Published:Updated:

இறையியலோடு உழவியலும்...

சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்!காசி.வேம்பையன்படங்கள் : ஜெ.முருகன்

##~##

'ஏர் பிடிக்கும் உழவனின் குடிசையில் இருந்து, புதிய பாரதம் வெளி வரட்டும்’ என்று சொன்னார், சுவாமி விவேகனந்தர். அவருடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்திருக்கும் சாரதா ஆசிரமத்தைச் சேர்ந்த துறவிகள்!

 திரும்பிய திசையெல்லாம் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் அமைதியான அந்த ஆசிரமத்தில், ஆங்காங்கு பணி செய்து கொண்டிருக்கிறார்கள், காவி மற்றும் வெள்ளை நிறங்களில் ஆடையணிந்த சகோதரிகள். இங்கு, உழவுப் பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக 'அக்ஷய கிருஷி கேந்திரா’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் மூலமாக சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு இறையியலோடு, உழவியலையும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இறையியலோடு உழவியலும்...

அதைப் பற்றி நம்மிடம் உற்சாகமாகப் பேசினார்... கிருஷி கேந்திராவின் இயக்குநர் எத்தீஸ்வரி ஆத்ம விகாச பிரியா அம்பா’. ''எங்க ஆசிரமத்துல பள்ளிக்கூடம், கல்லூரி, குருகுலம்னு தனித்தனித் துறைகள் இருக்கு. ஆசிரமத்துக்குச் சொந்தமா எண்பது ஏக்கர் நிலம் இருந்ததால, 'விவசாயம் பண்ணலாமே’னு ஆசிரமத்தோட தலைவர் சொன்னாங்க. உடனே, மண் பரிசோதனை செஞ்சதுல, 'இந்த நிலத்துல சப்போட்டாவை மட்டும்தான் பயிர் செய்ய முடியும்’னு விஞ்ஞானிகள் சொல்லிட்டாங்க. 'மண் சரியில்லைனு நாமளே இப்படி விட்டுடக் கூடாது’னு முடிவு பண்ணி எல்லாரும் விவசாயத்துல இறங்கினோம்.

ரசாயன முறை, இயற்கை முறைனு ரெண்டு முறையிலும் நெல் சாகுபடியை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல ரசாயன முறையில அதிக மூட்டை கிடைச்சாலும், போகப் போகக் குறைய ஆரம்பிச்சுது. அதேசமயத்துல, இயற்கை முறையில கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சுது. மூணு வருஷத்துலேயே, 'இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்’னு முடிவு பண்ணிட்டோம். அந்த மூணு வருஷத்துல ரசாயன உரங்களுக்கு மட்டும் நாலரை லட்ச ரூபாய் செலவு பண்ணியிருந்தோம்.

இறையியலோடு உழவியலும்...

2004-ம் வருஷத்துல இருந்து எங்க ஆசிரமத்துக்கு 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அடிக்கடி வர ஆரம்பிச்சார். அவர் மூலமா, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். 'கடன் இல்லாத, நஞ்சு இல்லாத, மண் வளம் இழக்காத, நீர் வளம் குன்றாத நிலைத்த நீடித்த விவசாயம்’தான் எங்க குறிக்கோள்'' என்ற விகாச பிரியாவைத் தொடர்ந்தார், கேந்திராவின் உதவி இயக்குநர், சகோதரி சத்தியப்பிரனா.

'நாங்க இயற்கை விவசாயத்துல தீவிரமான சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல, நம்மாழ்வார் கட்டுரைகளுக்காக அதை வாசிக்க ஆரம்பிச்சோம். அப்பறம் அதுல வந்த

இறையியலோடு உழவியலும்...

நிறைய விஷயங்கள் எங்களுக்குத் தேவைப்பட்டதால... தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

அதுல வெளியான 'உழவுக்கும் உண்டு வரலாறு’, 'எந்நாடுடைய இயற்கையே போற்றி’, 'கிராம ராஜ்ஜியம்’, மகசூல் கட்டுரைகள், மண்புழு மன்னாரு, பண்ணைக் கருவிகள்னு எல்லாத்தையும் தனித்தனியா புத்தகங்களாக்கிப் பத்திரப்படுத்தி வெச்சிருக்கோம். இங்க வர்ற விவசாயிங்களுக்கு அதை படிக்கவும் கொடுக்கிறோம்.

