Published:Updated:

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

1 ஏக்கர் 40 சென்ட்... 10 மாதங்கள்.. ரூ. 5 லட்சம்...மகசூல்

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

1 ஏக்கர் 40 சென்ட்... 10 மாதங்கள்.. ரூ. 5 லட்சம்...மகசூல்

Published:Updated:
மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

மிழர்களின் மாலைநேரச் சுவையான சிற்றுண்டிகளில் ஒன்று, அவித்த மரவள்ளிக்கிழங்கு. குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு... எனப் பல பெயர்களில் வட்டார வாரியாக அழைக்கப்படும் இக்கிழங்கு கேரள மக்களின் முக்கிய உணவு. இக்கிழங்கில் பல்வேறு சத்துகள் நிறைந்திருப்பதால், மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன. 

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

அதோடு கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்றவை தயாரிக்க இக்கிழங்கு மூலப்பொருளாக இருப்பதால், இக்கிழங்குக்கு எப்போதுமே சத்தான சந்தை வாய்ப்பு இருக்கிறது. அதனால், விவசாயிகள் பலரும் விரும்பி இக்கிழங்கைச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவர் இயற்கை முறையில் மரவள்ளிக்கிழங்கைச் சாகுபடி செய்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரம் எனும் கிராமத்தில்தான் இருக்கிறது, பாலகிருஷ்ணனின் தோட்டம். ஒரு முற்பகல் வேளையில், பாலகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம். “எங்க குடும்பம், பாரம்பர்ய விவசாயக் குடும்பம். அப்பா காலத்துல நெல், பருத்தினு சாகுபடி செய்தாங்க. அரசாங்கம், ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை அறிமுகப்படுத்தின சமயத்துல நாங்களும் அதுக்கு மாறிட்டோம். பக்கத்து நிலத்துக்காரர், ஒரு மூட்டை உரம் போட்டார்னா... நான் ஒன்றரை மூட்டை உரத்தைப் போடுவேன். அந்த மாதிரிப் போட்டி போட்டு அதிகமா உரம் பயன்படுத்துறதையே பெருமையா நினைப்பேன். அதே கதைதான் பூச்சிக்கொல்லிக்கும். வேற வேற பூச்சிக்கொல்லிகளை ஒண்ணாக் கலந்து அடிச்சும் இன்னிக்கு வரை பூச்சிகளை ஒழிக்க முடியலைங்கிறது தான் உண்மை. அதிகமா உரத்தைக் கொட்டிக் கொட்டி மண்ணே கட்டாந்தரை மாதிரி ஆயிடுச்சு. வருசா வருஷம் செலவுகளும் கூடிக்கிட்டே போக ஆரம்பிச்சுடுச்சு. ஒருகட்டத்துல மகசூலும் இல்லாம செலவும் கட்டுப்படி ஆகாம, விவசாயம் பாக்குறதையே நிறுத்தி வெச்சுட்டேன்.

நான், ‘ஆனந்த விகடன்’ புத்தகத்தை ரொம்ப வருஷமாகப் படிச்சுட்டுருக்கேன். அதுலதான் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பத்தின அறிவிப்பு வந்துச்சு. அதோட அதுக்கு முன்னோட்டமா இயற்கை விவசாயம் பத்தின கட்டுரைகளும் வர ஆரம்பிச்சது. அதனால, பசுமை விகடனை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அது வெளிவந்ததுல இருந்து இப்போ வரைக்கும் வாசிச்சுட்டு இருக்கேன். முதல் புத்தகத்துல இருந்து பசுமை விகடனைப் பத்திரப்படுத்தி வெச்சுருக்கேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

இயற்கை விவசாய முறை, மண்ணை வளப்படுத்துற முறை, மண்ணுக்கு ஏற்ற பயிர்கள்னு ஒவ்வொரு விஷயமா முழுசாகப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட பிறகுதான் இயற்கை விவசாயத்துல இறங்கினேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன பாலகிருஷ்ணன் தொடர்ந்தார்...

“மண்ணை இயற்கைக்கு மாத்தி வளப்படுத்துறதுக்கு மட்டுமே ஒரு வருஷம் எடுத்துக்கிட்டேன். மொத்தம் பத்து ஏக்கர் நிலம் இருக்கும். இயற்கைக்கு மாறினதும் முதல்ல நெல் சாகுபடி செய்தேன். அதுல கணிசமான மகசூல் கிடைச்சது. தொடர்ந்து, வாழை, கொய்யா, தென்னைனு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். இப்போ 2 ஏக்கர் நிலத்துல நாடன், ரஸ்தாளி, சக்கை (பஜ்ஜி வாழை) மூணு ரகத்தையும் நடவு செஞ்சுருக்கேன். மரங்களுக்கு 6 மாச வயசாகுது. 2 ஏக்கர் நிலத்துல கொய்யா இருக்கு. அதுல மகசூல் கிடைச்சுட்டுருக்கு. ஒன்றரை ஏக்கர் நிலத்துல மரவள்ளிக்கிழங்கு போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. மீதமுள்ள நிலத்தைக் காய்கறிச் சாகுபடிக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கேன். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள்னு பயன்படுத்திதான் சாகுபடி செய்துட்டுருக்கேன்.

முதல் முறையா மரவள்ளிக்கிழங்கை இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பார்த்தேன். மரவள்ளிக்கிழங்கு நல்லா விளைஞ்சு வந்து, மகசூலும் அதிகமாகக் கிடைச்சுருக்கு” என்ற பாலகிருஷ்ணன் நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

“மொத்தம் ஒன்றரை ஏக்கர் நிலத்துல மரவள்ளிக் கிழங்கு போட்டிருந்தேன். அதுல 10 சென்ட்ல மட்டும் அறுவடை செய்யாம விட்டுட்டு மீதியை அறுவடை செஞ்சுட்டேன். அதுல 50,148 கிலோ கிழங்கு கிடைச்சது. இன்னும் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்திருந்தா 10,000 கிலோவுக்கு மேல கூடுதலா மகசூல் கிடைச்சுருக்கும்.

அறுவடைக்கு முன்னாடியே ஒரு கிலோ கிழங்குக்கு 10 ரூபாய்னு விலைபேசி நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு வியாபாரிகிட்ட குத்தகைக்கு விட்டுட்டேன். அவரே அறுவடை பண்ணி எடுத்துக்கிட்டு எடை போட்டு எனக்குப் பணம் கொடுத்துட்டார். அந்த வகையில 50,148 கிலோ கிழங்கு விற்பனை மூலமா, 5,01,480 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுவரைக்கும் ஆன, மொத்த செலவு 48,000 ரூபாய் போக, 4,53,480 ரூபாய், நிகர லாபம். அறுவடை செய்யாம விட்டுருக்குற 10 சென்ட் நிலத்துல கிட்டத்தட்ட 3,500 கிலோ அளவுக்குக் கிழங்கு கிடைக்கும்.

இதை, வீட்டுத்தேவைக்குப் போக மீதியை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன். அதோட மதிப்பு 35,000 ரூபாய். இதுவும் லாபக்கணக்குலதான் சேரும்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு பாலகிருஷ்ணன், செல்போன்: 97915 01782

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

யற்கை முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்குச் சாகுபடி செய்யும் முறை குறித்து பாலகிருஷ்ணன் சொல்லிய விஷயங்கள் பாடமாக இங்கே...

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு... செம்மண், கரிசல் மண் ஆகியவை ஏற்றவை. களிமண், வண்டல் மண் போன்றவை ஏற்றவையல்ல. இதன் மொத்த சாகுபடிக்காலம் 10 மாதங்கள். இதை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் என்றாலும்... கார்த்திகை, மார்கழிப் பட்டங்கள் சிறந்தவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு வார இடைவெளியில் 3 முறை நன்கு உழ வேண்டும். பிறகு ஒரு வாரம் கழித்து 10 டன் தொழுவுரத்தைக் கொட்டிப்பரப்பி ஓர் உழவு செய்ய வேண்டும்.

3 முதல் 5 கணுக்கள் உள்ள விதைக் குச்சிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். விதைக் குச்சிகளைப் பெரும்பாலும் விவசாயிகள் யாரும் விற்பனை செய்வதில்லை. இலவசமாகத்தான் கொடுக்கிறார்கள். அதை வாங்கிய பிறகு, 20 லிட்டர் பஞ்சகவ்யாவில், 250 கிராம் அசோஸ்பைரில்லம், 250 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, அக்கலவையில் விதைக்குச்சியின் முனையை மூழ்க வைத்து நிழலில் 15 நிமிடங்கள்வரை உலர்த்திக்கொள்ள வேண்டும்.

வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு விதைநேர்த்தி செய்த விதைக் குச்சிகளை ஊன்ற வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்துக்கேற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதும். விதைத்த 7-ஆம் நாளுக்கு மேல் முளைப்பு தெரியும். 30-ஆம் நாளில் களை எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரம் வைத்து மண் அணைக்க வேண்டும். அந்தச் சமயத்தில் விதைக் குச்சிகள் முளைக்காத இடங்களில் புதிய குச்சிகளை ஊன்ற வேண்டும்.

45-ஆம் நாள், செடிகளில் நடுக்கிளையை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளைகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து பக்க கிளைகளை அகற்றிக்கொண்டே வர வேண்டும். பக்க கிளைகள் வளர்ந்தால் கிழங்கு பெருக்காது. 60-ஆம் நாளில் களை எடுத்து... 200 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 90-ஆம் நாளில் களை எடுத்து ஒவ்வொரு செடியின் தூரிலும் இரண்டு கைப்பிடி அளவு மண்புழு உரம் வைக்க வேண்டும். 120-ஆம் நாளில் களை எடுத்து... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நிலம் முழுவதும் தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்கள் தென்பட்டால்... 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து 7 நாள்கள் இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும். 10-ஆம் மாதத்துக்கு மேல் இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் காணப்படும். இப்படி இருந்தால், அவை அறுவடைக்கான அறிகுறிகள். அடுத்த விதைப்புக்கு நம்மிடம் உள்ள செடிகளிலிருந்தே விதைக் குச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

நாற்றாக நடவு செய்தால் 9 மாதத்தில் அறுவடை...

ரவள்ளிக்கிழங்கு குறித்து ஏத்தாப்பூர் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானியும் உதவி பேராசிரியருமான கவிதாவிடம் பேசினோம். “மரவள்ளியின் பூர்வீகம் பிரேசில். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக மரவள்ளி சாகுபடியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் விளையும் மரவள்ளியில் 80 சதவிகிதம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. தண்ணீர் பற்றாக்குறையுள்ள விவசாயிகள் மரவள்ளிச் சாகுபடியைத் தாராளமாக மேற்கொள்ளலாம். மரவள்ளியில் ஸ்டார்ச் சத்து அதிகமாக இருக்கிறது. அதனால், உணவுப் பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி!

தற்போது ஏத்தாப்பூர் ஆராய்ச்சி நிலையம் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் ஏத்தாப்பூர்-1 (YTP-1) என்ற ரகம் ஏக்கருக்கு சராசரியாக 18 டன் விளைச்சல் கிடைக்கும். மரவள்ளிக் கிழங்கின் சாகுபடி காலம் 10 மாதங்கள்.

அதேபோன்று நடவுக்கு நேரடியாகக் குச்சிகளைப் பயன்படுத்தாமல், அறுவடை முடிந்தவுடன் தனியாக குச்சிகளைக் கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்து நடலாம். இந்த நாற்றுகளைத் தயார் செய்யும்போதே நடவுக்கான வயலையும் தயார் செய்துவிட்டால், மரவள்ளிக் கிழங்குச் சாகுபடியில் ஒரு மாதத்தை மிச்சப்படுத்தி, அதாவது 8-9 மாதங்களில் விளைச்சல் எடுத்துவிடலாம்.  பெரும்பாலும் பூச்சித் தாக்குதல் இருக்காது. ஆனால், மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்க வாய்ப்புண்டு. இதற்கு ஒரு ஏக்கருக்கு 100 ஒட்டுண்ணிகளை (அசிரோபேக்டர் பப்பாயே) விட வேண்டும். பதினாறு நாள்களில் ஒரு ஏக்கரில் விடப்பட்ட 100 ஒட்டுண்ணிகள் சுமார் 5,000 ஒட்டுண்ணிகளாக இனவிருத்தி அடைந்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும். ஒட்டுண்ணிகளை விடுவித்த பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வெண்டும்.

அதேமாதிரி தேமல் நோய் தாக்குதல் இருப்பின், இந்த நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடைய கோ- 3, கோ-4 ரகங்களை பயிரிடலாம். நோய்த் தாக்குதல் இல்லாமல் சாகுபடி மேற்கொள்ள வேண்டுமென்றால், நோய்த்தாக்காத செடிகளிலிருந்து கரணைகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். மரவள்ளிச் சாகுபடி சம்பந்தமாக வேறெந்த சந்தேகம் வேண்டுமென்றாலும் ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுகலாம்” என்றார்.

தொடர்புக்கு, மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் – 636 119. சேலம் மாவட்டம். தொலைபேசி: 04282 293526  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism