்பாட்டில் உள்ள அனைத்து தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிடைக்கும் பல விவசாய பொருள்களின் சந்தை விலையானது agmarket.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெறப்படுகிறது. இதுதவிர விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதற்காகச் சிறு தொகையையும் நபந்தா அப்ளிகேஷன் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

இன்று, நபந்தா அப்ளிகேஷன் 1,10,000 விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 25,000-க்கும் அதிகமான விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆந்திராவில் நடத்திய ஆய்வுகளில், நபந்தா அப்ளிகேஷன் பற்றி பத்தாயிரம் விவசாயிகள் விவரித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசு அதிகாரிகளாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டிருக்கிறது நபந்தா.