Published:Updated:

கழனி வாழ... காடு காப்போம்!

நம்மாழ்வார்

##~##

றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது, 'பசுமை விகடன்'. ஒரு குறிப்பிடத் தகுந்த இடைவெளிக்குப் பிறகு, இந்தத் தருணத்தில் 'பசுமை விகடன்’ மூலமாக என் நெஞ்சுக்கு நெருக்கமான உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த ஐந்து ஆண்டு காலத்தில், தங்களது அயராத உழைப்பின் மூலமாக, மூலை முடுக்குகளில் இருந்த சாதனை உழவர்களையெல்லாம் உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர், பசுமைக் குழுவினர். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் இயற்கையின் திசையில் பயணிப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

 சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'வரும் ஐந்தாண்டுகளில், வேளாண் உற்பத்தி இரு மடங்காக வேண்டும். உழவர் வருமானம் மூன்று மடங்காக வேண்டும்’ என்று சொல்லியிருப்பது, மகிழ்ச்சி தருவதாக உள்ளது. அதேநேரத்தில், சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடுவண் அரசு, தேர்தலை மனதில் வைத்து, 'உணவு உத்தரவாதச் சட்டம்’ என்கிற சட்டத்தைக் கொண்டு வரப்போகிறது. இதன்படி 62% மக்கள் பயனடைவார்களாம். ஆனால், 75 கோடி இந்திய மக்களை இரந்து உண்ணும் நிலைக்குத் தள்ளப் போகிறார்கள், என்பதுதான் உண்மை.

கழனி வாழ... காடு காப்போம்!

'கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு 27 ரூபாய் சம்பாதிப்பவர் வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டார்’ என்று சொல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது, தேசிய திட்டக் குழு.

'கடந்த 10 ஆண்டுகளில் 7.42 லட்சம் டன் உணவு தானியம் சேமிப்புக் கிடங்குகளிலேயே சீரழிந்து போய் விட்டது’ என்று மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

'அணை திறக்கப்பட்டு விட்டது’ என்று உழுவதற்குத் தயாரானபோது, 'டி.ஏ.பி தட்டுப்பாடு’ என்றார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு கோடிகளைச் சுருட்டினார்கள், சில முதலாளிகள்.

இவை போதாதென்று... வங்கக் கடலில் உருவான புயல், உழவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது.

'முல்லைப் பெரியாறு அணையை இடிப்பேன்’ என கிளம்பி, ஐந்து மாவட்ட மக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது கேரள அரசு.

கழனி வாழ... காடு காப்போம்!

நடுவண் அரசின் நிதி அமைச்சர், 'அந்நியப் பணம் நாட்டுக்குள் வந்தாலொழிய பொருளாதாரம் முன்னோக்கி நகர வழி இல்லை’ என அறிக்கை வாசிக்கிறார். அதனால், 'பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது, நடுவண் அரசு. அதேசமயத்தில், நாடாளுமன்றத்தில், வேளாண்மைப் பிரச்னைகள் பற்றிய விவாதங்களின்போது, 50 உறுப்பினர்கள்கூட அவையில் அமர்வதில்லை.

இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகள், விவசாயிகளின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும்... உழவர்களின் தலையில் இரண்டு முக்கிய பொறுப்புக்கள் தானே வந்து விழுகின்றன. முதலாவது... அளவுக்கு மீறி கடன்பட்டு, அடைக்க முடியாத சூழ்நிலை என்றாலும்கூட விவசாயிகள் தற்கொலையில் தஞ்சம் அடையக் கூடாது. இரண்டாவது... இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கும் உணவு உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பொறுப்புகளை உழவர்கள் நிறைவேற்ற வேண்டுமானால், இயற்கை வழி வேளாண்மை முலமாகத்தான் சாத்தியமாகும். இந்த வேளாண்மை முறையில் நிச்சயமற்றத் தன்மை கிடையாது. அதிக முதலீடும் தேவையில்லை. ஆனாலும், இயற்கையைப் புரிந்து கொள்வதில் மக்களுக்கு ஏகப்பட்ட உள்ளத் தடங்கல்கள். 'இயற்கை பாதுகாப்பானது’ என்றாலும் 'சிக்கல் மிகுந்தது’, என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் ஒரு ஆங்கில ஏட்டில் படித்த கட்டுரையை இத்தருணத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்... 'ஏதேனும் காரணத்தால் மனிதர்களால் வளர்க்கப்பட்டு, கொஞ்சம் வளர்ந்த பிறகு, காட்டில் விடப்படும் வன விலங்குகள் எதுவுமே உயிர் பிழைப்பதில்லை. எந்த விலங்குக் குட்டியாக இருந்தாலும், அதன் தாயிடம் அது வேட்டையைப் பழக வேண்டும். தாய் மூலமாக பூமியைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித வளர்ப்பில் இத்தகையப் பயிற்சிகள் கிடைக்காத காரணத்தால்தான்... அவை இரை எடுக்க முடியாமலோ, அல்லது எதிரிகளாலோ அழிகின்றன. அதனால், இப்படி வன விலங்குக் குட்டிகளை வளர்க்க செலவிடப்படும் பணம் வீண்தான்’ என்கிறது அந்தக் கட்டுரை.

ஆக, 'கானுயிர்களைப் பாதுக்காக்க வேண்டுமானால், காடுகளைப் பாதுகாப்பதுதான் சிறந்த வழி’ என்பதை நாம், உணர வேண்டும். காடுகளை அழித்து, தேயிலைத் தோட்டம் போட்டுவிட்டு, 'ஊருக்குள் யானை புகுந்து அட்டகாசம் செய்கிறது’ என்று சொல்வதில் அர்த்தமில்லை.

ஆக, உழவர்கள் நிலை உயர வேண்டுமானால், 'இயற்கை காக்கப்பட வேண்டும்’ என்பதையே முதல் குரலாக எல்லோரும் ஒலிப்போம்!