Published:Updated:

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!
மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

பாரம்பர்ய நெல் ரகங்கள்... ஒரு ஏக்கர்... ரூ. 58,500...மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

விவசாயிகள் சாகுபடித் தொழில் நுட்பங்களில் மட்டும் வல்லவராக இருந்தால் போதாது. விற்பனை செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தினால்தான் நிறைவான லாபம் ஈட்ட முடியும். நுகர்வோருக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுத்துவரும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கீழையூர் கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன். இவர் 5 ஏக்கர் நிலத்தில் 20 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து விதைநெல், அவல், அரிசி என விற்பனை செய்து வருகிறார்.

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

ஒரு பகல்பொழுதில் வயலில் இருந்த தாமரைக்கண்ணனைச் சந்தித்துப் பேசினோம். “டிப்ளமோ படிச்சிட்டு, தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பா, விவசாயச் செலவுகளைச் சமாளிக்க முடியாம நிலத்தை அடமானம் வெச்சுருந்தார். எனக்கு விவசாயத்துல ஆர்வம் இருந்ததால, அடமானத்திலிருந்த 8 ஏக்கர் நிலத்தை மீட்டு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அப்பா வழியில நானும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லினுதான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். அதுல பெரிசா என்னால லாபம் எடுக்க முடியலை. அதனால, மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான் தஞ்சாவூர்ல ஒரு கடையில ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பார்த்து வாங்கினேன். அதுல இயற்கை விவசாயம் பத்தி வந்திருந்த சாகுபடிக் கட்டுரைகள் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்துச்சு. தொடர்ந்து பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் தொடர்ந்து படிச்சு நிறையத் தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டு இயற்கை விவசாயத்துல இறங்கினேன்.அதுக்காக உம்பளச்சேரி ரகத்துல ரெண்டு காளைகளையும் ஒரு பசுவையும் வாங்கினேன். அந்த மாடுகள் மூலமாகக் கிடைக்கிற சாணம், மூத்திரத்தை வெச்சு ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம்னு தயார் பண்ணி இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். காளைகள் மூலமாத்தான் நிலத்துல உழவு ஓட்டுறேன். அதனால, நிலம் இறுகாம பொலபொலனு இருக்குது. முதல் வருஷம் தக்கைப்பூண்டு விதைச்சு மடக்கி உழுது, இயற்கை முறையில நவீன வீரிய ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சது.

அடுத்த வருஷம், பூங்கார், குள்ளக்கார், கிச்சிலிச்சம்பானு பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். அப்போ ஏக்கருக்கு 12 மூட்டை (60 கிலோ) அளவுல மகசூல் கிடைச்சது. தொடர்ந்து பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சதுல மகசூல் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது. இயற்கை விவசாயத்துல இறங்கி இப்போ ஏழு வருஷம் ஆகிடுச்சு” என்று முன்கதை சொன்ன தாமரைக்கண்ணன் தொடர்ந்தார்.

“போன வருஷம் ஒரு ஏக்கருக்கு 4 ரகங்கள்னு நாலு ஏக்கர்ல 16 பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை மகசூல் கிடைச்சது. ஒவ்வொரு ரகங்கள்லயும் பாதியை விதைநெல்லா விற்பனை செஞ்சேன். மீதியைக் கைக்குத்தல் அரிசியாவும், அவலாவும் மாத்தி விற்பனை செஞ்சேன். இந்த மாதிரி பல ரக விதைநெல்லையும், பல ரக அரிசியையும் விற்பனை செய்றதால... விவசாயிகள்கிட்டயும் நுகர்வோர்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைக்குது. இப்போ விற்பனைக்குப் பிரச்னையேயில்லை. விதைநெல்லாவும் விற்பனை செய்றதால எப்பவுமே ஆள்கள் மூலமா கையாலதான் அறுவடை செய்றேன். எந்திரம் மூலமா அறுவடை செஞ்சா நெல்மணிகள் உடைஞ்சு முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

இந்த வருஷம் சம்பா பட்டத்துல, அஞ்சு ஏக்கர்ல ஒரு ஏக்கருக்கு நாலு ரகங்கள்னு... இலுப்பைப்பூச்சம்பா, கிச்சிலிச்சம்பா, மைசூர் மல்லி, மிளகுச்சம்பா, சேலம் சன்னா, சூரக்குறுவை, கறுங்குறுவை, கள்ளிமடையான், காட்டுப்பொன்னி, கறுப்புக்கவுனி, சீரகச்சம்பா, வாடன் சம்பா, சிவப்புக்கவுனி, கருடன் சம்பா, தேங்காய்ப்பூச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயானம், குள்ளக்கார், பூங்கார், கல்லுண்டைனு மொத்தம் 20 ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். ஏக்கருக்கு 20 மூட்டைங்கிற கணக்குல மகசூல் கிடைச்சிருக்கு. கிடைச்ச மகசூல்ல பாதியை விதைநெல்லாவும் பாதியை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற தாமரைக்கண்ணன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“போன வருஷம் ஏக்கருக்கு 20 மூட்டை வீதம் நாலு ஏக்கர் நிலத்துல, 80 மூட்டை நெல் கிடைச்சது. மொத்தம் 4,800 கிலோவில் 2,400 கிலோ நெல்லை விதைநெல்லா விற்பனை செஞ்சேன். ஒரு கிலோ விதைநெல் 80 ரூபாய்ங்கிற கணக்குல 1,92,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. 1,600 கிலோ நெல்லைக் கைக்குத்தல் அரிசியா அரைச்சதுல 1,040 கிலோ அரிசி கிடைச்சது. அதைக் கிலோ 90 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 93,600 ரூபாய் வருமானம் கிடைச்சது. 800 கிலோ நெல்லை முளைக்கட்டிய அவலா மாத்தினதுல 440 கிலோ அவல் கிடைச்சது. அதைக் கிலோ 110 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 48,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. மொத்தம் நாலு ஏக்கர்ல கிடைச்ச வருமானம் 3,34,000 ரூபாய். விதைப்பு, அறுவடை, அரவைக்கூலி, போக்குவரத்துனு எல்லாச்செலவும் சேர்த்து 1,00,000 ரூபாய் போக மீதி 2,34,000 ரூபாய் லாபமா நின்னது. ஒரு ஏக்கருக்குனு பார்த்தா 58,500 ரூபாய் லாபம். இந்த வருஷம் அஞ்சு ஏக்கர்ல கிடைச்சுருக்குற 100 மூட்டை நெல்லையும் இதே மாதிரிதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற தாமரைக்கண்ணன் நிறைவாக,

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

“ஒரு ஏக்கர்ல நெல் சாகுபடி மூலமா 58,500 ரூபாய் லாபமானு யோசிக்கலாம். இந்தளவு லாபம்னு சொன்னா பிரமிப்பாத்தான் இருக்கும். ஆனா, அறுவடை செஞ்சு அடுத்த நாள்லயே இவ்வளவு லாபத்தைச் சம்பாதிச்சுட முடியாது. அறுவடை செஞ்சு விதைநெல்லா விற்பனை செய்றதுக்கும், அரிசி, அவல்னு மாத்தி விற்பனை செஞ்சு மொத்த லாபம் எடுக்கிறதுக்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகுது. கைக்குத்தல் அரிசியை இருப்பு வெக்க முடியாது. அதனால, விற்பனை வாய்ப்பைப் பொறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் அரைச்சு விற்பனை செய்றேன். அதே மாதிரிதான், அவலுக்கும். அறுவடை செஞ்சு சுத்தப்படுத்தி மூட்டைப் பிடிச்சு சேமிச்சு வெச்சுடுவேன். அப்பப்போ எடுத்து வாங்குறவங்களோட விருப்பப்படி விற்பனை செய்றேன். அந்தளவுக்குப் பொறுமையா இருக்குறதுனாலதான் என்னால இவ்வளவு லாபம் பார்க்க முடியுது. இப்போ, தின்பண்டங்கள் விற்பனை செய்றதுக்காக ஒரத்தநாட்டுல ஒரு கடை ஆரம்பிச்சுருக்கேன். அந்தக்கடையில பாரம்பர்ய ரக அரிசிகள்ல இருந்து முறுக்கு, அதிரசம், கொலுக்கட்டைனு தின்பண்டங்களைச் சமைச்சு விற்பனை செய்ற முயற்சியில இருக்கேன். அப்படி விற்பனை செய்ய ஆரம்பிச்சா இன்னமும் கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, தாமரைக்கண்ணன், செல்போன்: 98655 37081

கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம. அரவிந்த்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் ரகத்தைச் சாகுபடி செய்வது குறித்துத் தாமரைக்கண்ணன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே... 

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 15 கிலோ தக்கைப்பூண்டு விதைகளைத் தெளித்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 40-ஆம் நாள் தக்கைப்பூண்டுச் செடிகளில் பூவெடுத்ததும் அவற்றை அப்படியே மடக்கி உழுது... பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 6 நாள்கள் கழித்து இரண்டு முறை உழவு செய்து நிலத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். ஒரு வாரம் கழித்து 150 கிலோ கனஜீவாமிர்தம் இட்டு, உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி... ஒற்றை நாற்று நடவு முறையில், முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு நாற்றாக நடவு செய்ய வேண்டும்.

வாரம் ஒருமுறை பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். 15-ஆம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் வெள்ளைப்பூண்டு+வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். 30-ஆம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 45-ஆம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 60-ஆம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் தேமோர்க்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பாரம்பர்ய ரகத்தின் வயதைப் பொறுத்து அவை முற்றி அறுவடைக்கு வரும்.

8 சென்ட் பரப்பில் நாற்றங்கால்!

ரு ஏக்கர் பரப்பில் விதைக்க 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்காக ஒதுக்கிய நிலத்தில் இரண்டு கிலோ தக்கைப்பூண்டு விதையைத் தெளித்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 40-ஆம் நாள் தக்கைப்பூண்டுச் செடிகளில் பூவெடுத்ததும் அவற்றை அப்படியே மடக்கி உழுது... எருக்கன், வேம்பு, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட இலைதழைகளில் 100 கிலோ அளவு போட்டுப் பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தண்ணீர் கட்ட வேண்டும். இலைதழைகள் அழுகி மட்கியதும் ஓர் உழவு ஓட்டி, வயலைச் சேறாக்கி விருப்பப்படும் பாரம்பர்ய ரக விதைநெல்லைத் தெளித்துவிட வேண்டும். ஒரே நேரத்தில் பல ரகங்களைச் சாகுபடி செய்ய விரும்பினால் தனித்தனி பகுதிகளாகப் பிரித்து வரப்புகள் அமைத்து விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவுக்கு 8 கிலோ விதைநெல் தேவை. விதைத்த 10-ஆம் நாள், 13 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வெள்ளைப்பூண்டு+வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 20-ஆம் நாளில் நாற்றுகள் நன்கு செழிப்பாக வளர்ந்து, நடவுக்குத் தயாராக இருக்கும்

வெள்ளைப்பூண்டு+வேப்பங்கொட்டைக் கரைசல்

10
லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 2 கிலோ வேப்பங்கொட்டைத்தூள், 500 கிராம் இடித்த வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை 48 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டினால் கரைசல் தயாராகிவிடும். இதை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல் பயிருக்குத் தெளிக்கலாம்.

மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு