Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

தினமும் ரூ. 2,000 லாபம்!பண்ணைத்தொழில்

பிரீமியம் ஸ்டோரி

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப்பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன. 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத் தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத்தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி, அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில், தென்னந்தோப்பில் சிப்பிக்காளான் பண்ணை அமைத்து நல்ல வருமானம் எடுத்துவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரீத்தா ஆரோக்கியமேரி பற்றிப் பார்ப்போம். தேனியிலிருந்து குமுளி செல்லும் சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் (உத்தமபாளையம் என்ற ஊரை அடைவதற்குச் சற்று முன்பு) சாலையின் இடது புறம் பிரிந்து செல்கிறது, சுருளி அருவிக்குச் செல்லும் தார்ச்சாலை. இச்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, ராயப்பன்பட்டி எனும் கிராமம். ஊருக்குள் நுழையும் முன்பே சாலையின் வலதுபுறம், நம்மை வரவேற்கிறது, கே.வி.ஏ ஆர்கானிக் பார்ம். ஒரு பிற்பகல் நேரத்தில் குளுகுளுவெனக் காற்று வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில் பண்ணைக்குள் நுழைந்தோம். இளநீர் கொடுத்து உபசரித்த ரீத்தா ஆரோக்கியமேரி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“இது மொத்தம் மூணரை ஏக்கர் தென்னந்தோப்பு. என் கணவர்தான் விவசாயம் பார்த்துட்டுருந்தார். எங்க தோப்புல ரசாயன உரங்களைப் பயன்படுத்துனதேயில்லை. அவர் ரொம்ப ஆர்வமா இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டுருந்தார். மீன் பண்ணை, மாடு வளர்ப்பு, தேனீ வளர்ப்புனு ரொம்ப ஆர்வமாச் செஞ்சுட்டுருந்த சூழ்நிலையில அவர் திடீர்னு இறந்து போயிட்டார். அதுவரை அவர்தான் முழுக்க முழுக்க எல்லாத்தையும் பார்த்துட்டுருந்தார். வீட்டு நிர்வாகத்தையும் குழந்தைகளைப் பராமரிக்கிற வேலையையும் மட்டும்தான் நான் பார்த்துட்டுருந்தேன். அவர் திடீர்னு எங்களை விட்டுப் போகவும் அப்படியே இடிஞ்சு போயிட்டேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனசைத் தேத்திக்கிட்டு நானே விவசாயத்தைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அவர் இருந்தப்போ, அவருக்கு உதவியா இருந்த தம்பி ஜெயக்குமார்தான் இப்போ எனக்கும் உதவியா இருக்கார். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

நாங்க ‘பசுமை விகடன்’ புத்தகத்தை ரொம்ப வருஷமாகப் படிச்சுட்டுருக்கோம். பசுமை விகடன் நம்பருக்கு போன் பண்ணிதான் இடுபொருள்கள் தயாரிப்பு முறையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம். காளான் வளர்ப்பு பத்தியும் பசுமை விகடன்ல படிச்சுருந்தோம். தோப்புல காளான் வளர்ப்பு செய்யலாம்னு ஆசை இருந்தும், வழிகாட்டுறதுக்கு ஆள் இல்லாம யோசனையில இருந்தோம். ‘கிராமத்தங்கல்’ திட்டத்துல வேளாண் கல்லூரி மாணவிகள் எங்க தோட்டத்துல வந்து தங்குறது வழக்கம். அப்படி, அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன, மதுரை வேளாண்மைக்கலூரியில் படிக்கிற பெண்கள் சிலபேர், கிராமத்தங்கல் திட்டத்துல எங்க தோட்டத்துக்கு வந்துருந்தாங்க. அவங்ககிட்ட பேசிட்டுருக்குறப்போ காளான் வளர்ப்பு பத்தி பேச்சு வந்தது. அப்போ அந்தப் பொண்ணுங்கதான், சிப்பிக்காளான் வளர்ப்பு பத்தி சில தகவல்களைச் சொல்லி, பக்கத்துல இருக்குற ஓடைப்பட்டிங்கிற ஊர்ல இருக்குற கண்ணன்ங்கிறவரைப் பத்திச் சொன்னாங்க. அவர் சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டுக்குமே காளான் வித்து உற்பத்தி செஞ்சுக்கிட்டுருக்கார். எங்க ஊருக்கு ரொம்பப் பக்கத்துல இருந்தும், எங்களுக்கு அவரைப் பத்தித் தெரியலை.

உடனே தம்பி ஜெயக்குமாரை, கண்ணன் சார்கிட்ட அனுப்பினேன். அவர்தான் எங்களுக்குச் சிப்பிக்காளான் வளர்ப்பு முறைகளைப் பத்திச் சொல்லிக்கொடுத்தார். அதுக்கப்புறம்தான் நாங்க சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்குனோம். முழுக்கக் காளான் பண்ணையை ஜெயக்குமார்தான் பார்த்துக்குறார், அதுபத்தி அவர்கிட்டேயே கேட்டுக்கங்க” என்று சொல்லி ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தினார், ரீத்தா ஆரோக்கியமேரி.

“கண்ணன் சார்கிட்ட பயோ டெக்னாலஜி பத்தி படிக்கிற ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சி எடுத்துக்குறதுக்காக வருவாங்க. அவங்கள்ல சில பேரை எங்க தோட்டத்துக்கு அனுப்பினார், கண்ணன். அப்படி வந்தவங்க ஒருநாள் முழுக்கத் தோட்டத்துலேயே தங்கியிருந்து, காளான் பெட் தயாரிக்கிறது பத்திச் சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்கப்புறம் அவங்ககிட்ட கத்துக்குன விஷயங்களை வெச்சு, அஞ்சு வருஷத்துக்கு முன்ன, இருபதடிக்குப் பத்தடி அளவுல ஒரு காளான் வளர்ப்புக் கொட்டகையை அமைச்சோம். அதுல சோதனை அடிப்படையில கொஞ்சம் பெட்களைப் போட்டுத் தொங்கவிட்டோம். தென்னந்தோப்புக்குள்ள கொட்டகை அமைஞ்சுருக்குறதால, இயற்கையிலேயே காளானுக்குத் தேவையான தட்பவெப்பநிலை அமைஞ்சது. அந்த எல்லாப் பெட்கள்லயுமே நல்லபடியா காளான் வந்தது. அதுக்கப்புறம் 100 பெட்களைப் போட்டுத் தொங்கவிட்டோம். அதுலயும் நல்லபடியாகச் சிப்பிக்காளான் முளைச்சு வந்தது. சரியான சீதோஷ்ண நிலை இருக்குறதால, ஒரு பெட்ல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் கிலோ வரை காளான் கிடைக்குது.காளான் நிறைய கிடைக்க ஆரம்பிக்கவும், உடனடியா எப்படி விற்பனை செய்றதுனு எங்களுக்குத் தெரியலை. உடனே, ‘இங்கு காளான் கிடைக்கும்’னு ஒரு போர்டு எழுதித் தோட்டத்து முகப்புல வெச்சோம். உள்ளூர்க்காரங்க வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. எங்க தென்னந்தோப்பு ரோட்டோரத்துல இருக்குறதால, சுருளி அருவிக்குப் போறவங்க சிலபேர் போர்டைப் பார்த்துட்டு காளான் கேட்டு வர ஆரம்பிச்சாங்க. அப்படியே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அடுத்ததா காளான் பண்ணையைக் கொஞ்சம் விரிவுபடுத்தலாம்னு முடிவு பண்ணுனோம். பாண்டியன் கிராம வங்கிக்குப் போய்க் கடன் கேட்டோம். அவங்க வந்து, எங்க பண்ணையை நேர்ல பார்த்துட்டு மூணு லட்சம் ரூபாய் கடன் கொடுத்தாங்க. அதை வெச்சு, கொட்டகைகளை அதிகப்படுத்தினோம். இப்போ மொத்தம் அஞ்சு கொட்டகைகள்ல சிப்பிக்காளான் வளர்த்துட்டுருக்கோம். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

அதுக்கப்புறம் எங்க தோப்புலேயே சின்னதா ஒரு கடை போட்டுட்டோம். கடையில எங்க பண்ணையில உற்பத்தியாகுற தேன், எங்க தேங்காயை மரச்செக்குல ஆட்டி எடுக்குற தேங்காய் எண்ணெய், காளான்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டோம். சிப்பிக்காளான் உற்பத்தியைக் கேள்விப்பட்டுச் சில வியாபாரிகளும் ரெகுலரா வந்து வாங்கிட்டுப் போய் உத்தமபாளையம், கம்பம் பகுதியில விற்பனை செய்றாங்க” என்ற ஜெயக்குமார் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“தினமும் நாங்க 15 பெட்கள் போட்டுக் கொட்டகைக்குள்ள தொங்கவிடுறோம். அது மூலமா, தினமும் 10 கிலோவிலிருந்து 20 கிலோ வரை காளான் கிடைக்குது. ஒரு மாசம் கிடைக்கிற மகசூலைக் கணக்குப் பண்ணுனா... சராசரியா தினமும் 15 கிலோவுக்குக் குறையாமக் கிடைச்சுடும். நாங்க, 150 கிராம் கொண்ட பாக்கெட் 30 ரூபாய்னு (ஒரு கிலோ 200 ரூபாய்) விற்பனை செய்றோம். வியாபாரிகளுக்கும் அதே விலைக்குத்தான் கொடுக்குறோம். அந்த வகையில தினமும் 3,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது.

காளானுக்கு முக்கிய மூலப்பொருளான வைக்கோலுக்கு எங்களுக்குப் பெரிய செலவு கிடையாது. எங்க பகுதியிலயே அதிகமா நெல் விளையுறதால ரொம்பக் குறைவான விலைக்குக் கிடைச்சுடுது. அதில்லாம நாங்க காளான் வளர்ப்புக்குனு வைக்கோல் வாங்குகிறதில்லை. மாடுகளுக்கு வாங்குற வைக்கோல்லதான் காளான் வளர்ப்புக்கு எடுத்துக்குறோம்.

காளான் பண்ணைக்கு வேலைக்கும் ஆள் கிடையாது. நானும் அக்காவும்தான் எல்லா வேலைகளையும் செய்றோம். இருந்தாலும் வைக்கோல், வைக்கோலைச் சுத்தப்படுத்துற மருந்துகள், காளான் வித்து, பாலீத்தீன் கவர் எல்லாத்துக்குமா செலவுத்தொகையோட, ஒருத்தருக்கான தினசரி சம்பளத்தையும் சேர்த்துக் கணக்குப் பண்ணினாலும் தினமும் 1,000 ரூபாய் வரைதான் செலவு ஆகும். அந்தக்கணக்குல பார்த்தா, தினமும் 2,000 ரூபாய் அளவுக்கு லாபமா நிக்குது. ஒரு மாசத்துக்கு 60,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சுடுது” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

தொடர்புக்கு ஜெயக்குமார், செல்போன்: 90434 80892

ஜி.பிரபு - படங்கள்: வீ.சிவக்குமார்

வெப்பநிலை, ஈரப்பத பராமரிப்பு அவசியம்!

கா
ளான் வளர்ப்பு முறை குறித்து ஜெயக்குமார், சொன்ன தகவல்கள் இங்கே...

“சிப்பிக்காளான் வளர்ப்புக்கான கொட்டகையின் நீள, அகலத்தை இட வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் இருபதடிக்குப் பத்தடி அளவில் காளான் வளர்ப்புக்கான கொட்டகைகளை அமைத்திருக்கிறோம். கொட்டகையை முழுக்கத் தென்னங்கீற்றுகளைக் கொண்டுதான் அமைக்க வேண்டும். கொட்டகைக்கு ஒரு கதவு அமைத்துக்கொள்ள வேண்டும். கொட்டகையின் உயரம் 10 முதல் 15 அடி அளவு இருக்க வேண்டும். கொட்டகைக்கு உட்புறம், கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளைத் தொங்கவிடுவதற்காக உறி போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தரைப்பகுதியை சிமென்ட் கொண்டு அமைக்கலாம். அல்லது தார்ப்பாலின் ஷீட், ப்ளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை விரித்துக் கொள்ளலாம். தார்ப்பாலின் ஷீட் விரிப்பதன் மூலம் பெருமளவு செலவைக் குறைக்க முடியும். நாங்கள் அப்படிதான் அமைத்திருக்கிறோம். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...

பிறகு தரைப்பகுதியில் ஓர் அடி உயரத்துக்கு ஆற்று மணலைக் கொட்டிப் பரப்ப வேண்டும். இந்த மணலில் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தி வைப்பதன் மூலம் கொட்டகை குளுமையாகவும், காற்றின் ஈரப்பதம் சரியாகவும் பராமரிக்கப்படும். தரைப்பகுதியில் சிமென்ட் தரை அமைக்காமலோ அல்லது பாலித்தீன் ஷீட் விரிக்காமலோ விட்டுவிட்டால், நாம் ஊற்றும் தண்ணீர் உடனடியாகப் பூமிக்குள் உறிஞ்சப்பட்டுவிடும்.

கொட்டகையின் உட்புறத்தில் பழைய சாக்குகளைத் தொங்கவிட்டு அவற்றின்மீது தண்ணீர் ஊற்றிவந்தால் கொட்டகையில் காளானுக்குத் தேவையான வெப்பநிலையும், காற்றின் ஈரப்பதமும் சரியாக இருக்கும். கொட்டகைக்குள் 25 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலையும், காற்றின் ஈரப்பதம் 85% என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

கொட்டகை தயாரான பிறகு, காளான் உற்பத்தி செய்யும் பெட்களைத் தயாரிக்க ஆரம்பிக்கலாம். காளான் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் வைக்கோல் சுத்தமானதாகப் பூஞ்சணத்தாக்குதல் இல்லாமல், நன்கு உலர்ந்த வைக்கோலாக இருக்க வேண்டும். அதேபோலக் காளான் வித்துகளும் தரமானதாக இருக்க வேண்டும். காளான் வித்துத் தயாரிப்பாளர்களிடம் வித்துகளை வாங்கிக்கொள்ளலாம். 350 கிராம் அளவு பாக்கெட்களாக வித்துகள் கிடைக்கின்றன. ஒரு வித்துப் பாக்கெட் மூலமாக இரண்டு பெட்கள் தயார் செய்யலாம்.

200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் 100 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் நிரப்பி அதில் 250 மில்லி பார்மலின் (ரசாயனம்) திரவத்தை ஊற்ற வேண்டும். அதோடு 13 கிராம் அளவு கார்பெண்டசிம் (ரசாயனம்) 0.5% எனும் மருந்தைச் சேர்த்து நன்கு கலக்கி, அதில் வைக்கோலை 15 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். கார்பெண்டசிம் மருந்து பல்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்பனைக்கு வருகிறது. அவற்றில் ‘பெவாஸ்டின்’ (ரசாயனம்) எனும் பெயரில் கிடைக்கும் மருந்து, காளான் வளர்ப்புக்குச் சிறப்பாக இருக்கிறது. வைக்கோலை இந்த மருந்துகள் கலந்த தண்ணீரில் ஊறவைப்பதால் வைக்கோலில் உள்ள பூஞ்சணங்கள் அழிக்கப்பட்டுவிடும். வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள குறைந்தளவு ரசாயனம்தான் இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. ரசாயனம் பயன்படுத்த விரும்பாதவர்கள் இரும்பு டிரம்மில் வைக்கோலை வேகவைத்து புற்றுநீக்கம் செய்து பயன்படுத்தலாம்.15 மணிநேரம் ஊறிய பிறகு வைக்கோலை எடுத்துத் தண்ணீரை வடித்து உலர்த்த வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