படிக்கிறதோட மட்டும் விட்டுடாம, 'பசுமை விகடன்'ல வர்ற நிறையத் தொழில்நுட்பங்களை எங்களோட தோட்டத்துல செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். பெரும்பாலான பாரம்பரிய ரகங்களோட பெருமைகளை இந்தப் புத்தகம் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டு அந்த விதைகளைச் சேகரிச்சுட்டிருக்கோம். அந்த வகையில இதுவரைக்கும் 27 பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிச்சுருக்கோம்.    

இப்போ, நெல், கரும்பு, உளுந்து, தட்டைப்பயறு, கருவேப்பிலை, மா, தென்னை, மரவள்ளினு நிறைய பயிர்களை சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கோம். அதோட, ஆசிரமத் தேவைக்காக 100 கறவை மாடுகளையும் வளர்க்கிறோம். அசோலா வளர்ப்பு; பூச்சி, நோய் தாக்குதல் விளக்கப்படம்; விதை மையம்; வானிலை முன்னறிவுப்புக் கருவி; மண்புழு உரத்தொட்டி; மழை நீர் சேகரிப்பு மையம்... விவசாயிகளுக்குத் தேவையான நிறைய விஷயங்களை இங்க உருவாக்கியிருக்கோம். அது மூலமா, எங்க ஆசிரமத்தைச் சுத்தியிருக்குற இருபத்தஞ்சு கிராம விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்துட்டிருக்கோம். எங்களுக்கு விவசாய முறைகளைத் தெரிஞ்சுக்க உதவுறதோட, மத்த விவசாயிகளுக்குச் சொல்லித் தர்றதுக்கும் 'பசுமை விகடன்'தான் ரொம்ப உதவியா இருக்கு'' என்று பெருமையோடு சொன்னார் சத்தியப்பிரனா.

தொடர்ந்து பேசிய ஆசிரமப் பண்ணையின் மேலாளர் சிவக்குமார், ''20 ஏக்கர்ல ஒரு போகம் நெல் சாகுபடியும், 16 ஏக்கர்ல ரெண்டு போகம் நெல் சாகுபடியும் பண்ணிக்கிட்டிருக்கோம்.

இறையியலோடு உழவியலும்...

இந்த வருஷம், சோதனை முயற்சியா.... 5 ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பானு 27 பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிர் செஞ்சிருக்கோம். அதில்லாம தனியா 15 ஏக்கர்ல 'டீலக்ஸ்’ பொன்னி நடவு செஞ்சிருக்கோம்.

அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், முட்டைக் கரைசல், மண்புழு உரம், பிண்ணாக்கு... மாதிரியான இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்திட்டிருக்கோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த புகையிலைக் கரைசலைப் பயன்படுத்திட்டிருக்கோம். நெல் வயல்ல களைகளைக் கட்டுப்படுத்துறதுக்காக அசோலாவை வளர்க்கிறோம். கறவை மாடுகளுக்கு அசோலாவைக் கொடுக்கிறோம். இதன் மூலமா பால் அளவு கூடுறதோட, மாடுகளும் ஆரோக்கியமா இருக்கு'' என்று சொன்ன சிவக்குமார்,

''பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபது மூட்டையில இருந்து முப்பது மூட்டை (75 கிலோ) வரைக்கும் மகசூல் கிடைக்குது. மத்த நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபத்தஞ்சு மூட்டையில இருந்து முப்பது மூட்டை வரைக்கும் மகசூல் கிடைக்குது'' என்று வரவுக் கணக்கையும் லேசாகத் தொட்டார்!

தொடர்புக்கு
சத்தியப்பிரனா,
செல்போன்: 97868-91110.
சிவக்குமாணீர்,
செல்போன்: 99430-64596.