Published:Updated:

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

பாரம்பர்யம்

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

பாரம்பர்யம்

Published:Updated:
சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

மிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை மாதப்பிறப்பன்றோ அல்லது அம்மாதத்தில் ஒரு வளர்பிறை நாளிலோ ஏர் பூட்டி நிலத்தில் உழவு செய்வது விவசாயிகளின் பாரம்பர்ய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் எனச் சூரிய பகவானிடம் வேண்டி உழவு செய்து வைப்பார்கள் விவசாயிகள். இப்படி ஏர் பூட்டுவதைப் ‘பொன் ஏர் பூட்டுதல்’, ‘சித்திரமேழி வைபவம்’, ‘மதி ஏர்’, ‘நல்லேர்’ எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இவ்விழா ‘ஏர் மங்களம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் சித்திரை முதல் நாளில் பொன் ஏர் உழவு என்பது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. ‘நான் முதலில் ஓர் உழவன். அதற்கடுத்ததுதான் மன்னன்’ என்று பறைசாற்றும் விதமாக, அந்நாளில் பொன் ஏர் உழவை மன்னர் துவக்கி வைப்பாராம். உழவின் பெருமையைக் குறிப்பிடும் விதமாகத் திருக்குறளில் தனி அதிகாரமே இயற்றப்பட்டுள்ளது. இப்படித் தொன்றுதொட்டு தமிழர் வாழ்க்கையின் அங்கமாக இருந்து வருகிறது, வேளாண்மை. இன்றளவும் தமிழ்நாட்டில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பொன் ஏர் பூட்டும் நிகழ்வு சிறப்பாக நடந்து வருகிறது.

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

சித்திரைச் சிறப்பிதழுக்காக... தூத்துக்குடியைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியலாளர் ஆ.சிவசுப்பிரமணியனைச் சந்தித்துத் ‘தமிழ் இலக்கியக் காலங்களில் உழவர்களின் வாழ்வியல் நிலை’ குறித்துப் பேசினோம்.

“தமிழ்நாட்டின் தொன்மையான தொழில், உழவுத் தொழில். இதை உறுதிப்படுத்தும் வகையிலான தொல்லியல் சான்றுகள் பல உள்ளன. கி.மு.1700-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொன்மைமிக்க ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுத்த முதுமக்கள் தாழிகளில்... நெல், வரகு ஆகிய தானியங்களின் உமி  கிடைத்துள்ளன. அழகர் மலையில் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பிராமிக்’ எழுத்துக் (தொல் தமிழ்) கல்வெட்டு உள்ளது. இதில், ‘இழசந்தன்’ என்பவன், கொழு வணிகனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான். வேளாண் தொழிலின் அடிப்படைக் கருவியான ஏரில் பொருத்தப்படும் ‘கொழு’ என்ற இரும்புக் கருவி தயாரிக்கப்பட்டு ஆயத்த நிலையில் விற்கப்பட்டதையும், உழவுத்தொழில் பரவலாக இருந்ததையும் அறிய முடிகிறது.

கி.மு. 300-ஆம் ஆண்டுக்கும் கி.பி. 300-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவான இலக்கிய பாடல்களில் வேளாண் தொழில்குறித்த விரிவான பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் என்ற முறையில் வேளாண் தொழிலில் ஈடுபட்டோரின் வாழ்வியல் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெற்றுள்ளன. ஒரே வேளாண் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தாலும்  பொருளியல் அடிப்படையிலான வேறுபாடுகள், ஒரு குழுமத்தில் உருவாகி நிற்பது தவிர்க்க இயலாத ஒன்று. இதையே ‘வர்க்க வேறுபாடு’ என்று மார்க்சியம் குறிப்பிடும். உழவர் வாழ்வியலைச் சித்திரிக்கும் சங்க இலக்கியங்கள், இந்த வேறுபாடுகளைப் பதிவு செய்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

உழவனின் உள்ளத் துடிப்பு

தொழுவம் நிரம்பக் காளை மாடுகளையும் பசு மாடுகளையும் கொண்டு வாழும் வேளாண் குடிகளைச் சித்திரிக்கும் சங்க இலக்கியங்கள், ஓர் ஏரின் துணையுடன் நிலத்தை உழும் உழவனின் உள்ளத் துடிப்பையும் வெளிப்படுத்துகின்றன. ‘உழுது விதைப்பதற்கு ஏற்ற வகையில் மழையால் ஈரமான செம்மண் நிலத்தை உழுவதற்குச் செல்கிறான் உழவன் ஒருவன். அவனிடம் இருப்பதோ ஒரே ஏர்தான். நிலமோ ஈரத்தை விரைவில் இழந்துவிடும் தன்மையுடைய செம்மண் நிலம். ஓர் ஏரைக் கொண்டு ஈரம் காயும் முன்னர் நிலத்தை உழுதுவிட வேண்டும் என அவன் உள்ளம் துடிக்கிறது.’ நீண்ட பிரிவுக்குப் பிறகு, தலைவியைக் காணத் தேரில் விரைந்து வரும் தலைவன் ஒருவனின் உள்ளத் துடிப்புக்கு, இந்த உழவனின் உள்ளத் துடிப்பை உவமையாகக் காட்டியிருக்கிறான், ஒரு புலவன். அதனால், அப்புலவன் தன் பெயரை இழந்து ‘ஒரேருழவனார்’ என்று உவமையால் பெயர் பெற்றுள்ளான்” என்று விவரித்த சிவசுப்பிரமணியன், தொடர்ந்தார்.

பகிர்ந்து உண்ணும் பண்புடையோன்


“அறுவடை செய்த தானியங்களைக் களத்தில் இட்டு மாடுகளால் மிதிக்கச் செய்து தானியங்களைப் பிரித்தெடுப்பது வேளாண் தொழில்நுட்பங்களுள் ஒன்று. வேளாண்மை மேற்கொண்டிருந்த குடித்தலைவன், தனக்குரிய சிறு நிலப்பரப்பில் வரகு தானியம் பயிரிட்டிருந்தான். அவற்றைக் களத்தில் போட்டுக் கிடாக்களால் மிதிக்கச் செய்ய முடியாத நிலையில், அக்குடும்பத்தின் இளைஞர்கள் வரகுக் கதிர்களைத் தரையில் பரப்பி அவற்றைக் கால்களால் மிதித்து வரகைப் பிரித்தெடுத்தார்கள். அவனுக்குக் கடன் கொடுத்தவர்கள் சுற்றி வளைத்து நின்று, தம் கடனுக்காக வரகு தானியத்தின் ஒரு பகுதியைப் பறித்துக் கொண்டார்கள். 

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

எஞ்சிய வரகை, வறுமையால் வாடும் உறவினருக்கும், பாணர்கள் என்ற கலைஞர்களுக்கும் வழங்கினான். பிறகு உதவும் பண்பில்லாதவருக்கும் கூட வழங்கினான் என்று கூறுகிறது, புறநானூறு. இவ்வாறு உழவர்கள் தம் உணவைப் பிறருடன் பகிர்ந்து உண்ணும் பண்புடையவர்களாக விளங்கினர்.

‘நெல் விளையும் செழிப்பான மருத நிலத்தைக் கடந்து செல்லும் பாணர்களை, தம் பிள்ளைகளை அனுப்பித் தடுத்து நிறுத்தித் தம் வீட்டுக்கு அழைத்து வரச் செய்கின்றனர், உழுகுடிப் பெண்கள். வெண்ணெல் அரிசிச் சோற்றைக் கறியுடன் அவர்களுக்கு வழங்குகின்றனர்- எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

‘மரங்கள் அடர்ந்த சோலைகளில் தனித்தனியாக வாழும் உழவர்கள், இனிமையான பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு ஆகியவற்றை விருந்தினருக்கு வழங்குவர். அவற்றை உண்ணப் பிடிக்காதோருக்குச் சேப்பங்கிழங்கை உண்ணத் தருவர்’ என்று பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘முள் நீக்கிய மீன் கலந்த வெண் சோற்றைப் பாணர்களுக்கு மருதநில உழவர்கள் வழங்குவர். இவ்வாறு விருந்தினருக்கு உணவு படைக்கத் தேவையான நெல்மணிகள், உழவர்களின் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதைச் சேமித்து வைக்கும் கலன் ‘நெற்கூடு’ எனப்பட்டது. ‘நெற்கூடுகள் மலையை ஒத்து நெடிதாக இருந்தன’, ‘மலையைச் செய்து வைத்தாற் போன்றிருந்தன’, ‘ஏணியால் எட்ட முடியாத உயரம் கொண்டிருந்தன’- என்று பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விதைநெல்லைச்
சமைத்து உண்ட அவலம்


தமக்குத் தேவையான தானிய விதைகளைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பது பாரம்பர்ய வேளாண்மையின் மரபு. ‘வெண்ணெல்’ என்ற நெல்லின் விதையைப் பாறையில் காயவைத்ததாக அகநானூறு குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், இல்லாமையின் காரணத்தால் விதைநெல்லைச் சமைத்து உண்ட அவலத்தையும் புறநானூறு குறிப்பிடுகிறது. ஆளும் மன்னர்களின் பொறுப்பற்ற தன்மை உழவர்களைப் பாதித்துள்ளது. நீர் மேலாண்மையைப் புறக்கணித்தல், அதிக வரி வாங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளும் மன்னர்களைக் கடிந்துரைக்கும் பாடல்கள் வழியே விவசாயிகளின் பிரச்னைகளையும் அறிய முடிகிறது.

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

விஜயநகரப் பேரரசு ஆட்சி உருவான பிறகு, சிற்றிலக்கிய வகைமை உருவானது. இவற்றுள் ‘பள்ளு’ என்ற இலக்கிய வகைமை, உழுதொழில் குறித்த பதிவுகளை மிகுதியாகக் கொண்டது. பள்ளு இலக்கியங்கள், சங்க இலக்கியங்களில் காணப்படாத வேறுபாடான வாழ்வியலைச் சித்திரிக்கின்றன. சங்க இலக்கியங்களில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டப்படுகின்றனர். ஆனால், பள்ளு இலக்கியத்தில் இவர்களின் அவலம் விரிவாகப் பதிவாகியுள்ளது. இவர்களை அதட்டி வேலை வாங்கவும், கண்காணிக்கவும் பண்ணைக்காரன் அல்லது பண்ணை விசாரிப்பான் என்பவன் அறிமுகமாகிறான்.

நில உடைமையாளனுக்கும் உழவனுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளன் போல் காட்சி தரும் இவன், அடிப்படையில் நில உரிமையாளனின் நலன் பேணுபவனே. உழவனுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம்கூட இவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. மிக மோசமான ஒன்றாக உழுகுடிப் பெண்களின் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துபவனாகவும் இவன் விளங்கினான். இதுகுறித்து,

‘சாத்தி மகள் காத்தி தன்னைப்
பேத்தி என்பா ராம் - மெள்ளச்
சன்னையாய் களத்திலே வா
பின்னை என்பாராம்’- எ
ன்ற முக்கூடற்பள்ளு பாடல் வரிகளில் தெரிந்து கொள்ளலாம். இதனையொத்த தொடர்கள் ஏனைய பள்ளு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன” என்ற சிவசுப்பிரமணியன் நிறைவாக,

“இப்போக்கின் நீட்சியாகக் காவேரி பொருநை சமவெளிப் பகுதிகளில் பண்ணையார்கள், மிராசுதாரர்கள் என்ற பெயரிலான பெரு நிலக்கிழார்கள் தம் உழுகுடிகளின் திருமணத்தின்போது முதல் இரவு உரிமையைத் தமக்கு உரியதாக விதி வகுத்துக் கொண்டார்கள்.

சங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்!

சங்க இலக்கியங்களில் இடம் பெறாத பண்பாட்டு ஆதிக்கம், உழுகுடிகளின் மீது நிகழ்த்தப்பட்டதைக் கண்டித்துப்பாட... பிசிராந்தையாரோ, கோவூர்கிழாரோ இல்லாத நிலையில், உழுகுடிகளே வாய்மொழிப் பாடல்கள், கதைகள் வாயிலாகத் தம் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளார்கள். பாதிக்கப்பட்டோரே படைப்பாளியாகிவிட்டனர். பகடித்தன்மையுடன் தம் தொழிற்பாடல்களில் அவர்கள் செய்துள்ள பதிவுகள், அவர்களது அவல வாழ்வை வெளிப்படுத்தி நிற்கின்றன

‘தலையும் உடலும் தஞ்சாவூரு கூத்தியாளுக்கு
உடலும் தலையும் உள்ளூரு கூத்தியாளுக்கு
தன்னைப் பெத்த தாயாருக்கு கறி இல்லையென்று சொல்லி
முள்ளாலே மூணு கறி குத்தி அனுப்புனாராம்
அந்த ஏகாந்த ராமருக்கு எடுங்கடியோ பூங்கக் குலவதாளம்’-
இந்தப்பாடல், பெண்பித்தரான பெரு நிலக்கிழார் ஒருவரை, ‘ஏகபத்தினி விரதன்’ என்றழைக்கப்படும் ராமராகச் சித்திரித்துப் பகடி செய்கிறது.

‘தாளு நெல்லு ஒங்களுக்குச் சாமி
தங்குன கருக்கா எங்களுக்கா?
போரு நெல்லு ஒங்களுக்குச் சாமி
பொரிஞ்சகருக்கா எங்களுக்கா?
வேலசெய்து கூலியக் கேட்டா
வெள்ளிசெவ்வா யிங்குறீங்க
நாத்துக் கூலிய கேக்கப் போனா சாமி
நாளபின்னண்ணு சொல்லறீங்க
வாடிபோடி யிங்குறத ஒங்க
வாசப்படில வச்சிக்குங்க
போடிவாடி யிங்குறத ஒங்க
பொழக்கடைல வச்சிக்குங்க’-
இந்தப்பாடல், தானிய வடிவில் வழங்கப்படும் கூலியைத் தரமற்ற தானியமாக வழங்குவதையும், நல்லநாள், கிழமையைக் கூறி அலைக்கழிப்பதையும் மரியாதையின்றி அழைப்பதையும் எதிர்த்துக் குரலெழுப்புகிறது” என்று பாடல்களைப் பாடி பல தகவல்களைச் சொல்லி முடித்தார்.

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பொன் ஏர் உழுதல்!

சி
த்திரை மாதப்பிறப்பன்றோ அல்லது அம்மாதத்தில் ஒரு வளர்பிறை நாளிலோ... ஏர்க் கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூச்சுற்றி வணங்கி, ஊர்ப் பொது நிலத்தில், விவசாயிகள் அனைவரும் சேர்ந்து மாடுகள் கொண்டு உழுவதற்குப் பெயர்தான், ‘பொன்னேர் உழுதல்’. விவசாயத்தில் பெருமைக்காக மங்கலம் கருதிச் சொல்லப்பட்ட சொல்தான் ‘பொன் ஏர்’. ஊர்ப்பொது நிலத்தில் பொன் ஏர் பூட்டி உழுது, தானியங்களை விதைத்தபிறகு, அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுது, ஏதாவது தானியத்தை விதைப்பார்கள். வயலை, மீண்டும் விவசாயத்துக்குத் தகுதிப்படுத்துதலில் ஊர் விவசாயிகள் ஒன்றுகூடிச் செய்யும் வழிபாட்டுச் சம்பிரதாயம்தான், இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism