Published:Updated:

``விவசாயம் பண்ணத்தான் சிங்கப்பூர் வேலையை விட்டேன்!" - ஒரு `செம' விவசாயியின் கதை

சிறு விவசாயிகளுக்கு 8,00,000 பெரிய தொகை என்று நான் புரிந்து கொண்டாலும், அதை அரசு மானியங்கள் மூலம் மானிய நிதியாகப் பெற்று பயன்படுத்த ஊக்குவிக்கிறேன்.

``விவசாயம் பண்ணத்தான் சிங்கப்பூர் வேலையை விட்டேன்!" - ஒரு `செம' விவசாயியின் கதை
``விவசாயம் பண்ணத்தான் சிங்கப்பூர் வேலையை விட்டேன்!" - ஒரு `செம' விவசாயியின் கதை

சிங்கப்பூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் 14 ஆண்டுவரை வேலை பார்த்துவந்தவர், விஜய் எல்மல்லி (Vijay Yelmalle). 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சிங்கப்பூர் போனவர் 2013-ம் ஆண்டு தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி விட்டார். தன் சொந்த நிலத்தைத் திரும்ப வாங்க முடியாமல் போனாலும், ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் மீன் வளர்ப்புப் பக்கம் தன்னுடைய விவசாய உத்திகளைத் திருப்பினார். அதில் வெற்றியும் கண்டார். இப்போது அதன் மூலமாக விவசாயிகளுக்குப் புத்துயிர் கொடுத்து வருகிறார்.

``அப்போது எனக்கு 8 வயது. கர்நாடக - மகாராஷ்டிர எல்லையில் இருக்கும் அதானி பகுதியில் இருந்த எங்கள் விவசாயப் பண்ணையை என் பெற்றோர் விற்றுவிட்டு மும்பைக்குக் குடிபெயர்ந்து விட்டனர். நான் வாழ்வில் வெற்றிபெற்ற பின்னர் மீண்டும் அந்த நிலத்தை வாங்குவேன் என முடிவு செய்திருந்தேன். ஆனால் முடியவில்லை. இருந்தாலும் அந்த நிலத்தின் மீது ஏக்கம் கொள்ளாமல் என்னால் முடிந்த விவசாய உத்திகளைக் கடைபிடித்து லாபம் பெற்றேன். இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி நான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். இதற்கு முக்கியமான காரணிகளுள் ஒன்று. நிலையான வேளாண்மை மற்றும் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான். இந்தத் தற்கொலைகளில் சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன்" என்று ஒரு பேட்டியில் விஜய் எல்மல்லி எனும் விவசாயி சொல்லியிருக்கிறார்.

இப்போதுள்ள வேளாண்மைக்கு மாற்றாக மும்பையிலுள்ள நவி பகுதியில் 100 சதுர அடியில் மாடியில் தொடங்கியிருக்கிறது, விஜய்யின் பயணம். அதனுடைய வெற்றியின் உந்துதல் ராய்காட்டில் 15 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு வழிவகுத்தது. விஜய் முதல்கட்டமாக நகர்ப்புற விவசாய ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்க மாற்றுத் தொழில்துறை மையத்தை நிறுவினார். அம்மையத்தில் முழுவதும் ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் மீன் வளர்ப்பு பற்றிய உத்திகளை சொல்லிக் கொடுத்தார்.

விஜய்யின் மொட்டை மாடியில் உள்ள 150 சதுர அடி ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டத்தில் ஓராண்டிற்கு 1.2 டன் காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார். அதனால் இப்பண்ணையை விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு ஓர் ஆய்வுப் பண்ணையாக மாற்றி பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பகட்ட விநியோகத்தில் இருக்கும் இந்தக் காய்கறிகளை இப்போது இலவசமாகக் கொடுத்து வருகிறார்.

``நம் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைக்கலாம். சிறிய பைப்புகள், பக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் வெறும் நீரை மட்டும் பயன்படுத்தி இச்செடிகளை வளர்க்கலாம். முதலில் விதைகளை மண் தொட்டிகளில் இட்டு வளர்க்க வேண்டும். அவை வேர் விட்டுச் செடியாக மாறியதும் அவற்றை எடுத்து, இந்தத் தண்ணீர் நிரப்பப்பட்ட பைப்புகள், பக்கெட்டுகளில் வைத்து வளர்க்க வேண்டும். இந்த ஹட்ரோபோனிக்ஸ் விவசாய முறை மூலம் 90 சதவீத நீரைச் சேமிக்க முடியும். ஏனென்றால் மூடப்பட்ட குழாயில் இருக்கும் துளைகள் வழியேதான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்னையும் இல்லை. இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. உரப் பயன்பாடு அற்றுப்போவதால் எந்த நோய்களும் ஏற்படுவது இல்லை. இதற்குச் செயற்கை நுண்ணுயிரிகளும், உயிர் உரங்களும் மிகவும் அவசியம். இவை பூமியில் வளர்க்கப்படும் செடிகளைவிட மிக வேகமாக வளரும் தன்மை கொண்டவை. அத்துடன் இந்தக் காய்கறிகள் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கின்றன. கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை அதிகமாக வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டை, புடலங்காய் உள்ளிட்டவையும், பூக்களில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்டவையும், புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும்கூட வளர்க்கலாம். ஆனால் இடம்தான் அதிகமான அளவில் தேவைப்படும். 

முழுச் செயல்முறையும் கவனமாகக் கையாள வேண்டும். ஊட்டச்சத்துகள் சரியான அளவில் கொடுக்கப்பட வேண்டும். சிறிது மாறினாலும் ஊட்டச்சத்துகள் செடிகளுக்குக் கிடைக்காமல் போய் மகசூல் குறையும் வாய்ப்புகள் உண்டு. இதனுடன் பசுமைக் குடில் அமைத்தால் இதை எளிதில் லாபகரமானதாக மாற்றலாம். இது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும். இது அமைக்க ஆகும் செலவு கொஞ்சம் குறைவு என்பதுதான் அவர்களுக்கான ஒரே ஆறுதல்" என்றவர் தனது நிலத்தினை சோதனைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ராய்காட்டில் உள்ள அவரது நிலத்தில் 300 சதுர மீட்டரில் இரண்டு குறைந்த விலையிலான அக்வாபோனிக் அலகுகளை அமைத்தார். ஒவ்வொரு யூனிட்டிற்கும் 8,00,000 ரூபாய் செலவானது. ஒரு முறை செய்த முதலீட்டால் ஆண்டுதோறும் நான்கு டன் மீன்கள் மற்றும் பத்து டன் பூச்சிக்கொல்லி இல்லாத காய்கறிகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன. 

அண்மையில், ஐ.சி.ஆர்.ஐ (இந்திய விவசாய வேளாண் ஆராய்ச்சி கழகம்) மற்றும் ஐ.ஏ.ஆர்.ஐ (இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்) நடத்திய அகில இந்திய வேளாண்மை ஸ்டார்டப் போட்டியின் கீழ் விரிவான காப்பீட்டிற்காக விஜய்யின் பண்ணை தேர்வாகியிருக்கிறது. ஹட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகளை வளர்க்கும்போது அத்துடன் கலந்து மீன்களையும் வளர்த்து வருகிறார், இவர். இந்த முறைக்குப் பெயர் அக்வாகல்சர் (aquaculture) என்பதாகும். மீன்களை ஊடாக வளர்ப்பதால், அவை நைட்ரஜன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
இம்முறை மண்சார்ந்த விவசாயத்தில் பத்தில் ஒரு பங்கு தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறது. மண் அடிப்படியிலான விவசாயத்தை ஒப்பிடும்போது வேலைச் சுமையைக் குறைக்கிறது. 

``சிறு விவசாயிகளுக்கு 8,00,000 பெரிய தொகை என்று நான் புரிந்து கொண்டாலும், அதை அரசு மானியங்கள் மூலம் மானிய நிதியாகப் பெற்று பயன்படுத்த ஊக்குவிக்கிறேன். கிராமப்புற இந்தியாவில் நேரடி மீன் வாங்குவதற்காக மக்கள் சைக்கிளில் 4 முதல் 5 கி.மீ பயணம் செய்கிறார்கள். எனவே, விவசாயி ஆண்டுக்கு 4,00,000 வரை சம்பாதிக்கலாம். அதற்கான திட்டங்களைத்தான் மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் காய்கறி வளர்ப்பு வாயிலாக விளக்கி வருகிறேன்" என்கிறார், விஜய் எல்மல்லி.