Published:Updated:

இதற்கு உயிரே போயிருக்கலாம்...

நாச்சியாள், சமரன்படங்கள் : ஜெ.முருகன்

##~##

புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தின் சில பகுதிகளில் தாண்டவமாடிய 'தானே' புயல் சோகம்... தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமைச்சர்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்,  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என எக்கச்சக்கமானோர் முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் அலறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிற நிலையிலும்கூட, நிலைமை 25% அளவுக்குக் கூட இன்னமும் சீராகவில்லை என்பதே உண்மை! சாய்ந்தே நிற்கும் மின் கம்பங்கள், கூரையிழந்த வீடுகள், விழுந்து கிடக்கும் மரங்கள், மணல் மேடாகிப் போன நிலங்கள்... என திரும்பிய பக்கமெல்லாம் கொடுமையான காட்சிகளே கண்களை அறைகின்றன.

பலாவையும், முந்திரியையும் விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதித்த உழவர்கள் எல்லாம், 'விழுந்து போன மரங்களை விற்று இன்றையப் பிழைப்பை ஓட்டலாம்’ என்கிற நிலைமையில் இருக்க... 'எரிகிற வீட்டில் பிடுங்குற’ கதையாக, மரங்களை அடிமாட்டு விலைக்கு விலை பேசி வருகிறார்கள், வியாபாரிகள். இத்தகையச் சூழ்நிலையில், ஊருக்குப் 'படி’ அளந்த உழவர்களெல்லாம், இன்று அரசிடம் 'படி’ கேட்டு காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட அரைகுறையாகத்தான் கிடைக்கும் என்கிற செய்திகள் காற்றுவாக்கில் வர கலங்கி நிற்கிறார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இதற்கு உயிரே போயிருக்கலாம்...

''இப்போவரைக்கும் எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கல. ரெண்டு ஏக்கருக்கு மட்டும்தான் நிவாரணம்ங்கிறாங்க. என்ன கொடுக்கப் போறாங்க, என்னா கணக்கு வழக்குனே புரியலை'' என்கிறார் கோட்டேரி பகுதியைச் சேர்ந்த தேவராஜ்,

முத்தாண்டிக் குப்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ''இன்னும் கணக்கெடுப்பே முடியல. வீடு பறி போனவங்களுக்கு மட்டும் முதல் கட்டமா ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்துட்டிருக்காங்க. அதுலயும் நூறு, இருநூறு ரூபாயை அதிகாரிகளுக்கு அழத்தான் வேண்டியிருக்கு. மரங்களை வித்து கிடைக்கிற காசு, அறுக்குற கூலிக்கு கூட பத்த மாட்டேங்குது. அரசாங்கம் உடனடியா தலையிட்டு

இதற்கு உயிரே போயிருக்கலாம்...

பிரச்னைகளை சரி பண்ணனும். இல்லாட்டி, எங்க கதி என்னவாகும்னு யாராலயும் சொல்ல முடியாது. இதைவிட இந்தப் புயல்ல எங்க உயிரெல்லாம் போயிருக்கலாம்'' என்று சொல்லி, நம்மையும் கலங்கடித்தார்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த 'எவிடன்ஸ்' தன்னார்வ அமைப்பு, புயல் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, தற்போது அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுபற்றி பேசிய அந்த அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ''இதுபோன்ற பேரிடர்களின்போது உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பேரிடர் சம்பவத்தை மீடியாக்களும், அதிகாரிகளும் பெரிதாகப் பேசுவார்கள்.

இதற்கு உயிரே போயிருக்கலாம்...

இதன் காரணமாக மொத்த கவனமும் அப்பகுதியில் திரும்பும். ஆனால், தானே புயல் விஷயத்தில் போதுமான முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டதன் காரணமாக, உயிரிழப்புகள் பெரிதாக இல்லை. ஆனால், உயிரோடு இருந்து பிரயோஜனமில்லை என்கிற அளவுக்கு வாழ்வாதாரங்கள் முற்றாக அழிந்துபோய்விட்டன என்கிற உண்மையை அரசாங்கங்கள் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் கிடைக்காமல், கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலை நீடிக்குமேயானால், இருக்கின்ற நிலங்களை வருகிற விலைக்கு விற்றுவிட்டு, வேறு பிழைப்பு தேடி விவசாயிகள் போகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே கடலூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டல பூமியாக பார்க்கப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகளும் இங்கே இருக்கின்றன. தற்போதையச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தொழில்நிறுவனங்கள் இங்குள்ள நிலத்தை வளைத்துப்போடும் ஆபத்து காத்திருக்கிறது'' என்று எச்சரித்தார்.

இதை அரசாங்கம் புரிந்து கொண்டால் சரி!

சாய்ந்த மரங்களைக் காப்பாற்றலாம்!

''தென்னையிலகூட மூணு வருஷத்துல காய்க்குற ரகம்லாம் இருக்கு. ஆனா, முந்திரி, பலாவுக்கு வழியேயில்லை. சாய்ஞ்சு போன முந்திரி மரங்களை எப்படியாவது பிழைக்க வைக்கறதுக்கு வழி இருக்குதா?' என்பதுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கேள்வியாக இருக்கிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வைத்தியலிங்கத்திடம், விவசாயிகளின் கோரிக்கையைச் சொன்னோம். அவர், ''சாய்ந்த முந்திரி மரங்கள் மற்றும் வேர் பகுதி வெளியில் தெரியாத அளவுக்கு இருக்கும் முந்திரி மரங்களைக் காப்பாற்ற வழியிருக்கிறது. தரையில் இருந்து இரண்டரை அடி உயரம் வரை விட்டு முந்திரி மரங்களை ரம்பம் மூலமாக அறுத்துவிட வேண்டும்.

அறுத்த இடத்தில் பூஞ்சணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி ஆகியவற்றைக் கலந்து தடவ வேண்டும். சாய்ந்த மரமாக இருந்தால், இந்தக் கலவையைக் காயம்பட்ட இடங்களில் தடவி, மரத்தை நிமிர்த்தி நிறுத்தி மண் அணைத்துவிட வேண்டும். மரத்தின் இளம் வேர் பகுதியை பக்கவாட்டில் சீவி விட்டு, அதில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட தண்ணீர் நிரம்பிய பாலீதீன் பைகளை கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால், தண்டுத் துளைப்பான் பிரச்னை இருக்காது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மரம் காய்க்கத் தொடங்கிவிடும்'' என்றார், வைத்தியலிங்கம்.

இச்செய்தியை, விவசாயிகளிடம் சேர்க்கும் வேலையை அரசாங்கம் மேற்கொள்வது, இந்த நேரத்தில் செய்யும் பேருதவியாக இருக்கும்!