Published:Updated:

கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

மகசூல்படங்கள்: அ.குரூஸ்தனம்

“பத்து வருஷமா என் தோட்டத்துல இருந்து ஒரு இலைகூட வெளியில போறதில்லை. வெளியில இருந்து எந்த இடுபொருளையுமம் உள்ளே கொண்டு வர்றது இல்லை. விளைபொருளை மட்டும்தான் இங்க இருந்து விற்பனைக்கு வெளியே கொண்டுபோவோம்” என்று சிலாகித்துச் சொல்கிறார், புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவபூங்குன்றன்.

கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

அந்தப்பகுதியில், வாத்தியார் தோட்டம் என்று கேட்டால் சிவபூங்குன்றனின் தோட்டத்துக்கு வழிகாட்டுகிறார்கள் அந்தப் பகுதியினர். தென்னை, மா, வாழை, சப்போட்டா என்று மரங்கள் சூழ்ந்திருக்க... விதவிதமான பறவைகளின் சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“மொத்தமா எட்டரை ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ஆறு ஏக்கர் நிலம், பக்கத்து கிராமத்துல இருக்கு. அதுவும் பூர்வீக நிலம்தான். தாத்தா, அப்பா, இப்போ நான்னு மூணு தலைமுறையா விவசாயம் செய்றோம். அதே மாதிரி எங்க தாத்தாவுல இருந்து எல்லோருமே எங்க குடும்பத்துல வாத்தியார்கள்தான். நாங்க ஆரம்பத்துல இருந்தே ரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்துனதில்லை. தாத்தா காலத்துல நெல், மணிலா, பருத்தினு பயிர் செஞ்சார். அப்பா விவசாயம் பார்த்தப்போ, பருத்தியைக் குறைச்சுக்கிட்டு நெல்லை அதிகமாக்கினார். நான் ஆறு ஏக்கரை நெல்லுக்கு ஒதுக்கிட்டேன். இந்த முறை நெல் அறுவடை முடிஞ்சிருச்சு. இரண்டரை ஏக்கர்ல இருந்த தென்னைக்கு நடுவுல கலப்புப் பயிர் விவசாயம் செய்யலாம்னு 2007-ஆம் வருஷம் ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ இதழ் வெளியானது. ஆரம்பத்துல இருந்து பசுமை விகடன் புத்தகத்தைப் படிச்சுட்டுருக்கேன். இதுவரை வந்திருக்குற எல்லாப் புத்தகங்களையும் சேகரிச்சு வெச்சுருக்கேன். கலப்புப்பயிர்ச் சாகுபடி பத்தி நிறையத் தகவல்களைப் பசுமை விகடன் மூலமாகத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன சிவபூங்குன்றன், தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

“உம்பளச்சேரி மாடு ஒன்றை வாங்கித்தான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். அந்த மாடு இப்போ எட்டாவது முறையா கன்னு போட்டிருக்குது. இப்போ என்கிட்ட மூணு மாடுகளும், ரெண்டு கன்னுக்குட்டிகளும் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையே சப்போட்டா, மா, வாழைனு நடவு செஞ்சுருக்கேன். ஊடுபயிரா, கீரை, கிழங்குனு பல பயிர்களைப் சாகுபடி செய்வேன். தென்னந்தோப்புக்கு, வருஷத்துக்கு ரெண்டு தடவை தொழுவுரம் கொடுப்பேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் பாசனத் தண்ணீரோடு கலந்து கொடுக்குறேன். தேவைப்படுறப்போ மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், கொம்பு சாண உரம்னு பயன்படுத்துறேன். என் தோட்டத்துல இருக்குற மரங்கள் பசுமையா இருக்குறதுக்கு இயற்கை இடுபொருள்கள்தான் காரணம்.

போர்வெல்ல எப்பவும் தண்ணீர் கிடைக்கும். அதனால, பாசனத்துக்குப் பஞ்சமில்லை. போர்வெல் தண்ணீரோடு மட்கிய சாணத்தைக் கலந்து பாசனம் பண்றேன். தானே புயல் சமயத்துல நிறைய தென்னை மரங்களும், மா மரங்களும் சாய்ஞ்சிடுச்சு. சாய்ஞ்சுபோன எல்லா மரங்களையும் நிலத்துலேயே புதைச்சுட்டேன். அந்தப் பாதிப்புல இருந்து வெளியில வர்றதுக்கு ஒன்றரை வருஷம் ஆச்சு. அந்தச் சமயத்துலதான், வாழை, சப்போட்டா மரங்களை நடவு செஞ்சேன். வருஷம் இரண்டுமுறை தென்னைக்கு இடையில இருக்குற பகுதிகள்ல பல தானியங்களை விதைச்சு மடக்கி உழுதுடுவேன். தோட்டத்தைச் சுத்தி மழைநீரைச் சேமிக்க 2 அடி ஆழத்துல கால்வாய் எடுத்துருக்கேன். மழைக்காலங்கள்ல இந்தக் குழியில சேகரமாகுற தண்ணீரை போர்வெல்லுக்குப் பக்கத்துல இருக்குற குழிகுள்ள குழாய் மூலமாகக் கொண்டு போய் விட்டுடுவேன்.

கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

தானே புயலுக்கு அப்புறமா தோட்டத்தைச் சுத்தி மூங்கில் வேலி அமைச்சிருக்கேன். 6 மாசத்துக்கு ஒருமுறை இங்கயிருக்குற மரங்களைக் கவாத்து செய்வேன். இமாம்பசந்த், பங்கனபள்ளி, மல்லிகா, செந்தூரானு ஒவ்வொரு வகைக்கும் 40 மரங்கள் வீதம் 120 மா மரங்கள் இருக்கு. 30 சப்போட்டா, 100 தென்னை மரங்கள், 50 வாழை மரங்கள் இருக்கு. பலா, எலுமிச்சை, சாத்துக்குடி மரங்கள்ல ஒவ்வொண்ணுலயும் 10 மரங்கள் இருக்கு. 120 மா மரங்கள்ல 50 மரங்கள்தான் காய்ப்புல இருக்கு. மரப்பயிர்களுக்கு ஊடாக வீட்டுத் தேவைக்காக மிளகாய், கத்திரினு காய்கறிப் பயிர்களை நடவு செஞ்சிருக்கேன். இதுபோக 10 ஆடுகளும் 5 குட்டிகளும், 20 கோழிகளும் இருக்கு” என்ற சிவபூங்குன்றன் நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“வருஷத்துக்கு 2 டன் மாம்பழங்கள் கிடைக்கும். கிலோ 40 ரூபாய்னு விற்பனை பண்றேன். அதுமூலமா 80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 750 கிலோ சப்போட்டா கிடைக்கும். கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

தென்னை மூலமா வருஷத்துக்கு 90,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. மொத்தமா இரண்டரை ஏக்கர்ல இருந்து 2,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. எனக்குப் போக்குவரத்துக்கு மட்டும்தான் செலவு. வேற செலவு எதுவுமில்லை. எல்லாமே நிலத்துக்குள்ளேயே கிடைச்சுடுது. போக்குவரத்துச்செலவு 10,000 ரூபாய் போக, வருஷத்துக்கு 1,90,000 ரூபாய் லாபமா நிக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார்.. 

தொடர்புக்கு, சிவபூங்குன்றன், செல்போன்: 94429 34537

துரை.நாகராஜன்

கூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம்! - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...

கொம்பு சாண உரம்

பூ
மியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வரக்கூடியது கொம்பு சாண உரம். இந்த உரத்தைத் தயாரிக்கச் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஓர் அடி ஆழத்துக்குக் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பைப் புதைத்துவிட வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும் கீழ்நோக்கு நாள்களில் எடுத்துப் பார்த்தால்... கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காபித்தூள்போல மாறி இருக்கும். ஒருவித வாசனை அடிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால்... கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகிவிட்டது என்று பொருள். இதை மண் பாத்திரத்தில், ஓர் ஆண்டுக் காலம் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். ஓர் அடி நீளமுள்ள கொம்பில் 180 கிராம் வரை உரம் கிடைக்கும். ஒரு கொம்பை இரண்டு முறைகூடப் பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கருக்கு 30 கிராம் கொம்பு சாண உரம் போதுமானது. 30 கிராம் கொம்பு சாண உரத்தை 15 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு குச்சி கொண்டு, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாகச் சுற்றிக் கலக்கிவிட வேண்டும். கீழ்நோக்கு நாளில் மாலை வேளைகளில் விதைப்புக்கு முன்பாக நிலத்தில் இக்கரைசலைத் தெளிக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதமும், மட்கிய உரமும் இருக்கும்போதுதான் தெளிக்க வேண்டும்.

பயோகேஸ்!

‘‘சா
ணத்தைக் கொண்டு மிதக்கும்தொட்டி மூலம் பயோகேஸ் தயாரிக்கிறேன். இந்தத் தொட்டியில 200 கிலோ மாட்டுச் சாணத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கரைச்சு ஊத்துனா எட்டு நாள்ல பயோகேஸ் உருவாகிடும். தொடர்ந்து சாணம் கொடுத்துட்டே இருந்தா தொடர்ச்சியா கேஸ் கிடைக்கும். தொட்டியில வீணாகுற சாணக்கழிவை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்துறேன்” என்கிறார், சிவபூங்குன்றன்.

ஈரப்பதத்தைக் காக்கும் மரக்கரி

“மர
க்கரியைச் சேகரிச்சு அதோடு மாட்டு எருவைக் கலந்து வெச்சுக்குவேன். ஒவ்வொரு மரத்துக்குப் பக்கத்துலயும் ஒரு அடி இடைவெளியில சிறிய குழி எடுத்து, அதுல சாணம் கலந்த மரக்கரியைப் போட்டு மூடிவிடணும். இந்தக்கரி தண்ணீரைப் பிடிச்சு வெச்சுக்கும். அதனால, மண் எப்பவும் ஈரப்பதமா இருக்கும்” என்கிறார், சிவபூங்குன்றன்.