Published:Updated:

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

250 மரங்கள்… ஆண்டுக்கு ரூ. 5,00,000...மகசூல்

ரசுத்துறை, பொதுத்துறை, தனியார்த்துறை என எத்துறையாக இருந்தாலும் சரி, அதில் நிரந்தரப் பணியாளராகப் பணியாற்றிச் சம்பளம் வாங்குபவர்கள், வேறு எந்தத்தொழிலும் செய்யக் கூடாது என்பது விதி. ஆனால், இதில் விவசாயத்துக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அதேபோல விவசாயம் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு வருமான வரியும் கட்டத்தேவையில்லை. அதனால்தான், விவசாய ஆசையுள்ள பலரும் வேறு பணிகளில் இருந்துகொண்டே விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், பெங்களூருவைச் சேர்ந்த கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி. இவர் இயற்கை முறையில் மா சாகுபடி மேற்கொண்டு வருகிறார்.

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையிலிருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தடிக்கல் எனும் கிராமம். ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே சாலையோரத்தில் நம்மை வரவேற்கிறது, கிரிஷ் கிருஷ்ண மூர்த்தியின் ‘ராக் அன் ரிட்ஜ்’ பண்ணை. பண்ணையில் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த கிரிஷ் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம். நம்மை வரவேற்று மாம்பழங்களைக் கொடுத்து உபசரித்த கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சியுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். “எனக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு சிட்டியில். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். என்னுடன் பணிபுரிந்த நண்பர், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். அவர் மூலமாக எனக்கும் விவசாய ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவர், இந்தப் பகுதியில் காய்கறிச் சாகுபடிக்காக நிலம் வாங்கினார். அவர் மூலமாக 2007-ம் ஆண்டு 15 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதன்பிறகு விற்பனைக்கு வந்த 10 ஏக்கர் நிலத்தையும் வாங்கினேன். இப்போது மொத்தம் 25 ஏக்கர் அளவு நிலமிருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

சுற்றுச்சூழல் சம்பந்தமான நிறைய புத்தகங்களைப் படிப்பேன். நம் மண்ணிலிருந்து ரசாயனங்களை விரட்டுவதற்கான ஒரேவழி இயற்கை விவசாயம்தான் என்பதை அவற்றிலிருந்து அறிந்தேன். அதனால், ஆரம்பத்திலேயே இயற்கை விவசாயம் என்று முடிவு செய்து, பெங்களூருவில் உள்ள இஸ்கான் அமைப்பு நடத்தும் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தேன். அதோடு சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், அவரின் யூ-டியூப் வீடியோக்கள் போன்றவற்றைப் பார்த்து, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன்.

குஜராத் மாநிலத்தில் பயோ டைனமிக்ஸ் முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் சர்வதமன் பட்டேலிடம் நண்பராகி… அவரை என்னுடைய பண்ணைக்கு அழைத்து வந்து பண்ணையை வடிவமைத்தேன். இங்கு பண்ணையைப் பார்த்துக் கொள்கிற முரளி என்பவரை குஜராத், மகாராஷ்டிரா, புதுச்சேரி என்று பல இடங்களில் நடைபெறும் இயற்கை விவசாயப் பயிற்சிக்கு அனுப்பித் தயார் செய்தேன். வாரம் ஒருமுறைதான் இங்கு வருவேன். மற்ற நாள்களில் பண்ணையைப் பார்த்துக் கொள்வது முரளிதான்” என்று முன்கதை சொன்ன கிருஷ்ணமூர்த்திப் பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

“இங்கு 8 ஏக்கர் நிலத்தில் மா சாகுபடி செய்கிறேன். வாங்கும்போதே தோத்தாபுரி (பெங்களூரா), நீலம் ஆகிய ரகங்களில் மா மரங்கள் இருந்தன. மரங்கள் பட்டுப்போன இடங்கள் மற்றும் காலி இடங்களில் 25 அடி இடைவெளியில்… ‘மாம்பழங்களின் அரசன்’ என்று சொல்லப்படும் அல்போன்சா ரகத்தில் 250 மாங்கன்றுகளை நடவு செய்தேன். இந்த ரகத்தை பதாமி மற்றும் காதர் என்றும் அழைக்கிறார்கள். அல்போன்சா ரகத்தின் பூர்வீகம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி மாவட்டம். அங்கிருந்துதான் ஒரு கன்று 250 ரூபாய் என்ற விலையில் வாங்கிக்கொண்டு வந்தேன். கடந்த 2008-ம் ஆண்டு நடவு செய்தேன். அவை எல்லாம் வளர்ந்து தற்போது மகசூல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. சுபாஷ் பாலேக்கர் முறையில் உயிர் மூடாக்கு, உலர் மூடாக்கு முறைகளைக் கடைப்பிடித்து வருகிறேன். இடுபொருளாக ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்துகிறேன். பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மூலிகைக்கரைசலைப் பயன்படுத்துகிறேன்.

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

இடுபொருள்கள் தேவைக்காக மூன்று மாடுகளை வளர்க்கிறேன். தோட்டத்தில் வேலை செய்பவர்களுடைய மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரையும் இடுபொருள்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். பண்ணையில் மாடுகள் மேய்வதற்காகப் படரும் தன்மை வாய்ந்த முயல் மசால் (ஸ்டைலாந்தஸ் ஹமட்டா) என்ற கால்நடைத் தீவனத்தைத் தூவி விட்டிருக்கிறேன். இது மாடுகளுக்கு நல்ல தீவனமாக இருக்கிறது. பண்ணையில் உற்பத்தியாகும் மாம்பழங்கள், காய்கறிகள், புளி, பால் இவற்றின் மூலம்தான் வருமானம் கிடைக்கிறது. மலையை ஒட்டி இருக்கும் சரிவு நிலப்பகுதி என்பதால், தண்ணீரைச் சேமிக்க ஒரு குட்டை அமைத்திருக்கிறேன். மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, சரிவான நிலங்களில் 700 மலைவேம்பு மரங்களை நட்டுள்ளேன். அவையும் வளர்ந்து நிற்கின்றன” என்ற கிருஷ்ணமூர்த்தி, மா சாகுபடி குறித்துச் சில தகவல்களைச் சொன்னார்.

“அல்போன்சா, பங்கனபள்ளி, மல்கோவா, இமாம் பசந்த் உள்ளிட்ட சில ரகங்கள் நல்ல வர்த்தக வாய்ப்பைக் கொண்டவை. தோத்தாபுரி, நீலம் போன்ற ரகங்கள் பழக்கூழ் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நடவு செய்த மூன்றாம் ஆண்டிலிருந்து மா அறுவடையைத் தொடங்கலாம் என்கிறார்கள் சிலர். என் அனுபவத்தில் ஐந்தாம் ஆண்டிலிருந்து அறுவடை செய்வது நல்லது. மா வளர்ச்சிக்கு மண்ணில் நைட்ரஜன் சத்து அவசியம் என்பதால், மழைக்காலங்களில் மரத்தின் அடிப்பகுதியில் வெந்தயக் கீரை விதைகள் அல்லது கொள்ளு விதைகளை விதைத்து மண்ணில் சத்தை அதிகரித்துக் கொள்வோம். மழை கிடைக்காத காலங்களில் வைக்கோல், தொழுவுரம், பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றை உலர் மூடாக்காக இடுவோம். 

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

ஒவ்வொரு அறுவடை முடிந்தபிறகும் மரத்தின் நடுப்பகுதியில் கவாத்துச் செய்கிறோம். பொதுவாக மரத்தைச் சுற்றியும், அடிப்பகுதியிலும் கவாத்துச் செய்வது வழக்கம். அப்படி இல்லாமல் மரத்தின் நடுப்பகுதியில் கவாத்து செய்தால், மரத்துக்குத் தேவையான காற்றோட்டமும், சூரிய ஒளியும் தாராளமாகக் கிடைக்கும். இதன்மூலம் மரங்களில் பூஞ்சணத் தாக்குதல் இருக்காது. மரங்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்” என்ற கிருஷ்ணமூர்த்தி வருமானம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

“மொத்தமுள்ள 25 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தில் காய்கறிச் சாகுபடி செய்து வந்தேன். தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறையால் காய்கறி விவசாயத்தை நிறுத்தி வைத்துள்ளேன். 8 ஏக்கர் நிலத்தில் மா சாகுபடி செய்கிறேன். மீதியுள்ள நிலத்தில் சப்போட்டா, தென்னை, புளி, மலைவேம்பு போன்ற பயிர்கள் உள்ளன. மேலும் பாரம்பர்யப் பண்ணை வீடு, தங்கும் குடில்கள் ஆகியவையும் இருக்கின்றன. ஒரு கிலோ அல்போன்சா, சராசரியாக 250 ரூபாய் எனப் பெங்களூருவில் நேரடியாக விற்பனை செய்கிறேன். ஆண்டுக்குச் சராசரியாக 2 டன் அளவு மாம்பழங்கள் கிடைக்கின்றன. இதன் மூலமாக 5,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் அறுவடை, பராமரிப்பு, பண்ணையாள்கள் சம்பளம் என 2,50,000 ரூபாய் செலவாகிவிடும். மீதி 2,50,000 ரூபாய் லாபமாக நிற்கும். 

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா!

20 புளியமரங்கள் மூலமாக 2,00,000 ரூபாய், பால் மூலமாக 3,00,000 ரூபாய் என ஓர் ஆண்டுக்கு 5,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தென்னை மற்றும் சப்போட்டோ ஆகியவற்றின் மூலமாகவும் வருமானம் கிடைக்க ஆரம்பித்துவிடும். காய்கறிகள் சாகுபடி செய்தால் அவற்றின் மூலம் ஆண்டுக்கு 3,00,000 ரூபாய் வருமானம் கிடைத்துவிடும். மலைவேம்பு மரங்களும் வளர்ந்துவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் அந்த வருமானமும் சேர்ந்துவிடும்” என்ற கிருஷ்ணமூர்த்தி நிறைவாக,

“வாங்கும்போது ஒரு ஏக்கர் 3,00,000 ரூபாய் என்ற விலையில் வாங்கினேன். இன்று இப்பகுதியில், ஒரு ஏக்கர் 15,00,000 ரூபாய் அளவு விலை போகிறது. இந்த நிலம் ரியல் எஸ்டேட்காரர்கள் கையில் போகாமல் விவசாய நிலமாகவே தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சி. ஆரம்பத்தில், விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாது. இன்று நானே மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் அளவுக்குக் கற்றிருக்கிறேன். நான் நகரத்திலிருந்து கொண்டு விவசாயம் செய்வதால், எனது விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவது, எளிதாக இருக்கிறது. அதனால், நல்ல லாபம் எடுக்க முடிகிறது” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,   செல்போன்:   கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி: 96208 12123   முரளி: 95786 73236

த.ஜெயகுமார், படங்கள்: வ.யஸ்வந்த்

25 அடி இடைவெளி!

மா
சாகுபடி குறித்து கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவல்கள் இங்கே…

மா நடவுக்கு ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றவை. நடவு செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தில் உழவு செய்து, 25 அடி இடைவெளியில் 3 அடி சதுரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் ஆறிய பிறகு, தொழுவுரம் மற்றும் மண் கலந்த கலவையைக் குழியில் பாதி அளவு நிரப்ப வேண்டும். பிறகு தரமான கன்றுகளைத் தேர்வு செய்து குழிக்கு ஒன்றாக நடவு செய்து மேல் மண் கொண்டு மூடித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது நல்லது. நடவு செய்த 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். செடிகள் நன்கு வேர் பிடிக்கும்வரை தினமும் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து, மண்ணின் ஈரத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

15 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும் (இவர் 400 லிட்டர் ஜீவாமிர்தத்தை 4,500 லிட்டர் தண்ணீரில் கலந்து 8 ஏக்கருக்குக் கொடுக்கிறார்). மாஞ்செடியைச் சுற்றி வெந்தய விதைகள் அல்லது கொள்ளு விதைகளை விதைத்துவிட வேண்டும். இதற்குப் பதிலாக நான்கு மாமரங்களுக்கு இடையில் ஒரு முருங்கை மரத்தை வளர்த்தும் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகளுக்குப் பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், தீவனப் பயிர்கள் எனச் சாகுபடி செய்யலாம். மாமரங்களில் நான்கு ஆண்டுகள்வரை பூக்களைக் கிள்ளிவிட வேண்டும். 5-ம் ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம்.

பூப்பூக்க ஆரம்பிக்கும் ஒரு மாதத்துக்கு முன்பே தண்ணீர் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். பூப்பூக்கும் சமயத்தில் வேம்பு, புங்கன், எருக்கன், வெப்பாலை, கள்ளி ஆகியவற்றின் இலைகளைப் பறித்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் முக்கால்வாசி அளவுக்கு நிரப்ப வேண்டும். பிறகு டிரம் நிறையும்வரை தண்ணீர் ஊற்றித் தினமும் கலக்கி வர வேண்டும். 1-2 மாதங்களில் கரைசல் தயாராகிவிடும். இதை 1:5 என்ற விகிதத்தில் மரங்களின் மீது தெளிக்க வேண்டும். பூப்பூக்கும் நேரத்தில் பூச்சிகள் பூவில் முட்டையிடும். அதனால், முட்டைப் பருவத்திலேயே அதை அழிக்க, இந்தக் கரைசலைத் தெளிப்பது அவசியம். இதை மாதம் ஒருமுறை தெளித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். அதேபோன்று இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 5 என்ற கணக்கில் வைக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் அறுவடை முடிந்த பிறகு கவாத்துச் செய்ய வேண்டும். அறுவடையின்போது அடியில் வைக்கோல் பரப்பிய பிளாஸ்டிக் பாக்ஸ் அல்லது கூடையில் பறித்து வைத்து, காற்றுப்புகாத அறையில் வைத்தால் 3 நாள்களில் பழுத்துவிடும். பிறகு அதை விற்பனைக்குக் கொண்டு செல்லலாம்.

குழாய்கள் மூலம் ஜீவாமிர்தம்!

கி
ரிஷ் கிருஷ்ணமூர்த்தி, பெரிய ஜீவாமிர்தத்தொட்டி ஒன்றை அமைத்திருக்கிறார். அதுகுறித்துப் பேசியவர், “என்னுடைய பண்ணையில் ஜீவாமிர்தம்தான் முக்கிய இடுபொருள். மா, காய்கறி, சப்போட்டோ, தென்னை அனைத்துக்கும் ஜீவாமிர்தம் செல்வதுபோலக் குழாய்கள் அமைத்திருக்கிறேன். தலா 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஜீவாமிர்தத்தொட்டிகள் உள்ளன. ஒரு தொட்டியில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 2 கிலோ பயறு மாவு, 2 கிலோ வெல்லம், சிறிதளவு நிலத்து மண் இவற்றோடு 400 லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்க வேண்டும். மூன்று நாள்களில் ஜீவாமிர்தக் கரைசல் தயாராகிவிடும்.

தொட்டியிலிருந்து வெளிவரும் ஜீவாமிர்தக் கரைசல் இரண்டு வடிகட்டும் அமைப்புகளைக் கடந்து, இறுதியாகச் சல்லடை துளைகளின் வழியாகப் பெரிய தொட்டிக்குச் செல்லும். இந்தத்தொட்டியின் கொள்ளளவு 5,000 லிட்டர். இதில் 400 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 4,500 லிட்டர் தண்ணீர் கலப்பது போன்று அமைத்திருக்கிறேன். இந்தத் தொட்டிக்குத் தண்ணீர் வரும் வழி சுழன்று சுழன்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிச் சுழன்று வருவதால் ஆக்ஸிஜனேற்றம் பெறும் தண்ணீர், பெரிய தொட்டிக்கு வந்து சேரும். ஆக்ஸிஜனேற்றம் பெறுவதால், ஜீவாமிர்தக் கரைசலில் நுண்ணுயிர்கள் வேகமாகப் பெருகும். இந்த அமைப்பை ஏற்படுத்த 1,00,000 ரூபாய் செலவானது” என்றார்.