Published:Updated:

பிரமிக்க வைக்கும் பரவு காவல் !

இரா. முத்துநாகு

 பாரம்பரியம்

ஆறாம் ஆண்டு சிறப்பிதழ்

'பரவு காவல் படை'- இது தென் தமிழகத்தில், நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு படைப் பிரிவு. நாட்டைக் காக்க ராணுவம் இருப்பதுபோல... வயல்கள், தானியக் குதிர்கள் என்று விவசாயம் சார்ந்த விஷயங்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட படைதான் பரவு காவலர் படை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம்மிடமிருந்து பறிபோன எத்தனையோ நல்ல விஷயங்களில் ஒன்றாக... இதுவும் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து விட்டது. என்றாலும்... பாண்டியர்களின் ராஜ்யத்தில் இருந்த, இன்றைய தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில், இன்றும்கூட இது உயிரோடு இருக்கிறது! பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தோட்டக்காவலுக்கு பரவு காவலர்களைத்தான் விவசாயிகள் நம்புகிறார்கள். இவர்களுக்காகத் தனித்தனிக் காவல் நிலையங்களே செயல்படுகின்றன என்பது... ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  

இறுக்கமாகக் கட்டிய முண்டாசு... ஒரு கையில் வேல்கம்பு... ஒரு கையில் சாப்பாட்டுப் பை... இதுதான் பரவு காவலர்களின் அடையாளம். தினமும் காலை எட்டு மணிக்கு வழக்கமான காவல் நிலையங்களில் நடக்கும் 'ரோல் கால்’ போல, பரவு காவல் நிலையத்தில் காவலர்கள் கூடுகிறார்கள். அங்கு, இவர்கள் வருகையைப் பதிவு செய்தவுடன்... ஒவ்வொருவருக்குமான பணியிடத்தை ஒதுக்கிக் கொடுக்கிறார், காவல் கங்காணி. உடனே, சம்பந்தப்பட்ட தோட்டத்துக்கு காவல் காக்க கிளம்பி விடுகிறார்கள்.

பிரமிக்க வைக்கும் பரவு காவல் !

''பரமசிவன் தோட்டத்தில் மொச்சக்காயை உருவினவன யாருனு இன்னிக்குள்ளாற கண்டுபிடுச்சாகணும்'’ என்று முணுமுணுத்தபடியே வந்தார், கம்பம் பரவு காவல் நிலையத் தலைவர் ஓ. ஆர். குமரேசனிடம் பேச்சு கொடுத்தபோது....

''நானும் அடிப்படையில ஒரு சம்சாரிதான். புழு, பூச்சி, வண்டு, காக்கா, குருவினு... விதைச்சதுல இருந்து, விளையுற வரைக்கும் அத்தனை ஜீவராசிகளும் தின்னது போக, மிச்சத்தைத்தான் சம்சாரி வீட்டுக்குக் கொண்டு போவான். அங்கயும் இல்லாத பொல்லாதவங்க வந்து கேட்டா, இல்லைனு சொல்லாம படியளப்பான். எல்லா சம்சாரியுமே இப்படி இரக்கப்படுற குணம் கொண்ட ஆளாத்தான் இருப்பாங்க.

நிலம், புலம் இல்லாதவங்களுக்கு விளைஞ்சதைப் பாக்கும்போது கை வைக்கணும்னு தோணுறது சகஜம்தான். அதனால, களவாடத்தான் செய்வாங்க. அதைத் தடுக்கவும் முடியாது. தடுக்கவும் கூடாது. அந்த மாதிரி களவாடுறவங்களைப் பிடிச்சு ஜெயிலுக்கா அனுப்ப முடியும். அதனால சம்சாரி பெருசா கண்டுக்க மாட்டான். அதேசமயத்துல பத்தம்பது பேரு ஆளுக்கொரு கை வெச்சா... வயல் காலியாகிடும்ல. அதனால இந்த மாதிரி களவாணிப் பயலுகளைப் பிடிச்சு திருத்துறதுக்காக உருவாக்கினதுதான் பரவு காவல் படை.

பிரமிக்க வைக்கும் பரவு காவல் !

இது இன்னிக்கு நேத்துல்ல... திருமலைநாயக்கர் காலத்துல இருந்தே இருக்குது. அப்போ, படைத் தளபதிகள் மூலமா ஊர் ஊருக்கு பரவு காவலர்களை நியமிச்சு, அதுக்கு 'காவல் கூலி' வாங்குவாங்களாம். அதேமாதிரி கிடை போடுறதுக்கு 'கொம்புக் கிடா’வைக் கூலியா கொடுக்கணுமாம். இதெல்லாம் செப்பேடுகள்லயே இருக்கு.

1934-ம் வருஷம் திண்டுக்கல் அம்மையநாயக்கனூர்ல, 'அம்மையப்ப கோனார்’ங்கிறவர் 'பரவு காவலுக்குக் கூலி கொடுக்க முடியாது’னு கலகம் செஞ்சதுல... சண்டை மூண்டு நிறைய பேர் இறந்து போனாங்க. அதுக்கப்பறம்தான், அப்போ திண்டுக்கல் சப்-கலெக்டரா இருந்தவர், 'தேவைப்படுறவங்களுக்கு மட்டும்தான் பரவு காவல் போட்டு கூலி வாங்கணும்’னு உத்தரவு போட்டார். அதுக்கப்பறம் நிறைய ஏரியாவுல இந்த முறையே இல்லாம போயிடுச்சு'' என்று வருத்தம் காட்டிய குமரேசன்,

''இந்த மாதிரி காவல் காக்கப் போறவங்களுக்கு ஒவ்வொரு போகத்துக்கும் விளைஞ்சதை அறுவடை செய்றப்பவே கூலியா கொடுத்துடுவாங்க. நெல் வயல்னா... ஒரு குழிக்கு, நாலு மரக்கால்; கம்பு, சோளம், சாமை மாதிரி பயிர்னா... ஒரு குழிக்கு ஒரு முக்குறுணி (மூன்று மரக்கால்); எள், கடலை மாதிரி எண்ணெய்வித்துப் பயிர்னா... குழிக்கு ஒரு பதக்கு (நாலு படி); வாழை, தென்னை மாதிரியான மரப்பயிர்னா... வருஷத்துக்கு 125 ரூபாய் கூலி. பரவு காவலர் தோட்டத்துக்குள்ள போயாச்சுனா... உள்ள ஒரு ஈ, எறும்பு நுழைஞ்சாலும், அவர்தான் பொறுப்பு. ராப்பகலா கனப்பு (தீ) போட்டு காவக் காப்பாங்க.

அதையும் மீறி களவு போயிடுச்சுனாலும் துப்பு ஆள் வெச்சு, மச்சம் பார்த்து எப்பாடுபட்டாவது ஆளைக் கண்டு பிடிச்சுடுவோம். இன்னார், இன்னார்தான் தோட்டம் காட்டுல களவுவாங்குறவய்ங்கனு எங்களுக்குத் தெரியும். அவன் கால் மிதித் தடம், செருப்புத் தடத்தை வெச்சும் ஆள பிடிப்போம். இப்ப மோட்டர் சைக்கிள்லகூட வாரானுங்க. டயர் தடம், வண்டியில ஒட்டியிருக்குற செடி செத்தை இதுகளை வெச்சு ஆளுங்களைப் பிடிப்போம்.

பிரமிக்க வைக்கும் பரவு காவல் !

களவாணிப்பயலக் கண்டுபிடிச்சதும் காவல் குச்சுல உக்கார வெச்சு தோட்டக்காரரை வர வெச்சு பஞ்சாயத்துப் பேசுவோம். களவாண்ட பொருளோட விலை மாதிரி ரெண்டு மடங்கு அளவுக்கு தெண்டம் போட்டு 'இனிமே களவாங்க மாட்டேன்’னு  சத்தியம் வாங்கிக்குவோம். தோட்டக்காரர் மன்னிச்சுட்டா தெண்டம் வாங்காம சபையை வணங்கச் சொல்லி விட்டுடுவோம்.

அதோட, கையெழுத்து, கைரேகை வாங்கிக்குவோம். மரம் வெட்டுறவன், மோட்டார் களவாடுறவன் மாதிரியான பெரிய களவாணிப் பயலுகள போலீஸ்ல ஒப்படைச்சுடுவோம்'' என்று பரவு காவல் படையின் பணிகளை விவரித்தார்.

போடி பகுதியைச் சேர்ந்த பரவு காவல் நிலையத் தலைவர் வடமலைராஜபாண்டியன் பேசும்போது, ''தோட்டங்களுக்குப் போற வழியில சோதனைச்சாவடி அமைச்செல்லாம் பரவு காவலர்கள் ராப்பகலா கண்காணிப்பாங்க. போடியில் நாலு பரவா பிரிச்சு, நாலு சோதனைச் சாவடி போட்டிருக்கோம்.

தன் தோட்டத்துல விளைஞ்சதை எடுத்துட்டு வந்தாலும்... என்ன பொருள், எத்தனை மூட்டை, வண்டி நம்பர் எல்லாத்தையும் எழுதி அனுமதி சீட்டு வாங்கிட்டு வரணும். அது இருந்தாத்தான் அடுத்தடுத்த சாவடியில அனுமதிப்பாங்க. இது மூலமா ஓரளவுக்கு திருட்டைத் தடுக்க முடியுது'' என்று சொன்னார்.

'காவல் நிலையம்' என்றாலே மாமூலும், லஞ்சமும்தான் ஞாபகத்துக்கு வரும். கை நிறைய அரசாங்கச் சம்பளம் வாங்குபவர்களே இப்படிப்பட்ட தவறுகளைத், தவறாமல் செய்து கொண்டுள்ளனர். இதுவே நிரந்தரமாகிவிட்ட இந்த பூமியில்... விவசாயப் பொருள்களுக்கு வினை வராமல், அதுவும் குறைந்த சம்பளத்துக்கு இரவு-பகலாக காவல் காக்கும் பரவு காவலர்களைப் பார்க்கும்போது... கையெடுத்து வணங்கத்தான் தோன்றியது!

தொடர்புக்கு,
குமரேசன், செல்போன்: 94430-15255.
வடமலை ராஜபாண்டியன்,
செல்போன்: 96008-35111.