Published:Updated:

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!

பூச்சி மேலாண்மை - 3

பூச்சிகளால் மனிதர்களுக்கு நன்மைகள், தீமைகள் என இரண்டுமே இருந்தாலும்... அவற்றால் வரும் தீமைகளையும், தீமை செய்யும் பூச்சிகளைப் பற்றியும்தான் நாம் அதிகம் சிந்திக்கிறோம். இது மனித இயல்பு. ஆனால், உலக அளவில் பூச்சிகளில் 0.5 சதவிகித பூச்சிகள்தான் தீமை செய்யும் பூச்சிகள். 

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!

இதோடு விளையும் விளைபொருள்களில் 18 சதவிகிதத்தை அழிப்பவை, பூச்சிகள்தான். உலகளவில் கிட்டத்தட்ட பத்து லட்சம் வகையான பூச்சிகள் இருப்பதாகப் பார்த்தோம். இவற்றில் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை சுமார் 5,000 வகைகளைக்கூடத் தாண்டாது. இவ்வளவு சிறிய எண்ணிக்கையில் உள்ள பூச்சிகளைப் பார்த்துத்தான் உலகமே ஆடிக் கிடக்கிறது. ‘அய்யோ... பூச்சி பூச்சி’ என அலறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பூச்சிகள் மனிதர்களுக்கு என்ன செய்கின்றன... சூழலுக்கு என்ன செய்கின்றன... என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் வாழுமிடத்தில் இவ்வளவு பூச்சிகள் இருப்பதற்கான முக்கியக் காரணம் காடுகள் அழிக்கப்பட்டதுதான். காடுகள் அழிக்கப்படுவதால்தான் காட்டில் உள்ள உயிரினங்கள் வெளியே வருகின்றன. அப்படி முதலில் காட்டைவிட்டு வெளியேறியவை உருவத்தில் சிறிதாக இருக்கும் பூச்சிகள்தான். பெரிய மிருகங்கள் வெளிவந்தால் நம் கண்களுக்கு அவை தெரிந்துவிடும். ஆனால், பூச்சிகள் உருவத்தில் சிறியவை என்பதால் நம் கண்களுக்கு அவை தெரிவதில்லை.

காட்டில் பூச்சிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில், அங்குப் பலதரப்பட்ட தாவரங்கள் இருக்கின்றன. சின்னச் செடிகள், குத்துச் செடிகள், கொடிகள், மரங்கள் என பல்வேறு உயரங்களில், பல வகையான தாவரங்கள் இருக்கின்றன. நாட்டுக்குள் பூச்சிகளால் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணம்... வயல்களில் முழுக்க ஒரே வகையான தாவரங்கள் இருப்பதுதான். பலவிதத் தாவரங்களின் இலைகளை ருசித்துக் கொண்டிருந்த பூச்சிகளை ஒரே வகையான தாவரங்களை உண்ணப் பழக்கிவிட்டோம். காடுகளில் பலவித உணவுகளைத் தேடித்தேடி உண்டு வந்த பூச்சிகளின் பெருக்கம் இயல்பான அளவிலிருந்தது. வயல்களில் ஒரே விதமான உயர் விளைச்சல் கொடுக்கும் வீரிய ரகங்களை உண்டு வாழப் பழகிய பூச்சிகளுக்கு உணவு கிடைப்பது எளிதாக இருப்பதால், அவற்றின் பெருக்கமும் அதிகமாக இருக்கிறது.

ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரே பயிரே பரவலாக விளையும்பட்சத்தில் அப்பயிரை மட்டுமே உண்ணக்கூடிய பூச்சிகள் அப்பகுதியிலேயே உயிர்வாழப் பழகி, எண்ணிக்கையில் பெருகி விடுகின்றன. இதுதான் ஒரே வகையான பூச்சிகளின் பெருக்கத்துக்கு முக்கியக்காரணம்.பலவகையான பூச்சிகள் இருக்கும்போது பூச்சித் தொந்தரவு இருப்பதில்லை. ஆனால், சிலவகைப் பூச்சிகள் மட்டும் அதிகமாகும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படித் தொந்தரவு ஏற்படுத்தும் பூச்சிகளை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், பூச்சிக்கொல்லி என்ற உயிர்க்கொல்லி. பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் மட்டும் அழிவதில்லை. மண், நீர், காற்று எல்லாம் விஷமாகி பூச்சிக்கொல்லி தெளிக்கும் வயலில் விளைபொருள்களும் விஷமாகின்றன. அதைச்சாப்பிடும் நமக்குள்ளும் விஷம் பரவுகிறது. விளைபொருள், தண்ணீர், காற்று என அனைத்தும் விஷமாவதால்... நுண்ணுயிரிகளிலிருந்து கால்நடைகள்வரை அனைத்து உயிரினங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், மொத்தச் சூழ்நிலையும் மாறிப் போகிறது. அதனால்தான் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கச் சொல்கிறோம். பயிர்ச்சூழ்நிலையை முறையாகப் பராமரித்தாலே... எளிதாகப் பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடலாம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!

பயிர்ச்சூழ்நிலையைத் தீர்மானிப்பதில் உயிர் காரணிகள், உயிரில்லாத காரணிகள் என இரண்டு வகைகள் உண்டு. காற்று, மண், நீர் போன்றவை உயிர் இல்லாத காரணிகள். பல்வேறு விலங்குகள், மனிதர்கள், கால்நடைகள் போன்றவை உயிர் காரணிகள். இவற்றில் உருவத்தில் பெரியதாக உள்ள உயிர் காரணிகள், அவை செய்யும் செயலைப் பொறுத்துத்தான் சூழலை மாற்ற முடியும். ஆனால், உருவத்தில் சிறிதான பூச்சிகள் செய்யும் வேலை படுபயங்கரமானது. இந்தச் சிறிய பூச்சிகளை அழிப்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகளாக விஷம் தெளித்துத் தெளித்துச் சூழ்நிலையை மாசுபடுத்தி வருகிறோம்.

பயிர் சூழலைப் பராமரிப்பது, பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவது போன்றவற்றில்தான் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இது எதிர்கால உணவுப்பாதுகாப்புக்காக மட்டுமில்லை... உலகையே பாதுகாக்க வேண்டிய நிலை. உலகின் உணவு மண்டலங்கள் அனைத்தும் தற்போது காலியாக இருக்கின்றன. தற்போதுள்ள புவி வெப்பமாதல் மற்றும் வறண்ட சூழ்நிலை ஆகியவற்றைப் பூச்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதைக் கேட்டால் இன்னும் ஆச்சர்யப்படுவீர்கள். இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் தாவரங்களைவிட அதிகப் பலம் வாய்ந்தவையாகப் பூச்சிகள் இருக்கின்றன.இயற்கைச் சூழ்நிலையைப் பாதுகாப்பது, பல்லுயிர்ச்சூழல் நிலவும் ஒருங்கிணைந்த பண்ணையம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது மட்டும் பாதுகாப்பதில்லை. உதாரணமாக, பண்ணையத்தில் மாடு வளர்க்கிறோம். மாடு போடும் சாணத்தை யார் மட்க வைப்பது? நுண்ணுயிரிகள் மற்றும் ‘பீ உருட்டிகள்’ என அழைக்கப்படும் பூச்சிகள்தான், அந்த வேலையை அதிகம் பார்க்கின்றன.

ஒரு காலகட்டத்தில் இந்தப் பூச்சிகளை ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு போனார்கள். ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் கால்நடைக் கழிவுகள் மட்கக்கூடிய சூழ்நிலை இல்லை. எனவே மட்க வைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகப் பெரிய பெரிய சாண உருண்டைகளைச் சிறியதாக மாற்றக்கூடிய இந்தப் பூச்சிகளை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்தார்கள். மனிதர்களின் எதிர்கால வாழ்க்கைக்குப் பூச்சிகளின் உதவியும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

- அறிவோம்

நீ.செல்வம் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்!

பிரமிக்க வைக்கும் பழ ஈக்கள்!

ழ ஈக்கள் அனைத்துயிர்களுக்கும் சவால் விடக்கூடிய பூச்சிகள். உலகத்தில் உள்ள எந்த உயிரினமும் இதைப்போல இனப்பெருக்கத்தில் சாதனை செய்ய முடியாது. இவற்றின் வாழ்நாள் 15 நாள்கள் மட்டுமே. ஆனால், ஒரு பூச்சியிலிருந்து ஆண்டுக்கு 25 தலைமுறைகள் உருவாகிவிடும். ஒவ்வொரு பெண் ஈயும் நூறு முட்டைகளை இடும். அதில் 50 ஆண் மற்றும் 50 பெண் ஈக்கள் உருவாகும். அந்த 50 பெண் ஈக்களும் தலா நூறு முட்டைகளைப் இடும். மொத்தப் பழ ஈக்களையும் கொண்டு கணக்குப்போட்டால், அவற்றின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும். உலகத்தில் உள்ள மொத்த பழ ஈக்களையும் சேர்த்து, ஒரு பந்துபோலச் செய்தால், அந்தப் பந்தின் விட்டம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேள்ள தூர அளவு இருக்கும். மிக மிகச் சிறிய உயிரினமான பழ ஈக்கள் எண்ணிக்கையில் எவ்வளவு உள்ளன என்று யோசித்துப் பாருங்கள்.

தடய அறிவியலில் பூச்சிகளின் பங்கு!

கொ
லை வழக்குகளில் தடயவியல் துறையின் பங்கு முக்கியமானது. ஒரு பிரேதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு... இறந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கிறாரா, தற்கொலை செய்து கொண்டாரா என ஆய்வு செய்வார்கள். அதேபோல இறந்து எத்தனை நாள்கள் ஆகின்றன என்று கண்டுபிடிப்பதும் முக்கியமான பணி. இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு சோதனைகள்மூலம் தடயவியல் அறிஞர்கள் கண்டுபிடிப்பார்கள். 

அந்தச் சோதனையில் பூச்சிகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உயிரற்ற உடலில், ஒரு விதமான ஈக்கள், சில புழுக்கள், சில வண்டுகளின் முட்டைகள் போன்றவை காணப்படும். இறந்த உடலின்மீது எத்தனை மணிநேரம் கழித்து வண்டுகள், ஈக்கள் அமரும், அவை எப்போது முட்டையிடும், அந்த முட்டையிலிருந்து புழுக்கள் எப்போது வெளிவரும் என்பவற்றுக்கான கால அளவுகள் உள்ளன. அதை வைத்துதான், இறந்த நேரத்தைக் கணக்கிடுவார்கள்.