Published:Updated:

புரட்சிப் பொங்கல் - 999

இரா.முத்துநாகு

##~##

வீட்டுக்கு வெள்ளயடித்து, தோட்டத்துக்குக் காப்புக் கட்டி, மாட்டை அலங்கரித்து ஆண்டாண்டு காலமாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வந்த தேனி மாவட்ட மக்கள், இந்த ஆண்டு, பென்னிகுக் நினைவாக 'பொங்கல்-999' என்று புரட்சிகரமானதொரு பொங்கலை நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்!

முல்லை-பெரியாறு அணையைக் கட்டித் தந்து, தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கே பொறியாளராக இருந்த கர்னல். பென்னிகுக். வெறுமனே ஒரு பொறியாளராக இல்லாமல், இந்த மண்ணின் மைந்தனாகவே தன்னை உணர்ந்து, படாதபாடுபட்டு அவர் கட்டியதுதான் முல்லை-பெரியாறு அணை. இதற்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றும் வகையில்தான், அவருடைய பிறந்த நாளான 'தை’ முதல் நாளன்று 'பொங்கல்-999' கொண்டாடப்பட்டது. அத்தோடு, இனி ஆண்டுதோறும் 'பென்னிகுக் பொங்கல்' கொண்டாடவும் முடிவு செய்துள்ளனர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புரட்சிப் பொங்கல் - 999

முல்லை-பெரியாறு அணையின் பதினெட்டாம் கால்வாய் பாசன கிராமங்களான தேவாரம், மேட்டுப்பட்டி, மீனாட்சிபுரம், பண்ணைபுரம், சிந்தலசேரி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்துப் பெண்கள், புத்தாடை உடுத்தி, பொங்கல் பானையை தலையில் சுமந்து, ஊர்வலமாக வந்து, தேவராம் ஊர் மந்தையில் பொங்கல் வைத்ததுடன், பென்னிகுக் படத்துக்கு மலர் தூவினர். முல்லை-பெரியாறு அணைக்காக தமிழக- கேரளா இடையே ஏற்படுத்தப்பட்ட 999 வருட ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்விதமாக... 999 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

புரட்சிப் பொங்கல் - 999

பென்னிகுக் செய்த தியாகம், முல்லை-பெரியாறு அணையின் அவசியம் இதையெல்லாம்.. அடுத்தத் தலைமுறையும் புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு முல்லை-பெரியாறு, பென்னிகுக் குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினார்கள்.

பண்ணைபுரம் விவசாயிகள்... 'பென்னிகுக் ரதம்' ஒன்றை உருவாக்கி, கிராமம்தோறும் ஊர்வலமாக வந்தனர். '999 ஆண்டு ஒப்பந்தத்தை மீறத்துடிக்கும் கேரளாவுக்கு எதிராக நாம் கிளர்ந்து எழாவிட்டால், மீண்டும் கோரைக்கிழங்கு பஞ்சம் வரும்’ என பிரசாரம் செய்தபடி தேவாரத்தை அடைந்தது அந்த ஊர்வலம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மாறன், ''கரைவேட்டி கட்டி காரில் வந்து இறங்காத... குறிப்பாக வெள்ளைக்காரர் ஒருவருக்கு, தமிழர்கள் விழா எடுப்பது இதுவே முதல்முறை. முல்லை- பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு 18 கால்வாய்கள் வெட்டி தண்ணீர் கொண்டு வர பென்னிகுக் திட்டமிட்டிருந்தார். 17 கால்வாய்கள் முடிந்த நிலையில், ஐரிஸ் நாட்டில் நடந்த புரட்சியால் சேதமடைந்த பாலங்களை கட்டமைக்க அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் தேவாரம் பகுதிக்கான 18-ம் கால்வாய் கிடப்பில் போடப்பட்டது. ஒரு நூற்றாண்டு கால கோரிக்கை கடந்த ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி இருக்கிறன. மூன்று தலைமுறையாக புஞ்சையாக இருந்த நிலங்கள் இறவைப் பாசன நிலங்களாக மாறி வருகின்றன. இதற்கு முழுமுதல் காரணம் பென்னிக்குக்.

புரட்சிப் பொங்கல் - 999

முல்லை-பெரியாறு விஷயத்தில் கேரள அரசுடன் தமிழகத்தை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் தொடர்ந்து சமரசம் செய்து வருகிறார்கள். இதனால் கேரளா, 999 வருட ஒப்பந்தத்தை மறந்து 'அணையை உடைக்க எங்களுக்கு உரிமை உள்ளது’ என அடாவடி செய்து வருகிறது.பொதுமக்களின் போராட்டத்தையும், போலீஸை ஏவி, அடக்கும் வேலையைச் செய்கிறது தமிழக அரசு. என்றாலும், எங்களின் உணர்வுகளை எந்த வகையிலும் நசுக்க முடியாது என்பதை தமிழக-கேரள அரசுகளுக்கு காட்டவே... இந்த 'பொங்கல்-999' எனும் இந்த வரலாற்று நிகழ்வு!'' என்று சூடாகச் சொன்னார்!

பொங்கல் வைத்துக் கொண்டிருந்த செல்லாயிபுரம் பஞ்சவர்ணம், ''நாற்பது வருஷத்துக்கு முன்ன வந்த பஞ்சத்துல தேவாரம் மலையில் உள்ள மூங்கில் அரிசியைத் தின்னுதான் வாழ்ந்தோம். அதுவும் கிடைக்காம போக, வனாந்தரத்துல கிடைச்ச கண்ட கிழங்குகளையும் தோண்டி தின்ன பலர், செத்துப் போனாங்க. எங்கிருந்தோ வந்த வெள்ளக்கார துரைதான், இந்த அணையைக் கட்டி எங்க வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சாரு. அவருக்கு நாங்கள் பொங்கல் வெச்சு கொண்டாடுறது பெருமையா இருக்கு'' எனச் சொல்லும்போதே பானை பொங்கி வழிய... 'லுலுலுலுலுல' என்று பெரிதாக குலவைச் சத்தம் கொடுத்தனர் பெண்கள்!

இந்தக் குலவைச் சத்தம் ஆட்சியாளர்கள் காதில் விழுந்தால் சரிதான்!