Published:Updated:

விலை உயர்வு மட்டுமல்ல... விலை இழப்பீடும் தேவை

ந.வினோத்குமார்

##~##

''இன்றைய விவசாய முறையில், சாகுபடிச் செலவு பலமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால், அரசு தரும் நிதி உதவிகள், அதை ஈடுசெய்வதாக இல்லை. இதனால் நம் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், மற்ற துறைகளைப் போல உழவுத் தொழிலில் நிலையான வருமானமோ, இழப்பீடோ கிடையாது என்பதுதான்.

 விவசாயிக்கு நிரந்தர வருவாயை உறுதிப்படுத்துவதுதான், எதிர்காலத்தில் அந்த இனம் உயிரோடிருப்பதை உறுதிப்படுத்தும்'' என்று நெற்றிப் பொட்டில் அறைவது போல பேசுகிறார்... வட்டே ஷோபனாத்ரீஸ்வர ராவ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விலை உயர்வு மட்டுமல்ல... விலை இழப்பீடும் தேவை

'நிலைத்த மற்றும் நீடித்த வேளாண்மைக்கான கூட்டணி’ (ASHA) என்கிற அமைப்பு, சார்பில் தென் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. உழவர்களுக்கு வருவாய் உறுதியளிப்புத் திட்டத்தைக் கொண்டு வருவது, அதற்கான ஆணையத்தை நிறுவுவது, உழவர்களுக்கான விலை இழப்பீடுத் திட்டத்தைச் செயல்படுத்துவது... எனப் பல்வேறு விஷயங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதில் சிறப்பு ஆலோசகராக பங்கேற்று, காரசாரமாக பல்வேறு கருத்துக்களையும் பதித்தார் ஷோபனாத்ரீஸ்வர ராவ்.

யார் இந்த ராவ் என்கிறீர்களா?

இவர், ஆந்திர மாநில வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர். பொதுவாக, வேளாண்துறைக்கு அமைச்சராக வருபவர்களுக்கும்... வேளாண்மைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், இவரோ... வேளாண்மையை தன் மூச்சாக நினைத்து, அதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர். 'தெலுங்கு தேசக் கட்சி’யைச் சேர்ந்தவரான இவருடைய முயற்சியில்தான், அம்மாநிலத்தில் 'உழவர் சந்தை’ திட்டத்தைத் துவக்கி வைத்தார் அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தேவை, உழவர் வருவாய் ஆணையம்!

கூட்டத்துக்குப் பின் நம்மிடம் பேசிய ராவ், விவசாயிகளை வாழ வைப்பதற்காக, தான் முன் வைக்கும் யோசனைகளைப் பட்டியலிட்டார். அவற்றில் சில இங்கே இடம் பிடிக்கின்றன-

''முறைசாரா வணிக நிறுவனங்களுக்கான ஆணையத்தின் 2009-ம் ஆண்டு அறிக்கையின்படி, விவசாயிகளின் வருமானம் தேக்க நிலையை அடைந்துள்ளது. ஒரு விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் வெறும் 1,650 ரூபாயாக மட்டுமே உள்ளது. மேலும், 'வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள விவசாயிகளின் குடும்பங்கள், கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும், அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது’ என்று அந்த அறிக்கை சொல்கிறது.

வருமானம் குறைந்திருப்பது ஒருபுறமிருக்க, அதன் மூலம் ஏற்படும் வளர்ச்சியை மதிப்பிடுவதிலும் பல குறைகள் உள்ளன. இதுபற்றி பேசும் தேசிய உழவர்கள் ஆணையம், 'விவசாயிகளின் குடும்ப வருமானத்தில் ஏற்படும் வளர்ச்சி விகிதத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு வேளாண்மை வளர்ச்சியை மதிப்பிட வேண்டும். 'மில்லியன் டன்’ கணக்கிலான உணவு தானியங்கள் மற்றும் இதர விளைபொருட்களின் உற்பத்தியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடும் போக்கு மாற்றப்பட வேண்டும்’ என்கிறது. ஆகவே வளர்ச்சி விகிதத்தை மதிப்பிட, 'உழவர் வருவாய் ஆணையம்’ ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு!

விலை உயர்வு மட்டுமல்ல... விலை இழப்பீடும் தேவை

தற்சமயம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விவசாயிகளின் வருவாயைக் கணக்கிடுகிறார்கள். அதுவும், குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களை மட்டும் கணக்கில் கொண்டு மேலோட்டமான கள ஆய்வைத்தான் மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நில அளவு வாரியாக பயிர் மற்றும் சார்புத் தொழில்களில் இருந்து பெறப்படும் வருவாயைக் கணக்கில் கொண்டு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன்படி, பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகளின் வருவாயை உயர்த்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விலை இழப்பீடு போன்றவற்றை அரசு செயல்படுத்த வேண்டும்.

விலை இழப்பீடு வேண்டும்!

தற்போது நடை முறையில் உள்ள, அரசின் கொள்முதல் கொள்கை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை சரியில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை மட்டும் உயர்த்தி, விவசாயிகளின் வருவாயை உறுதிப்படுத்த முடியாது. விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைக்காத சூழ்நிலையில், விவசாயிகளுக்கு விலை இழப்பீடு அளிக்க வேண்டும். தேசிய உழவர்கள் ஆணையத்தின் பரிந்துரையின்படி, ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலையை சாகுபடிச் செலவோடு, 50 சதவிகித அளவைக் கூட்டி நிர்ணயிக்க வேண்டும்.

அனைத்துப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை விதைப்புக் காலம் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் எந்தப் பயிரைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும்,  ஒவ்வொரு பயிருக்குமான சராசரி அறுவடை விலை இலக்கு மதிப்பிடப்பட வேண்டும். சராசரி அறுவடைச் செலவைக் காட்டிலும், நியாய விலை இலக்கு குறைவாக இருந்தால், வேறுபாட்டுத் தொகையை மாநில அரசே வழங்க வேண்டும்.

இதை செயல்படுத்தினால், சந்தை விலை குறைவாக இருந்தாலும், விவசாயிகளுக்கு நியாயமான வருவாய் கிடைத்து விடும். அதேபோல, அரசாங்கம் கொள்முதல் செய்யும் உணவுப்பயிர்கள் மட்டுமல்லாது அனைத்துப் பயிர்களுக்கும் விலை இழப்பீடு கிடைக்கும் என்பதால், நெல் மற்றும் கோதுமைப் பயிருக்குக் கிடைக்கும் முன்னுரிமை மானாவாரி வேளாண்மையில் விளையும் பயிர்களுக்கும் கிடைக்கும்.''