Published:Updated:

தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பம்

‘தக்காளி’, விவசாயிகளின் செல்லப்பயிர். பல நேரங்களில் வாழவைக்கும். சில நேரங்களில் விலை கிடைக்காமல் வீழவைக்கும். ஆனாலும், தக்காளிச் சாகுபடியை விடுவதில்லை, விவசாயிகள். ‘நாங்களும், நாற்று நட்டோம், அறுவடை செய்தோம். ஆனால், லாபம் கிடைக்கவில்லை’ என விரக்தியில் பேசும் விவசாயிகள் அதிகம். ஆனால், ‘தக்காளிச் சாகுபடி செய்தோம்... நல்ல லாபம் பார்த்தோம்’ என ஒவ்வொரு விவசாயியும் சொல்ல வேண்டும். அதற்கு முறையான தொழில்நுட்பத்தையும் பருவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தக்காளிச் சாகுபடி விவசாயிகளுக்காக... இயற்கை முறையில் அறிவியல்பூர்வமாகத் தக்காளிச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கிறார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன். 

தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

“சரியான நேரத்தில் சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யும் விவசாயிகள் எந்தப் பயிரிலும் தோற்பதில்லை. தக்காளியிலும் முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். தக்காளியில் நாட்டு ரகம் மற்றும் கலப்பின ரகங்கள் என இரண்டுமே உள்ளன.

கோயம்புத்தூர்-3(கோ-3), பெரியகுளம்-1(பி.கே.எம்-1) ஆகிய இரண்டு ரகங்களும் நாட்டு ரகங்கள். கோயம்புத்தூர் கலப்பின ரகம்-1, கோயம்புத்தூர் கலப்பின ரகம்-2, கோயம்புத்தூர் கலப்பின ரகம்-3 ஆகியவை கலப்பின ரகங்கள். இவற்றில், கோயம்புத்தூர் கலப்பின ரகம்-2 மற்றும் கோயம்புத்தூர் கலப்பின ரகம்-3 ஆகியவை இலைச் சுருட்டுப் புழுவுக்கான எதிர்ப்பு சக்தி மிக்கவை.

நாட்டு ரகத்தில் கோயம்புத்தூர்-3 என்பதுதான் ‘மருதம்’ என்ற ரகத் தக்காளி. பெரியகுளம்-1 ரகத் தக்காளியின் மேற்புறம் பச்சை நிறத்தில் கோடுகளுடன் காணப்படும். நாட்டு ரகத்தில் ஒரு ஏக்கருக்கு 300 முதல் 350 கிராம் அளவு விதை தேவைப்படும். கலப்பின ரகத்தில் 100 முதல் 150 கிராம் அளவு விதை போதுமானது.

விதை நேர்த்தி அவசியம்

விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம். ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு... டிரைக்கோடெர்மா விரிடியை விதைகளோடு சேர்த்து, நன்கு கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடிக்குப் பதிலாக, 10 கிராம் அளவு சூடோமோனஸையும் பயன்படுத்தலாம்.

இதை 24 மணிநேரம் வைத்திருந்தபிறகு விதைகளைச் சோற்று வடிகஞ்சியில் நனைத்து ஈரப்படுத்தி, அவற்றோடு 100 கிராம் அசோஸ்பைரில்லம் (ஒரு கிலோ விதைக்கு) சேர்த்துப் புரட்ட வேண்டும். நன்கு புரட்டியபிறகு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். வடிகஞ்சியில் நனைத்தால்தான் அசோஸ்பைரில்லம் விதைகளோடு நன்றாக ஒட்டும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

சில நிலங்களில், மண்ணில் பரவியிருக்கும் ‘பித்தியம் அபானிடெர்மேட்டம்’ (Pythium Aphanidermatum) என்ற பூஞ்சணத்தால் நாற்று அழுகல் நோய் ஏற்படும். இந்நோய் தாக்கிய நாற்றுகளில், தரையை ஒட்டிய தண்டுப்பகுதியை (கழுத்துப் பகுதி) விரல்களால் நசுக்கிவிட்டதுபோல் காணப்படும். இந்தப் பிரச்னையுள்ள விவசாயிகள், அசோஸ்பைரில்லம் கலப்பதற்குப் பதிலாகக் காகிதப் பூ இலைக் கரைசலைப் பயன்படுத்தலாம். காகிதப்பூ இலைகளிலிருந்து 25 மில்லி சாறு எடுத்து, அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையில் விதையை ஆறு மணிநேரம் ஊற வைத்து விதைத்தால், நாற்று அழுகல் நோயிலிருந்து நாற்றுகளைக் காப்பாற்றலாம்.

நாற்றங்கால்... கவனம்

மேட்டுப்பாத்தி முறை மற்றும் குழித்தட்டு முறையென இரண்டு முறைகளில் நாற்றுகளைத் தயாரிக்கலாம். மேட்டுப்பாத்தி முறையில் நாற்றுத் தயாரிப்பவர்கள் நாற்றங்கால் அமைக்கப்படும் இடத்தில் உள்ள மண்ணை முழுவதும் அகற்றிவிட்டுச் செம்மண், மணல், குப்பை எரு மூன்றும் கலந்த கலவையால்... ஒரு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளம், அரை அடி உயரம் எனப் படுக்கை அமைக்க வேண்டும். படுக்கையில் பீங்கான், ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மண் பொலபொலப்பாக இருக்க வேண்டும். படுக்கையில் கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 200 கிராம் சூடோமோனஸ் அல்லது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைத் தூவிவிட வேண்டும். சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்றவை எதிர் பூஞ்சணங்கள். இவை வளர்ந்து மண்ணில் உள்ள பித்தியம் பூஞ்சணத்தை வளரவிடாமல் தடுத்து விடுகின்றன.

இப்படி அமைக்கப்பட்ட படுக்கையில் நாற்றுகள் வளரும்போது பெரும்பாலும் தண்டு கழுத்து அழுகல் நோய் வருவதில்லை.

மேட்டுப்பாத்தியின் குறுக்கு வசத்தில் ஆள்காட்டி விரலால் ஒரு கோடு போட வேண்டும். அந்தக் கோட்டுக்குள் விதைகளைத் தூவி லேசாக மண்ணால் மூடிவிட வேண்டும். ஒரு கோட்டுக்கும் அடுத்தக் கோட்டுக்கும் 10 சென்டிமீட்டர் இடைவெளி இருந்தால் போதுமானது. விதையைத் தூவி மண்ணை மூடியபிறகு, பாத்தி முழுக்க வைக்கோல் கொண்டு மூடிவிட வேண்டும். அதன் பிறகு பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த ஆறு முதல் ஏழு நாள்களில் விதை முளைக்கத் தொடங்கிவிடும். முளைத்தபிறகு வைக்கோலை எடுத்துவிட வேண்டும். நாற்று முளைத்த 6 மற்றும் 18-ஆம் நாள்களில் பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். அப்போதுதான் நாற்றுகள் வாளிப்பாக வளரும். 25-ஆம் நாள் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம்.

குழித்தட்டில் நாற்று உற்பத்தி செய்பவர்கள், குழித்தட்டின் குழிகளைத் தென்னை நார்க்கழிவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும். அந்தத் தென்னை நார்க்கழிவுகளில் ஒரு கிலோவுக்கு 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்தக் குழிகளில் விதைகளை நட்டு வளர்க்க வேண்டும். 25-ஆம் நாள் நாற்று தயாராகிவிடும்.

இடைவெளி முக்கியம்

தக்காளிச் சாகுபடி செய்ய நீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வண்டல் மண் கலந்த செம்மண் நிலத்தில் சிறப்பான மகசூல் கிடைக்கும். சாகுபடி நிலத்தின் அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 அலகுவரை இருக்கலாம். நடவு செய்வதற்கு முன்பாகப் பசுந்தாள் உர விதைகளை விதைத்து, பூ எடுத்தபிறகு மடக்கி உழ வேண்டும். அதன்பிறகு உழவு செய்து தயார் செய்த நிலத்தில் நாற்றுகளை நடவு செய்யலாம். தக்காளி நடவு செய்ய மே-ஜூன் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள்வரை ஏற்றவை. நாட்டு ரகமாக இருந்தால் வரிசைக்கு வரிசை 45 சென்டிமீட்டர், செடிக்குச்செடி 30 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். கலப்பின ரகமாக இருந்தால் வரிசைக்கு வரிசை 60 சென்டிமீட்டர், செடிக்குச் செடி 45 சென்டி மீட்டர் இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

காய்ப்பு முடியும் வரை வளர்ச்சி ஊக்கிகள்

நிலங்களைக் கோடை உழவு செய்து வைத்தால், களை மேலாண்மை சுலபமாக இருக்கும். கோடை உழவில்... மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்கள், முட்டைகள் போன்றவை அழிந்துவிடும். எதிர்காலத்தில் களையாக வளரக்கூடிய சில விதைகளும் வெயிலில் காய்ந்து கருகிவிடும். செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பஞ்சகவ்யா + அமுதக்கரைசல் மற்றும் மீன் அமினோ அமிலம் + அரப்பு மோர் கரைசல் என்ற இரண்டு வகையான கரைசல்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு வகையான கரைசல்களையும் சுழற்சி முறையில் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளித்து வர வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் ஊற்றிக் கலக்கிக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் ஊற்றிக் கலக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அமுதக்கரைசல் கலவையை எடுத்துப் பஞ்சகவ்யா கலவையில் ஊற்றிக் கலக்கி வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

அதேபோல ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்துகொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி அரப்பு மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அரப்பு மோர் கரைசல் கலவையை மீன் அமினோ அமிலக் கரைசலுடன் கலந்துகொள்ள வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 

தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

தக்காளிச் செடிகளில் 28-ஆம் நாள் முதல் பூப்பூக்கும். 45-ஆம் நாளில், முழுமையாகப் பூ எடுத்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் இரண்டு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குக் காய்ப்பு இருக்கும்.

கலப்பின ரகங்களுக்கு அதிக பராமரிப்பு

கலப்பின ரகங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கலப்பின ரகச் செடிகள், கொடிபோலப் படரக்கூடியவை. அதனால், இச்செடிகளுக்கு அருகே ஒரு மீட்டர் உயரத்துக்குக் கம்பிகளை ஊன்றி வைக்க வேண்டும். கொடிகளில் நூல் கட்டி கம்பிகளில் ஏற்றிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பழங்கள் மண்ணில் பட்டு அடிபடாமல் அறுவடை செய்யலாம்.

தண்ணீர் தேங்கக் கூடாது

வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் எட்டு முதல் பத்து நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு, மண் ஈரமாகும் அளவுக்கு அளவாகப் பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப்பாசனம் செய்பவர்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை உயிர் உரங்களைக் கலந்து கொடுத்தால் நல்லது.

உர மேலாண்மை

நிலத்தை உழவு செய்வதற்கு முன்பாக மட்கிய மாட்டுச் சாணத்தை ஒரு ஹெக்டேருக்கு 25 டன் என்ற அளவில் போட வேண்டும். அடியுரமாக 750 கிலோ மண்புழு உரத்தைப் போட வேண்டும். நடவுக்கு முன்பாக 250 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூவிவிட வேண்டும். நடவு செய்த 30-ஆம் நாள் 750 கிலோ மண்புழு உரத்தையும், 45-ஆம் நாள் 500 கிலோ மண்புழு உரத்தையும் இட வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் பேராசிரியர் செந்தூர்குமரன்.

பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை போன்றவை அடுத்த இதழில்...

ஆர்.குமரேசன்