Published:Updated:

முன்பு விவசாயி; இப்போது ஆசான்... இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் சுப்பு!

விபத்தில் கை விரல்கள் போனாலும், கடைசி வரை இயற்கை விவசாயத்திற்கு உதவுவதே தனது இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறார். இவருக்கு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒன்று விரைவில் 'இயற்கை உரச் செம்மல்' பட்டம் கொடுத்து கௌரவிக்கவிருக்கிறது.

முன்பு விவசாயி; இப்போது ஆசான்... இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் சுப்பு!
முன்பு விவசாயி; இப்போது ஆசான்... இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் சுப்பு!

ம்மாழ்வார் எனும் ஒரு வார்த்தை தமிழகம் தாண்டி, உலக மக்களால் உச்சரிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கும், உரங்களுக்கும் எதிராக நஞ்சில்லா உணவுகள் பற்றி உலக மக்களுக்கு உறக்க சொன்னவர். அவர் தனக்குப் பின்னால் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்க பலரையும் உருவாக்கித்தான் சென்றிருக்கிறார். அப்படி விட்டுச் சென்ற பல நபர்களில் முக்கியமானவர், முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு. 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு எனும் கிராமத்தில் இருக்கிறது, முன்னோடி இயற்கை விவசாயி சுப்புவின் பண்ணை. இடுபொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இயற்கை விவசாயி சுப்புவை சந்தித்துப் பேசினோம். "காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில இருக்குற தண்டலம் கிராமம்தான் என்னோட சொந்த ஊர். எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சிருக்கேன். அம்பத்தூர்ல இருக்குற டயர் கம்பெனியில வேலை செய்துக்கிட்டிருந்தேன். வேலையில இருக்கும்போது ஒரு நாள் இரவுப் பணியில என்னோட வலது கையில இருக்குற 5 விரல்களும் இழந்துட்டேன். ஆனாலும் வேலையை தொடர்ந்து செஞ்சேன். 37 வருஷ பணி அனுபவத்துக்கு பின்னால ஓய்வு கொடுத்துட்டாங்க. அப்புறமா சொந்த ஊருக்கு வந்து விவசாயம் சம்பந்தமான வேலைகள் செய்துக்கிட்டிருக்கேன். 1986-ம் வருஷம் என்னை ஊராட்சி மன்ற தலைவரா மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அப்போ மக்களுக்கு சேவை செய்ய கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சது. அப்புறமா 1999-ம் வருஷம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துல பஞ்சகவ்யா உரம் பற்றின கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்துக்குப் பின்னால சொந்த ஊருக்கே வந்து உரக்கடை வச்சேன். அப்போதான் இயற்கை உரங்கள் வர ஆரம்பிச்சது. கொஞ்ச நாளைக்கு அப்புறமா அந்தக் கடைய மூடிட்டேன். கொஞ்ச நாள்ல குடும்ப சூழல் காரணமா சொந்த ஊரை விட்டு வெளியேறிட்டோம். அப்புறமா பசுமை விகடன் 2007-ம் வருஷம் ஈரோட்டுல நடத்துன இயற்கை விவசாய மாநாட்டுல கலந்துக்கிட்டேன். அப்போதான் சுபாஷ் பாலேக்கரை நேர்ல பார்த்தேன். அப்புறமா பஞ்சகவ்யா உரத்தை கண்டுபிடிச்ச டாக்டர் கொடுமுடி நடராஜனுக்கு விழா எடுத்தாங்க. அப்போதான் நம்மாழ்வாரைச் சந்திச்சு பேசுனேன். அவரும் நல்லா பேசினார். அப்போ அவர்கூட தொடங்கின பயணம் எனக்கு பல பாடங்களைக் கத்துக் கொடுத்திருக்கு.

நம்மாழ்வார் ஐயா மூன்று விஷயத்தை அடிக்கடி சொல்வார். உடல் ஆரோக்கியம் நீரையும், மண்ணையும் காக்கணும். இந்த இரண்டையும் காக்குறப்போ சுற்றுப்புறம் தூய்மையா மாறி இயற்கை பழைய நிலைக்குத் திரும்பும். இதுதான் அவரோட முக்கியமான கொள்கையா இருந்தது. மண்ணை வளப்படுத்த ரசாயன உரங்களைத் தவிர்த்துட்டு இயற்கை உரங்களை உபயோகப்படுத்தணும். தொழில்நுட்பங்களை அதிகமா பயன்படுத்தணும். நம்மாழ்வார் ஐயா என்னைக்குமே தொழில்நுட்பத்துக்கு எதிரியா இருந்தது இல்ல. லாபம் தர்ற இடுபொருட்களை அதிகமான விவசாயிகள் பயன்படுத்தணும். சாதாரணமா ஒரு வயலைப் பார்க்கும் போது விவசாயிகள் கிட்ட உடனே யோசனை சொல்லுவார். அப்படி அவர் அடிக்கடி சொன்ன தொழில்நுட்பங்களை கடைபிடிச்சு இயற்கை உரங்களைத் தயார் செய்துகிட்டு வர்றேன்" என்கிறார், சுப்பு.

11 வகையான இடுபொருட்களைத் தயார் செய்து கொடுத்து வருகிறார். மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் பற்றி ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு இயற்கை விவசாய ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். இவரது தோட்டத்தில் தயாராகும் இயற்கை உரத்தைக் குறைவான விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்து உதவி வருகிறார். அதைத் தனது வீட்டுச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் இவர், பல விவசாயிகளை இயற்கையின் பக்கம் திருப்பியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இவருக்காக இயற்கை விவசாய பிரிவை தனியாக அமைத்து பயிற்சி கொடுக்க வைத்தது. இயற்கை விவசாய கூட்டங்களில் யாராவது ரசாயன உரங்களைப் பற்றி பேசினால் மேடையிலேயே அவரை வறுத்தெடுக்கும் அஞ்சாத குணம் கொண்டவர். இதுவரை இவர் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று ஆலோசனைகளைக் கொடுத்து இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார். இவரது வீட்டைச் சுற்றிலும் தொழு உரம், மண்புழு உரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். சுற்றுப்புறத்தில் இருக்கும் விவசாயிகள் இவரது வீட்டுக்கு வந்துபோனால் இயற்கை உரங்களைக் கொடுத்து வழியனுப்பும் பழக்கம் கொண்டவர்.

விபத்தில் கை விரல்கள் போனாலும், கடைசி வரை இயற்கை விவசாயத்திற்கு உதவுவதே தனது இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறார். கடைசிக் காலகட்டத்தில் ஏழ்மை நிலையில் இருந்தாலும், தனது பணத்தேவையை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் அளிப்பதன் மூலம் தானே நிறைவேற்றிக் கொள்கிறார். இவருக்கு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒன்று விரைவில் 'இயற்கை உரச் செம்மல்' பட்டம் கொடுத்து கௌரவிக்கவிருக்கிறது.