பிறகு 12 அங்குலத்துக்கு 24 அங்குல பாலித்தீன் பையில் கொஞ்சம் காளான் வித்துக்களைத் தூவி அதன்மீது உலர்த்திய வைக்கோலைச் சுருட்டி, இரண்டு அங்குல உயரம் வரை வைக்க வேண்டும். பிறகு அதன் மீது கொஞ்சம் காளான் வித்துக்களைத் தூவி மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைக்க வேண்டும். இதுபோல ஐந்து அல்லது ஆறு அடுக்குகள்வரை வைத்து மேற்புறம் ஒரு நூலைக் கொண்டு முடிச்சுப்போட்டு கட்டிவிட வேண்டும். பிறகு விதைகள் இருக்கும் இடத்தில் பெட்டைச் சுற்றி கூர்மையான மரக்குச்சி மூலம் 12 துளைகள் இட வேண்டும். இதுபோலப் பெட்களைத் தயார் செய்து கொட்டகைக்குள் வரிசையாகத் தொங்க விட வேண்டும். ஒரு உறியில் நான்கு பெட்களைத் தொங்கவிடலாம். ஒரு பெட்டுக்கு சுமார் மூன்று கிலோ அளவு வைக்கோலும், 175 கிராம் வித்தும் தேவைப்படும். கொட்டகைக்குள் சரியான அளவு வெப்பநிலையையும், ஈரப்பதத்தையும் பராமரித்து வந்தால், பதினைந்து நாள்களில் பெட்டின் உள்புறம் முழுவதும் காளான் பூஞ்சண இழைகள் பரவிவிடும்.

பிறகு தினமும் பெட்கள் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும். கொட்டகைக்குள் பெட்களை வைத்த 20-ஆம் நாளுக்கு மேல் காளான் மொட்டுகள் தென்படும். 25-ஆம் நாளுக்கு மேல் முழு வளர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த பத்து நாள்களில் மீண்டும் மொட்டுகள் தோன்றும். ஒரு பெட்டிலிருந்து இரண்டு மாதங்கள்வரை காளான் கிடைக்கும். ஒரு பெட்டிலிருந்து ஒன்றரை கிலோ வரை காளான் கிடைக்கும்.

அறுவடை செய்த காளானின் தண்டுப் பகுதிகளை நீக்கிவிட்டு பாலீத்தீன் கவர்களில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். அறுவடை முடிந்த பெட்களிலிருந்து பாலீத்தீன் கவரை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் வைக்கோலைத் தென்னை மரங்களுக்கு அடியில் குழிதோண்டிப் புதைத்துவிட்டால் அவை மட்கி உரமாகிவிடும்.

விற்பனை வாய்ப்பை  உறுதி செய்ய வேண்டும்!

“சி
ப்பிக்காளானோட ஆயுள்காலம் ஒரு நாள்தான். அதை அறுவடை செஞ்சு ஒரு நாளுக்குள்ள சமைச்சு சாப்பிட்டுடணும். அதனால, அறுவடை செஞ்ச உடனே விற்பனைக்கு அனுப்பிடணும். நாமளே கடையில வெச்சு விற்பனை செய்றதா இருந்தாலும், குளிர்சாதனப்பெட்டியிலதான் வெச்சுருக்கணும். உடனடியா விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்குறதால, விற்பனை வாய்ப்பை உறுதி செஞ்சபிறகுதான் இந்தத் தொழில்ல இறங்கணும்.

ஒருநாள் விற்பனை பண்ண முடியலைன்னாலும் அவ்வளவும் வீணாகிடும். எந்தப்பகுதியில பண்ணை ஆரம்பிக்கிறோமோ அந்தப்பகுதியில ஒரு சர்வே எடுத்துத் தேவையைத் தெரிஞ்சுக்கிட்டு, உற்பத்தியை ஆரம்பிக்கிறது நல்லது. அதேபோல எடுத்த எடுப்பிலேயே பெரிய அளவுல ஆரம்பிக்காம ஒரே ஒரு கொட்டகையை அமைச்சு சின்ன அளவுல ஆரம்பிச்சுக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் விரிவுபடுத்தணும்” என்கிறார், ஜெயக்குமார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு