Published:Updated:

இயற்கையில் விளைந்தால்தான் அது மருந்து...!

த. கதிரவன்

ஆறாம் ஆண்டு சிறப்பிதழ்

திரும்பிப்பார்

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பூவுலகுக்கு... இப்போதைக்கு 'கடைக்குட்டி'... மனிதன்தான். அதேசமயம், பூமிப்பந்துக்கு கொள்ளி வைக்கத் துடிப்பவனும் அதே மனிதன்தான். ஆறாம் அறிவு, ஏழாம் அறிவு... என்று நம்மை நாமே மிகைப்படுத்திக் கொண்டு செய்து வரும் அட்டகாசங்களால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் சூடேறிக் கிடக்கிறது. அப்படி மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களில் ஒன்றுதான், உணவுக்குள் நஞ்சைப் புகுத்தும் நவீன விவசாயம்''

-'நங்'கென்று ஓங்கி நம் மண்டையில் குட்டுகிறார் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலரான சித்த மருத்துவர் சிவராமன்.

சித்த மருத்துவர் என்பதால், இயல்பாகவே இயற்கை விவசாயத்தின் மீதான பாசம், சிவராமனின் பேச்சில் தூக்கலாகவே இருக்கிறது. ''சுற்றுச்சூழலைக் கெடுக்காத, நிலைத்த, நீடித்த பலன் தரக்கூடிய முறைதான் இயற்கை வேளாண்மை முறை.

தாவரங்களில் உள்ள பழங்கள், தானியங்கள் மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து சாப்பிட வரும் பறவைகளின் எச்சங்கள் மண்ணுக்கு உரமாகின்றன; தேன் உண்ண வரும் வண்டு அயல் மகரந்தச் சேர்க்கைக்கு ஆதாரம்; உணவுச் சுழற்சிக்காக உயிரினங்கள்... இப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதுதான் ஒருங்கிணைந்த உயிர்ச் சுழற்சிக்கும் அடிப்படை. அதுதான் இயற்கை விவசாயம். ஆனால், நவீன வேளாண்மையில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளால் மண், தாவரம், சூழல்... என ஆரம்பித்து மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் நச்சு பரவிக்கொண்டிருக்கிறது.

பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு... போன்ற நோய்கள் அதிகரித்திருக்கின்றன.

இயற்கையில் விளைந்தால்தான் அது மருந்து...!

தாவரங்கள் தானாகவே தங்களுக்குத் தேவையான சத்துக்களை வேர்கள் மூலம் தேடி எடுத்துக் கொள்கின்றன. அப்படித் தேடும்போது, மருத்துவக் குணம் மிக்க கனிமங்கள் மற்றும் உப்புக்களும் தாவரங்களால் எடுக்கப்பட்டு இலை, பூ மற்றும் காய்களில் சேமிக்கப்படுகின்றன. இவை மனிதர்களுக்குப் பயன் அளிப்பவை. நவீன வேளாண்மையில், 'இந்தச் செடிக்கு இவ்வளவு சத்துக்கள் தேவை’ என்று கணக்கு வைத்துக்கொண்டு... செடியின் காலடியில் ரசாயன உரத்தைக் கொட்டுவது இயற்கையை மாற்ற முயற்சிப்பதாகும். அப்படி மாற்றும்போது, தாவரத்தின் இயல்பானத் தேடல் குறைவதால், மனிதர்களுக்குத் தேவையான நுண்ணிய கனிமச் சத்துக்கள் தாவரங்களுக்குள் போவதில்லை. காடுகளில் தானாக விளையும் நாட்டு நெல்லிக்கும், தோட்டங்களில் விளைவிக்கும் நெல்லிக்கும் உள்ள சுவை வித்தியாசமே இந்தக் கனிம வேறுபாடுகளை அப்பட்டமாகச் சொல்லி விடும்.

'அதிகமான மகசூல்’ ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நவீன வேளாண்மையில், மனிதனுக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட காய், பழங்கள், தானியங்கள் கிடைக்காது என்பதுதான் உண்மை. ரசாயன விவசாயத்தில் விளையும் காய்கள் உருவத்திலும் தோற்றத்திலும் பளபளவென இருந்தாலும், அவற்றை அணில் கூட கடிப்பதில்லை. 'இது உடலுக்கு ஒவ்வாத விஷயம்’ என்பதை அந்த ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு உள்ளுணர்வு உணர்த்துகிறது. ஆனால், நுண்ணறிவைத் தொலைத்துவிட்ட பகுத்தறிவு மனிதனுக்கு இது தெரிவதில்லை.

ஆயிரமாயிரம் வருடங்களாக ஒரே வகையான உணவு தானியங்கள், அதற்கேற்ற ஜீரண சுரப்புகள்... என மரபு ரீதியாகவே பழக்கப்பட்டுப் போயிருக்கிறது நமது உடல். இனிப்பைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறுவது இயற்கை. இனிப்பை ஜீரணம் செய்ய உடல் தயாராவதற்கான முன்னேற்பாட்டின் அனிச்சை செயல்தான் எச்சில் சுரப்பது. ரசாயனத்தால் விளையும் உணவுப்பொருட்கள் மரபு சார்ந்த இந்த இயல்பு நிலையைச் சிதைத்து, சின்னாபின்னம் ஆக்கும் வல்லமை படைத்தவை. அதனால்தான் தினம் தினம் புதுப்புது நோய்கள் புற்றீசலாய் புறப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன. விளைவிக்க ஒரு வகையான ரசாயனம், அதனால் உண்டாகும் பக்க விளைவுகளைத் தடுக்க ஒரு வகையான ரசாயனம்... என்று தவறுக்கு மேல் தவறுகளைத்தான் மனிதன் செய்து கொண்டிருக்கிறான்'' என்று எச்சரிக்கை கொடுத்த சிவராமன்,

''நாட்டுத் தக்காளியின் தோலிலும், நாட்டு வெண்டைக்காயின் கொழகொழப்பு பசைத் தன்மையிலும் மனித உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி நிரம்பி இருக்கிறது. இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மட்டுமே மனிதனுக்குத் தேவையான மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கின்றன. அதனால்தான் 'உணவே மருந்து’ என்றார்கள் முன்னோர்கள். ஆனால், அறியாமையின் காரணமாக இதையெல்லாம் மறந்து வெகுதூரம் நடந்து வந்துவிட்டோம். இனியாவது, உண்மையை உணர்ந்து திரும்பி நடைபோடுவதுதான்... நமக்கும் நல்லது... எதிர்கால சந்ததிக்கும் நல்லது'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

இயற்கையில் விளைந்தால்தான் அது மருந்து...!