Published:Updated:

விதைகளை வாழ வைக்கும் கோட்டை!

இரா. முத்துநாகு

ஆறாம்  ஆண்டு  சிறப்பிதழ்

பாரம்பரியம்

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அறுவடை செய்யப்படுவது.... நெல், பயறு, உளுந்து, கேழ்வரகு... இப்படி எதுவாக இருந்தாலும், களத்தில் அதை அளக்கும்போது... முதல் மரக்காலை... 'சாமிக்கு' என்று சொல்லி அளந்து தனியே வைப்பது... விவசாயிகளிடையே காலகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் பழக்கம். பிறகு, அந்த தானியத்தை கோயிலில் சேர்த்துவிடுவார்கள்.

கோயிலில் சேர்க்கும் வழக்கம் காலப்போக்கில் மறைந்து கொண்டிருந்தாலும், 'சாமிக்கு' என்று அளந்து வைப்பது மட்டும் மாறவில்லை. இப்படி அளக்கப்படும் தானியத்தை, வீட்டுக்குக் கொண்டு செல்லும் மூட்டையில் கட்டிக் கொண்டுவிடுகிறார்கள் தற்போது!

அதேசமயம், இன்றைக்கும்கூட.... ஒரு சில பகுதிகளில் சாமி பங்கை, சாமியிடமே சேர்க்கும் வேலை ஆச்சரியப்படத்தக்க வகையில் தொடர்கிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்... மதுரை, அழகர் கோயிலில், இப்படி தானியத்தை காணிக்கையாகச் செலுத்தி வருகிறார்கள். இதை 'கோட்டை கட்டுவது’ என்றும் குறிப்பிடுகிறார்கள்!

விதைகளை வாழ வைக்கும் கோட்டை!

கோட்டை கட்டுவதற்காக அழகர்கோயிலுக்கு வந்திருந்த மதுரை மாவட்டம், செல்லாயிபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையாவிடம் பேச்சு கொடுத்தபோது... ''அழகர்கோயில்ல இருக்கற அழகுமலையான்கிட்ட, 'ஐயா... உன் கோட்டையில இருந்து விதை முதலை எடுத்துட்டுப் போறேன். இந்த போகம் நல்லா விளையணுமய்யா. அப்படி விளைஞ்சா... விளையுறதை ஒனக்கு மொதல்ல வந்து கோட்டை கட்டிடறேனய்யா’னு வேண்டிக்கிட்டு, கோயில் கோட்டையில் இருக்கற தானியத்தை கொஞ்சம் எடுத்துட்டுப்போய், எங்ககிட்ட இருக்கற விதையோட கலந்து, விதைச்சுடுவோம். அறுவடை செஞ்சு, களத்துல நெல்லை அளக்குறப்ப... வானத்தைப் பார்த்து 'அழகுமலையானுக்கு’னு சொல்லிதான் மொத மரக்காலை அளந்து போடுவோம். அதுக்கப்பறம்... காவக்காரங்க, கூலிக்காரங்க எல்லாத்துக்கும் அளந்துட்டு, கடைசியில சம்சாரிக்கு அளந்துக்குவோம்.

வைக்கோலை அடுக்கிப் பின்னி, குதிரு மாதிரி செஞ்சு, அழகுமலையானுக்கு படி அளந்ததை அதுல கொட்டி, வைக்கோல் பிரியாலயே மூடிடுவோம். அதை அப்படியே கொண்டு போய் கோட்டையில காணிக்கையா போட்டுட்டு வந்துடுவோம். நெல்லை மட்டும்தான் வைக்கோல்ல கட்டுவோம். கேப்பை, சாமை மாதிரியான தானியங்கள ஓலைக்கோட்டான்ல போட்டு மூடி, கோட்டைக்குள்ள போட்டுவோம். இப்படி கோட்டை கட்டுன நெல்லு... எத்தனை வருஷம் ஆனாலும் கெட்டுப்போகாது. புது நெல்லு மாதிரியே மணக்கும்'' என்று சிலாகித்தவர்,

''நேரமாச்சு... கோட்டையில இதை சேர்த்துட்டு, இருட்டுறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்’' என்று நமக்கு விடை கொடுத்தார்.

விதைகளை வாழ வைக்கும் கோட்டை!

விவசாயிகளிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் தொடர்பாக நம்மிடம் பேசிய 'நாட்டுப்புற எழுத்தாளர்' வடிவேல் ராவணன், ''முற்காலங்களில் விளைந்த கதிர்களை தாளோடு வீட்டு முகப்பில் கட்டித் தொங்க விடும் பழக்கம் இருந்திருக்கிறது. இதை அடுத்த விதைப்புக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதையும் 'கோட்டை கட்டுதல்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அன்னதானம் செய்ய, இறைவனுக்குப் படைக்க... என கோயில்களுக்கு தானியங்களை செலுத்தும் பழக்கமும் முன்பு உண்டு. 'விளைச்சல் பெருக வேண்டும்’ என வேண்டிக் கொண்டும் இப்படி காணிக்கையாகவும் செலுத்துவார்கள். அப்படி வழங்கப்பட்ட தானியங்களை, பஞ்ச காலங்களில் மக்களுக்கே கோயிலில் இருந்து திருப்பிக் கொடுப்பது உண்டு. இப்படி வரும் தானியங்களை கோயிலில் சேமித்து வைக்கப் பயன்பட்ட குதிர்களை 'கோட்டை’ என்றும், தானியங்களை அதனுள் இடுவதை 'கோட்டை கட்டுதல்’ என்றும் சொல்வது வழக்கம். அந்த வகையில்தான், இன்றளவும் அழகர்கோவிலில் இப்படிக் கோட்டை கட்டுகிறார்கள்.

தை மாதத்தில் அறுவடை செய்த தானியங்களை 'கோட்டைக் களம்’ என்ற தொம்பரையில் செலுத்தி வருகிறார்கள். இதில், கேழ்வரகு, சாமை, நெல்... என ஒவ்வொரு வகையான தானியத்துக்கும் தனித்தனி தூம்புகள் (அறைகள்) உள்ளன. இதனால், தானியங்கள் ஒன்றாகக் கலப்பதில்லை'' என்று சொன்ன வடிவேல் ராவணன்,

''விதைகள் அழிந்து விடாமல் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தப் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் கடவுளோடு இணைத்து விட்டால், மனிதர்கள் தவறாமல் கடைபிடிப்பார்கள் என்கிற நம்பிக்கையில், கோயிலில் கோட்டை கட்டும் பழக்கத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்'' என்று அதற்கான காரண, காரியங்களையும் எடுத்து வைத்தார்!