Published:Updated:

கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

40 சென்ட்.... எடுத்த லாபம் ரூ. 14,825... எதிர்பார்க்கும் லாபம் ரூ. 25,000மகசூல்

மிழகத்தில் நஞ்சில்லா உணவுகுறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்... பெரும்பாலானோர் இயற்கையில் விளைந்த காய்கறிகளைத் தேடிப்பிடித்து வாங்கத் தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம்... விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தும் விவசாயமே வேண்டாமென ஒதுங்கியிருந்த பலரும் நஞ்சில்லா உணவு உற்பத்திக்காக இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி.

கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

செய்யூர் தாலூகா, விராலூர் கிராமத்தில், நிலக்கடலை, காய்கறிகள், மிளகாய் எனச் சாகுபடி செய்து வருகிறார், பாலாஜி. ஒரு காலை வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாலாஜியைச் சந்தித்தோம்.

“தாத்தா, பாட்டி எல்லாம் விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தாங்க. அப்பா பிசினஸுக்கு வந்துட்டதால முழுசா விவசாயத்துல ஈடுபட முடியலை. அப்பப்போ ஏதாவது பயிர் வைக்கிறதோடு சரி. நானும் காலேஜ் படிப்பை முடிச்சுட்டு பிசினஸுக்கு வந்துட்டேன். என்னோட உறவினர் ஒருத்தர் புற்றுநோய் வந்து ஹாஸ்பிட்டல்ல இருந்தார். அவரைப் பார்த்துட்டு வர்றதுக்காக ஹாஸ்பிட்டல் போனப்போ வயசு வித்தியாசம் இல்லாம நிறைய பேர் புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்குறதைப் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டது. அதே சிந்தனையில ஒரு டாக்டர்கிட்ட பேசிட்டுருக்கும்போது, ‘முன்னாடியெல்லாம் புகையிலைப்பழக்கம் உள்ளவங்கதான் புற்றுநோய் வந்து சிகிச்சைக்கு வருவாங்க. இப்போ சாப்பாட்டுப் பழக்கமெல்லாம் மாறிப்போய்ட்டதால, ஏராளமான நோயாளிகள் வர்றாங்க. ரசாயனம் கலந்த உணவுகளும் புற்றுநோய்க்கு ஒரு காரணமா இருக்கு. இயற்கை உணவுகளைச் சாப்பிட்டா, அந்தப் பிரச்னை இருக்காது’னு சொன்னார். அதைக் கேட்டதுக்கப்புறம் நாமளும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைஞ்ச காய்கறிகளைத்தானே சாப்பிடுறோம். நமக்கும் இந்த மாதிரி ஏதாவது வியாதி வந்துட்டா என்ன பண்றதுனு யோசிச்சு... நம்ம தேவைக்காவது இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவு செஞ்சேன். அப்புறம் அப்பாகிட்ட ‘இயற்கை விவசாயம் செய்யபோறேன்’னு சொல்லி அப்பாகிட்ட இருந்த விவசாயப் பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன்” என்று, தான் விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன பாலாஜி தொடர்ந்தார்.

“எங்களுக்குக் கிணற்றுப் பாசனத்தோடு 12 ஏக்கர் நிலம் இருக்கு. முன்னோடி இயற்கை விவசாயிகள் ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘மதுராந்தகம்’ சுப்பு ரெண்டு பேரும்தான் எனக்கு இயற்கை விவசாயம் பத்திச் சொல்லிக் கொடுக்குறாங்க. ‘பசுமை விகடன்’ புத்தகமும் எனக்கு உதவியா இருக்கு. இப்போ 6 ஏக்கர் நிலத்தை நெல் சாகுபடிக்காக ஒதுக்கியிருக்கேன். மழை கிடைச்சுத் தண்ணீர் நிறைய இருந்தா நெல் விதைப்பேன். இப்போ மழை இல்லாததால நெல் விதைக்கலை. இருக்குற தண்ணீரை வெச்சு, மீதி 6 ஏக்கர் நிலத்துல கத்திரிக்காய், குண்டு மிளகாய், குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, வாழை, கீரைகள், நிலக்கடலை, வெண்டை, முருங்கைனு சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கேன். இயற்கை விவசாயத்துல கலப்பு பயிர் சாகுபடி செஞ்சாத்தான் மண் வளம் குறையாம இருக்கும்னு சொன்னாங்க. அதனாலதான் பல பயிர்களைக் கலந்து சாகுபடி செஞ்சுட்டுருக்கேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

