Published:Updated:

“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!
“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!

இயற்கை

பிரீமியம் ஸ்டோரி

டந்த 10.2.19 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பதவி ஏற்றிருக்கும் முனைவர் என்.குமாரின் பேட்டி வெளியாகியிருந்தது.

“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!

அதில், இயற்கை விவசாயம் குறித்த ஒரு கேள்விக்கு, ‘இயற்கை விவசாயம் என்றதும் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தித்தான் செய்ய வேண்டும் என்று நம் விவசாயிகள் நினைக்கிறார்கள். வீட்டுத்தோட்டத்துக்கு வேண்டுமானால் அது சாத்தியம். அதில் அதிகப்படியான விளைச்சல் பெற முடியாது. மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை. அனைத்துப் பயிர்களையும் நூறு சதவிகித இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியாது. சில பயிர்களை வேண்டுமானால் அப்படி உற்பத்தி செய்யலாம். பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதில் தவறில்லை’ என்று குமார் பதிலளித்திருந்தார்.

துணைவேந்தர் குமாரின் இந்தப் பதில் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து... திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ அந்தோணிசாமி நம்மிடம் சில விஷயங்களைச் சொன்னார்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் முனைவர் குமாருக்கு இயற்கை விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள். அதே நேரத்துல அவர், இயற்கை விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்று சொல்லியிருப்பதை நாங்கள் ஏற்க முடியாது. மனிதருக்கு அடிப்படைத் தேவை உணவு. ஆனா, அது இன்னிக்கு நஞ்சாகிடுச்சு. அதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற அதிகப்படியான ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லியும்தான். இந்த நஞ்சான உணவைச் சாப்பிடுறதால மக்களுக்கு விதவிதமான நோய்கள் வருது. அதனாலதான் இன்னிக்கு மருத்துவ மனைகள்ல இவ்வளவு கூட்டம் நிரம்பி வழியுது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருஷத்துக்கு தண்ணீரில் 5 கோடி டன் ரசாயனம் கொட்டப்படுகிறது. இதில் தண்ணீரில் 110 பி.பி.எம் நஞ்சு கலக்கிறது. ‘ஒவ்வொரு இந்தியனும் நாள் ஒன்றுக்கு 320 பி.பி.எம் அளவு நஞ்சைச் சாப்பிடுறோம்’னு உலகச் சுகாதார அமைப்பு சொல்லுது. 

“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!

விவசாய வருமானத்தை அதிக விளைச்சல் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார், துணைவேந்தர். அந்தப் பார்வையே தவறு. அதிக விளைச்சல்ங்கிறது, நீடித்த நிலைத்த வருமானத்தைக் கொடுக்காது. 1983-ம் வருஷத்துல ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மத்த இடு பொருள்களுக்காக 45,00,000 ரூபாய் அளவுக்குச் செலவு பண்ணிருக்கேன். இன்னிக்கு அப்போ செஞ்சதைவிட அதிகப்பரப்புல விவசாயம் செய்றேன். ஆனா, வருஷத்துக்கு இடுபொருள்களுக்காக 2,00,000 ரூபாய் வரைகூட எனக்குச் செலவாகுறதில்லை. ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விவசாயத்துல தோத்துப் போனவன் நான். அதனால, கடனாளியாகவும் நோயாளியாகவும் மாறிய விவசாயிகள்தான் அதிகம். இன்னிக்கு இயற்கை விவசாயத்தாலதான் நான் தலைநிமிர்ந்து நிக்கிறேன்.

என்னோட நிலத்தின் மண் வளம், தேசிய குறியீட்டு அளவுக்கு மேல வளமா இருக்கு. அதுக்குக் காரணம் இயற்கை இடுபொருள்கள்தான். என்னோட கரும்புத் தோட்டத்தில் அங்கக கார்பன் 1.35 சதவிகிதம் இருக்கு. வேளாண்மைத் துறையால் அளிக்கப்பட்ட ‘ஆர்கானிக் சான்றிதழ்’ல இதைக் குறிச்சுக் கொடுத்துருக்காங்க. இது என் தோட்டத்தோட மண் அளவு. ரசாயன விவசாயம் செய்யப்படும் மண்ணின் அளவை துணைவேந்தர் சொல்ல முடியுமா? 

கியூபா நாட்டைச் சேர்ந்த பிடல் காஸ்ட்ரோவின் நேர்முக உதவியாளர் கேதரின் மருவி என்னோட தோட்டத்துக்கு வந்து ஆய்வு செஞ்சுருக்கார். இஸ்ரேல், மொரீஷியஸ்னு பல நாடுகள்ல இருந்து மூத்த விஞ்ஞானிகள் ஆய்வுக்காக என் தோட்டத்துக்கு வந்துருக்காங்க. காந்திகிராமம் பல்கலைக்கழகத்துல இருந்து முனைவர்.ரெங்கநாதன் தலைமையிலான குழுவினர் என்னோட தோட்டத்துக்கு வந்து பாரம்பர்ய நெல், காய்கறிகள், கரும்பு, வாழை, மா, எலுமிச்சைனு பயிர்களை ஆய்வு செஞ்சுருக்காங்க.

கரும்பை ஒரே முறை விதைச்சு இயற்கை முறையில் பராமரிச்சு 27 வருஷமா மறுதாம்பு மூலமா மகசூல் எடுத்துட்டுருக்கேன். ஏக்கருக்கு 17 டன் மகசூல்ல ஆரம்பிச்சு இப்போ 67 டன் வரை மகசூல் உயர்ந்திருக்கு. 60 டன் கரும்பு மூலம் 2,00,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. 60 டன் கரும்பை வெல்லமா மதிப்புக்கூட்டினால் 5,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்தளவு வருமானம் ரசாயன விவசாயத்தில் கிடைக்குமா” என்று கேட்ட அந்தோணிசாமி நிறைவாக,

“எல்லா விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறினாலே இந்தியா உலகளவுல பொருளாதாரத்துல பெரிய நாடாகிகிடும்னு நான் நினைக்கிறேன். 30 வருஷமா ரசாயன விவசாயம் செஞ்சு தோல்வியடைஞ்ச எனக்கு ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைத் துணைவேந்தர் அடையாளம் காட்டணும். இல்லாட்டி அவர் தன்னோட பேச்சை வாபஸ் வாங்கணும். துணைவேந்தர், ஒரு குழு அமைச்சு ரசாயன விவசாயத்துல ஜெயித்தவர்களை அடையாளம் காட்டணும். அந்தக்குழுவுக்கான முழுச்செலவையும் நான் ஏத்துக்குறேன். அப்படி ஜெயிச்சவங்களை அடையாளம் காட்டினா துணைவேந்தருக்கு 2,00,000 ரூபாய் பரிசு தர்றேன்” என்று சவால் விட்டார்.

தொடர்புக்கு, ‘புளியங்குடி’ அந்தோணிசாமி, செல்போன்: 99429 79141.


இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு