Published:Updated:

விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!
பிரீமியம் ஸ்டோரி
News
விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

நீங்கள் கேட்டவைஓவியம்: வேலு

‘‘செம்மரம் வளர்க்க விரும்புகிறோம். ஆனால், எங்கள் நண்பர்கள் செம்மரம் வளர்த்தால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து விவரமாகச் சொல்லவும்?’’

எம்.சிவா, திருத்தணி. 

விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி பதில் சொல்கிறார்.

‘‘கடந்த மாதம் வரை செம்மரம் சாகுபடி செய்த விவசாயிகள் வருத்தமாகத்தான் இருந்தார்கள். காரணம், செம்மரங்கள் அரிய வகைத் தாவரமாக ஐ.யூ.சி.என் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்திருந்தது. செம்மரங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகளுக்குச் செம்மரம் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உலகளாவிய மரப் பாதுகாப்பு அமைப்புகளும் தடை கோரியிருந்தன. இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டிருந்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதியன்று மத்திய அரசின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேடு (DGFT) அறிவிக்கை எண். 56/2105-2020 தேதி 18.2.2019-இன்படி. தனியார் பட்டா நிலங்களில் விளைவிக்கப்படும் செம்மரங்களை மாநில அரசின் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சட்டப்பூர்வமான அனுமதி பெற்ற பின்பு, சர்ட்டிபிகேட் ஆப் ஆர்ஜின் இணைத்து ஏற்றுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

செம்மரங்களின் தடிமரம், வேர்பகுதி, மரத்துகள், மரத்துண்டுகள், மரத்திலிருந்து எடுக்கப்பட்ட வண்ணக்கலவைகள், பொம்மை, கைவினைப்பொருள்கள், இசைக்கருவிகள், இசைக்கருவிகளின் பாகங்கள். நாற்காலி, நாற்காலியின் பாகங்கள் என 18 வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு, செம்மரப் பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. இந்த ஏற்றுமதி அனுமதியைப் பெற எங்கள் நிறுவனத்தின் மூலம் பலவிதமான முயற்சிகளைச் செய்தோம். வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினரும், எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். பசுமை விகடன் இதழிலும் செம்மரம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கட்டுரைகள் வெளிவந்தன. 

விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கலாம். எனவே, நீங்கள் தாராளமாகச் செம்மரத்தை வளர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்கு முன்பு அடிப்படையான சிலவற்றைச் செய்ய வேண்டும். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு வைக்க ‘சொத்துடைமைக் குறி’ (Property Mark) தடிமரங்கள் மீது குறியீடாக (வெட்டிய 15 நாள்களுக்குள்) அடையாளப்படுத்த வேண்டும்.

சொத்துடைமைக் குறி பதிக்கப்பெற்ற தடி மரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக 1968-ஆம் ஆண்டுத் தமிழ்நாடு தடி மரங்கள் (Timber Transit Rules, 1965) எடுத்துச் செல்லும் விதிகளின்படி பார்ம்-2 (Farm II) மூலம் மாவட்ட வன அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து, முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட வன அலுவலரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பிறகே, தடி மரங்கள் எடுத்துச்செல்ல முடியும். செம்மரத்திற்கு வனத்துறை தலைவரிடமிருந்து சர்ட்டிபிக்கேட் ஆஃப் ஆர்ஜின் (Certificate Of Orgin) அதாவது செம்மரம் உற்பத்திச் சான்றிதழ், தமிழகத்தின் பூர்வீக மரம் செம்மரம்தான் என்கிற சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தபின்பு விவசாயிகளின் தோட்டத்திலிருந்து கம்பெனிகளுக்கு வெட்டி எடுத்துச் செல்லப்படும் தடிமரங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது.

ஆகவே ஜி.எஸ்.டி வரியை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அரசு, ஏலத்தின் மூலம் ஒரு டன் செம்மரம் 1 கோடி ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்தது. சர்வதேச அளவில் நிலவும் தேவைக்குத் தக்கபடி, செம்மரத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். செம்மரத்தில் நல்ல லாபம் இருப்பதால், சில நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் செம்மரச் சாகுபடி செய்து கொடுக்கிறோம் என்று களமிறங்கியுள்ளன. எனவே, விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94433 84746.


‘‘தேனீ வளர்ப்புக்கு அரசு அமைப்புகளில் எங்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது?’’

சி.குணசீலன், பெருந்துறை.


‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் 6-ஆம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது. இதற்குக் கட்டணம் உண்டு. இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பு பற்றிய அடிப்படையான விஷயங்களுடன் ‘பெட்டிகள் எங்கு கிடைக்கும், விவசாய நிலங்களில் தேன் பெட்டி வைத்து விளைச்சலைப் பெருக்கும் முறைகள், தேனை எப்படி விற்பனை செய்வது’ போன்ற தகவல்களும் கிடைக்கும்.’’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி: 0422 6611214.


புறா பாண்டி

குட்டிப்போடும் மீன்கள்தான் நல்லது!

டந்த இதழில், வண்ண மீன் வளர்ப்பு குறித்து டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர் கி.ராவணேஸ்வரன் பதில் சொல்லியிருந்தார். அதுகுறித்துக் கூடுதல் விவரங்களை நம்மிடம் தெரிவித்தார். ‘‘வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து, சில கூடுதல் தகவல்களைக் கூற விரும்புகிறேன். என்னுடைய அனுபவத்தில் சிறிய அளவில், அதாவது ஒரு சென்ட் நிலத்தில், குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதலீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பைத் தொடங்கலாம். முதல் மூன்று மாதங்களுக்கு வருமானம் இருக்காது. அந்தச் சமயத்தில் மீன்களின் வளர்ச்சிப் பருவம். நான்காவது மாதம் முதல் வருமானம் கிடைக்கத் தொடங்கும். இந்த முதலீட்டில் அதிகபட்சம் மாதம் 5,000 ரூபாய் (கடந்த இதழில்  5 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது) வரை வருமானம் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள கொளத்தூர் மற்றும் தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர் பகுதிகளில் வண்ண மீன்களை வளர்ப்பவர்கள் உள்ளனர்.

நேரடியாக இவர்களைச் சந்தித்துப் பேசுவது சிரமம். ஆனால், பல்கலைக்கழகத்தில் பயிற்சி எடுக்கும்போது, பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த வண்ண மீன் பண்ணைகளுக்கும் அழைத்துச் செல்வோம். அப்போது, பல நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியும். வண்ண மீன்கள் வளர்ப்பைப் பொறுத்தவரை, குட்டிப்போடும் இனங்களைத் தேர்வு செய்து வளர்ப்பதுதான் லாபகரமானதாக இருக்கும்.’’

விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.  உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.