ஆரம்பத்துல எங்க தோட்டத்துல வேலை செய்றவங்களே, இயற்கை விவசாயத்தை ஏத்துக்கலை. அவங்ககிட்ட நான் சொல்றதைத்தான் செய்யணும்னு சொல்லிட்டேன். ரசாயன உரங்களை ஓரங்கட்டிட்டு பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல்னுதான் தயாரிச்சுப் பயன்படுத்திக்கிட்டுருக்கேன். 50 சென்ட் நிலத்துல குண்டு மிளகாய், 15 சென்ட் நிலத்துல குடை மிளகாய், 5 சென்ட் நிலத்துல பஜ்ஜி மிளகாய், 25 சென்ட் நிலத்துல தக்காளி, 10 சென்ட் நிலத்துல கொத்தமல்லி, 4 சென்ட் நிலத்துல வாழை, 50 சென்ட் நிலத்துல எள்னு பல பயிர்களைச் சாகுபடி செஞ்சுருக்கேன். இந்தப் பயிர்களுக்கு இடையில ஊடுபயிரா, கரும்பு, சாமந்தி, காராமணி, அரைக்கீரை, தண்டுக்கீரை, தர்பூசணினு சாகுபடி செஞ்சுருக்கேன். மூணேகால் ஏக்கர் நிலத்துல கடலை போட்டிருக்கேன். நிலத்தைச் சுத்தி தேக்கு மரங்கள் இருக்கு.

எல்லாப்பயிர்களுக்கும் வாரம் ஒரு தடவை பாசனம் செய்றப்போ, தண்ணீர்ல ஜீவாமிர்தத்தைக் கலந்து விட்டுடுவேன். தேவைப்படுறப்போ, உயிர் உரங்களையும் பயன்படுத்துறேன். பூச்சிகள் தாக்குனா வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படுத்துறேன். சாமந்திப்பூக்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுருக்குறதால, பிரதானப்பயிர்கள்ல பூச்சித்தாக்குதல் குறைவாத்தான் இருக்கு. நிறையப் பயிர்களைக் கலந்து சாகுபடி செய்றதுனாலயும், நோய், பூச்சித்தாக்குதல் குறையுது. அதில்லாம தொடர் வருமானமும் கிடைக்குது.

நர்சரிகள்ல காய்கறி நாத்துகளை உற்பத்தி செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்துவாங்கனு யோசிச்சு, நானே நாற்று உற்பத்தி செஞ்சு நடவு பண்ணுனேன். வேர் அழுகல் நோய் வராமல் இருக்கக் காய்கறிச்செடிகளோட தூர்ல வேப்பம்பிண்ணாக்கு வைக்கிறேன். கடலையை ஆட்டி எண்ணெய் எடுத்துதான் விற்பனை செய்றேன். காய்கறி, கீரைகளை நேரடியா இயற்கை அங்காடிகள்ல கொடுத்துடுறேன்” என்ற பாலாஜி வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

“குடமிளகாய்ல ஆறு மாசம் பறிப்பு இருக்கும். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை காய்ப் பறிச்சுட்டுருக்கேன். இதுவரை 15 பறிப்பு மூலமா 45 கிலோ குடமிளகாய் கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 1,800 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இன்னும் 75 பறிப்பு மூலமா 225 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். அதையெல்லாம் ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா 9,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

கலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்!

பஜ்ஜி மிளகாய்லயும் 6 மாசம் பறிப்பு இருக்கும். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை காய்ப் பறிச்சுட்டுருக்கேன். இதுவரை 15 பறிப்பு மூலமா 45 கிலோ மிளகாய் கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 45 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 2,025 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இன்னும் 75 பறிப்பு மூலமா 225 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். அதையெல்லாம் ஒரு கிலோ 45 ரூபாய்னு விற்பனை செஞ்சா 10,125 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். தக்காளியில் மூணு மாசம் பறிப்பு இருக்கும். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை காய்ப் பறிச்சுட்டுருக்கேன். இதுவரை 20 பறிப்பு மூலமா 300 கிலோ தக்காளி கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 9,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இன்னும் 25 பறிப்பு மூலமா 375 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். அதையெல்லாம் ஒரு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சா 11,250 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

ஊடுபயிராகப் போட்டுருக்குற கொத்தமல்லி, அரைக்கீரை, வாழைப்பழம், சாமந்தி எல்லாத்துலயும் சேர்த்து, இதுவரை 5,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுருக்கு. மொத்தமா 40 சென்ட் நிலத்துலயும் சேர்த்து இதுவரை, 17,825 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. விதைப்பிலிருந்து அறுவடை வரை இதுவரைக்கும் 3,000 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, இப்போதைக்கு 14,825 ரூபாய் லாபமாகக் கிடைச்சுருக்கு. இன்னும் 30,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுல 5,000 ரூபாய் வரை செலவானாக்கூட மீதி 25,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்தமாகப் பார்த்தா 40 சென்ட் நிலத்துல ஆறு மாசத்துல 40,000 ரூபாய் லாபமா எடுத்துடுவேன்” என்ற பாலாஜி நிறைவாக, “மூணே கால் ஏக்கர்ல போட்டிருக்குற நிலக்கடலை இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அறுவடைக்கு வந்துடும். அதுல எப்படியும் 90 மூட்டை (40 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதைச் செக்குல கொடுத்து ஆட்டுனா, 1,500 லிட்டர் அளவுக்கு எண்ணெய் கிடைக்கும். அதை ஒரு லிட்டர் 140 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாலாஜி,     செல்போன்: 80983 29959..

துரை.நாகராஜன் - படங்கள்: பெ.ராக்கேஷ்