Published:Updated:

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

புறா பாண்டி - ஓவியம்: வேலு

‘‘எங்கள் வயலில் நூற்புழுக்கள் தாக்கியுள்ளதுபோலத் தெரிகிறது. இதை எங்கு கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும்?’’

ஆர்.உமா, திருவெண்ணெய்நல்லூர்.

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நூற்புழுவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பதில் சொல்கிறார்.

‘‘நூற்புழுக்களினால் ஏற்படுத்தப்படும் சேத அறிகுறிகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து மற்றும் நீர்ப் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருப்பதால் மண் மற்றும் பாதிக்கப்பட்ட செடிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. பெரும்பாலான நூற்புழுக்கள் செடியின் இளம் சல்லி வேர்களிலிருந்துதான் சாற்றை உறிஞ்சுகின்றன. எனவே, நூற்புழுக்கள் அதிகம் காணப்படும். செடியின் சல்லி வேர், வேரைச் சுற்றியுள்ள மண் மாதிரிகளைத்தான் சோதனைக்கு எடுத்து அனுப்ப வேண்டும். வாழையின் கிழங்கு பாகம், வெங்காயம் இவற்றில் அழுகல் தென்பட்டால், அவ்வாறு அழுகிக் கொண்டிருக்கும் பகுதிகளிலிருந்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து மண் வேர் மாதிரிகளுடன் அனுப்பலாம் (முழுவதும் காய்ந்த செடியிலிருந்தும், பொதுவாக ஆணி வேர் பகுதியையும் மாதிரியாக எடுக்கத் தேவை இல்லை).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

காய்ந்த மேல் மண்ணில் நூற்புழுக்களின் இயக்கம் குறைவு. எனவே மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் மேலாக உள்ள காய்ந்த மண்ணைச் சுமார் 1-3 செ.மீ கனத்திற்கு மண்வெட்டியால் (களைகொட்டு அல்லது கத்தியும் பயன்படுத்தலாம்) சுரண்டி நீக்கவும். காய்ந்த மேல் மண்ணை நீக்கிய பின்பு செடிக்கருகில் சுமார் 15 செ.மீ (அரையடி) ஆழத்திற்கு ‘V’ வடிவ பள்ளம் உருவாக்கவும். இதில் குறுக்கிடும் சல்லி வேர்களையும், பள்ளத்தின் பக்கங்களிலிருந்து, மேலிருந்து கீழாகச் சுமார் இரண்டு செ.மீ கனத்திற்கு மண்ணையும் ஒரு தட்டு அல்லது பேசின் அல்லது பாலித்தீன் பையில் எடுத்துக் கொள்ளவும். தோட்டத்தில் பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்படும் இடங்களிலிருந்து பரவலாகச் சுமார் 10 செடிகளில் வேர் (கிழங்கு), மண் இவற்றைச் சேகரித்து நன்றாகக் கலந்து சமக்கூறு முறையால் இதிலிருந்து சுமார் 500 கிராம் (250 மில்லிக்குக் குறையாமல் மண்ணும் 50 கிராம் வேரும் (கிழங்கு) மாதிரியாக எடுக்கவும்.

எலுமிச்சை போன்ற மரங்களிலிருந்து மாதிரி எடுக்க இவ்வாறு சுமார் 30 செ.மீ (ஓர் அடி) ஆழம் பள்ளம் செய்து மாதிரி எடுக்க வேண்டும். நெற்பயிரானால் மாதிரிக்கான முதல்களை (குத்து) வேர், வேரைச் சுற்றியுள்ள மண்ணுடன் இளம் வேர்கள் அதிகம் அறுபடாமல் பெயர்த்து எடுத்து, இதிலிருந்து சிறு பகுதிவேர், மண் இவற்றை மாதிரிக்காக எடுத்தபின் மீதி தூர்களை எடுத்த இடத்தில் திரும்பப் புதைத்துவிடலாம்.

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

நெற்பயிரில் பதர் ஏற்படுத்தும் ‘வெண் இலை நுனி நூற்புழுக்காகச் சோதிக்க வேண்டுமென்றால் வயலில் பரவலாக எடுக்கப்பட்ட சுமார் 10-15 நெல் கதிர்களை மாதிரியாக அனுப்ப வேண்டும். சேகரிக்கப்பட்ட மண், வேர் (கிழங்கு) மாதிரிகளை ஈரம் போகாமல் ஒரு பாலித்தீன் பைக்குள் இட வேண்டும். இத்துடன் இரண்டு சிறு தாள்களில் விவசாயியின் முழுவிலாசம், வயல் பெயர் அல்லது எண், பயிர், ரகம், மண் மாதிரி எடுத்த தேதி முதலிய விபரங்களைப் பென்சிலால் எழுதி, ஒரு தாளை பைக்குள்ளும் மற்றொரு தாளை பைக்கு வெளியிலும் வைத்துக் கட்டுவது அவசியம். 

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

இவ்வாறு ஒரு வயலில் எடுத்த மாதிரி அல்லது பல வயல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஒரு துணிப்பை அல்லது அட்டைப் பெட்டிக்குள் வைத்து எங்களின் துறைக்கு, மாதிரி எடுத்த அன்றோ அல்லது மறுநாளோ பதிவு செய்யப்படாத பார்சல் (Unregistered Post Parcel) மூலம் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது நேரிலும் கொண்டு வந்து கொடுக்கலாம். பரிசோதனை செய்து முடிவு தெரிவிப்போம். இதற்குக் கட்டணம் கிடையாது.’’

பேராசிரியர் மற்றும் தலைவர்,  நூற்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.  தொலைபேசி எண்-0422 6611264.

பஞ்சகவ்யா தயாரிக்க ஏற்றவை எவை?


பசுமை விகடன் 10.6.2019 தேதியிட்ட இதழில், நீங்கள் கேட்டவை பகுதியில் ‘வறட்சிலும் கைக்கொடுக்கும் பஞ்சகவ்யா’ என்ற தலைப்பில் ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் கே.நடராஜன் பதில் இடம்பெற்றிருந்தது. அது குறித்து, கூடுதல் விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் டாக்டர் நடராஜன்...

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

‘‘பஞ்சகவ்யாவை நம் விவசாயிகள் தங்களுக்குத் தகுந்தபடி மாற்றம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி விவசாயிகள் உருவாக்கிய தயாரிப்பு முறை, அந்தப் பதிலில் இடம்பெற்றுவிட்டது. அந்தத் தயாரிப்பு முறை தவறானது அல்ல. ஆனால், என் அனுபவத்தில் பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்கள்தான் ஏற்றது. கலப்பின மாட்டின் பொருள்களைப் பயன்படுத்தினால் 30 சதவிகிதம் பலன் குறைவாகக் கிடைக்கும்.

அதோபோல நெய்தான் பஞ்சகவ்யா தயாரிக்க ஏற்றது. நெய்க்குப் பதிலாகக் கடலைப் பிண்ணாக்குப் பயன்படுத்தினால் நிச்சயமாக எதிர்ப்பார்க்கும் பலன் கிடைக்காது. இது வயல்வெளி ஆய்வுகளில் உறுதி செய்துள்ளோம். இந்த முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா கரைசலைத்தான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிர்களுக்குப் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சகவ்யா பயன்படுத்தி நல்ல மகசூல் பெற, இந்தத் தயாரிப்பு முறையைப் பின்பற்றலாம்.

ஆரம்பத்தில் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாகச் சில பொருள்களைச் சேர்த்துள்ளோம்.

முதல் நாள் செய்யவேண்டியது

5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கி 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாள்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும். நான்காவது நாள் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பசுமாட்டு சிறுநீர், பிசைந்த வாழைப்பழம் ஆகிய பொருள்களைச் சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்கவேண்டும்.

3 லிட்டர் தண்ணீரில் நாட்டுச்சர்க்கரையைக் கரைத்து பீப்பாய்க்குள் ஊற்றவேண்டும். நாட்டு சர்க்கரையை நேரடியாகச் சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10-வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலைத் திறந்து கலக்கி விடவேண்டும். கலக்கிய பின் மூடிவைக்க வேண்டியது முக்கியம்.

11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி, தொடர்ந்து 7 நாள்கள் இருவேளை கலக்கி வர வேண்டும். 19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாகி பாகு தன்மை ஏற்படும்பட்சத்தில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரைகரைசலைக் பஞ்சகவ்யா கரைசலுக்குள் ஊற்றினால் மீண்டும் திரவ நிலைக்கு வந்துவிடும்.

பயன்படுத்தும் முறை

*தெளிப்பு மற்றும் பாசன வழி உரமாக எல்லாவகைப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

*1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்குப் பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது.

*15 நாள்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளம் மாலை வேளைகளில் பயிருக்குத் தெளிக்கவேண்டும்.

*தெளிக்க பயன்படுத்தும்போது கண்டிப்பாகக் கரைசலை வடிகட்டிய பிறகுதான் தெளிக்க வேண்டும்.

*விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

*முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலரவைத்து நடவு செய்ய வேண்டும்,

*இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத்திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

*இந்தப் பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துகளைப் பயிர்களுக்குக் கொடுப்பதுடன், வளர்ச்சி  ஊக்கியாகவும், நுண்ணூட்டச் சத்துகளை வேர்களுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது.

பஞ்சகவ்யா பயன்படுத்துவது குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

தொடர்புக்கு, செல்போன்: 94433 58379. 

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது!

தேவையான மூலப்பொருள்கள்

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம் கழித்துத் திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதைப் பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.)

நீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.