Published:Updated:

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!
உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

கழிவு மேலாண்மை

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியச் சவாலாக இருப்பது, குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான். மட்கக்கூடிய கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் செயல்பாடு, கழிவு மேலாண்மையில் முக்கியமான அங்கமாக இருக்கிறது. பெருநகரங்கள் பலவற்றிலும் இப்படி உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

அந்த வகையில், உணவகக் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்து வருகிறார், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி. மதுரையை அடுத்துள்ள ஒத்தக்கடை எனும் கிராமத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த திருப்பதியைச் சந்தித்தோம்.

“மதுரைதான் எனக்குச் சொந்த ஊர். மருந்தியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்புப் படிச்சுருக்கேன். புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பை முடிச்சுட்டு ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியராக இருக்கேன். ஹோட்டல் பிசினஸ்தான் எங்க குடும்பத்தொழில். நாங்க அண்ணன் தம்பி 4 பேர், ஒரு சகோதரினு எல்லாரும் சேர்ந்து, ‘டெம்பிள் சிட்டி’ங்கிற பேர்ல ஹோட்டல்களை நடத்துறோம். எங்களுக்கு மொத்தம் 13 கிளைகள் இருக்கு. எங்களோட ஹோட்டல்கள்ல... காய்கறிக்கழிவுகள், சாப்பிட்ட இலைகள், வீணான உணவுகள்னு தினமும் பலநூறு கிலோ அளவுக்கு மேல கழிவுகள் கிடைக்கும். அதை முறையா மட்க வெச்சுப் பயன்படுத்தணும்னு ஓர் ஆசை இருந்துச்சு. 

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

அதோட ஹோட்டல்கள்ல இயற்கை காய்கறிகளை மட்டும்தான் பயன் படுத்தணும்னு ஆசைப்பட்டுத் தேடி அலைஞ்சப்போ எங்களுக்குத் தேவைப்படுற அளவுக்குக் காய்கள் கிடைக்கலை. அதனால, நாமளே இயற்கை காய்கறிகளை உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சுட்டுருந்தேன். அந்த மாதிரி சூழ்நிலையிலதான், ஒருநாள், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஐயாவைச் சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவர் என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, ‘பசுமைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த மாதிரி நீங்க ஏதாவது செய்யலாமே’னு சொன்னார். அதுக்கப்புறம் தோணினதுதான், கழிவுகளை மட்க வெச்சு உரமாக்கி இயற்கைக் காய்கறிகளை விளைவிக்கிற திட்டம்” என்று முன்கதை சொன்ன திருப்பதி தொடர்ந்தார்...   

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

“இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துலதான் காய்கறிகளைச் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சேன். அதுக்கப்புறம் ஹோட்டல்ல கிடைக்கிற கழிவுகளைச் சேகரிச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்து... தென்னை மட்டை அரைக்கும் எந்திரத்துல் போட்டுப் பொடியாக அரைச்சு வெச்சேன். அதுமேல இ.எம் கரைசலைத் தெளிச்சு 20 நாள்கள் மட்க வெச்சு பயிர்களுக்கு உரமாகக் கொடுத்தேன். காய்கறிப்பயிர்கள் நல்லா செழிப்பா வளர்ந்து, எதிர்பார்த்ததைவிட அதிக மகசூல் கிடைச்சது. அந்தக் காய்கறிகளைத்தான் எங்க ஹோட்டல்கள்ல சமையலுக்குப் பயன்படுத்திட்டுருக்கோம். சமையலுக்குப் போக மீதமிருக்குற காய்களை ஹோட்டல்யே ஒரு ஸ்டால் போட்டு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். இயற்கைக் காய்கறிகளோட சுவையும் தரமும் நல்லா இருந்ததால, எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க.

இங்க காய்கறிகள் மட்டுமில்லாம கீரைகள், கொய்யா, பப்பாளி, வாழைனும் உற்பத்தி செய்றேன். ‘தமிழக அங்ககச் சான்றளிப்புத்துறை’ மூலமா ‘இயற்கை விவசாயச் சான்றிதழ்’ வாங்கியிருக்கேன். மட்கக்கூடிய ஹோட்டல் கழிவுகள், தோட்டக் கழிவுகள் எதையுமே வெளியில் கொட்டாம, முழுக்க முழுக்க மறு சுழற்சி செஞ்சு உரமாக்கிப் பயன்படுத்துறேன்.  

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

கிட்டத்தட்ட மூணு வருஷமா இப்படிக் கழிவுகளை உரமாக்குறதைப் பத்திக் கேள்விப்பட்ட அப்போதைய மதுரை கார்ப்பரேஷன் கமிஷனர் சந்தீப் நந்தூரி இதையெல்லாம் பார்வையிட்டு... மாநகராட்சிக் கழிவுகளையும் இப்படி உரமாக்கித் தர முடியுமானு கேட்டார். அதுக்கு நான் ஒப்புக்கொண்டு... எட்டு வருஷத்துக்கு ஒப்பந்தம் போட்டு, பாண்டி கோவில், கபீர் நகர் பகுதிகள்ல இருக்குற ஹோட்டல் கழிவுகளை உரமா மாத்துற திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிச்சுருக்கோம். அதுக்காக மாநகராட்சிக்குச் சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலத்துல தண்ணீர், மின்சார வசதிகளை ஏற்பாடு செஞ்சுக் கொடுத்திருக்காங்க. உணவுக்கழிவுகளை அரைக்கிறதுக்கான எந்திரத்தையும் நிறுவிக் கொடுத்துருக்காங்க. இந்த எந்திரம் மூலமா ஒரு நாளைக்குப் பத்து டன் கழிவுகளை அரைக்கலாம். இந்தப் பிளான்ட்ல 17 ஹோட்டல்கள்ல இருந்து கிடைக்கிற கழிவுகளை அரைச்சு தேங்காய் தண்ணீர், இ.எம் கரைசல் ரெண்டையும் பயன்படுத்தி மட்க வெச்சு உரமாக்குறோம். 100 லிட்டர் தேங்காய் தண்ணீருக்கு 100 மில்லி இ.எம் கரைசல்னு கலந்து ஒருநாள் வெச்சுருந்து, அந்தக்கரைசலை 1,000 கிலோ கழிவுகள் மேல தெளிச்சு மட்க வெக்கிறோம். இந்த முறையில 20 நாள்கள்ல கழிவுகள் மட்கி உரமாகிடும். இந்த உரத்தைப் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துறோம்.  

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

இந்த மாதிரி தயாரிக்கிற உரத்தைச் சலித்து 2 கிலோ, 50 கிலோ அளவுகள்ல பைகள்ல போட்டு விற்பனையும் செய்றோம். தினமும் 17 ஹோட்டல்கள்ல இருந்து 5 டன் அளவுக்குக் கழிவுகள் வருது. விஷேச நாள்கள்ல திருமண மண்டபங்கள்ல இருந்து 20 டன் வரை உணவுக்கழிவுகள் வரும். அவ்வளவையும் மட்க வெச்சு உரமாக்கிட்டுருக்கோம்” என்ற திருப்பதி நிறைவாக,

“எங்களோட தேவைக்காக ஆரம்பிச்ச இந்த முயற்சியால, இப்போ மாநகராட்சிக்கும் உபயோகமா இருக்கு. பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இது பயன்படுது. யார் வேணாலும் தங்களோட கழிவுகளை எங்ககிட்ட கொடுக்கலாம். நாங்களே நேர்ல போய் எடுக்கணும்னா கட்டணம் வாங்கிக்குவோம். இந்த முறையில 100 கிலோ கழிவுகள் மூலமா 18 கிலோ உரம் கிடைக்கும். இது மூலமா ஹோட்டல் கழிவுகளைச் சிறந்த முறையில மேலாண்மை செய்ய முடியுது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, திருப்பதி, செல்போன்: 98942 33331.

அருண் சின்னதுரை - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு