Published:Updated:

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

பூச்சி மேலாண்மை - 6

விவசாயத்துக்குத் தீமை செய்யும் பூச்சிகள் அனைத்தும் சைவப்பூச்சிகள் என்று மட்டும்தான் நாம் பூச்சிகளைப் பற்றிப் பொதுவாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால்தான் அவற்றை அழிக்க நாம் முயற்சிகள் எடுக்க முடியும்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய் அந்துப் பூச்சி என்ற நான்கு பருவங்கள் கொண்டவை. முட்டையை எடுத்துக்கொண்டால் அதிலேயே பல ரகங்கள் இருக்கின்றன. பூச்சிகளின் முட்டைகளைப் பலர் பார்த்திருக்கவே மாட்டார்கள். கடுகைவிடச் சிறியதாக இருக்கும் முட்டையைப் பூச்சிகள் இடும் விதமே வித்தியாசமானது. சில பூச்சிகள் தாவரங்களின் நுனிப் பகுதியிலும், சில பூச்சிகள் இலையின் பின்பகுதியிலும், சில பூச்சிகள் பூவிலும், சில பூச்சிகள் காயிலும் முட்டைகள் இடுகின்றன. கொசு மாதிரியான பூச்சிகள் தண்ணீரில் முட்டை இடுகின்றன.

பூச்சிகளின் முட்டைகள் வெள்ளை, இளம் பழுப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். முட்டைகளின் மேல் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருக்கும். சிலவகைப் பூச்சிகள் ஒரு முட்டை இடும். சில வகைப் பூச்சிகள் பல முட்டைகள் இடும். சிலவகைப் பூச்சிகள் நூற்றுக்கணக்கான முட்டைகளை ஒரே இடத்தில் இட்டுப் பூசி மெழுகிவிடும். நெல்லில் குருத்துப்பூச்சி ஒரே இடத்தில் 200 முட்டைகளை இட்டு, அதன் உடம்பின் பின் பகுதியில் உள்ள ரோமங்களால் மொத்த முட்டைகளையும் பூசி மூடிவிடும். குருத்துப் பூச்சியின் முட்டைகள், நெல் நாற்றுகளின் நுனிப் பகுதியில்தான் இருக்கும். நாற்றங்காலிலிருந்து நாற்று, வயலுக்குப் போகும் முன்பே ‘நுனி கிள்ளுதல்’ முறைப்படி முட்டைகளை அழித்துவிட்டால் நெல் பயிரில் குருத்துப்பூச்சித் தாக்குதலைத் தடுத்துவிடலாம். இது ஒருவிதமான முறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

முட்டைக்கு அடுத்து, புழுப்பருவம். புழு என்பது ‘கம்பளிப் புழு’வாகவும் இருக்கலாம் ‘சாதாப் புழு’வாகவும் இருக்கலாம். புழுவுக்கு மேலே முள் முள்ளாக இருக்கும் கம்பளிப் புழுக்களை முருங்கை மரத்தில் கும்பல் கும்பலாகப் பார்க்கலாம். ‘காவடிப் புழு’ என ஒருவகைப் புழு உண்டு. ஆமணக்குச் செடியில் காவடிப் புழுக்களைப் பார்க்கலாம். இப்புழுக்களின் கால் அமைப்பைப் பொறுத்து இவை ‘முழுக்காவடி’, ‘அரைக்காவடி’ என வித்தியாசப்படுத்தப்படுகின்றன. காலே இல்லாமல் பாம்புபோல ஊர்ந்துக்கொண்டே போகக்கூடிய ஒரு வகைப் புழுவைப் பயறு வகைப் பயிர்களில் பார்க்கலாம். இதுபோலப் புழுக்களில் பல வகைகள் உள்ளன.

அடுத்ததாகக் கூட்டுப் புழுக்கள். எல்லா விதமான புழுக்களும் இலைகள் மற்றும் தண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு கூட்டுப்புழு பருவத்துக்குச் செல்லும். புழுக்கள் தங்கள் மேல் கூடுகளை உருவாக்கிக்கொள்ளும். இப்படிக் கூட்டுப்புழுப் பருவத்துக்குச் செல்லும் பெரும்பாலான புழுக்கள், மண்ணைத்தான் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. கூட்டுப்புழு பருவம் நகர முடியாத பருவம். எனவே மண் அல்லது குப்பைக் கூலங்களில் மறைவான இடத்தில் இருக்கும். செடியிலிருந்து கீழே விழுந்து மண்ணுக்குள் அரை அங்குலத்திலிருந்து ஓர் அங்குல ஆழத்தில் புதைந்து விடுகின்றன. கூட்டுப்புழுப் பருவத்தில்தான், இனப்பெருக்க உறுப்புகள், இறக்கை, கால்கள் அனைத்தும் வளரும். அனைத்துப் பாகங்களும் வளர்ந்து முழுப் பூச்சியாக மாறியபிறகு கூட்டிலிருந்து பூச்சியாக வெளியேறும்.

இப்படி மூன்று நிலைகளைக் கடந்து வந்து நான்காவது நிலைக்கு வந்து பறக்கும்போதுதான் நாம் பூச்சிகளைப் பார்க்கிறோம். அவற்றைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால், பூச்சியின் இளம் பருவமான புழுப்பருவம்தான் பெரும்பாலும் மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. புழுக்களின் வாய்ப் பகுதியைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளையும் கடித்து மென்று தின்பதற்கேற்ப அவற்றின் வாய்ப்பகுதி அமைந்திருக்கும். புழுப்பருவத்தில் உள்ள வாய்ப்பகுதி, பூச்சியாக மாறியபிறகு வாயின் அமைப்பு மாறிவிடும்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

புழுப்பருவம், மகசூல் இழப்பை ஏற்படுத்தி இருந்தாலும்... பூச்சிப்பருவம் அதைவிட மோசமான நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய பருவம். பூச்சிப்பருவத்தை நாம் ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அடுத்தத் தலைமுறையை உருவாக்குவது, இந்தப் பருவம்தான். கரப்பான்பூச்சி அல்லது வெட்டுக்கிளி உருவ அமைப்பைப் பூச்சிகளுக்கான மாதிரியாக எடுத்துக்கொண்டால் மனிதர்களுக்கு இருக்கும் அனைத்தும் அவற்றுக்கும் இருக்கின்றன. அவற்றின் உடல் தலை, வயிறு, மார்பு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

தலைப்பகுதியில்தான் ஓர் ஆளை அடையாளம் கண்டு கொள்வதற்கும், செல்ல வேண்டிய திசையைக் கண்டுபிடிப்பதற்கும், உணவைக் கண்டுபிடிப்பதற்கும் தேவையான கண், வாய், மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளன. பூச்சிகளுக்கு மூக்கும் காதும் தனியாக இருக்காது. உணர்கொம்புகள்தான் மூக்கும், காதும் செய்ய வேண்டிய வேலையைச் செய்கின்றன. இந்த உணர்கொம்புகள்தான் எதிரிப் பூச்சிகளிடமிருந்து தப்பித்துப் போகவும், அடுத்தப் பூச்சிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.

அடுத்தது மார்பு. பூச்சிகள் நடந்து போவதற்கான கால்கள் மார்பு பகுதியிலிருந்துதான் தொடங்குகின்றன. பூச்சிகளின் மார்பையே முன் மார்பு, நடு மார்பு, பின் மார்பு என மூன்று வகையாகப் பிரிக்கலாம். முன் மார்பில் இரண்டு, நடு மார்பில் இரண்டு, பின் மார்பில் இரண்டு என ஆறு கால்கள் இருக்கின்றன. நடு மார்பு மற்றும் பின் மார்பு ஆகியவற்றின் மேல் பகுதியில் இரண்டு ஜோடி இறக்கைகள் உருவாகின்றன. மார்பை வைத்துத்தான் ஓர் இடத்திலிருந்து அடுத்த இடத்துக்குப் பூச்சிகளால் நடந்தோ அல்லது பறந்தோ போக முடியும்.

அடுத்தது வயிறு. உணவு செரிமானம், கழிவுப் பொருள்களை வெளியேற்றும் பணி, ரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என அனைத்து மண்டலங்களும் வயிற்றுப் பகுதியில்தான் இருக்கின்றன.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...

இத்தனை பகுதிகளையும் வைத்துக்கொண்டு, எந்தப் பகுதியில் அமர்ந்தால் எதிர்காலச் சந்ததிக்குத் தேவையான உணவு கிடைக்கும், முட்டையை எப்படிப் பாதுகாப்பாக இட முடியும் என்பதில்தான் பூச்சிகள் கவனமாக இருக்கும். முட்டையை ஒவ்வொரு பூச்சியும் எங்கே வைக்கின்றன என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமாக இருக்கும். பூச்சிகள், தாவரத்தின் எந்தப்பகுதியில் எங்கு முட்டை இடுகின்றனவோ, அந்தப்பகுதிதான் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களின் உணவு. காய்ப்புழுக்களின் தாய்ப் பூச்சிகள் காயின் மேல் முட்டை வைக்கின்றன. அந்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், காய்க்குள் போய்ச் சாப்பிடுகின்றன அல்லது காயின் மேல் பகுதியைச் சாப்பிடுகின்றன. அதேபோலத்தான் பூக்களில் இடப்படும் முட்டையிலிருந்து வரும் புழுக்கள், பூவைச் சாப்பிடுகின்றன. வேரில் இடப்படும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் வேரை அரித்து உண்கின்றன. இப்படித் தங்கள் வாரிசுகளுக்காக உணவு இருக்கும் இடத்தைத் தேர்வு செய்பவை, தாய்ப்பூச்சிகள்தான்.

பூச்சிகளின் புழுப்பருவம் ஓரிடத்திலும் அவற்றின் வாழ்க்கை முறை ஒரு விதத்திலும் இருக்கும். தாய்ப்பூச்சிப்பருவம் வேறு ஓரிடத்திலும் அவற்றின் வாழ்க்கை முறை வேறு ஒரு விதத்திலும் இருக்கும். ஆனால், இந்த இரண்டு வாழ்க்கை முறைகளும் தாவரங்களைச் சார்ந்துதான் இருக்கின்றன.

தாவரங்கள் பூச்சிகளைக் கவர்வதும் பூச்சிகள் தாவரங்களைத் தேர்வு செய்வதும்தான் அவற்றுக்கிடையிலான தொடர்பு. இந்தத் தொடர்பை வைத்துத்தான் ஒரு தாவரம் பூச்சிக்கான எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது பாரம்பர்ய ரகங்கள் அனைத்துமே பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறனுள்ள தாவரங்கள். ஆனால், வீரிய ஒட்டு ரகங்கள் அப்படியல்ல. இவை மகசூலை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் பூச்சிகளுக்கான எதிர்ப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பெரும்பாலான பயிர் ரகங்கள், தற்போது எதிர்ப்புத்திறனை முழுவதும் இழந்துவிட்டன.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதுபோல வீரிய ஒட்டு ரகங்களுக்கு இடுபொருள்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறோம். அதனால், பயிர்கள் தளத் தளவென வளர்கின்றன. ‘கொழு கொழு’வென இருக்கும் குழந்தைகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச நாம் ஆசைப்படுவதைப் போல... பச்சை நிறமுள்ள பயிர்களைப் பார்க்கும்போது பூச்சிகள், புழுக்களின் வாயும் பரபரவென இருக்கும்.

இப்படித்தான் வீரிய ஒட்டு ரகங்கள், பூச்சிகளுக்கான உணவு விடுதிகளாக மாறிப்போயின. முற்காலத்து நெல் ரகங்களின் பயிரைக் கையில் பிடித்து இழுத்தால், கரும்புசோகைபோலக் கையைக் கிழித்துவிடும். ஆனால், இப்போதைய நெல் ரகங்களின் இலையைக் கையில் இழுத்துப் பாருங்கள். இலை மிருதுவாக இருக்கும். வீரிய ஒட்டு ரகங்களில் இந்த மரபியல் ரீதியான மாற்றங்கள் உருவாகிவிட்டன. இதனால், இலைக்கு மேலே உள்ள முள் போன்ற சொனைப்பகுதி மறைந்து போய்விட்டது. இதனால், புழுக்களால் எளிதாக அந்த இலையை மென்று தின்ன முடிகிறது. அதனால்தான், வீரிய ஒட்டு ரகங்களில் மிகச் சுலபமாகச் சொகுசாக அமர்ந்துப் பூச்சிகள் முட்டைகளை இடுகின்றன.

-அறிவோம்

நீ.செல்வம் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...