Published:Updated:

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!
பிரீமியம் ஸ்டோரி
உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

சுற்றுச்சூழல்

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

சுற்றுச்சூழல்

Published:Updated:
உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!
பிரீமியம் ஸ்டோரி
உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

பொதுவாக, வளிமண்டலம் மற்றும் சூழல் மாசுபட... கரியமில வாயு எனப்படும் ‘கார்பன் டை ஆக்ஸைடு’தான் காரணம் என்று அனைவரும் நினைக்கிறோம். கார்பனால், வளி மண்டலத்தில் ஏற்படும் மாசுவைக் குறைக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதைவிடக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ‘நைட்ரஜன்’ என ஆராய்ச்சிகள்மூலம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘உடனடியாகப் போர்க்கால நடவடிக்கைமூலம் நைட்ரஜன் மாசுபாட்டைக் குறைக்காவிடில் சூழல் மட்டுமல்லாமல், விவசாய நிலங்கள், உணவு உற்பத்தி அனைத்தும் சீரழியும். 2020-ஆம் ஆண்டுக்குள் ரசாயனங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும். உலக நாடுகள் வைத்திருக்கும் இலக்கை எட்டமுடியாமல் போய்விடும்’ என எச்சரிக்கை மணி அடித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள். 

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

கடந்த மார்ச் 11-ஆம் தேதியிலிருந்து 15-ஆம் தேதிவரை கென்யா நாட்டின் நைரோபி நகரில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் அவையின் ஐந்தாவது உலகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில்... இந்தியா முன்மொழிந்த இரு சுற்றுச்சூழல் தொடர்பானத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்தவும் உறுதி எடுத்துள்ளது, சுற்றுச்சூழல் அவை.

பிளாஸ்டிக் பை போன்ற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் வீசியெறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பது, நைட்ரஜன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது ஆகியவைதான் உலகக் கவனத்தை ஈர்த்த அந்த இரண்டு தீர்மானங்கள்.

அமெரிக்கா உள்படச் சில முக்கிய மேற்கு நாடுகள் கடுமையாக எதிர்த்ததால், ஐ.நா கூட்டம், இந்தியாவின் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்கான தீர்மானத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தாலும், இந்தியாவின் முன்மொழிவைச் செயல்படுத்துவதாக 170 நாடுகள் உறுதியளித்துள்ளன. அதே நேரம், கண்ணுக்குத் தெரியாமல் மனித இனத்துக்குத் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் நைட்ரஜன் குறித்த இந்தியாவின் தீர்மானத்தை, அனைத்து நாடுகளும் முழுமையாக ஏற்றுக்கொண்டன.

உயிர்களின் வாழ்வாதாரமாகவும், உணவு உற்பத்திக்கும், பயிர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் நைட்ரஜன்... தற்போது நம் வாழ்வையும், விவசாய நிலங்களையும், சூழலையும் அழிக்கும் விஷமாகி இருக்கிறது என்றால், யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியாது. ஆனால், அதுதான் நிதர்சனம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கின்றனர் விவசாய ஆராய்ச்சியாளர்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது நைட்ரஜன் விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜனால் ஏற்படும் கொடிய பாதிப்புகளை உணர்ந்ததால்தான்... இந்தியா நைட்ரஜன் மாசு பாதிப்பு குறித்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஒரு வாரம் முன்னதாக, சர்வதேச வேளாண் விஞ்ஞானிகள், சூழல் ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து நைட்ரஜன் மாசு, நிலச்சீரழிவு குறித்து ஆய்வு செய்து, ‘ஃப்ரான்டியர்ஸ் அறிக்கை’ ஒன்றையும், ஐ.நா சுற்றுச்சூழல் அவையில் சமர்ப்பித்தனர்.

நைட்ரஜன் மாசு அளவு, சுற்றுச்சூழலில் அதிகரிக்க முக்கியக் காரணம் விவசாயம் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். நைட்ரஜன் அடிப்படையிலான ரசாயனங்களான அம்மோனியா, நைட்ரேட், நைட்ரிக் ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றில் இருக்கும் எதிர்வினை நைட்ரஜன்கள், மனதுக்கு எட்டாத பாதிப்புகளைப் பூமியிலும் காற்றிலும் ஏற்படுத்துகின்றன.

பசுமை வாயுவில் இருக்கும் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன்-டை-ஆக்ஸைடை விட 300 மடங்கு தீமையானது. சூழலுக்கும், மனித சுகாதாரத்துக்கும் நைட்ரஜன் மாசுவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் மதிப்பு 340 பில்லியன் டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், தொழிற்சாலைகள், எரிசக்தித் துறைகளின் வளர்ச்சிகளுக்கான தேவையே, நைட்ரஜன் சார்ந்த வேதியியல் பொருள்களின் பயன்பாட்டு அளவை அபாயகரமாக உயர்த்தியிருக்கின்றன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் கிடைத்துள்ள ஒரு வரம்தான் நைட்ரஜன். உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையான புரதச்சத்தை வழங்குவதில் நைட்ரஜனின் பங்கு ஈடு இணையற்றது. ஆனால், யூரியா போன்ற உரங்களினால் நைட்ரஜன் பயன்பாடு அளவுக்கதிகமாக உயர்ந்து, நிலங்களுக்கும் உயிர்களுக்கும் ஒரு சாபமாக மாறியதுதான் துரதிர்ஷ்டம். மனித இனத்தின் மாபெரும் தவறுகளில் இதுவும் ஒன்று எனக் கோடிட்டுக் காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகளாவிய பயிர் உற்பத்தி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பு, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களைச் சார்ந்தே உள்ளது. உணவு மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு நைட்ரஜனின் பங்கை ஐ.நா ஏற்றுக்கொண்டாலும், வினையாற்றும் நைட்ரஜனின் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருந்தாலும், அது செயலற்றதாகத்தான் இருக்கும். ஏனெனில் தாவரங்களால் காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தைப் பயன்படுத்த முடியாது. காற்றில் உள்ள நைட்ரஜன் என்ற தழைச்சத்தை, பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றித்தரும் வேலையை, மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் செய்கின்றன. இதனால்தான், இயற்கை விவசாயம்தான் இனி, இந்த பூவுலகுக்கு நல்லது என்று இயற்கை விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். நாம் நிலங்களுக்கு வழங்கியுள்ள நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம். இயற்கையாகத் தனக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சரிக்கட்டிக் கொள்ளும் திறன் மற்றும் சக்தியை மீறி, அதிக அளவில் நைட்ரஜன் விளை நிலங்களில் படிந்துள்ளது. உலகத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் நைட்ரஜன் மாசு குறித்து ஆழ்ந்த ஆய்வு செய்துள்ளது.

‘நைட்ரஜனை ஒரு புதுக் கார்பன்’ என்றே வர்ணிக்கிறார், ‘இன்டர்நேஷனல் நைட்ரஜன் இனிஷியேட்டிவ்’ (International Nitrogen Initiative) என்ற அமைப்பின் தலைவர் என்.ரகுராம். ‘நைட்ரஜனும் கார்பனும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. இந்த அபாயகரமான இரண்டு வாயுக்களுக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளித்து, ஒரே நேரத்தில் அணுக வேண்டும். கார்பனைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க அமல்படுத்திய கொள்கைகள் போலவே நைட்ரஜனைக் குறைக்கவும் சிறந்த கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்துகிறார், ரகுராம்.

ஐ.என்.ஐ ஆராய்ச்சியின்படி, பருப்பு வகைகள் உற்பத்திதான் நிலங்களை அதிகளவில் மாசுபடுத்துகின்றன. அடுத்த இடத்தில் நெல்லும், கோதுமையும் இருக்கின்றன. இந்தியாவில் 3.7 கோடி ஹெக்டேர் பரப்பில் நெல்லும், 2.7 கோடி ஹெக்டர் பரப்பில் கோதுமையும் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக 1.7 கோடி டன் நைட்ரஜன் சார்ந்த ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நிலத்தில் இடும் மொத்த நைட்ரஜன் உர அளவில், 30 சதவிகிதத்தை மட்டுமே, பயிர்கள் தங்களின் வளர்ச்சிக்கு நைட்ரேட்டுகளாக மாற்றி எடுத்துக்கொள்கின்றன. பயிர்களால் நிராகரிக்கப்படும் 70 சதவிகித நைட்ரஜன், மண்ணில் ஊடுருவி, நிலங்களையும், சூழலையும் முழுவதுமாகப் பாதிக்கிறது. மூன்றில் இருபங்கு நைட்ரஜன் நிலத்தில் வீணாகத் தங்கி மண்ணை மாசுபடுத்துகிறது. மேற்கு நாடுகளில் இதன் அளவு இன்னும் அதிகம். சுமார் 80 சதவிகித நைட்ரஜன் வீணாகி மண்ணில் கலப்பதாக ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீணாக நிலத்தில் ஊடுருவும் நைட்ரஜனால் ஏற்படும் பாதிப்புகள், விளைநிலங்களைத் தாண்டி, நீர் நிலைகள், நீர் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், பசுமைக் காடுகள் என அனைத்தையும் பாதிக்கின்றன.

நைட்ரஜன் தாக்கத்தை உணர்ந்து, விழித்துக்கொண்ட மேற்கு நாடுகள் உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சமீபத்தில், தெற்கு ஆசிய மண்டலத்தில் நைட்ரஜன் மாசு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரிட்டன் 180 கோடி ரூபாயை (20 மில்லியன் பவுண்டு) முதலீடு செய்துள்ளது. இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளாக நைட்ரஜன் பாதிப்புகுறித்த ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. ‘நைட்ரஜனால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவோ அதே அளவு தீமைகளும் இருக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். காற்றின் தரம், ஒசோன் படலம், பருவநிலை, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்தையும் நைட்ரஜன் மாசு பாதிக்கும்’ என வலியுறுத்துகிறார்கள், ஆய்வாளர்கள். 

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

‘இயற்கையின் வழியில் நாம் தலையிடும் போதெல்லாம், நாம் வாழும் பூமியின்மீது நீண்டகாலத் தாக்கத்தை அது உருவாக்கும் அபாயம் அதிகரிக்கிறது’ என ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குநர் ஜாய்ஸ் மூயா எச்சரிக்கிறார்.

‘சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அதே ஆபத்து மனிதனுக்கும் ஏற்படும். நைட்ரஜன் மாசு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அது நுரையீரல் நோய்களை உருவாக்கும். குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும்’ என்கிறார், ரகுராம்.

நைட்ரஜன் சார்ந்த உரங்களுக்கு அடுத்தப்படியாக, சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்தான் நைட்ரஜன் மாசு உருவாக்கும் மற்றொரு பிரதான ஆதாரம். இது விவசாயத்தைவிடப் பத்து மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நைட்ரஜன் மாசு உருவாக்கும் மூலாதாரமாகக் கழிவு நீர் மாறிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க, நீடித்த நைட்ரஜன் மேலாண்மைத் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது, ஐ.நா அமைப்பு. ‘பொருளாதாரம் செயல்படும் விதத்தை மாற்றவேண்டிய தேவை, உலகுக்கு ஏற்பட்டுள்ளது. நீடித்த நிலையான எதிர்காலம் நோக்கிச் செல்ல, வளர்ச்சிக்கான பாதையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வளர்ச்சிக்கும் அதிகரித்து வரும் ஆதாரப் பயன்பாட்டுக்கும் இடையே இருக்கும் தொடர்பைத் துண்டிப்பது, காலத்தின் கட்டாயம்’ என்கிறார், ஜாய்ஸ்.

‘பசுமை நிதி, பசுமைப் பொருளாதாரம், பசுமைக் கொள்கைகள், பசுமைத் தர நிர்ணயம் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்லுதல், மற்றும் சூழல் சார்ந்த பசுமைத் தொழில்களை ஊக்குவித்தல் போன்றவை ஐ.நாவின் முக்கியப் பரிந்துரைகள். சூழல் சவால்களை முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளாக மாற்றுவதுதான் இதன் முக்கியக் குறிக்கோள். பசுமைப் பொருளாதாரம் என்பது வெறும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏழ்மையைக் குறைத்தல், வருமானம் பெருக்குதல், பொருளாதாரப் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் என அதன் ஆதாயங்கள் விரிவடையும்’ என்கிறார், ஐ.நாவின் ‘உதவி செக்ரேட்டரி ஜெனரல்’ சத்யா திரிபாதி.

ஏற்கெனவே பருவநிலை மாற்றம், பல்லுயிர், விலங்குகள் அழிவு, காற்று, சூழல் மாசு, ரசாயனங்களால் ஏற்படும் நீர் மாசு ஆகியவை பூமியை நோயாளியாக்கி, மக்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றி வருகிறது. இத்தகைய மாசுக்கள், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஏழு மில்லியன் மக்களைக் கொன்றுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பினால் மட்டும் 25 சதவிகித நோய்கள் ஏற்படுகின்றன. இயற்கைச் சார்ந்த, பாரம்பர்ய விவசாய முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தினாலே... நைட்ரஜன் உரங்களின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும். இடுபொருள் செலவும் குறையும். வருங்கால முன்னேற்றத்துக்காக, நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. ரசாயன உரங்கள் பயன்பாட்டில் சிக்கனத்தையும், இயற்கை உரங்கள் பயன்பாட்டில் தாராளமயத்தையும்  கொண்டு வந்தால் நிலம் வளமடையும். நைட்ரஜன் மாசு குறையும்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘விவசாயிகளுக்கு எதையும் கற்றுத் தரத் தேவையில்லை. பிரச்னையை அவர்களுக்குப் புரிய வைத்தாலே போதும்’ என்று அடிக்கடி சொல்வார். அதைப் பின்பற்றி, விவசாயிகளுக்குப் பிரச்னைளைப் புரிய வைக்க வேண்டிய தருணம் இது.

நமது நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் நீர்நிலைகளையும், சூழலையும் காக்க... நைட்ரஜன் சார்ந்த உரங்களைக் குறைத்து, நைட்ரஜனை என்ற நஞ்சை உறிந்து கொள்ளும் நஞ்சுண்டர்களான, இயற்கை உயிர் உரங்களைப் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வேளாண் முறைகளைப் பின்பற்றி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், அவற்றைச் செயல்படுத்த, நமக்கு மிகக்குறைவான நேரமே இருக்கிறது. இனியும் விழிக்காவிட்டால் யாராலும் இந்தப் பூவுலகைக் காப்பாற்ற முடியாது.

கே.ராஜூ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism