புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் பகுதியில் இயங்கி வருகிறது, ‘தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம்’. கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், வம்பன்-1, வம்பன்-2,
வம்பன்-3 ஆகிய பாசிப்பயறு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம்... வம்பன்-4 என்ற பாசிப்பயறு ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறது, தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம். இந்த ரகம், வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து அதிக விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.

இந்த ரகம் குறித்து, ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப்பேராசிரியர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “பயறுவகைப் பயிர்களில் பாசிப்பயறு முக்கியமானது. இந்தியாவில் இதற்கு அதிக தேவை உள்ளது. ஆனால், தேவையான அளவுக்கு உற்பத்தி இல்லை. அதனால், வெளிநாடுகளிலிருந்து பாசிப்பயறு இறக்குமதியாகிறது. இந்தியாவில் பெரும்பாலும் மானாவாரிப் பயிராகத்தான் பாசிப்பயறு சாகுபடி செய்யப்படுகிறது. பாசிப்பயற்றின் மொத்தச் சாகுபடிப்பரப்பில், 10.8 சதவிகித அளவுதான் இறவையில் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரியில், ஒரு ஹெக்டேருக்கு 300 கிலோ அளவில்தான் மகசூல் கிடைக்கும். அதனால், பாசிப்பயற்றைப் பெரும்பாலும் யாரும் தனிப்பயிராகச் சாகுபடி செய்யாமல் ஊடுபயிராகத்தான் சாகுபடி செய்கிறார்கள். அதனால்தான் நம் நாட்டில் பாசிப்பயறு உற்பத்தி குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில், இதன் உற்பத்தியைப் பெருக்கும் விதமாக, கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு கடும் கோடையிலும் அதிக விளைச்சல் தரக்கூடிய வம்பன்-4 ரகத்தை அறிமுகம் செய்துள்ளோம். இது ஒரு ஏக்கருக்கு 450 கிலோ முதல் 500 கிலோ வரை மகசூல் கொடுக்கக்கூடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாசிப்பயற்றை ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் தைப்பட்டத்தில் சாகுபடி செய்வது, வழக்கம். சித்திரைப்பட்டத்தில் போதிய அளவு மழை கிடைக்காது என்பதால், பாசிப்பயற்றைச் சாகுபடி செய்ய முடிவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு சித்திரைப்பட்டத்தில் சாகுபடி செய்யும் வகையில், இந்தப் புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. சித்திரைப் பட்டத்தில் பாசன வசதியுள்ள நிலங்களில் இறவைப்பயிராகச் சாகுபடி செய்ய உகந்தது, இந்த ரகம். இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. வழக்கமான ஆடி, புரட்டாசி மற்றும் தை ஆகிய பட்டங்களிலும், இதைச் சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய ஏற்ற ரகம் இது” என்ற ராமகிருஷ்ணன், வம்பன்-4 ரகப் பாசிப்பயற்றைச் சாகுபடி செய்யும் விதம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“களிமண், செம்மண் உள்ளிட்ட அனைத்து வகையான மண்ணிலும் வம்பன்-4 ரகப் பாசிப்பயற்றைச் சாகுபடி செய்யலாம். களர் மற்றும் உவர் நிலத்திலும் இது நன்கு விளையும். இறவையில் சித்திரைப்பட்டத்தில் சாகுபடி செய்பவர்கள், ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து மே 15-ஆம் தேதிக்குள் விதைத்துவிட வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 8 கிலோ விதை தேவை. ஆறிய அரிசிக் கஞ்சியில் தலா 200 கிராம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து... அக்கலவையில் விதைகளைக் கொட்டி நன்கு பிசைந்து எடுத்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். பிறகு 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழ வேண்டும். பிறகு 5 டன் எருவைக் கொட்டி ஓர் உழவு செய்து, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர், செடிக்குச் செடி 10 சென்டிமீட்டர் என்ற இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 விதைகள் வீதம் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 3-ஆம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுத்துவந்தால் போதும். எப்போதும் மண்ணில் ஈரம் இருக்குமாறு தண்ணீர் கொடுத்து வர வேண்டும். பூக்கும் பருவம் முதல் காய்கள் முற்றும் பருவம்வரை நிலம் காய்ந்துவிடக் கூடாது. அவ்வப்போது, களைகளை அகற்றி வர வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரங்களை இட வேண்டும்.

இந்த ரகம், பலமுறை பூக்கும் திறன் கொண்டது. காய்கள் வெடிக்காது. 60-ஆம் நாளுக்கு மேல் 70-ஆம் நாளுக்குள் 5 நாள்கள் இடைவெளியில் காய்களைப் பறிக்க வேண்டும். காய்கள் முற்றிலும் முதிர்வு அடைந்த 70-ஆம் நாள் (கடைசி அறுவடை) அறுவடையின்போது, தரை மட்டத்துக்குச் சற்று மேல் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். மண்ணுக்குள் உள்ள வேர் முடிச்சுகள் மண் வளத்தைப் பெருக்க உதவும்” என்ற ராமகிருஷ்ணன் நிறைவாக,
“ஒரு செடியில் சராசரியாக 45-60 காய்களும், ஒரு காயில் சராசரியாக 10-13 விதைகளும் காணப்படும். ஒரு ஏக்கருக்கு 450-500 கிலோ அளவில் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பாசிப்பயற்றுக்கு 70 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்க வாய்ப்புண்டு” என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு: ப.ராமகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம். தொலைபேசி: 04322 296447, செல்போன்: 96005 40870
கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

இயற்கைத் தொழில்நுட்பம்!
பல ஆண்டுகளாகப் பயறுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்துவரும் ‘தேனாம்படுகை’ பாஸ்கரன், இயற்கை முறையில் ஒரு ஏக்கர் பரப்பில், பாசிப்பயறுச் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். “விதைநேர்த்தி செய்ய ஆறிய சோற்றுக்கஞ்சி மற்றும் உயிர் உரங்கள் கலந்த கலவையில் 100 மில்லி பஞ்சகவ்யாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தில் விதைத்த 15-ஆம் நாள், 1 லிட்டர் பஞ்சகவ்யாவை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ஆம் நாள், 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ஆம் நாள் பூப்பூக்கும் தருணத்தில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பூப்பூக்கும் திறன் அதிகரிப்பதோடு, காய்கள் நன்கு திரட்சியாக இருக்கும். பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் 130 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் ஐந்திலைக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்” என்ற ஆலோசனையைச் சொன்னார்.
தொடர்புக்கு: ‘தேனாம்படுகை’ பாஸ்கரன், செல்போன்: 94428 71049