Published:Updated:

மன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்!
மன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்

பிரீமியம் ஸ்டோரி

“விஷமில்லாத இயற்கைக் காய்கறிகளைச் சாப்பிடணும்னா அதுக்கு மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு இயற்கை விவசாயம் செய்யணும். இரண்டு நம்பத் தகுந்த இயற்கை விவசாயிகள்கிட்ட காய்கறிகளை வாங்கணும். இந்த ரெண்டுக்கும் வழியில்லைனா மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைச்சு இயற்கைக் காய்கறிகளை உற்பத்தி பண்ணிக்கணும்.  

மன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்!

என்னை மாதிரி நகரவாசிகளுக்கு மூணாவது வழிதான் சாத்தியம். அதனாலதான் மாடித்தோட்டம் அமைச்சு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செஞ்சுக்குறேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா. “ஒன்றை வருஷத்துக்கு முன்னாடி வெறும் பத்து தொட்டிகளை வெச்சு மாடித்தோட்டத்தை ஆரம்பிச்சேன்.

என் நண்பர் ஒருத்தர், அவர் வீட்டுல விளைஞ்ச வெண்டைக்காய்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டுப் பார்த்தப்போ ரொம்பச் சுவையா இருந்துச்சு. உடனே எனக்கும் மாடித்தோட்டத்து மேல ஆசை வந்துடுச்சு. அவர்கிட்ட ஆலோசனை கேட்டப்போ, தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்குப் போகச் சொன்னார். அங்க போய், ஒரு மாடித்தோட்ட கிட் வாங்கிட்டு வந்து வெண்டைக்காய், கத்திரிக்காய், பச்சை மிளகாய்னு மூணையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகச் செடிகளை அதிகப்படுத்திட்டேன்” என்ற கார்த்திகா மாடித்தோட்டச் செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“இப்போ கீரைகள், மலர்கள், கோவைக்காய், குடை மிளகாய், கத்திரி, மிளகாய், பீன்ஸ், அவரைனு நிறையச் செடிகள் இருக்கு. தினமும் ஒருவேளை தண்ணீர் விடுவேன். வெயில் காலங்கள்ல ரெண்டு வேளை தண்ணீர் விடுவேன். சமையலறை கழிவுகளை மட்க வெச்சுடுவேன். மார்க்கெட்ல மீன் கழிவுகளை வாங்கிட்டு வந்து, நாட்டுச் சர்க்கரை கலந்து மீன் அமினோ அமிலம் தயார் செய்றேன். 15 நாளைக்கு ஒரு தடவை கழிவு உரத்தையும், மீன் அமினோ அமிலத்தையும் மாத்தி மாத்தி சுழற்சி முறையில கொடுக்கிறேன். அதனால, செடிகள் நல்லா ஊட்டமா வளருது. 

மன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்!

செடிகளை மாவுப்பூச்சிகள்தான் அதிகம் தாக்குது. வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் ரெண்டையும் தண்ணியில கலந்து தெளிச்சா மாவுப்பூச்சிகள் உள்ளிட்ட எல்லாப்பூச்சிகளுமே போயிடுது. செடிகள்ல ஊட்டம் குறைஞ்சு சுணக்கமா இருந்தா கற்றாழைச்சாறு, பஞ்சகவ்யானு தெளிச்சா சரியாகிடும்.

வாரத்துக்கு ரெண்டு நாள் சமைக்கிற அளவுக்குக் கீரைகள் இங்கேயே கிடைச்சுடுது. ஓரளவுக்குக் காய்களும் கிடைச்சுட்டுருக்கு. கடையில வாங்காம நாமளே விளைய வெச்சு ஃப்ரெஷ்ஷா சாப்பிடுறப்போ ஒரு சந்தோஷம் கிடைக்குது” என்ற கார்த்திகா நிறைவாக,

“முன்னாடி நான் மன அழுத்தத்துக்காக மாத்திரை எடுத்துட்டுருந்தேன். மாடித்தோட்டம் அமைச்ச பிறகு மாத்திரைகளை நிறுத்திட்டேன். தோட்டத்துல செடிகளைப் பார்த்துப் பார்த்துப் பராமரிக்கிறப்போ மனசுக்குப் புத்துணர்ச்சி கிடைக்குது. மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார், கார்த்திகா.

தொடர்புக்கு, கார்த்திகா, செல்போன்: 97909 31566

துரை.நாகராஜன் - படங்கள்: பெ.ராக்கேஷ்

சூரிய ஒளி அவசியம்

மா
டித்தோட்டம் அமைப்பது குறித்துப் பேசிய கார்த்திகா, “மாடித்தோட்டம் அமைக்க இடம்தேடி அலைய வேண்டியதில்லை. கைப்பிடிச்சுவர்கள், மாடிப்படிகள் எனக் காலியாக இருக்கும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொட்டிகளை வைத்துச் செடிகளை வளர்க்கலாம். செடிகளுக்குச் சூரிய ஒளி அவசியம் என்பதால், சூரிய ஒளி கிடைக்கும் இடமாக இருக்க வேண்டியது அவசியம்.

மாடியின் தரையில் பாலித்தீன் ஷீட்டை விரித்து அதன்மேல் தொட்டிகளை வைத்தால் தண்ணீர்த் தேங்கி தரைக்குப் பாதிப்பு ஏற்படாது. குறைவான பராமரிப்புத் தேவைப்படும் செடிகள், அதிகப்பராமரிப்புத் தேவைப்படும் செடிகள் என இரண்டாகப் பிரித்து வைத்தால் பராமரிக்க எளிதாக இருக்கும். ஒரு பங்கு செம்மண், இரண்டு பங்கு தேங்காய் நார், ஒரு பங்கு உயிர் உரங்கள் கலந்த கலவையைத் தொட்டிகளில் நிரப்பி... ஒவ்வொரு தொட்டிக்கும் ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கை இட்டு விருப்பப்படும் செடிகளை நடவு செய்யலாம்” என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு