Published:Updated:

மழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள்

மழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள்
மழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள்

விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையின்றி பூக்கள் எல்லாம் கருகி கீழே விழுந்ததால் விளைச்சல் இல்லாமல் மா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7500 ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்பட்டுள்ளது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகள் பெரும்பாலும் மா விவசாயத்தையே நம்பியுள்ளன. இதில் 60 சதவீதம் சப்பட்டை, 30 சதவீதம் பஞ்சவர்ணம், 10 சதவீதம் நீலம் உள்ளிட்ட ரகங்களே உள்ளன.கடந்த நவம்பர் மாதம் மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியது. ஆனால் போதிய அளவு மழை பெய்யாமல் வறட்சியால் பூக்கள் முழுவதும் கருகி கீழே உதிர்ந்துவிட்டன. சில இடங்களில் மா மரங்களும் கூட முழுவதுமாக கருகிவிட்டன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மம்சாபுரத்தை சேர்ந்த சிவா என்ற விவசாயி கூறும்போது, குத்தகைக்கு 10 ஏக்கர் மா விவசாயம் செய்து வருகிறோம். கார்த்திகை மாதம் பூ பூக்கத் தொடங்கியது. மரங்களில் கொத்து கொத்தாக பூக்கள் இருந்தன. பார்க்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்போது நிலையே மாறிவிட்டது. போதிய மழை இல்லாததால் பூக்கள் எல்லாம் கருகி அப்படியே கீழே விழுந்துவிட்டன. பூவாக இருந்த மரங்களில் எல்லாம் இப்போது குச்சிகளை மட்டுமே பார்க்க முடிகிறது. கார்த்திகையில் இருந்து இதுவரை 4 முறை உழவு செய்துள்ளோம்.

ஒருமுறை உழுவதற்கு மட்டும் 4000 ரூபாய் செலவாகும். உரம், மருந்து செலவு, கூலி என எல்லாம் சேர்த்து இதுவரை 3 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் என்பதே சுத்தமாக இல்லை. இந்த வருஷம் மாதிரி எப்போதும் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. எம்.சி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் பார்க்க வந்தேன். ஆனால் இப்படி இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த கனிமா என்ற விவசாயி கூறும்போது, குத்தகைக்கு ஐந்தரை ஏக்கரில் மா விவசாயம் செய்து வருகிறோம். இப்போது மழை பெய்யும். அப்போ மழை பெய்யும் என எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம். மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது. பேருக்கு பிஞ்சு கூட இல்லை. ஐந்தரை ஏக்கரில் பேரப்பிள்ளைகள் சாப்பிட ஒரு கிலோ பழம் தான் கிடைக்கும். விளைச்சல் இல்லாததால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றே தெரியவில்லை என வேதனையோடு தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை மட்டும் சரியாக பெய்திருந்தால் இப்போது மாங்காய்களும், ஏப்ரல் மாத கடைசியில் மாம்பழங்களையும் பார்த்திருப்போம். ஆனால் இப்போது பூக்களும், பிஞ்சும், காயும் இல்லாத வெறும் மரங்களை மட்டும் தான் பார்க்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.