Published:Updated:

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!

காசி. வேம்பையன் ,படங்கள் ச. வெங்கடேசன்

ஆறாம் ஆண்டு சிறப்பிதழ்

கல்வி

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கற்றல் என்பது வாழ்வின் அனைத்தையும் அறியும் அறிவாக இருக்க வேண்டுமே தவிர, புத்தகத்தை மட்டும் புத்தியில் ஏற்றுவதாக இருக்கக் கூடாது' என்பதுதான் அந்தக் காலம் தொடங்கி, இந்தக் காலம் வரையிலும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்து. ஆனால், நிஜத்தில் இப்படி செயல்படும் பள்ளிகளை, பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும்.

இதுதான் இந்த 21-ம் நூற்றாண்டில் நிதர்சனம். இந்த நிலையில்... வேலூர் மாவட்டம், கனியம்பாடி அருகே உள்ள குரும்பப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் 'அமைதிப்பூங்கா’ தொடக்கப்பள்ளி, கிராமப்புற மாணவர்களுக்கு இயற்கைச் சூழலோடு... பண்பாடு, இயற்கை விவசாயம் என வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறது, என்பது ஆச்சரிய செய்திதானே!

இப்பள்ளிக்கூடத்தை நிறுவியிருப்பவர்... பேராசிரியர் ராம. மணிவண்ணன். சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், கூடவே 'அமைதிப்பூங்கா' பள்ளியையும் கவனித்து வருகிறார் கௌரவத் தலைவராக!

'ஒரு பள்ளிக்குள் நுழைகிறோம்’ என்கிற உணர்வே இல்லை... அமைதிப் பூங்காவுக்குள் நாம் நுழையும்போது,  திரும்பியப் பக்கமெல்லாம் பசுமை பரப்பும் மரங்கள். பெரிய புளிய மரம் ஒன்றைச் சுற்றி வட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஓடு வேயப்பட்ட மண் கட்டடம். உள்ளே அமர்ந்திருக்கும் மாணவர்களின் சீருடையும், ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் சப்தமும்தான், 'அது பள்ளிக்கூடம்’ என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!

ஆச்சரியம் விலகாமல் அந்தக் காட்சிகளில் லயித்துப் போன நமது தோளைத் தட்டியபடிப் பேச ஆரம்பித்தார், மணிவண்ணன். ''ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்து படிச்சு கொஞ்சம் கொஞ்சமா முன்னுக்கு வந்தவன். இப்போ ஏழு வருஷமா சென்னை பல்கலைக்கழகத்துல வேலை பாத்துட்டு இருக்கேன். அதுக்கு முன்ன பதினெட்டு வருஷம் டெல்லி பல்கலைக்கழகத்துல அரசியல் துறை பேராசிரியரா வேலை பார்த்தேன். அந்த அனுபவங்களை வெச்சு, சமுதாயத்துல நிலவுற ஏற்றத்தாழ்வு மாறணும்னா, 'மக்களுக்குக் கல்வி அறிவு அவசியம்’னு உணர்ந்தேன். 'சமூக மாற்றத்தை பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தொடங்கணும்’னு முடிவு செஞ்சேன்.

மாலை நேரப்பள்ளி!

முதல் கட்டமா... காசு கொடுத்து, பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாத குழந்தைகளுக்குத் தரமானக் கல்வியைக் கொடுக்கணும். கல்வியோட மட்டுமே நின்னுடாம, மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மாதிரியான பெரிய தலைவர்களோட சிந்தனைகள், இந்தப் பகுதியோட கலாசாரம், சூழல், சமூகம் பத்தின அறிவையும் குழந்தைகளுக்குப் புகட்டணும்னு பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மாலை நேரப் பள்ளியை ஆரம்பிச்சேன். சுத்துப்பட்டு குவாரிகள்ல வேலை செஞ்சவங்களோட குழந்தைகள், நெசவுக்கூடங்கள்ல வேலை செஞ்சவங்களோட குழந்தைகளை அழைச்சுட்டு வந்து படிப்பு சொல்லிக் கொடுத்தேன்.

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!

கொஞ்சம் கொஞ்சமா வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்ல இந்தப் பள்ளிகளை அதிகப்படுத்தினேன். 2004-ம் வருஷம் என்னோட பி.எஃப் பணம் மூலமா, இங்க அஞ்சு ஏக்கர் நிலத்தை வாங்கி மண் கட்டடங்களைக் கட்டி இந்தப் பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஏழு பேர்தான் படிச்சாங்க. இப்போ 150 பேர்'' என்று சொல்லி பெருமையோடு பார்த்த மணிவண்ணன் தொடர்ந்தார்.

விவசாயம் கேவலமானதல்ல!

''நான் டெல்லியில் வேலை பார்த்தப்போ, வகுப்புல ஒரு நாள் 'வருங்காலத்தில் என்னவாக விரும்புறீங்க?’னு மாணவர்கள்ட்ட கேட்டேன். எல்லாரும் 'ஐ,ஏ.எஸ் ஆகணும், ஐ.பி.எஸ் ஆகணும்’னுதான் சொன்னாங்க. அடுத்தக் கேள்வியா, 'எத்தனை பேர் கோதுமை, நெல் விளையுறதைப் பாத்திருக்கீங்க? யார் யாருக்கு விவசாயத்தைப் பத்தித் தெரியும்?’னு கேட்டப்போ, மொத்தம் இருந்த  22 மாணவர்கள்ல, 20 பேர் 'இல்லை’னுதான் சொன்னாங்க. எனக்கு பயங்கர அதிர்ச்சி.

படிக்கறதுக்காக விமானத்துல ஏறுறவங்க, பக்கத்துல இருக்குற வயல்களை சும்மா எட்டிப் பாக்கறதுக்காகக்கூட இறங்கறதில்லை. விவசாயத்தையும், ஆடு, மாடு மேய்க்கறதையும் கேவலமா பாக்குற எண்ணம்தான் மேல்தட்டு மக்கள்கிட்ட இருக்குது. அதனால கிராமத்துக் குழந்தைகளுக்கு இயற்கையாவே தாழ்வு மனப்பான்மை வந்துடுது.

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!

அப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாதுனுதான் வழக்கமானக் கல்வியோட, இயற்கை விவசாயம், காய்கறி, தானியங்கள் சாகுபடி, கட்டடப் பராமரிப்பு, யோகா, தியானம்னு வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் இங்க சொல்லிக் கொடுக்கிறோம்.

இந்த அமைதிப்பூங்காவுல 1,000 மரங்கள் இருக்கு. குழந்தைகளோட தேவைக்காக 15 கறவை மாடுகள் வளர்க்கிறோம். பிள்ளைங்கள வேன்ல அழைச்சுட்டு வந்துடுவோம். காலையில பத்து மணிக்கு சத்துமாவுக் கஞ்சி கொடுக்கிறோம். இங்க விளையுற காய்கறிகளை வெச்சு குழந்தைகளுக்கு சத்தான உணவை மதியம் கொடுக்குறோம். சீருடை, உணவு, கல்வினு எல்லாமே இலவசமாத்தான்

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!

கொடுக்குறோம். இங்க படிக்கிற பசங்களே தோட்டத்தைப் பராமரிக்கறாங்க. மண் கட்டடத்துல வர்ற விரிசலை சரி செய்றாங்க.

ஆசிரியர்கள் சம்பளம், டீசல் செலவுனு எல்லாம் சேர்த்து மாசத்துக்கு கிட்டதட்ட 85 ஆயிரம் ரூபாய் செலவாகுது. என்னோட ஊதியம், நண்பர்களோட பண உதவி, 'சிறாக்' அமைப்போட உதவி மூலமாத்தான் செலவுகளைச் சமாளிக்கிறேன். இங்க படிக்கற பிள்ளைகளோட பெற்றோர்கள்... வாரம் ஒரு தடவை வந்து மூணு மணி நேரம் ஏதாவது வேலை செஞ்சு கொடுக்குறாங்க. எங்க பள்ளியை 'யுனெஸ்கோ’ அமைப்புல இருந்துகூட வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க'' என்ற மணிவண்ணன்,

''இப்போதைக்கு அஞ்சாம் வகுப்பு வரைதான் இருக்குது. இதை பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் விரிவுபடுத்தணும்... அதோட சமுதாயக் கல்லூரி ஒண்ணையும் ஆரம்பிக்கணுங்கிறதுதான் என்னோட குறிக்கோள்'' என்றார், கண்களில் ஆர்வம் பொங்க.

வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்று நடந்தபோது,

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’  

என்கிற பாரதியின் வரிகள்தான் நம் மனதில் வந்து மோதின!

இயற்கை வேளாண்மையோடு, இனிய கல்வியும் இங்கே இலவசம்!