Published:Updated:

மரத்தடி மாநாடு

மிஸ் காங்கேயம்.... மிஸ்டர் காங்கேயம்!

##~##

தைப் பட்டத்தில் எள் விதைப்பதற்காக, டிராக்டரை வரவழைத்து நிலத்தை உழுது கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். டிராக்டரில் இருந்த வானொலியில் கசிந்து வந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே வரப்பில் அமர்ந்திருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

 டிராக்டர் ஓட்டுநர், தேநீர் குடிப்பதற்காக வண்டியை ஓரம் கட்டி இறங்க, ஒடிப்போய் டிராக்டரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தார், ஏரோட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு, பயந்து பயந்து நடந்து வந்த 'காய்கறி' கண்ணம்மா, ''யோவ்... என்ன இது குந்தாங்குதறா ஓட்டிக்கிட்டிருக்குற? ஒனக்கெதுக்கு இந்த வேலை?'' என்று கேட்க... சட்டென்று நின்றுபோனது டிராக்டர்.

''யாரைப் பாத்து, என்னா பேச்சு பேசறே நீ. எனக்கா டிராக்டர் ஓட்டத் தெரியாது? நீயும் வந்து உக்காரு, ஒரு ரவுண்ட் அடிச்சுக் காட்டுறேன்'' என்று வம்புக்கு இழுத்தார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு

''யப்பா... நான் பிள்ளைக்குட்டிக்காரி, ஆளை விடு'' என்றபடி மரத்தடியில் கூடையை இறக்கி வைத்து விட்டு, உட்கார்ந்தார் காய்கறி. ஏரோட்டியும் இறங்கிவர...

''அப்பப்பா... என்னமா பனி அடிக்குது. வீட்டை விட்டு வெளிய வர முடியல'' என்று சொல்லி, அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், காய்கறி.

''ஆமா, கண்ணம்மா. பனி அதிகம்தானாம். தேனி பக்கமெல்லாம் பனி தாங்க மாட்டாம கோழிப்பண்ணையில கோழியெல்லாம் செத்துக்கிட்டிருக்காம். என்னதான், சாக்கைப் போட்டு சுத்தி, கட்டி வெச்சாலும் பனியைத் தடுக்க முடியலையாம். பிராய்லர் கோழிப் பண்ணை வெச்சிருக்கவங்கெல்லாம் பொலம்பிக்கிட்டு இருக்காங்க'' என்றார், ஏரோட்டி.

'அதுக்குதான் இன்ஷூரன்ஸ் கொடுப்பாங்கள்ல, விவசாயிகக் கிட்ட கோழிகளை கொடுத்து வளர்க்கச் சொன்ன பிராய்லர் பண்ணைக்காரங்களே நஷ்டத்தை ஏத்துக்குவாங்கள்ல'' என்று வெள்ளந்தியாகச் சொன்னார், காய்கறி.

''அப்படிக் கிடையாது, கண்ணம்மா... பண்ணைக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது விவசாயியோட பொறுப்பு. ஒரு குறிப்பிட்ட அளவைத்தான் பண்ணை ஏத்துக்கும். மீதியெல்லாம் விவசாயி தலையிலதான் விழும். அப்படியே இழப்பீடு கிடைச்சாலும், செத்துப்போன கோழிக்குத்தான் சரியா இருக்கும். விவசாயி பேங்குக்கு தவணை கட்டணுமில்ல. அதை யார் கொடுப்பா? பெரிய கஷ்டம்தான்.

பாரு, கடலூர் மாவட்டத்துல புயல் அடிச்சதுல ஏகப்பட்ட பண்ணைகள் காலி. ஆனா, பயிர்களுக்கெல்லாம் நிவாரணம் அறிவிச்சாங்க. பிராய்லர் பண்ணைகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கல. அவங்கள்லாம், 'கடனை தள்ளுபடி பண்ணி, திரும்பவும் பண்ணை போட, புதுக்கடன் கொடுக்கணும்’னு கேட்டுக்கிட்டு இருக்காங்க'' என்று 'உச்' கொட்டியபடியே சொன்னார் வாத்தியார்.

''சரி, நானொரு சந்தோஷ சேதி சொல்றேன்'' என்று ஆரம்பித்த ஏரோட்டி,

''கோயம்புத்தூர், சிங்காநல்லூர்ல திறந்தவெளி ஜெயில் இருக்கு. நல்லா வேலை செய்றவங்க, விவசாயம் தெரிஞ்சவங்களைத்தான் இந்த ஜெயில்ல அடைப்பாங்க. இப்போ இங்க 68 பேர் இருக்காங்களாம். அங்க இருக்கற 30 ஏக்கர் பண்ணையில விவசாயம் பாக்குறதுதான் இவங்களோட வேலை. அதுல, 15 ஏக்கர்ல தென்னை இருக்குதாம் மீதி 15 ஏக்கர்ல, தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெண்டை, பூசணி, சுரை, பீட்ரூட், வெங்காயம்னு ஏகப்பட்ட காய்களை சாகுபடி பண்றாங்களாம். அதோட, கறவை மாடுகளையும் வளர்க்கறாங்களாம்'' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

''அட, அசத்தலா இருக்கே... ஜெயிலுக்குள்ள போய் புண்ணியம் தேடற இவங்கள பாராட்டியே ஆகணும்'' என்று நெகிழ்ந்தார் காய்கறி!

தொடர்ந்த ஏரோட்டி, ''இங்க விளையுற காய்கறிகளை வெச்சுதான், கோயம்புத்தூர்ல இருக்குற சென்ட்ரல் ஜெயில் கைதிகளுக்கு சாப்பாடு தயாரிக்கறாங்களாம். ஒரு வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் பெறுமானமான காய்கறிகள் உற்பத்தியாகுதாம். இந்தத் தோட்டத்துல வேலை செய்ற கைதிகளுக்கு தினமும் 60 ரூபாய் கூலியாம். இதுல ஒரு தொகையைப் பிடித்தம் செஞ்சு, அந்தக் கைதியால பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குக் கொடுத்துடுவாங்களாம்'' என்று முடித்தார்.

''இதுவும் நல்லாத்தான் இருக்கு. எல்லா ஜெயில்லயும் இதேமாதிரி செஞ்சா... ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.. பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நஷ்டஈடும் கிடைக்கும்'' என்று கணக்குப் போட்டு சொன்ன காய்கறி,

''மாடழகன்... மாடழகிப் போட்டி நடந்த கதை தெரியுமா?!'' என்று கேட்டார்!

''என்னது மாடுங்களுக்கு அழகிப் போட்டியா... என்ன நக்கலா?'' என்று திருப்பினார் ஏரோட்டி!

''அட நெசமாத்தான் சொல்றேன். வெள்ளக்கோவில் பக்கத்துல இருக்கற புஷ்பகிரிநகர்ல, காங்கேயம் இன விருத்தியாளர்கள் சங்கம் சார்பா, காங்கேயம் மாடுகளுக்கு இந்தப் போட்டியை நடத்தினாங்க. பூச்சிக்காளை, ரெண்டு பல்லுக்கு மேல் உள்ள எருது அல்லது வண்டிக்காளை, மயிலை மாடு, செவலை மாடு, காரி மாடு, குறா மாடு, பால் பல் கிடேரினு மொத்தம் ஏழு பிரிவுல போட்டி நடத்தினாங்க. ஒவ்வொரு பிரிவுலயும் தேர்ந்தெடுத்த அழகான மாட்டுக்கு முதல் பரிசா பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. ரெண்டாம் பரிசு, 5 ஆயிரம் ரூபாய். மூணாம் பரிசு 3 ஆயிரம் ரூபாய்'' என்று சொன்னார் காய்கறி!

''இது நல்லாத்தான் இருக்கு. இதேமாதிரி பல ஊர்கள்லயும் நடத்தினா, நம்ம பாரம்பரிய மாடுகளோட மகிமை மத்தவங்களுக்கெல்லாம் பரவுமே!'' என்ற வாத்தியார்,

'நல்ல விஷயம்தானே'' என்று சான்றிதழ் கொடுத்தார் காய்கறி!

''அடுத்து நாஞ்சொல்லப்போறத கேட்டா... கெட்ட விஷயம்னு சொல்வே!'' என்று கட்டியம் கூறிவிட்டு தொடர்ந்த ஏரோட்டி,

''பொங்கல் பண்டிகையை ஒட்டி மூணு நாள்ல தமிழ்நாட்டுல 277 கோடி ரூபாய்க்கு சரக்கு வித்திருக்கு தெரியுமா. வழக்கமா, இங்கிலீஷ் வருஷ பிறப்புக்குதான் இப்படி சரக்கடிச்சுக் கொண்டாடுவாங்க. இப்பல்லாம் கணக்கே கிடையாது. தொடர்ச்சியா ரெண்டு நாள் லீவு விட்டா போதும். பாட்டிலை தூக்கிட வேண்டியதுதான். 'போன வருஷத்தைவிட இந்த வருஷம் அதிகமா வித்துருக்கு’னு அரசாங்க அதிகாரிக சந்தோஷமா கணக்கு கொடுத்திருக்காங்க. இதுக்கு எங்க போய் முட்டிக்கிறது'' என்று ஆதங்கப்பட்டார், ஏரோட்டி.

''இதெல்லாம் புள்ளி விவரமாத்தான் தெரிஞ்சு வெச்சிருப்பே... '' என்று நக்கலாக சொன்ன காய்கறி, ''நேரமாச்சு...'' என்றபடி கூடையை தலைக்கு இடம் மாற்ற... முடிவுக்கு வந்தது, மாநாடு.  

மரத்தடி மாநாடு